Phone
Mail
Whatsapp

The Word for the day

வார்த்தையினால் விடுதலை

Listenகேட்க Watchபார்க்க

35. மாமிசமும் ஆத்துமாவும்

35. மாமிசமும் ஆத்துமாவும்

Sorry for the inconvience, Currently English version is not avalilable.

Switch to Tamil language

(அறிவிக்கப்பட்ட நாள்:18.08.2013)

லூக். 24: 7-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம் நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள்."

    மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்று கூறப்பட்டிருப்பதைக் காண்கின்றோம். பிரதான ஆசாரியனும், அவனோடு இருந்தவர்களாகிய ஜனத்தின் மூப்பர்களும், வேதபாரகர்களும் மனுஷகுமாரனை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தார்கள். அவர்களை பாவிகள் என்று கூறப்பட்டிருப்பதைக் காண்கின்றோம். காரணம், அவர்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை; கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பாவிகள் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. ஆசாரியர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அவர்களும் பாவிகள் என்று தீர்க்கப்பட்டார்கள். அப்படியானால் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத இந்த ஆசாரியன் மூலம் ஏறெடுத்த பலி அங்கீகரிக்கப்பட்டிருக்குமா? கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத பாவிகளான அவர்கள் ஏறெடுத்த பலி கர்த்தரால் அங்கீகரிக்கப்படவில்லை. அந்தப் பலி கர்த்தருக்கு ஏற்ற பலியாக இல்லாதிருந்தது. கர்த்தரால் அங்கீகரிக்கப்படாத பலிகள் பிசாசினுக்குரியதாகவே வேதம் சாட்சியிடுகின்றது. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத நிலை அவர்களைப் பாவிகளாக்கியது. அப்படி பாவிகளான அந்த மனுஷர் கைகளிலே மனுஷகுமாரன் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்று இயேசுகிறிஸ்து சாட்சியிட்டுள்ளதை பார்க்கின்றோம்.

    பிரதான ஆசாரியன் இஸ்ரவேலர்களை வழிநடத்துவதற்காகக் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவன்; அவன் ஆரோனுடைய வம்சத்தான். ஆனால், இங்கே அந்தப் பிரதான ஆசாரியனே அனுப்பப்பட்ட வார்த்தையாகிய கிறிஸ்துவை சிலுவையில் அறைவதற்கு ஒப்புக்கொடுத்தான். எனவே அவனை பாவி என்று வேதத்தில் சாட்சியிடப்பட்டுள்ளது.

    இயேசுகிறிஸ்து 'பாவிகள்' என்று எவர்களைக் குறித்து கூறினாரோ, அவர்கள் கண்களுக்கு அவர் நியாயப்பிரமாணத்தை மீறிய ஒரு பாவியாகவே காணப்பட்டார். இயேசுகிறிஸ்து அபிஷேகம் பண்ணப்பட்ட ஆரோனுடைய வம்சத்தில் வந்த ஆசாரியர்களை பாவிகள் என்று சாட்சியிட்டார். ஆனால், ஆரோனுடைய வம்சத்தில் ஆசாரியப் பட்டம் பெற்று வந்திருந்த ஆசாரியர்கள் கூட்டத்திற்கு, இயேசுகிறிஸ்து பாவியான ஒரு மனுஷனாகவே காணப்பட்டார். இயேசுகிறிஸ்துவினுடைய போதனைகள் நியாயப்பிரமாணத்திற்கு மாறுபாடாக இருந்தபடியினால், அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாக யேகோவா தேவன் கொடுத்தது. அந்தப் பிரமாணத்திற்கு எதிர்வினையான கிரியைகளை அவர் செய்தபடியினால், இயேசுகிறிஸ்துவை பாவி என்று அவர்கள் கூறினார்கள். அவர் ஓய்வுநாளின் பிரமாணத்தினை மீறியவராக அவர்களுக்குக் காணப்பட்டார். தன்னை தேவனுடைய குமாரன் என்று கூறியதால் தேவதூஷணம் செய்தவராக அவர்களுக்கு முன்பாகக் காணப்பட்டார்.

    இயேசுகிறிஸ்து நியாயப்பிரமாணத்தினை நிறைவேற்றி முடித்தார் என்றே வேதம் சாட்சியிடுகின்றது. எனவே அந்தப் பிரமாணத்தில் அப்போது உயிர் இல்லை. காரணம், அது நிறைவடைந்த பிரமாணமாக காணப்பட்டது. நிறைவேறிய அந்தப் பிரமாணத்தினைப் பின்பற்றுபவர்கள் பாவிகள் என்று சாட்சியிடப்பட்டார்கள். இது மாமிசத்தினால் தீர்க்கப்படுகின்ற ஒரு காரியம் அல்ல. இது ஆவிக்குரிய காரியம்.

சங். 96: 9-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்."

    பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ள வேண்டும் என்று சங்கீதக்காரன் இங்கே பாடுகின்றான். இங்கே தொழுதுகொள்வதற்கு இரண்டு காரியங்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது:

    அலங்காரம் - அது பரிசுத்தமுள்ள அலங்காரமாக இருக்க வேண்டும். இவைகளுக்கு மாறுபாடான போதனைகளை சபைகள் இன்று கொடுத்து கொண்டிருக்கின்றது. இங்கே கூறப்பட்டிருக்கின்ற இந்த அலங்காரமானது பரிசுத்தமுள்ள அலங்காரமாக இருக்க வேண்டும் என்பதாகும். அலங்காரம் என்பது மணவாட்டிக்குரியது. இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகைக்கு முன்னர் மணவாட்டியானவள் அலங்கரிக்கப்படுவாள்.

    மணவாட்டி வார்த்தையின் மூலமாக அலங்கரிக்கப்படுவாள். வார்த்தையின் மூலமாக கொடுக்கப்படும் அலங்காரம் என்பது மணவாளனோடு இணைக்கப்படத்தக்கதான விதத்தில் அலங்கரிக்கப்படும் ஒரு அலங்காரமாகும். அந்த அலங்காரத்தில் மணவாட்டி அலங்கரிக்கப்படுவாள். அதுவே பரிசுத்தமுள்ள அலங்காரமாகும்.

    பரிசுத்தம் என்றால் என்ன? கர்த்தர் எவைகளைப் பரிசுத்தம் என்று தீர்மானிக்கின்றாரோ, அதுவே பரிசுத்தமாகும். சுத்தம் எது என்றும், பரிசுத்தம் எது என்றும் தீர்மானிக்கின்றவர் அவரே. அவர் சுத்தத்திலிருந்து பரிசுத்தத்தை வேறுபிரிக்கின்றார். நியாயப்பிரமாணத்தினைக் கொடுத்தவரே மாமிசத்தில் வந்தபோது, பிரதான ஆசாரியர்களைப் பார்த்து ‘பாவிகள்’ என்று தீர்க்கின்றார். அப்படியானால், பிரதான ஆசாரியர்கள் பரிசுத்தம் இல்லாமல் இருந்தார்களா? பிரமாணத்தில் கூறப்பட்டிருக்கின்ற பரிசுத்தத்திற்குரிய கிரியைகள் யாவையும் அவர்கள் பின்பற்றி வந்தார்கள்.

    நியாயப்பிரமாணத்தில் எவை எவைகள் பாவம் என்று கூறப்பட்டதோ, அந்தப் பாவத்திற்குரிய கிரியைகளை அவர்கள் செய்ததில்லை. எவை எவை நியாயப்பிரமாணத்தின்படி தடை செய்யப்பட்டதோ, அவைகளையெல்லாம் அவர்கள் செய்யவில்லை. ஆசாரியன் இஸ்ரவேலர்களை நியாயம் விசாரிக்கின்றவனாக அபிஷேகிக்கப்பட்டவன். சுத்தம் இன்னதென்றும், அசுத்தம் இன்னதென்றும் ஆசாரியன் மூலமே தீர்க்கப்பட்டன.

    ஆசாரியர்கள் மோசேயின் மூலம் கட்டளையிடப்பட்ட நியாயப்பிரமாணத்தில் கூறப்பட்டபடி நியாயம் விசாரித்தார்கள். நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியைகளைச் செய்பவன் பரிசுத்தமுள்ளவன் எனவும், அதின்படி செய்யாதவன் பரிசுத்தமில்லாதவன், அதாவது அசுத்தமுள்ளவன் என்றும் தீர்க்கப்பட்டது.

    நியாயப்பிரமாணத்தினைப் பின்பற்றுபவன் பரிசுத்தவான் எனவும்; நியாயப்பிரமாணத்தினைப் பின்பற்றாதவன் பரிசுத்தமில்லாதவன், அதாவது பாவி என்றும் தீர்க்கப்பட்டது. நியாயப்பிரமாணத்தினைப் பின்பற்றி வந்த அந்த ஆசாரியர்கள் முன்பாக நியாயப்பிரமாணத்தினைப் பின்பற்றாத பாவியாக இயேசுகிறிஸ்து நிறுத்தப்பட்டார். பவுலைக் குறித்துப் பார்த்தோமானால், அவன் நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியைகளைச் செய்யாதவன். அவர்களுடைய பார்வைக்கு அவனது கிரியைகள் தேவதூஷணம் செய்வதாகவே காணப்பட்டது. தேவதூஷணம் செய்தார் என்று குற்றப்படுத்தியே இயேசுகிறிஸ்துவை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தார்கள். அதன்படியே பவுலையும் அவர்கள் கொலை செய்தார்கள்.

    நியாயப்பிரமாணத்தைக் கொண்டு ஆசாரியர்கள் சிலவற்றை பரிசுத்தம் எனவும், சிலவற்றை அசுத்தம் என்றும் அறிவித்தார்கள். அவர்கள் எதைப் பரிசுத்தம் என்று தீர்மானித்தார்களோ, அதுவே இஸ்ரவேலர்களுக்குள் பரிசுத்தமாகக் காணப்பட்டது. எது பரிசுத்தம் என்பதை பரிசுத்தப்படுத்த அதிகாரம் பெற்றவரே தீர்மானிக்கவேண்டும். அவரே பரிசுத்தத்தைக் குறித்து சாட்சியிடவேண்டும். அவரே இவைகளைப் பரிசுத்தம் என்றும், இவைகளை அசுத்தம் என்றும் தீர்மானிக்க அதிகாரம் கொண்டவர். கர்த்தர் தீர்மானிக்கும் இந்தப் பரிசுத்தமானது மாமிசத்தின்படியாக மாறுபாடாகக் கூடக் காணப்படலாம். அப்படிக் காணப்பட்டாலும், பரிசுத்தர் எவைகளைப் பரிசுத்தம் என்று கூறுகின்றாரோ, அவைதான் பரிசுத்தம். அந்தப் பரிசுத்தத்தோடு கூடிய அலங்காரத்தினையே மணவாட்டி தன்னகத்தே கொண்டிருக்கக் கட்டளையிட்டுள்ளார். அவளே மணவாளனோடு இணைய அழைத்துச் செல்லப்படுவாள்.

கர்த்தர் தாம் விரும்புகின்ற அலங்காரத்தினைக் குறித்து சாட்சியிட்டுள்ளதைப் பார்ப்போம்.

    மணவாளனால் அங்கீகரிக்கப்பட்ட அலங்காரம் பரிசுத்தம் என்றும், மணவாளனால் அங்கீகரிக்கப்படாத அலங்காரம் அசுத்தமான அலங்காரமாகவும் தீர்க்கப்படுகின்றது. மணவாளன் விரும்புகின்ற அலங்காரமே பரிசுத்தமான அலங்காரம் ஆகும். இந்த கடைசி நாட்களில் எத்தகைய அலங்காரம் அசுத்தமான அலங்காரமாகக் காணப்படும் என்பதை வெளி. 18: 4-ன் மூலம் முன் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்த்தர் விரும்பாத எந்தவொரு அலங்காரமும் மணவாட்டிக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அலங்காரமாகக் காணப்படாது.

    மணவாளன் தனது மணவாட்டி எந்த தன்மையிலான அலங்காரம் கொண்டவளாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றாரோ, அந்த தன்மையிலான அலங்காரமே பரிசுத்த அலங்காரம் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. பரிசுத்தர் எதைப் பரிசுத்தம் என்று தீர்க்கின்றாரோ, அதுவே பரிசுத்தமாகும். அவர் எதை தீட்டு என்று சாட்சியிடுகின்றாரோ, அதுவே தீட்டாகும்.

    கர்த்தர் சாட்சியிடும் பரிசுத்தம் என்பது நித்திய ஜீவனையும், அவர் சாட்சியிடும் அசுத்தம் என்பது நித்திய ஆக்கினையையும் கொண்டு சேர்க்கும். இவைகளை வார்த்தை தீர்மானிக்கின்றது. வார்த்தை இவைகள் பரிசுத்தம் என்றும், இவைகள் அசுத்தம் என்றும் தீர்மானிக்கின்றது. நியாயப்பிரமாணம் கிறிஸ்துவினால் நிறைவேற்றப்பட்ட பின்பு, அதனிடம் காணப்பட்ட பரிசுத்தமானது கிருபை பிரமாணத்தின் மூலம் புறஜாதிகளிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. எனவே நியாயப்பிரமாணத்தினைப் பின்பற்றி வந்த ஆசாரியன் அங்கே பாவி என்று தீர்க்கப்படுகின்றான்.

    மாமிச சரீரம் இல்லாமல் ஆத்துமா கிரியை செய்யாது. மாமிச சரீரத்திலிருந்து மாத்திரமே ஆத்துமா கிரியை செய்யும். ஆத்துமா கொண்டவர்கள் கர்த்தத்துவத்தில் தேவனுடைய பிள்ளைகளாக்கப்படுகின்றார்கள்.

    அவர் ஒருவனையல்லவா சிருஷ்டித்தார்? ஏன் ஒருவனைச் சிருஷ்டித்தார்? ஜீவனுக்குரிய சந்ததியை உருவாக்குவதற்காகவே அந்த ஒருவனைச் சிருஷ்டித்தார். அவன் ஆதாம். ஆதாமிற்குள் முதன்முதல் ஆத்துமா என்ற உள்ளான மனுஷன் உருவாக்கப்பட்டான். மாமிச சரீரத்திற்குள்ளாக கிரியைகளில் பூரணப்பட ஆத்துமா அனுப்பப்படுகின்றது. இதுவே தேவதிட்டம் ஆகும். அதனை நிறைவேற்ற ஆதாம் என்ற ஒரு மாமிச சரீரத்தினை அவர் தெரிந்தெடுத்தார். ஆதாம் என்ற மாமிச சரீரம் ஆத்துமா பெற்றுக்கொள்ளத் தெரிந்தெடுக்கப்பட்ட மாமிச சரீரமாய் இருந்தது. ஆதாமிற்குப் பின்னர், ஆதாமின் மாமிச சந்ததிகளுக்குள்ளாக அந்தக் கிருபை கட்டளையிடப்பட்டது. ஆதாமிடம் தமது ஜீவசுவாசத்தை ஊதினார்.

    அவன் உள்ளான மனுஷனைக் கொண்டவனானான்; ஆதாம் ஆத்துமா உள்ளவனானான். அதன்பின்னர் ஆதாமிலிருந்து ஆபிரகாமிற்கு முன்னர் வரையிலும் அந்த சந்ததியிலே அது தொடர்ந்துவந்தது. அதன்பின்னர், ஆதாமின் சந்ததியில் ஆபிரகாமைத் தெரிந்துகொண்டார். ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்தார். ஆபிரகாமோடு செய்யப்பட்ட உடன்படிக்கை மாமிசத்திற்குள்ளான அவனது சந்ததிக்குரிய ஒரு உடன்படிக்கையாகவே இருந்தது. அதற்கு முன்னர் செய்யப்பட்ட உடன்படிக்கையானது ஆதாமிற்கும், அவன் சந்ததிக்கும் செய்யப்பட்ட உடன்படிக்கை ஆகும். ஆதாமுடைய மற்ற சந்ததியிலிருந்து ஜீவனுக்குரிய இந்த நிகழ்வு ஆபிரகாமின் சந்ததிக்கு மாத்திரம் கட்டளையிடப்பட்டது. அது இஸ்மவேல் என்றும், ஈசாக்கு என்றும் இரு பிரிவானது.

    ஆத்துமா கொண்டவர்கள் ஆதிமுதல் இரு பிரிவு கொண்டவர்களாகப் பிரிக்கப்படுகின்றார்கள். ஆதாமின் சந்ததியில் காயீன், ஆபேல் என்று பிரிக்கப்பட்டது. ஆபேல் ஜீவனுக்குரியவன், காயீன் மரணத்திற்குரியவன் - இப்படியாக பிரிக்கப்பட்டதுபோன்று ஆபிரகாமின் சந்ததியில் வந்த ஜனங்களும் பிரிக்கப்பட்டார்கள். ஆபிரகாமோடு கர்த்தர் உடன்படிக்கை செய்தார்; ஆபிரகாமிற்கு வாக்குத்தத்தங்களைக் கொடுத்தார். வாக்குத்தத்தம் கொடுத்தபோது, அவனுக்கு பிள்ளைகள் ஏதும் இல்லாதிருந்தது. அதன்பிறகு ஈசாக்கும், இஸ்மவேலும் பிரிக்கப்படுகின்றார்கள். 1. இஸ்மவேல், 2. ஈசாக்கு என்ற இரு மாமிச சந்ததி பூமியை நிரப்பிற்று. மாமிச சந்ததி வேறுபிரிக்கப்பட்டதுபோல, ஆத்துமா என்ற ஆவியின் சரீரம் கொண்டவர்களையும் இருபிரிவாகப் பிரிக்கின்றார். ஆபிரகாமின் மாமிசப் பிறப்பான சந்ததிகள் இருபிரிவாகப் பிரிக்கப்பட்டார்கள். நாம் இப்போது இந்த சரீரத்தையும், ஆத்துமாவையும் குறித்துப் பார்க்கப் போகின்றோம். மாமிச சரீரம் இல்லாமல் ஆத்துமா என்ற ஆவியின் சரீரம் கிரியை செய்யாது. ஆபிரகாமோடு கர்த்தர் உடன்படிக்கை செய்தார், அதன்படி நான் உன் சந்ததியைப் பலுகிப் பெருகப்பண்ணுவேன் என்றார். உன் சந்ததி இந்தப் பூமியில் ஆசீர்வாதமாக இருக்கும் என்றார்.

    ஆபிரகாமின் சந்ததியில் இஸ்மவேல் முதலாவது பிறந்தான். பின்னர் சாராளிடம் ஈசாக்கு பிறக்கின்றான். இப்படியாக ஆபிரகாமினிடத்தில் இரண்டு சந்ததி உருவானது. ஒன்று, இஸ்மவேல்; மற்றொன்று, ஈசாக்கு. இஸ்மவேலைப் பெற்றெடுப்பதற்காக அங்கே ஒரு தாய் தெரிந்தெடுக்கப்பட்டாள். அவள்தான் ஆகார். அங்கே சாராள் ஈசாக்கினைப் பெற்றெடுக்கின்றாள். இஸ்மவேலுக்கும் கர்த்தர் வாக்குத்தத்தங்களைக் கொடுத்தார்; அவனிடத்திலிருந்து 12 கோத்திரப் பிரபுக்கள் எழும்புவார்கள் எனவும், அவனும் ஆசீர்வாதமாக இருப்பான் என அவனும் ஆசீர்வதிக்கப்பட்டான். இஸ்மவேல் சந்ததியும் பலுகிப் பெருகும் என்று வாக்குத்தத்தங்கள் கொடுத்தார். இஸ்மவேலுக்கும், ஈசாக்கிற்கும் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்கள் இன்னமும் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கின்றது. இவைகள் இந்தப் பூமி இருக்கின்றவரையிலும் அந்த சந்ததிகளுக்கு தொடர்ந்து வரும். ஆவிக்குரிய ஆசீர்வாதம் இஸ்மவேலுடன் நிறைவடைந்து, அது அவனது சந்ததிகளுக்கு தொடந்து கட்டளையிடப்படவில்லை. ஆனால் ஈசாக்கிற்குக் கொடுத்த இந்த ஆசீர்வாதம் இயேசுகிறிஸ்து வரையிலும் இஸ்ரவேலர்களிடத்திலும், அதன்பின்னர் இயேசுகிறிஸ்து மூலமாய் தொடர்ந்து புறஜாதிகளிடத்திலும் வந்துகொண்டிருக்கின்றது.

    இயேசுகிறிஸ்துவிற்குப் பின்னர் ஆவிக்குரிய இந்த ஆசீர்வாதமானது கிறிஸ்தவர்களாகிய நமக்கு மாத்திரம் கட்டளையிடப்பட்டுள்ளது. இயேசுகிறிஸ்து மூலமாய் ஆவிக்குரியதும் மாமிசத்திற்குரியதுமான இந்த ஆசீர்வாதம் புறஜாதிகளாகிய நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. புறஜாதிகளுக்குக் கொடுக்கப்பட்ட இந்தக் கிருபையின் காலத்தில் மாமிசத்திற்குரிய ஆசீர்வாதம் மாத்திரம் மாமிசப் பிறப்பாகிய இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இயேசுகிறிஸ்து மகிமையடைந்த பின்னர், அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்ட புறஜாதிகளாகிய நாம் இயேசுகிறிஸ்துவின் பிள்ளைகளாக மாற்றப்பட்டுள்ளோம். இந்த இயேசுகிறிஸ்துவின் பிள்ளைகளுக்கு கிறிஸ்தவர்கள் என்று மறுநாமமிடப்பட்டது. இப்படி இயேசுகிறிஸ்துவின் பிள்ளைகளாகி நாம் வாக்குத்தத்தத்தின்படியான இஸ்ரவேலர்களாக மாறுகின்றோம். அதுபோல இஸ்மவேல் சந்ததியாருக்கு இந்த ஆசீர்வாதமானது கி.பி. 5-ம் நூற்றாண்டு முதல் முகம்மது நபி மூலமாக இஸ்லாமியரிடம் வந்துள்ளது. முகம்மது நபி கூறிய போதனைகளை ஏற்றுக்கொண்டு, முகம்மது நபி வணங்கிய தேவனை யார் யாரெல்லாம் ஏற்றுக்கொண்டார்களோ, அவர்கள் யாவரும் முகம்மது நபி மூலமாக இஸ்மவேல் சந்ததியாக மாறுகின்றார்கள். இஸ்மவேல் சந்ததியான முகம்மதியர்களும் வாக்குத்தத்தத்தின்படி இஸ்மவேலின் பிள்ளைகளாக மாறுகின்றார்கள்; இப்படி இஸ்மவேல் சந்ததியார் ஆபிரகாமுடைய பிள்ளைகளாக மாறுகின்றார்கள். அதுபோல இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்களாகிய நாமும் இயேசுகிறிஸ்து மூலமாக ஆபிரகாமுடைய சந்ததிகளாக மாறியிருக்கின்றோம்.

    கிறிஸ்தவர்களாகிய நாம் தாவீதின் வம்சத்தாராகி ஈசாக்கின் பிள்ளைகளாகின்றோம். ஈசாக்கின் பிள்ளைகளாகி ஆபிரகாமின் சந்ததிகளாக மாறியுள்ளோம். ஆபிரகாமிற்கு வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டபோது, நான் உன் சந்ததியினை ஆசீர்வதிப்பேன் என்றார். அதன்படி ஆபிரகாமிற்குக் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதம் இன்று பூமி முழுவதும் அவரது சந்ததிகளால் நிரம்பியிருக்கின்றது. இஸ்மவேல் சந்ததியில் வந்த முகம்மது நபியினுடைய போதனைகளைப் பின்பற்றி முகம்மதியர்களாகவும், இயேசுகிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றி கிறிஸ்தவர்களாகவும் ஆபிரகாமுடைய பிள்ளைகளாக மாறியிருக்கின்றோம். தன்னைப் பின்பற்றுகின்றவர்களுக்கு முகம்மது நபி ஐந்து கடமைகளைக் கூறினார். அதில் பிரதானமான கட்டளை என்னவென்றால், "இறைவனையும் இறைதூதர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகும்." ஒரு இஸ்லாமியன் இறைவனையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; இறைவனுடைய தூதர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகும். ஏனென்றால், இறைத்தூதர்கள் மூலமாகவே ஆபிரகாமிற்குக் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்கள் தங்களுக்கு வருவதை அவர் அறிவித்தார்.

    முகம்மது நபி ஒரு இறைத்தூதனாக அனுப்பப்பட்டார். அவரது போதனையை ஏற்றுக்கொள்பவர்கள் இஸ்மவேல் சந்ததியாராகி ஆபிரகாமுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்கின்றார்கள். அப்போஸ்தலனாகிய பவுல் இந்தக் காரியங்களைக் குறித்து சாட்சியிட்டுள்ளதைப் பார்க்கின்றோம்.

கலா. 4: 23-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான், சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான்."

    ஆகாரைக் குறித்து அடிமை என்று இங்கே கூறப்பட்டுள்ளது. ஆகார் என்பதற்கு மாமிசம் என்று அர்த்தமாகும். ஆகாருடைய சந்ததியார், மாமிசத்திற்குரிய ஆசீர்வாத சந்ததிகளாக தீர்க்கப்பட்டுள்ளார்கள். ஆபிரகாமிற்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்தின்படி இவர்கள் மாமிசத்திற்குரிய ஆசீர்வாதத்திற்குரியவர்கள். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள தெரிந்தெடுக்கப்பட்டவன் ஈசாக்கு என்று வேதம் சாட்சியிடுகின்றது. ஈசாக்கின் சந்ததியாரும் வாக்குத்தத்தங்களுக்காக வேறுபிரிக்கப்பட்டார்கள். ஏசாவின் சந்ததி எனவும், யாக்கோபின் சந்ததி எனவும் ஈசாக்கின் சந்ததி வேறுபிரிக்கப்படுகின்றது. ஏசா மாமிசத்திற்குரியவன். யாக்கோபு இஸ்ரவேலாகி ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முன்குறிக்கப்பட்டவன்.

    இங்கே ஒரு காரியத்தினைக் குறித்து நன்றாகக் கவனிக்க வேண்டும். மாமிச சரீரம் இல்லாமல் ஒரு ஆத்துமா கிரியை செய்யாது. ஆத்துமா பரலோகராஜ்யம் செல்லக்கூடிய ஆவியின் சரீரம் ஆகும். வேதாகமம் முழுக்க முழுக்க ஆத்துமா கொண்டிருக்கக்கூடிய ஒரு வம்சாவழியினை, கர்த்தர் எப்படியெல்லாம் வழிநடத்தி வந்தார் என்றும், எப்படியெல்லாம் நடத்தப்போகின்றார் என்பதையும் பற்றிய சாட்சியாகும். அவர்கள் அவருடைய வார்த்தைக்குச் செவிகொடாமல் போனதால் எப்படியான உபாதைக்குள்ளானார்கள் என்றும், அவருக்கு செவிகொடுத்தவர்கள் எப்படியாக நடத்தப்பட்டார்கள் எனவும் சாட்சியிடுகின்றது.

    இறைத்தூதனான முகம்மது நபியின் போதனைகளை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்மவேல் சந்ததியானார்கள். அவர்கள் மாமிசத்தின்படி இஸ்மவேலின் சந்ததிகள் இல்லாதிருந்தாலும், போதனைகளை ஏற்றுக்கொண்டபடியினால், வாக்குத்தத்தத்தின்படி இஸ்மவேலின் சந்ததிகளானார்கள். கிறிஸ்தவர்களாகிய நாமும் மாமிசத்தின்படியாக ஆபிரகாமின் சந்ததியார் அல்ல. அதுபோலவே இஸ்லாமியர்களும் மாமிசத்தின்படியாக இஸ்மவேலுடைய சந்ததிகள் அல்ல. நாம் எப்படி இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு ஆபிரகாமின் சந்ததிகளானோமோ, அதுபோலவே நபிகள் நாயகத்தை ஏற்றுக்கொண்டு அவர்களும் ஆபிரகாமின் சந்ததிகளானார்கள்.

    அப்போஸ்தலனாகிய பவுல் ஆகாரின் சந்ததியாரை மாமிசத்திற்குரியவர்கள் என்று சாட்சியிட்டுள்ளதைப் பார்க்கின்றோம். இஸ்மவேலுடைய சந்ததிகளையும், இஸ்ரவேல் சந்ததிகளையும் ஆபிரகாமின் சந்ததிகளாக பழைய ஏற்பாடு சாட்சியிடுகின்றது. அவர்களில் இஸ்ரவேலர்கள் சுதந்தரவாளிகள் என்று தீர்க்கப்பட்டார்கள். அவர்கள் தகப்பனாகிய ஆபிரகாமின் சுதந்தரத்தில் பங்கடைய கிருபை பெற்றார்கள். அந்த சுதந்தரம் பரலோக சுதந்தரமாகும். ஆனால், இஸ்மவேல் சந்ததி பூமிக்குரிய ஆசீர்வாதத்தினைப் பெறுவதற்காக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று வேதம் கூறுகின்றது. இதன்பின் பழைய ஏற்பாடு நிறைவடைந்து புதிய ஏற்பாடு ஆரம்பமானது. புதிய ஏற்பாட்டினில் இந்த இரு சந்ததியாரையும் குறித்து பவுலின் நிருபங்களில் கூறப்படுகின்றது. மாமிசத்திற்குரியவன் என்பதால் இஸ்மவேலைக் கர்த்தர் புறம்பே தள்ளினார். புதிய ஏற்பாட்டின் காலத்தில் கிருபை எடுபட்ட இஸ்ரவேலர்களின் நிலையும் ஆவிக்குரிய இடைபாடு இல்லாமல் மாமிசத்திற்குரிய ஆசீவாதங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ளவே பாத்திரவான்களாக தெரிந்துகொள்ளப்பட்டார்கள். இஸ்ரவேலர்களும் இஸ்மவேலரும் இறைவனையும் இறைத்தூதர்களையும் விசுவாசிக்க வேண்டும் என்பதே பிரதான கற்பனையாக இருக்கின்றது. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பின இயேசுகிறிஸ்துவையும் விசுவாசிப்பதே நித்திய ஜீவன் என்று வேதம் சாட்சியிட்டுள்ளது. ஆனால், இஸ்ரவேலர்கள் இறைவனை விசுவாசித்தார்கள்; இறைத்தூதனாக அனுப்பப்பட்ட ஈசா நபியை ஏற்றுக்கொள்ளவில்லை. ஈசா நபி என்பது இயேசுகிறிஸ்துவாகும்.

    நாம் இயேசுகிறிஸ்து மூலம் சாட்சியிடப்பட்ட வார்த்தையினை விசுவாசித்து கிறிஸ்தவர்களாக மாறியுள்ளோம். இஸ்லாமியர் இயேசுகிறிஸ்துவை ஈசாநபி என்று ஏற்றுக்கொள்கின்றார்கள். கிறிஸ்தவர்களாகிய நாம் அவரை குமாரன் என்று ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால், இஸ்லாமியர்கள் அவரை ஒரு இறைதூதன் என்று மாத்திரம் அங்கீகரிக்கின்றார்கள். அவர்கள் இயேசுகிறிஸ்துவுக்குப் பின்னர் ஐந்தாம் நூற்றாண்டில் அனுப்பப்பட்ட முகம்மது நபியே தங்களுக்காக அனுப்பப்பட்டவர் என விசுவாசிக்கின்றார்கள். ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாம் "நான் என் சுயமாய் வரவில்லை. என் பிதா என்னை அனுப்பினார்" என்று சாட்சியிட்ட கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவர் கொடுத்தனுப்பிய பிரமாணங்களின்படி செயல்படுபவர்களாக மாற்றப்பட்டிருக்கின்றோம். அவரை ஏற்றுக்கொள்பவர்கள் அவரது பிள்ளைகளாக இருக்க அவர் அதிகாரம் கொடுத்துள்ளார். இதனை யோவான் 1: 12-ல் வாசிக்கின்றோம்.

யோவா. 1: 12-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்."

    கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். நாம் அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் வைத்திருக்கின்றோம். அது புறஜாதிகளாகிய நமக்காகப் பிதாவிற்குக் கட்டளையிடப்பட்டிருக்கின்ற கிருபையின் நாமமாகும். அது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற நாமமாகும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் நாமத்தினை விசுவாசிப்பதின்மூலம் நாம் இயேசுகிறிஸ்துவினுடைய பிள்ளைகளாகி ஆபிரகாமின் சந்ததிகளாகின்றோம். இது விசுவாசத்தினால் நமக்கு கிடைத்திருக்கும் அதிகாரமாகும்.

    கலா. 3: 7-ன்படி, விசுவாச மார்க்கத்தார் யாவரும் ஆபிரகாமுடைய பிள்ளைகள் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. நாம் விசுவாசத்தின்மூலம் ஆபிரகாமுடைய பிள்ளைகளாக மாறியிருக்கின்றோம். இப்படி பிள்ளைகளாக்கப்பட்ட கிறிஸ்தவர்களில் ஒருவனை வாக்குத்தத்தத்திற்குரியவன் எனவும்; ஒருவனை மாமிசத்திற்குரியவன் எனவும் வார்த்தை வேறுபிரிக்கின்றது. நாம் இயேசுகிறிஸ்து மூலமாக ஆபிரகாமுடைய சந்ததிகளாகின்றோம். ஆபிரகாமின் இந்த சந்ததியில் ஒன்று மாமிசத்திற்குரியது எனவும், மற்றொன்று ஜீவனுக்குரியது எனவும் வேறுபிரிக்கப்படுகின்றது. உள்ளான சரீரமாகிய ஆத்துமாவை பெற்றுக்கொண்ட கிறிஸ்தவர்கள் இவ்விதமாக வேறு பிரிக்கப்படுகின்றார்கள்.

    சுயாதீனத்திற்குரியவளான சாராளுடைய வார்த்தைக்கு செவிகொடுப்பவர்கள் எனவும், சுயாதீனமற்ற ஆகாரின் வார்த்தைக்கு செவிகொடுப்பவர்கள் எனவும் இரு பிரிவாகப் பிரிக்கப்படுகின்றார்கள். ஆகாரையும் அவளுடைய பிள்ளையாகிய இஸ்மவேலையும் புறம்பே தள்ளு என்பதே கட்டளை. ஆனாலும், இம்மைக்குரிய ஆசீர்வாதங்கள் யாவும் இஸ்மவேலுக்கும் கொடுக்கப்பட்டது. இந்தப் பூமி இருக்கும்வரையிலும் இஸ்மவேல் சந்ததியார் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். அதுபோல கிறிஸ்தவர்களாக மாறியுள்ள புறஜாதிகளும் இந்தப் பூமி இருக்கின்றவரையிலும் ஆசீவதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். கிறிஸ்தவர்களாகிய நாமும் இந்த இரண்டு தன்மையிலான ஸ்தீரிகளின் தன்மைகளாகப் பிரிக்கப்படுகின்றோம். இது கிரியைகளின் மூலம் வேறுபிரிக்கப்படுகின்றது. அவைகள் ஜீவனுக்குரிய கிரியைகள் எனவும், மாமிசத்திற்குரிய கிரியைகள் எனவும் இருபிரிவுகளாக சாட்சியிடப்பட்டுள்ளது. இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதின் மூலம் ஆபிரகாமின் பிள்ளையாக மாறக்கூடிய காலம் புதிய ஏற்பாடு என்று வேதம் சாட்சியிடுகின்றது.

    சாராளுடைய பிள்ளையான ஈசாக்கு சுயாதீனத்திற்குரியவனாக தெரிந்தெடுக்கப்பட்டான். ஆனால் அவன் சந்ததியார் புதிய ஏற்பாட்டின் காலத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் சாட்சியிட்டதுபோல, ஆகாரின் சந்ததியை போல அடிமைத்தனத்திற்குள்ளானார்கள். காரணம் அவர்கள் வெறும் மாமிசத்திற்குரிய ஆசீர்வாதத்தினை மாத்திரம் பெறக்கூடியவர்களானார்கள். இங்கே கிறிஸ்தவர்கள் சுயாதீனமுள்ளவர்களாக சாட்சியிடப்படுகின்றார்கள். ஆபிரகாமின் சந்ததியில் மாமிசத்திற்குரிய சந்ததி எனவும், ஜீவனுக்குரிய சந்ததி எனவும் இருபிரிவாக சாட்சியிடப்பட்டதுபோல, கிறிஸ்தவர்களும் இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளார்கள். இஸ்மவேலர்கள், இஸ்ரவேலர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகிய இவர்கள் யாவரும் ஆபிரகாமின் பிள்ளைகளே. மற்ற சந்ததியார் ஆபிரகாமின் சந்ததிகள் அல்ல. இந்த ஆபிரகாமுடைய சந்ததியார் இறைவனையும் இறைத்தூதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே பிரமாணம். ஆபிரகாமின் சந்ததியாரே ஆதாமின் சந்ததிகளாகும்.

    "பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன்,

    இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்." (எபி. 1: 1, 2).

    தூதர்களுடைய வார்த்தைக்குச் செவிகொடாதவர்கள் இஸ்ரவேலில் இராமல் அறுப்புண்டுபோனாகள். அவர்கள் மாமிசத்தில் மாத்திரம் இஸ்ரவேலராக இருந்தார்கள். இயேசுகிறிஸ்துவை இறைத்தூதன் என்று இஸ்லாமியர் ஏற்றுக்கொள்கின்றார்கள். அவர்களிடத்தில் அவர் ஈசா நபி என்று சாட்சியிடப்படுகின்றார். ஆனால் அவரை அனுப்பிய பிதா அவரைத் தம்முடைய குமாரனென்றே கூறியுள்ளார். காரணம், அவரின் மாமிச சரீரமாக இடைபட்டது வானத்திற்கும் பூமிக்கும் தேவனான அவரிடமிருந்து அனுப்பப்பட்ட வார்த்தையாகும். அந்த வார்த்தை மாமிசமானது என்றே வேதம் சாட்சியிடுகின்றது. அவர் தூதர்களைவிட மேன்மையானவர் என்றே கூறப்பட்டிருக்கின்றது. கிறிஸ்தவர்கள் வார்த்தையின்படியாகவும், ஆவியின்படியாகவும் ஜீவனுக்குரியவர்கள் என்றும், மாமிசத்திற்குரியவர்கள் என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றார்கள்.

    ஜீவனுக்குரியவர்கள் அந்த நாளுக்கென்று கர்த்தர் தம்முடைய தூதன் மூலம் அனுப்பி வைக்கும் பிரமாணத்தினை ஏற்றுக்கொள்வார்கள். இயேசுகிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்ட பின்னர் அவரது வலது கரத்திலிருந்து அனுப்பப்பட்ட தூதர்கள் பிரமாணங்களைக் கொண்டுவந்து சாட்சியிட்டார்கள். அதனை ஏற்றுக்கொண்டவர்கள் ஜீவனுக்குரியவர்கள் ஆனார்கள். அவர் மாமிசத்தில் வெளிப்பட்டபோது கூறிய வார்த்தைகள் காணாமல் போன இஸ்ரவேல் வீட்டாருக்காகக் கொடுக்கப்பட்ட வார்த்தைகளாகும். இயேசுகிறிஸ்துவின் வலதுகரத்திலிருந்து அனுப்பப்பட்ட தூதர்கள் கொண்டுவந்து சேர்த்த பிரமாணங்கள் தவிர்த்து வேறு பிரமாணங்கள் கிறிஸ்தவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. கட்டளையிடப்படும் பிரமாணங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மாமிசத்திற்குரிய கிறிஸ்தவர்கள். இயேசுகிறிஸ்து தமது தூதர்கள் மூலம் ஒவ்வொரு சபைக்காலத்திற்கும் உரிய பிரமாணத்தினை அனுப்பியுள்ளார். அந்த சபைத்தூதன் மூலம் சாட்சியிட்ட பிரமாணமே கிறிஸ்து கட்டளையிட்டு அனுப்பிய பிரமாணமாகும். அதனை விசுவாசித்த கிறிஸ்தவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொண்டார்கள்.

வெளி. 1: 1, 2-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.

    இவன் தேவனுடைய வசனத்தைக் குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்."

    ''பிதாவாகிய தேவன் இயேசுகிறிஸ்துவினிடத்திற்கு ஒப்புவித்ததை அப்போஸ்தலனாகிய யோவானுக்கு, தம்முடைய தூதனை அனுப்பி வெளிப்படுத்தினார்'' என்று கூறப்பட்டுள்ளது. இறைவனையும் இறைத்தூதர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளதைப் பார்த்தோம். இறைவனை ஏற்றுக்கொள்பவன், அவர் அனுப்பி வைக்கும் தூதர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இஸ்ரவேலர்கள் பிதாவை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அனுப்பி வைக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை. அதுவே அவர்களுக்குப் பாவமாயிற்று.

    இஸ்ரவேலர்கள் நியாயப்பிரமாணத்தினைக் கட்டளையிட்ட யேகோவாவை ஏற்றுக்கொண்டார்கள். யேகோவாவே அவர்களுக்கு இஸ்ரவேலர் என்று நாமமிட்டார். அவர்கள் யேகோவா தேவன் மோசேயினிடத்தில் கொடுத்தனுப்பிய நியாயப்பிரமாணத்தினை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அதன்பின் பிதா அனுப்பிய இயேசுகிறிஸ்துவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கிறிஸ்து பிதாவினால் அனுப்பப்பட்ட தூதன் என்றும்; அவர்களுக்கு பிதா கொடுத்தனுப்பிய வார்த்தையினைக் கொடுக்க வந்திருக்கிறார் என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை; நானே ஜீவ அப்பம் என்று கூறினார். ஆனால் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் யேகோவா தேவனை ஏற்றுக்கொண்டவர்கள்; நீர் எவ்விடத்தானோ, நாங்கள் அறியோம் என்றே அவரை மறுதலித்தார்கள். கிறிஸ்தவர்களாகிய நாமும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதன் மூலம், இஸ்ரவேலர் ஆக்கப்பட்டிருக்கின்றோம். நாமும் அவர் கட்டளையிட்டு அனுப்பிய தூதர்களை ஏற்றுக்கொண்டுள்ளோமா? சபைத்தூதர்களை நம்மில் எத்தனை கிறிஸ்தவர்கள் அறிவோம்? அறிந்தவர்களில், நாம் எத்தனைபேர் ஏற்றுக்கொண்டுள்ளோம்? தூதர்களை அறியாதது மன்னிக்கப்படாத பாவம் என்றே கூறப்பட்டுள்ளது.

    கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களாகிய நாம் நம்முடைய மாமிசத்திற்குள்ளாக ஆவியின் சரீரம் என்ற ஆத்துமாவைப் பெற்றுக்கொண்டுள்ளோம். இப்படியாக ஆவியின் சரீரம் கொண்டவர்களாகிய நாம், கர்த்தர் கட்டளையிடும் அந்த நாளுக்குரிய வார்த்தையினை ஏற்றுக்கொள்ளும்போது ஜீவனுக்குரியவர்களாகவும்; அந்த நாளுக்கென்று கர்த்தர் தமது தூதன்மூலம் கொடுத்தனுப்பும் வார்த்தையினை ஏற்றுக்கொள்ளாதவர்கள் ஜீவனை இழந்தவர்களாகவும் சாட்சியிடப்பட்டுள்ளோம்.

    ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டவர்கள் பரலோக சுதந்தரத்தினைச் சுதந்தரிப்பார்கள். அவர்கள் ஆவிக்குரிய பிரமாணத்தினை ஏற்றுக்கொள்வார்கள். மாமிசத்திற்குரியவர்களாக இருந்து விசுவாசத்தின்மூலம் நாம் கிறிஸ்தவர்களாக்கப்பட்டுள்ளோம். ஆவிக்குரியவர்களாகிய நமக்கு இப்போது தூதன் மூலம் பிரமாணம் சாட்சியிடப்படுகின்றது. கிறிஸ்தவர்கள் அல்லாத புறஜாதிகளுக்கு ஆவிக்குரிய பிரமாணம் எதுவும் கட்டளையிடப்படவில்லை. கிறிஸ்தவர்களாகிய நாம் மாமிச சரீரத்தைக் களைந்து ஆவிக்குள்ளாக மாற வேண்டும். ஆவிக்குரிய தேசத்திற்குள் பிரவேசிக்க ஆவிக்குரிய ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்காகவே நாம் ஆவிக்குரிய சரீரத்தினைப் பெற்றுள்ளோம். மாமிசத்திற்குரிய ஆசீர்வாதத்தினை மாத்திரம் பெற்றுக்கொள்ள நாம் அழைக்கப்படவில்லை. ஆபிரகாம் சீமானாயிருந்தார் என்று வேதம் சாட்சியிடுகின்றது. காரணம் ஆபிரகாம் கர்த்தர் தனக்குக் கட்டளையிட்ட எல்லா பிரமாணங்களுக்கும் கீழ்ப்படிந்தார். அதனால் பூமிக்குரியதும், ஆவிக்குரியதுமான எல்லா நன்மையையும் பெற்றார்.

    ஏசா மாமிசத்திற்குரிய ஆசீர்வாதத்தினால் திருப்தியாவான். மாமிச ஆசீர்வாதம் மாத்திரமல்ல, அதற்கு மேலாக ஒரு ஆசீர்வாதம் நமக்காக வைக்கப்பட்டுள்ளது. அது ஆவிக்குரியது. அந்த ஆவிக்குரிய ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்ளும்பொருட்டே பிரமாணம் கட்டளையிடப்படுகின்றது. அது ஆவிக்குரிய பிரமாணமாகும். நித்திய ஜீவனைச் சுதந்திரிக்க கிருபை பெற்றவர்கள் அந்த ஆவிக்குரிய பிரமாணத்தினை ஏற்றுக்கொள்வார்கள்.

    கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஆவிக்குரிய பிரமாணம் ஒன்று கட்டளையிடப்பட்டுள்ளது. அது குமாரன் மூலம் கொடுத்து அனுப்பப்பட்டுள்ள பிரமாணமாகும். கிறிஸ்தவர்களுக்கு ஆவிக்குரிய இந்தப் பிரமாணமானது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதி சபைக்காலம் எனவும், மற்றொரு பகுதி கிருபைக்குக் கடைசிக்காலம் எனவும் பிரிக்கப்பட்டுள்ளது. சபைக்காலத்திற்குரிய பிரமாணத்தினைக் கொடுப்பதற்காக சபைத் தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். 7 சபைக்காலத்திலும் 7 சபைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் இயேசுகிறிஸ்துவின் வலதுகரத்திலிருந்து அனுப்பப்பட்டார்கள்.

    ஐந்தாவது சபைக்காலத்தில் ஒரு பெரிய புரட்சி ஏற்பட்டது. அது சபைக்காலங்களுக்குள் எழுந்த மாபெரும் புரட்சியாகும். வேதாகமம் அதன்பின்னரே விசுவாசிகளின் கரங்களில் கிடைக்க கிருபை பெற்றது. அந்த சபைக்கு தூதனாக மார்ட்டீன் லூதர் அனுப்பப்பட்டார். ஆனால், அவரை தூதனாக இன்னமும் அநேக சபைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. மார்ட்டீன் லூதர் மூலம் கொடுக்கப்பட்ட பிரமாணம் அப்போது ஆவிக்குரியவர்களை வேறுபிரிக்க அனுப்பப்பட்ட பிரமாணமாகும். அந்த ஆவியின் பிரமாணத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தினை பெற்றுக்கொள்ள கிருபை கிடைக்கப் பெற்றவர்களாக ஆனார்கள்.

    கிறிஸ்தவர்களாகிய நாம் ஆபிரகாமின் சந்ததியாக மாறியிருக்கின்றோம். மாமிசத்தின்படியான கிறிஸ்தவர்கள் ஆவியின் பிரமாணத்தினை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய பிரமாணத்தினை ஏற்றுக்கொள்வார்கள். ஆவிக்குரிய பிரமாணம் தூதன்மூலம் சாட்சியிடப்படுகின்றது. பிசாசு ஆவிக்குரிய பிரமாணத்தினை மீறச் செய்கின்ற கிரியையினை செய்துவருகின்றான்.

    ஏழு சபைக்காலங்களுக்கும் ஏழு சபைப்பிரமாணங்கள் கட்டளையிடப்பட்டது. முதலாம் சபைக்கென்று ஒரு பிரமாணமும்; 2-ம் சபைக்கென்று ஒரு பிரமாணமும்; 3-ம் சபைக்கென்று ஒரு பிரமாணமும், இப்படியாக ஏழு சபைகளுக்கும் ஏழு பிரமாணங்கள் கொடுக்கப்பட்டது. ஒரு பிரமாணம் நிறைவேறிய பின்னரே அடுத்த பிரமாணம் கட்டளையிடப்பட்டது. முதலாம் சபைப்பிரமாணம் நிறைவேறியபோது, 2-வது சபைக்குரிய பிரமாணம் சாட்சியிடப்பட்டது. 2-ம் சபைக்கால பிரமாணம் அறிவிக்கப்பட்டபோது, முதலாம் சபைப்பிரமாணம் நிறைவேறியிருந்தது. இப்படியாக தொடர்ந்து ஏழு சபைக்காலங்களிலும் நிகழ்ந்துள்ளது.

    ஏழு சபைக்கால பிரமாணங்களும் நிறைவடைந்த பின்னர் வேறொரு பிரமாணம் கர்த்தரின் சமுகத்திலிருந்து அனுப்பப்படும் தூதன் மூலம் சாட்சியிடப்படும்.

    இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்கள் அன்றைக்கென்று தங்களுக்கு அனுப்பப்படும் தூதனின் வார்த்தைக்கு செவிகொடுக்கும்போது, நித்திய ஜீவனுக்குரியவர்களாகின்றார்கள். செவிகொடாதவர்கள் மாமிசத்தில் கிறிஸ்தவர்களாக ஜீவிக்கின்றார்கள். மாமிசத்திற்குரிய ஆசீர்வாதத்தினையும் பெற்றுக்கொள்கின்றார்கள். ஆனால், பரலோக சுதந்தரத்தினைப் பெற்றுக்கொள்ளக்கூடிய கிருபையினை இழந்தவர்களாகின்றார்கள். நாம் நித்திய ஜீவனைப் பெறுவதற்காகவே கிறிஸ்தவர்களாக அழைக்கப்பட்டிருக்கின்றோம். மாமிசத்திற்குரியவர்களாய் காணப்படும் கிறிஸ்தவர்களை அப்போஸ்தலனாகிய பவுல் அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் என்று சாட்சியிட்டுள்ளான். அத்தகைய கிரியைகளுக்குள்ளானவர்கள் ஆகாரின் மூலம் ஆபிரகாமின் சந்ததிகளாக தீர்க்கப்படுகின்றார்கள்.

    மோசே, தனக்குப் பின் ஒரு தூதன் அனுப்பப்படுவார், அவருடைய வார்த்தைக்குச் செவிகொடுங்கள் என்றும், அவருடைய வார்த்தைக்குச் செவிகொடாதவர்கள் இஸ்ரவேலில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவார்கள் என்றும் தீர்க்கதரிசனம் உரைத்தான். இவைகள் யாவும் எழுதப்பட்ட பிரமாணமாய் எருசலேம் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவைகள் அந்த தேவாலயத்தில் வாசிக்கப்பட்டது. ஆனால், மோசே கூறியபடி அனுப்பப்பட்டவர் நானே என்று கிறிஸ்து கூறும்போது, அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ஜீவனுக்குரிய கிருபையானது புறஜாதிகளிடத்தில் வந்தது. அதுபோல ஒரு நிகழ்வே ஏழு சபைக்காலங்களின் நிறைவிலும் நிகழும். அப்போது தேவனுடைய நாமம் வார்த்தை என்று சாட்சியிடப்படும். அதனை கிறிஸ்தவ சபைகள் அங்கீகரிக்காது. அதனை சாட்சியிடும் தூதனையும் சபைகள் ஏற்றுக்கொள்ளாது. எனவே, கிருபை மீண்டும் இஸ்ரவேலர்களிடம் சென்றடையும்.

    தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்தவர்கள் தவிர மற்ற கிறிஸ்தவர்கள் சபைத் தூதர்களின் சுவிசேஷத்திற்கு செவி கொடாதவர்களாகவே இருந்தார்கள். தூதர்கள் மூலமாக கொடுக்கப்பட்ட வார்த்தையினை விசுவாசித்தவர்கள் நித்திய ஜீவனுக்குரிய கிருபையினைப் பெற்றார்கள். இவைகள் ஏழு சபைக்காலங்களிலும் நிறைவடைந்த கிரியையாகும்.

    இஸ்ரவேல் ஜனங்களை எகிப்து தேசத்திலிருந்து கானான் தேசத்திற்குள்ளாக அழைத்துவரும்போது வனாந்திரத்தில் அவர்களுக்குப் பசி எடுத்தது. அத்தனை பேருக்கும் உணவு உடனடியாக வேண்டும். அப்போது அங்கே, வானத்திலிருந்து அப்பம் வந்தது; வானத்திலிருந்து மன்னா கொடுக்கப்பட்டது. அவர்கள் வனாந்திரத்தில் இருந்த காலமுழுவதும், அது அவர்களுக்கு வானத்திலிருந்து கொடுக்கப்பட்டது.

யோசுவா 5: 12-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    அவர்கள் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது; அதுமுதல் இஸ்ரவேல் புத்திரருக்கு மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான்தேசத்துப் பலனை அந்த வருஷத்தில்தானே புசித்தார்கள்.

    அவர்கள் கானான் தேசத்திற்குள்ளாக அந்த தேசத்தின் தானியத்தில் புசித்த மறுநாளில் மன்னா நிறுத்தப்பட்டது. கானான் தேசத்தில் அவர்கள் எவை எவைகளைப் புசிக்க வேண்டும் என்பது பிரமாணமாய் கட்டளையிடப்பட்டது. அதனையே அவர்கள் புசிக்க வேண்டும். இங்கே புதிய பிரமாணம் கட்டளையிடப்பட்டது. மன்னாவைத்தான் தாங்கள் புசிக்கவேண்டும் என்று வேண்டப்படுமானால், அது நீதியாக எண்ணப்படாது.

    கர்த்தர் கொடுத்த அப்பம்தான்; அது கர்த்தர் கட்டளையிட்ட வார்த்தைதான். ஆனால் அது கானான் தேசத்திற்குள் பலனைப் பெறுவதற்கு முன்னர் வரையிலும் அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. கானான் தேசத்திற்குள் அவர்கள் பிரவேசிக்கும் முன்னர் வரையிலும் அந்த ஆகாரம் புசிக்கத்தக்கதாயிருந்தது. அந்த வார்த்தையில் உயிர் இருந்தது. அதன்பின்னர் அது புசிக்க அனுமதிக்கப்படவில்லை.

    கிறிஸ்தவர்களாகிய நாமும் மாமிசத்திற்குரியவர்கள் எனவும், ஆவிக்குரியவர்கள் எனவும் இரு தன்மை கொண்டவர்களாகக் காணப்படுகின்றோம். மாமிசம் என்பது ஜென்மசுபாவத்திற்குரியது. ஜென்மசுபாவத்தில் நாம் மேன்மையாய் பார்ப்பது அன்பு, நன்னெறி, ஈகை என்ற இந்த மூன்றுமாகும். இவைகள் புறஜாதியாரிடமும் காணப்படுவதாகும். ஜென்மசுபாவமான ஒரு சராசரி மனிதன் அன்புள்ளவனாக இருப்பான். தனது மனைவியினிடத்தில் அன்பு கொண்டவர்களாகவும் அல்லது தனது கணவனிடத்தில் அன்பு கொண்டவர்களாகவும், தனது பிள்ளைகளிடத்தில் அன்பு கொண்டவர்களாகவும், தனது பெற்றோரிடத்தில் அன்பு கொண்டவர்களாகவும், தனது சகோதர சகோதரிகளிடம் அன்பு கொண்டவர்களாகவும், இன்னமும் மற்ற எல்லா ஜனங்களிடமும் அன்பு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவைகள் ஜென்மசுபாவமான ஒன்றாகும். அன்பு இல்லாதவன் ஜென்ம சுபாவமான மனிதனாகவே எண்ணப்படமாட்டான்.

    ஜென்மசுபாவமான இந்த அன்பு என்பது கிறிஸ்தவனுக்கு மாத்திரமல்ல; அது எல்லா மனிதர்களுக்கும் பொதுவான ஒன்றாகும். எல்லோரிடத்திலும் அன்பு, நன்னெறி, ஈகை என்பவை இயல்பாகவே காணப்படும் ஒன்றாகும். ஆனால் கிறிஸ்துவினுடைய அன்பு அதற்கு மேலானது; அந்த அன்பானது மரணத்திற்குப் பின்னர் மண்ணோடு மண்ணாகிப் போகும் அன்பு அல்ல. அது நித்திய ஜீவன் வரையிலும் நம்மை அழைத்துச் செல்லும் அன்பு.

    கிறிஸ்துவின் அன்பானது அழிந்து போகின்ற மாமிச சரீரங்களுக்குள்ளாக ஆத்துமா என்ற உள்ளான மனிதன் உருவாக கொடுக்கப்பட்ட அன்பாகும். அந்த அன்பு சிந்தப்பட்ட அவரது இரத்தமாகும். அது புறஜாதிகளாகிய நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள கிறிஸ்துவின் அன்பாகும். ஆவிக்குரிய நன்மையினை நாம் பெற்றுக்கொள்ள கொடுக்கப்பட்ட இந்த அன்பினை ஜென்மசுபாவத்தோடு இணைப்பவன் மாமிசத்திற்குரிய கிறிஸ்தவன். இன்றைய ஸ்தாபனங்களும், சபைகளும் ஜென்மசுபாவத்தினைக் கிறிஸ்தவத்தோடு இணைத்து போதித்துக் கொண்டிருக்கின்றது.

    கர்த்தர் கட்டளையிட்ட வார்த்தையானது, அதனை அவர் திரும்ப தன்னிடம் பெற்றுக்கொள்ளும் வரையிலும் ஜீவனுள்ளதாக சாட்சியிடப்பட்டுள்ளது. இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரவழி நடந்து செல்லும்போது எப்படியாக செல்ல வேண்டும், எப்படியாக கூடாரங்களை எடுத்து செல்லவேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருந்தது. அங்கே உடன்படிக்கை பெட்டி முன்னதாகச் செல்லும். அதற்குப்பின்னர் ஜனங்கள் செல்வார்கள். இஸ்ரவேலர் கானான் தேசத்தில் குடியமர்ந்தபோது, இந்த உடன்படிக்கை பெட்டி எருசலேம் தேவாலயத்தில் வைக்கப்பட்டது.

    வனாந்தர பயணத்தின்போது பாளயத்திற்கு அருகில் ஒரு கூடாரத்தினை அமைத்து, அந்த உடன்படிக்கை பெட்டியினை வைத்தார்கள். இது வனாந்திரத்தில் இஸ்ரவேலர்களை வழிநடத்தி வந்தபோது கட்டளையிடப்பட்ட பிரமாணம். ஆனால், எருசலேம் தேவாலயம் கட்டப்பட்ட பின்னர் கூடாரம் என்ற பிரமாணம் மாற்றப்பட்டுவிட்டது. அங்கே தேவாலயம் என்ற புதிய பிரமாணம் கொண்டுவரப்பட்டது. அதன்படி எருசலேம் தேவாலயத்தில் மட்டுமே அவர்கள் பலிகளை ஏறெடுக்க வேண்டும்.

யோசுவா 5: 7-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பப்பண்ணின அவர்கள் பிள்ளைகளை யோசுவா விருத்தசேதனம்பண்ணினான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம் பண்ணாததினால் அவர்கள் விருத்தசேதனம் இல்லாதிருந்தார்கள்.

    எகிப்திலிருந்து புறப்பட்டவர்களில் யோசுவாவும் காலேப்பும் தவிர மற்ற யாவரும் வனாந்தரத்தில் மரணித்தார்கள். இங்கே அவர்களின் பிள்ளைகள் விருத்தசேதனம் பண்ணப்படாதவர்களாய் இருந்தார்கள். அதன் பின் யோசுவா கானான் தேசத்தில் அவர்களுக்கு விருத்தசேதனம் பண்ணுவித்தான். இடைபட்ட அந்த வேளையில் அவர்கள் விருத்தசேதனம் பண்ணப்படாதிருந்தார்கள். கானான் தேசத்திற்குள் சென்றபின் கொடுக்கப்பட்ட பிரதான பிரமாணம் அவர்கள் எருசலேமில் மட்டுமே பலி செலுத்த வேண்டும் என்பதாகும். வனாந்திர பயணத்தின்போது கூடாரமே இஸ்ரவேலர்களின் பலிபீடமாகக் காணப்பட்டது. ஆனால் அவர்கள் கானானுக்குள் சென்றபின்னர் எருசலேமில்தான் பலி செலுத்த வேண்டும். கண்ட இடத்தில் பலியிடக்கூடாது எனவும், எருசலேம் தேவாலயத்தில் மாத்திரமே கர்த்தருக்குப் பலியிட வேண்டும் எனவும் ஒரு புதிய பிரமாணம் அங்கே கட்டளையிடப்பட்டது. அதன்படியே இயேசுகிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்டபோதும், எருசலேமில்தான் அவர்கள் பலி செலுத்திக் கொண்டு வந்தார்கள். கிறிஸ்துவும், மோசேயின் பிரமாணத்தினை நிறைவேற்ற எருசலேம் தேவாலயம் கொண்டுபோகப்பட்டார். கிறிஸ்து பலியிடப்பட்ட பின்னர் எருசலேமில் ஏறெடுக்கப்பட்ட பலி அங்கீகரிக்கப்படாத பலியாகவே சாட்சியிடப்பட்டுள்ளது. எனவே எருசலேம் தேவாலயத்தில் செலுத்தப்பட்ட பலிகள் வானசேனைகளுக்கு செலுத்தப்பட்ட பலியாக ஸ்தேவான் பரிசுத்த ஆவியில் நிறைந்தவனாக சாட்சியிட்டான். இங்கே பிரமாணம் மாற்றியமைக்கப்பட்டது. காரணம், அப்போது கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை தனது மாமிச சரீரத்தின்மூலம் நிறைவேற்றியிருந்தார். எனவே, புதிய பிரமாணம் நீதியின் பிரமாணமாக அங்கே சாட்சியிடப்பட்டது. எருசலேமில் செய்யப்பட்ட பலிகள் யாவும் ஜென்மசுபாவத்திற்குரியதானது. எருசலேமின் பலிகள் கர்த்தருக்குரிய பலியாய் இல்லாதபோது, அங்கே ஜனங்களைக் கர்த்தருக்கு நேராகத் திருப்ப ஒரு தூதன் அனுப்பப்பட்டான்.

    இஸ்ரவேலர்கள் கானான் தேசத்திற்குள் சென்றடைந்தபின்னர் அவர்களுக்கு புதிய அப்பமாகிய கட்டளை கொடுக்கப்பட்டது. இந்தப் புதிய கட்டளையானது எருசலேமில் மட்டுமே அவர்கள் பலியிடவேண்டும் என்பதாகும். கிறிஸ்து மாமிசத்தில் வந்தபோது, அவர் தான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று கூறினார். அதற்கு முன்னர் கட்டளையிடப்பட்ட அப்பமானது கானான் தேசத்திற்குள் அவர்கள் செல்கின்றவரையிலும் கொடுக்கப்பட்டது. கானான் தேசத்தினுள் சென்றடைந்தபோது, அங்கே அந்த அப்பம் நிறுத்தப்பட்டது. அவர்களிடம் எருசலேமின் பிரமாணம் புதிய பிரமாணமாய் கட்டளையிடப்பட்டது. இயேசுகிறிஸ்து மாமிசமாய் வெளிப்படும் முன்னர்வரையிலும், இந்த எருசலேமின் அப்பம் அவர்களுக்கு போஜனமாகக் கொடுக்கப்பட்டது. கிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்டபோது, அந்த மன்னா மறுபடியும் மாற்றப்பட்டது. அப்போது, முந்தைய மன்னாவானது புசிக்கத்தகாத அப்பமாயிற்று. பழைய மன்னா அது ஊசிப்போன அப்பமாயிற்று. அது அங்கீகரிக்கப்படாத பிரமாணமாயிற்று. கிறிஸ்து மாமிசத்தில் வந்தபோது, எருசலேமின் அப்பம் நிறைவேறின பிரமாணமாயிற்று. நியாயப்பிரமாணம் என்ற அந்த மன்னா ஊசிப்போயிற்று. அது புசிக்கத்தக்கதாக கட்டளையிப்படவில்லை. அந்த மன்னாவைப் புசிப்பவன் மரணத்திற்குள்ளாகத் தீர்க்கப்பட்டான். ஏனென்றால், அங்கே ஜீவனுக்கென்று வேறொரு பிரமாணம் புதிய அப்பமாய் கொடுக்கப்பட்டது. இந்தப் புதிய அப்பம் இயேசுகிறிஸ்து மூலம் கொடுக்கப்பட்டது. அந்த அப்பத்தை இஸ்ரவேலர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன்பின்னர், புறஜாதிகள் மத்தியில் ஒவ்வொரு சபைக்காலங்களிலும் ஒரு பிரமாணம் தூதர்களின் மூலம் சாட்சியிடப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்டவர்கள் நித்திய ஜீவனுக்குரியவர்களானார்கள்.

    கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற பிதாவின் நாமத்தை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்களுக்குள் அன்றைக்குரிய மன்னாவாய் சபைப் பிரமாணம் தூதன் மூலம் கொடுத்தனுப்பப்பட்டது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கிறிஸ்தவர்களுக்குரிய மன்னாவாய் அனுப்பப்பட்டார். அந்த அப்பம் அவரது சரீரமாகும். அது அவரது சரீரமாகிய சபை ஆகும். இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட மன்னாவிற்கு விருத்தசேதனம் அடையாளமாய் கொடுக்கப்பட்டது. அதுபோல கிறிஸ்தவர்களாகிய நமக்கு அருளப்பட்டுள்ள மன்னாவிற்கு அடையாளம் ஞானஸ்நானம் ஆகும்.

    வனாந்திர பயணத்தின்போது இஸ்ரவேலர்கள் வானத்திலிருந்து கொடுக்கப்பட்ட மன்னாவைப் புசித்தார்கள். அந்த மன்னாவைப் புசித்த யாவரும் ஜீவனுக்குரியவர்கள் ஆனார்களா?

யோவான் 6: 49-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்."

    வனாந்திரத்தில் மன்னாவைப் புசித்த இஸ்ரவேலர்கள் மரித்தார்கள், வாக்குத்தத்தம் பண்ணிய தேசத்தை அவர்கள் அடையவில்லை. மன்னாவைப் புசித்த இஸ்ரவேலர்களுக்குள் ஒரு பிரமாணம் கட்டளையிடப்பட்டது. அந்தப் பிரமாணத்தினைப் பின்பற்றியவர்கள் மட்டுமே நித்திய ஜீவனைப் பெற்றார்கள்; பின்பற்றாதவர்கள் தாங்கள் பெற்ற ஜீவனை இழந்தவர்களாகி இளைப்பாறுதலில் பிரவேசிக்க தகுதியற்றவர்களானார்கள்.

    இயேசுகிறிஸ்துவின் சரீரம் புதிய ஏற்பாட்டு அப்பமாகும். இயேசுகிறிஸ்துவின் சரீரமாகிய சபை என்ற அப்பத்தினைப் புசித்த கிறிஸ்தவர்கள் ஜீவனுக்குரியவர்களானார்கள். அது அல்லாதபடி மற்றவர்கள் மரணத்திற்குரியவர்களானார்கள். கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு அன்றைக்கென்று அனுப்பப்பட்ட மன்னாவை தூதர்கள் கொண்டுவந்தார்கள். அதனைப் புசித்தவர்கள் நித்திய ஜீவனை சுதந்திரிக்க கிருபை பெற்றவர்களானார்கள். ஒவ்வொரு சபைக்காலத்திலும் அதேபோலொத்த கிரியையே காணப்பட்டது. இரண்டாம் சபைக்காலத்தில் முதலாவது சபைக்குரிய பிரமாண வார்த்தை புசிக்கத்தகாத அப்பமாயிற்று. அதனைப் புசித்தவர்கள் மரணத்திற்குள்ளானார்கள். 2-வது சபைக்கால பிரமாண வார்த்தையினை ஏற்றுக்கொண்டவர்கள் ஜீவனுக்குரியவர்களானார்கள். 3-வது சபைக்காலத்தில், அதற்கு முந்தைய இரண்டு சபைக்கால பிரமாணங்களை ஏற்றுக்கொண்டவர்கள் அன்றைக்குரிய மன்னாவை ஏற்றுக்கொள்ளாததால் மரணத்திற்குரியவர்களானார்கள். இதேபோலொத்த ஒரு நிலை எல்லா சபைக்காலங்களிலும் காணப்பட்டது. ஏழாவது சபைக்காலத்தில் ஏழாவது சபைக்கால பிரமாணத்தின்படி கிரியை செய்யாமல் மற்ற சபைக்காலத்து கிரியைகளைச் செய்தவர்கள் மரணத்திற்குரியவர்களானார்கள். 7 சபைக்காலங்களும் நிறைவடைந்தபின், தூதன் மூலம் கொடுத்து அனுப்பப்படும் பிரமாணத்தினை ஏற்றுக்கொள்ளாது சபைக்கால வார்த்தையினை மாத்திரம் பற்றிக் கொண்டவர்கள் மரணத்திற்குரியவர்கள் ஆவார்கள். இதுவே வார்த்தை, இதுவே பிரமாணம், இதுவே சத்தியமாகும்.

    கிருபை என்ற வார்த்தை மன்னாவாய் அனுப்பப்படுவதற்கு முன்னர், அந்த மன்னாவைக் குறித்து அறிவிக்க கர்த்தர் தமது தூதனை அனுப்புகின்றார். அவன் வந்து அந்த மன்னாவுக்குச் சாட்சியிடுவான். இதனைக் குறித்து மல்கியா தீர்க்கதாரிசியின் புத்தகத்தில் நாம் வாசிக்கின்றோம்.

மல். 3: 1-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்."

    இந்த தூதனானவன் முன்னர் வந்து சாட்சியிடுவான். அவன் ஒரு பிரிவு ஜனத்தாரிடமிருந்து கிருபை எடுபடுவதைக் குறித்து சாட்சியிடுவான். முன்னர் யோவான்ஸ்நானனாக இஸ்ரவேலர்களிடம் சாட்சியிட்டான். அதுபோல கிறிஸ்தவர்களிடமும் வந்து சாட்சியிடுவான்.

    இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்கள் யாவரும் மாமிசத்தின்படியாக கட்டளையிடப்பட்டுள்ள வாக்குத்தத்தத்தினைச் சுதந்திரிக்க கிருபை பெற்றவர்களாக இருக்கின்றோம். காரணம், நாம் இப்போது மாமிசத்தின்படியாக ஆபிரகாமின் பிள்ளையாக மாற்றப்பட்டிருக்கின்றோம். மாமிசத்தின்படியாக ஆபிரகாமின் பிள்ளைகளாக மாறிய கிறிஸ்தவர்கள் ஆவியின்படியாகவும் ஆபிரகாமின் பிள்ளைகளாக மாறவேண்டும்; ஈசாக்காக மாற வேண்டும். ஆவியின்படி நாம் ஆபிரகாமின் பிள்ளையாக மாறுவதற்கே பிரமாணம் கொடுக்கப்பட்டுள்ளது. அது முதலாவது கிறிஸ்தவர்களுக்குள்ளாகக் கட்டளையிடப்பட்டிருந்த சபைப்பிரமாணமாகும்.

லூக்கா 3: 16-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்தஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்."

    யோவான் ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தார். அது ஒரு அடையாளமாய்க் கட்டளையிடப்பட்டது. யோவான்ஸ்நானனுக்குள் எலியாவின் ஆவி வந்து கிரியை செய்ததுபோல கடைசி ஏற்பாட்டிலும் வந்து சாட்சியிட வேண்டும்.

    எலியா இஸ்ரவேலர்கள் மத்தியில் கர்த்தருக்கென்று பலியிட்டு ஒரு ஞானத்தினைக் கொடுத்தார். அதன்பின் யோவான்ஸ்நானனாக வந்து, தண்ணீர் முழுக்கின் மூலம் ஞானஸ்நானம் என்ற அடையாளத்தினைக் கொடுத்து ஒரு ஞானத்தினைக் கொடுத்தார். பலி செலுத்துவதின் மூலம் ஞானத்தினைக் கொடுத்த எலியா கர்த்தருக்கென்று பலிபீடத்தினைக் கட்டினார். அவனுக்கு எதிரே பாகாலுக்கென்று அவர்கள் பலிபீடத்தினைக் கட்டினார்கள். பாகாலுக்கென்று பலிபீடத்தினைக் கட்டியவர்கள் வேறு ஜனங்களல்ல. அவர்கள் இஸ்ரவேலரில் ஒரு சாராரே. அவர்களுக்கெதிராக எலியா கர்த்தருக்கென்று பலிபீடத்தினைக் கட்டினார். வானத்திலிருந்து அக்கினி இறங்கி பலியினையும், பலிபீடத்தினையும் பட்சித்தது. கர்த்தரே தேவன், கர்த்தரே தேவன் என்று இஸ்ரவேலர்கள் சாட்சி கொடுத்தார்கள். அப்படியாக தான் செலுத்திய பலியின் மூலம் ஒரு ஞானத்தினைக் கொடுத்தார். ஜனங்கள் கர்த்தரை அறிந்தார்கள். அதே எலியா யோவான்ஸ்நானனாய் வந்து ஜலத்தின் மூலம் ஒரு ஞானத்தினைக் கொடுத்தார். அதுபோல கடைசி ஏற்பாட்டிலும், வார்த்தையின் மூலம் ஒரு ஞானத்தினைக் கட்டளையிட அனுப்பப்படுவான்.

முதல் ஏற்பாடு - பலி; 2-வது ஏற்பாடு - ஜலம்; 3-வது ஏற்பாடு - வார்த்தை.

    கர்த்தர் பலியினை தம்முடைய நாமத்தில் செலுத்தக் கட்டளையிட்டார்.

1 இரா. 18: 32-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடமான ஒரு வாய்க்காலை உண்டாக்கி,"

    எலியா கர்த்தருடைய நாமத்திற்கென்று இங்கே பலிபீடத்தினைக் கட்டினான். ஆபிரகாமும் கர்த்தருடைய நாமத்திற்கென்று பலிபீடம் கட்டி, பலி செலுத்தினார் என்று வேதம் சாட்சியிடுகின்றது.

ஆதி. 12: 8-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "பின்பு அவன் அவ்விடம்விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்."

    ஆபிரகாம் கர்த்தருக்குப் பலிபீடம் கட்டி, கர்த்தருடைய நாமத்தினைத் தொழுதுகொண்டார். கர்த்தரைக் குறித்த ஞானத்தை அறிந்த பின்னரே, ஆபிரகாம் கர்த்தருக்கென்று பலிபீடத்தைக் கட்டி தொழுதுகொண்டார். கர்த்தருடைய நாமம் இன்னதென்று அறிந்து, கர்த்தருக்குப் பலியிடக்கூடிய பலி கர்த்தரால் அங்கீகரிக்கக்கூடிய பலியாக சாட்சியிடப்பட்டுள்ளது. நம்முடைய தேவன் யார்? நம்முடைய கர்த்தர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் எத்தகைய கிரியைகளைச் செய்துகொண்டிருக்கின்றார்? இவைகளை அறிந்து ஏறெடுக்கப்படும் பலியே கர்த்தரால் அங்கீகரிக்கப்படும் பலியாக அமையும். அப்படியாக ஏறெடுக்கப்படாத எந்தப் பலியும் கர்த்தருக்கென்று ஏறெடுக்கப்படும் பலியாக அமையாது. அது வானசேனைகளுக்கு ஏறெடுக்கப்படும் பலியாகவே சாட்சியிடப்பட்டுள்ளது.

    ஆபிரகாம், தான் பலிகளை ஏறெடுக்கும் கர்த்தர் இன்னாரென்று அறிந்தவனாக இருந்தான். கிறிஸ்தவர்களாகிய நாம் ஆபிரகாமின் பிள்ளைகளாகியுள்ளோம். அது இயேசுகிறிஸ்து மூலமாக நமக்குக் கிடைத்த கிருபை. இயேசுகிறிஸ்துவைக் குறித்த ஞானம் நம் எல்லோரிடமும் இருக்கின்றதா? கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுகிறிஸ்துவை அனுப்பிய தேவன் இன்னாரென்று அறிந்திருக்கின்றோமா? ஆபிரகாம் பலியிட்ட கர்த்தரை இன்னாரென்று நாம் அறிந்திருக்கின்றோமா? அவரது நாமம் இன்னதென்று நாம் அறிந்திருக்கின்றோமா? சிந்திப்பீர்! நித்திய ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்டவர்கள் கர்த்தரது நாமம் இன்னதென்று அறிவார்கள். இன்றைய சபைகள் இயேசுகிறிஸ்துவைக் குறித்து வெளிப்படுத்துகின்றதா? பிதாவின் நாமம் இன்னதென்று சாட்சியிடுகின்றதா?

    கிருபையினால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற நாமம் பிதாவின் நாமமாய் உயர்த்தப்பட்டிருக்கிறதைக் குறித்து எத்தனை சபைகள் சாட்சியிடுகின்றது?

    பிதாவையும் குமாரனையும் அறிவதே நித்திய ஜீவன் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. எத்தனை சபைகள் பிதாவையும், அவரிடமிருந்து அனுப்பப்பட்ட அந்த வார்த்தை மாமிசமாகி மனுஷகுமாரனாக சாட்சியிட்டுள்ளதைக் குறித்து சாட்சியிடுகின்றது?

    கிறிஸ்தவர்களாகிய நாம் ஆபிரகாமை அறிந்திருக்கின்றோம்; ஈசாக்கினையும் அறிந்து வைத்துள்ளோம். யாக்கோபினையும் அறிவோம். ஆனால் நாம் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவன் யாரென்பதையும் குறித்து அறிந்திருக்கின்றோமா? அவரது நாமத்தை அறிந்திருக்கின்றோமா? நாம் ஆவிக்குரியவர்களாக மாறும்போது அவரைக் குறித்து அறியக்கூடிய அறிவைப் பெற்றவர்களாகின்றோம். மாமிச சிந்தை மரணம் என்று வேதம் கூறுகின்றது. நாம் அந்த சிந்தையின் மூலம் அதனை அறிய இயலாது. இஸ்ரவேலர்கள் தாங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று கூறினார்கள். காரணம் அவர்கள் ஆபிரகாமுடைய மாமிச சந்ததிகளாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் ஆவியின்படியாக ஆபிரகாமின் சந்ததிகளாய் இருக்கவில்லை. இருந்திருந்தால், தூதனது சாட்சியை அங்கீகரித்திருப்பார்கள். மாமிசத்தில் வந்த கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.

    கிறிஸ்தவர்களாகிய நாம் யாவரும் இயேசுகிறிஸ்துவின் மூலம் ஆபிரகாமின் சந்ததிகளாக மாறியுள்ளோம். வாக்குத்தத்தத்தின்படியாக கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினை ஏற்றுக்கொண்டு இரட்சிப்பினைப் பெற கிருபை பெற்றவர்களாக இருக்கின்றோம். புறஜாதி என்ற பாவத்திலிருந்து இரட்சிப்பினைப் பெற்றுக்கொள்ள இயேசுகிறிஸ்து என்ற நாமம் பிதாவினால் உயர்த்தப்பட்ட நாமமாக உள்ளது. இயேசுகிறிஸ்து என்ற நாமத்தில் வைத்த விசுவாசத்தினாலே நாம் ஆத்துமா என்ற உள்ளான மனுஷனைப் பெறக்கூடிய கிருபையினைப் பெற்றிருக்கின்றோம். நாம் பெற்றுள்ள ஆத்துமா என்ற உள்ளான மனுஷன் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்கக்கூடிய இரட்சிப்பினைப் பெற்றுக்கொள்ள ஒரு ஞானம் தேவைப்படுகின்றது. கர்த்தரை அறியக்கூடிய இந்த அறிவானது பிரமாணத்தின்மூலம் சாட்சியிடப்பட்டுள்ளது.

    ஆபிரகாம், தன்னுடைய தேவன் இன்னாரென்று அறிந்திருந்தார். ''என் எஜமானுடைய தேவன் என் பிரயாணத்தினை வாய்க்கப்பண்ணினார்'' என்று கூறக்கூடிய தன்மை கொண்டவனாகவே எலியேசர் சாட்சியிடப்பட்டுள்ளான். ஆனால் இஸ்மவேலுக்கு அந்த ஞானம் அருளப்படவில்லை. ஆகாரும் தன்னைக் காண்கின்றவரை தானும் கண்டேன் என்றே கூறினாள். கர்த்தருடைய நாமம் இன்னதென்றும், கர்த்தருக்கு எப்படியாக பலி செலுத்தவேண்டும் என்றும் ஆபிரகாம் அறிந்தவராய் இருந்தார். எலியா தீர்க்கதரிசி ஆபிரகாம் யாரென்றும், ஆபிரகாமின் தேவன் யாரென்றும் அறிந்தவனாய் இருந்தான்; எலியாவுக்கு ஈசாக்கின் தேவன் யாரென்றும், யாக்கோபின் தேவன் யாரென்றும், ஆதாமை உருவாக்கியவர் யாரென்றும் அறியக்கூடிய ஞானம் அருளப்பட்டிருந்தது. ஆதாமிற்குள்ளாக இரு சந்ததியார் பிரிக்கப்பட்டதையும் அறிந்தவனாய் இருந்தான்; எலியா வானமும் பூமியும் உருவாக்கப்பட்டதைக் குறித்து அறிந்திருந்தான். கர்த்தரை அறிந்து அவன் ஏறெடுத்த பலி கர்த்தருடைய நாமத்திற்கு ஏறெடுத்த பலியாக அமைந்தது.

    எலியாவின் ஆவியைப் பெற்ற யோவான்ஸ்நானனும் கர்த்தரை அறிந்திருந்தான். எனவே, நானும் இவரை அறியாதிருந்தேன்; என்னை ஞானஸ்நானம் கொடுக்க அனுப்பியவர் யார்மீது புறாரூபம் கொண்டு இறங்குகின்றாரோ, அவர்தான் அக்கினியினால் ஞானஸ்நானம் கொடுக்க அனுப்பப்பட்டவர் என்று கூறினான். கர்த்தரின் நாமம் இன்னதென்று அறிந்தவனாக அவன் சாட்சியிடப்பட்டுள்ளான்.

அப். 19: 4-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்."

    தனக்குப் பின்னால் வருபவரைக் குறித்து அவன் அறிந்திருந்தான். அவர் கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர் என்றும் அறிந்திருந்தான். "இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்க வந்த தேவ ஆட்டுக்குட்டி" என்று சாட்சியிட்டுள்ளதைப் பார்க்கின்றோம்.

    கர்த்தரையும், அவருடைய நாமத்தையும் அறிந்தவனாக அவன் சாட்சியிடப்பட்டுள்ளான். கடைசி ஏற்பாட்டின் காலத்திலும் கர்த்தருடைய நாமம் இன்னதென்று எலியாவின் ஆவி வந்து சாட்சியிட வேண்டும்.

வெளி. 11: 7-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அவர்கள் தங்கள் சாட்சியைச் சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும்."

    "அவர்கள் தங்கள் சாட்சியைச் சொல்லி முடித்திருக்கும்போது..." என்று கூறப்பட்டுள்ளது. இங்கே மோசேயும் எலியாவும் வந்து சாட்சி கொடுக்கவேண்டும் என்று கூறப்பட்டிருக்கின்றது. இவர்களைக் கர்த்தர் தன்னுடைய சாட்சிகள் என்று சாட்சியிட்டுள்ளார். கடைசி ஏற்பாட்டில் கர்த்தருடைய நாமத்தினைக் குறித்து அவர்கள் சாட்சியிட வேண்டும். அந்த நாமம் "தேவனுடைய வார்த்தை" என்று வேதம் கூறுகின்றது. இந்த நாமம் கர்த்தரை வெளிப்படுத்தும். அது தேவத்துவம் இன்னதென்றும், கர்த்தத்துவம் இன்னதென்றும் வேறுபிரித்து கொடுக்கக்கூடிய சாட்சியாகும்.

    ஆபிரகாம் அறிந்த கர்த்தரை எலியாவும் அறிந்திருந்தான். எனவே எலியாவின் ஆவியைப் பெற்ற யோவான்ஸ்நானனும் அறிந்திருந்தான். அதுபோலவே, "வார்த்தை" என்ற தேவனின் நாமத்தினை ஆபிரகாம் அறிந்திருந்ததுபோல அந்த சாட்சிகளும் அறிந்தவர்களாக சாட்சியிடப்பட்டுள்ளது.

1 இரா. 17: 2-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்:"

    கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்குள் உண்டாயிற்று என்று கூறப்பட்டுள்ளது.

இரா. 19: 9-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அங்கே அவன் ஒரு கெபிக்குள் போய்த் தங்கினான்; இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார்."

1 இரா. 21: 17-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்:"

    எலியாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை இன்னதென்று அவன் அறிந்திருந்தான். அவன் தனக்குள்ளாக உண்டான அந்த வார்த்தையினை விசுவாசித்தான். எலியா விசுவாசித்த அந்த வார்த்தையினை எலிசா ஏற்றுக்கொண்டான். யோவான்ஸ்நானன் விசுவாசித்த அந்த வார்த்தையை அவரது சீஷர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

    எலியா தனக்குள் உண்டான அந்த வார்த்தையை கர்த்தருடைய வார்த்தை என விசுவாசித்தான். அந்த வார்த்தையானது தீர்க்கதரிசன வார்த்தைக்கு ஒத்திருந்ததை அறிந்திருந்தான்.

    யோவான்ஸ்நானன், வயதுசென்ற பெற்றோருக்குப் பிறந்த குழந்தை. அந்தக் குழந்தை வளர்ந்து, இஸ்ரவேலருக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரையிலும் வெட்டுக்கிளியையும், காட்டுத்தேனையும் புசித்து வனாந்திரங்களில் இருந்தது. அப்படியாக அவன் இருந்தபோது, அவனுக்குள்ளாக ஒரு வார்த்தை உண்டானது. அந்த வார்த்தையினை அவன் விசுவாசித்தான். அந்த வார்த்தை ஆட்டுக்குட்டியானவரை அவனுக்கு அடையாளம் காட்டிற்று.

    யோவான்ஸ்நானனுக்குள் அனுப்பப்பட்ட எலியாவின் ஆவி அவனை எருசலேம் தேவாலயத்திலிருந்து தனிமைப்படுத்தி வனாந்திரத்திற்குக் கொண்டு சென்றது. நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தூதன் என்னப்படுவாய். நீ கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணு என்கிற தூதனின் சாட்சி அவனை வேறுபிரித்தது. அவன் வனாந்தரங்களில் சுற்றித்திரிந்தான். அவன் தனக்குள் உண்டான கர்த்தரது வார்த்தைக்கு ஏற்ற கிரியைகளைச் செய்தான். அவனுக்குள் உண்டான கர்த்தருடைய வார்த்தை ஆட்டுக்குட்டியை சாட்சியிட செய்தது.

1 இரா. 18:15-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அதற்கு எலியா: இன்றைக்கு என்னை அவனுக்குக் காண்பிப்பேன் என்று சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்."

    எலியா, கர்த்தர் தனக்கு எத்தகைய கிரியைகளைச் செய்யும்படி கட்டளையிட்டாரோ, அதன்படியான கிரியைகளை இஸ்ரவேலர்கள்முன் வெளிப்படுத்தினான்.

1 இரா. 18: 22-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அப்பொழுது எலியா ஜனங்களை நோக்கி: கர்த்தரின் தீர்க்கதரிசிகளில் மீந்திருக்கிறவன் நான் ஒருவன்; பாகாலின் தீர்க்கதரிசிகளோ நானூற்றைம்பதுபேர்."

    எலியா தன்னைக் கர்த்தருடைய தீர்க்கதரிசி என்று சாட்சியிடுகின்றான். எலியா கர்த்தரது சமூகத்திற்கு முன்பாக நிற்கக்கூடிய ஒரு தூதன். கர்த்தரது சமூகத்தில் நிற்கும் அந்தத் தூதனுக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று. அவன் மாமிசத்தில் கர்த்தருடைய தீர்க்கதரிசியாயிருந்தான். கர்த்தருடைய வார்த்தை எலியாவிடம் உண்டானதுபோல யோவான்ஸ்நானனுக்குள்ளும் உண்டானது.

லூக்கா 3: 2-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று."

    எலியாவிடம் உண்டான கர்த்தருடைய வார்த்தை பின்னர் யோவான்ஸ்நானனுக்கும் உண்டானது. யோவான்ஸ்நானனுக்குள் உண்டான கர்த்தருடைய வார்த்தை குமாரனை சாட்சியிட்டது. யோவான்ஸ்நானனுக்குள் இருந்த எலியாவின் ஆவி அதனை யோவான்ஸ்நானனுக்கு சாட்சியிட்டது. யோவான்ஸ்நானன் தன்னை அந்த ஒளிக்குச் சாட்சி என்று கூறினான். வெளி. 11: 3-ன்படியாக, அவன் கடைசி ஏற்பாட்டிலும் வந்து சாட்சியிட வேண்டும்.

சகரியா 4: 14-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அப்பொழுது அவர்: இவைகள் இரண்டும் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்."

    எலியா கர்த்தருக்கு முன்பாக நின்று கர்த்தருடைய வார்த்தையை உருவாக பெற்றுக்கொண்டான். அதுபோல், யோவான்ஸ்நானனும் கர்த்தருக்கு முன்பாக நின்று வார்த்தையை அறிந்துகொண்டான். அதுபோல கடைசி ஏற்பாட்டின் வார்த்தைக்கும் அந்த தூதன் வந்து சாட்சியிட வேண்டும். அவன், கர்த்தரை அறிந்தவன்; அவரது நாமத்தினை அறிந்தவன். கர்த்தத்துவம் என்னவென்றும், தேவத்துவம் என்னவென்றும் அறிந்தவன். ஆதாம் இவைகளைத் தெரிந்திருந்தும், தன்னுடைய வழியிலிருந்து விலகிப்போனான். எனவே ஆக்கினைக்குரியவன் ஆனான்.

    ஏதேன் தோட்டத்தில் தேவனாகிய கர்த்தர் உலாவி வந்தார்; அங்கே காப்பாற்றுவதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட சர்ப்பமும் அமர்த்தப்பட்டது. அவன் வார்த்தைக்கு எதிரானவன்; பிரமாணத்திற்கு எதிரானவன்; நாமத்திற்கு எதிரானவன். ஏசாவுக்கும் பர்வதம் சாட்சியிடப்பட்டுள்ளது. அவனும் அந்தப் பர்வதத்தின்மேல் கர்த்தருக்குத்தான் பலி செலுத்தினான்; அவனும் தான் நித்திய ஜீவனைப் பெறுவேன் என்றுதான் விசுவாசித்தான். ஆனால், கர்த்தர் அவனை வெறுத்தார்; கர்த்தர் அவனை ஏற்றுக்கொள்ளவில்லை; கர்த்தரது கிருபை அவனுக்குக் கிடைக்கவில்லை. அவனது பலிபீடங்கள் வலுசர்ப்பங்களின் தாபரமாயிற்று என்று வேதம் கூறுகின்றது.

    இப்போது மாமிசத்தின்படி நாம் கிறிஸ்தவர்களாக மாறி இருக்கின்றோம். நாம் ஆவிக்குரிய கிறிஸ்தவர்களாக மாறவேண்டும். அதனைத் தடைசெய்பவன் பிசாசு, சத்துரு. அவன் சத்தியத்திற்கு எதிரியாயிருக்கின்றவன். கிறிஸ்தவர்களாகிய நமக்கு எதிராக அவன் செயல்படுகின்றான். மாமிசத்திற்குரிய ஆசீர்வாத தடையிலும், ஆவிக்குரிய பிரமாண எதிர்ப்பிலுமாக அவன் செயல்பாடு உள்ளது. மாமிசத்தில் தடை செய்யும் சத்துருவின் கிரியைகளை நம்மால் அடையாளம் காணமுடியும். அது மாமிச சரீரத்தில் வியாதியாகவோ, மாமிச சரீரத்திற்குக் கிடைக்கக்கூடிய ஆசீர்வாதங்களுக்குத் தடையாகவோ செயல்படுவதால், நாம் அதனை அடையாளம் காண்கின்றோம். மாமிசத்தில் செயல்படக்கூடிய இத்தன்மை சோதனைக்குட்படுத்தப்படுவதாகவே வேதம் சாட்சி கொடுக்கின்றது. எப்படியாக இருந்தாலும், மாமிசத்தில் ஏற்படக்கூடிய இவைகளிலிருந்து மீட்கப்பட கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசம் உள்ளவர்களாக இருக்கவேண்டும். கிறிஸ்தவர்களாகிய நாம் மாமிசத்தில் வரக்கூடிய இந்தப் போராட்டங்களை மேற்கொள்வது பெரிய காரியம் அல்ல. நாம் ஜெபத்திலும் உபவாசத்திலும் இவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

    மாமிசத்தில் ஏற்படக்கூடிய எந்தப் போராட்டங்களானாலும் அதனை நாம் விசுவாசத்தின் மூலம் மேற்கொள்ளலாம். ஆனால் ஆவியின்படியான பிசாசின் கிரியைகளை நாம் அடையாளம் காண்பது கடினமான ஒன்றாகும். அதனை நாம் அடையாளம் காண சத்தியத்தின்மீதான விசுவாசம் வேண்டும். இயேசுகிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்டபோது, அவரிடம் விசுவாசம் வைத்து மாமிசத்திற்குரிய நன்மையினை அநேகர் பெற்றுக்கொண்டார்கள். இயேசுகிறிஸ்துவினிடத்தில் மாமிச நன்மையினைப் பெற்ற அனைவரும் பரலோகராஜ்யத்தினைச் சுதந்தரித்திருப்பார்களா? குஷ்டரோகத்திலிருந்து சுகம் பெற்ற 10 குஷ்டரோகிகளில் ஒருவன் மாத்திரமே அவரிடம் திரும்பி வந்தான். சுகம் பெற்றவர்களில் யாருடைய கிரியைகள் ஆவிக்குரிய கிரியைகளாக இருந்ததோ, அவர்கள் மாத்திரமே நித்திய ஜீவனைச் சுதந்தரித்தார்கள். சுகம் பெற்ற பத்து குஷ்டரோகிகளில் ஒருவன் மாத்திரமே இரட்சிப்பினைப் பெற்றான் என்று கர்த்தர் சாட்சியிட்டுள்ளதைப் பார்க்கின்றோம்.

    ஆவிக்குரிய பிரமாணத்தில் சத்துருவாய் செயல்படும் பிசாசு மாமிச நன்மைகளைக் கொடுக்கக்கூடிய அதிகாரம் பெற்றவனாகவே வேதம் சாட்சியிடுகின்றது. ஏவாள் முதன்முதலில் வஞ்சிக்கப்பட்டாள். நீ இந்தக் கனியினைப் புசிப்பதனால் சாகமாட்டாய், மேலும் நீ தேவர்களைப் போல் மாறிவிடுவாய் என்று அறைகூவல் விட்டான். அதற்கு ஏவாள் செவிகொடுத்தாள். அதனால் ஆதாம் ஜீவனுள்ளோர் தேசத்தில் பிரவேசிக்க கூடிய கிருபையினை இழந்துபோனான். நீ மண்; மண்ணுக்குத் திரும்புவாய் என்ற சாபத்திற்குள்ளானான். ஆனாலும் ஆதாமின் மாமிச சரீரம் கர்த்தரால் காப்பாற்றப்பட்டது. இஸ்மவேலும் கர்த்தரால் காப்பாற்றப்பட்டான். இஸ்மவேலருடைய சந்ததிகளும் மாமிச சரீர நன்மைகளால் இன்றுவரை கர்த்தரால் போஷிக்கப்பட்டு உயர்ந்திருக்கின்றார்கள். அதுபோலவே கிறிஸ்தவர்களும் கர்த்தர் அருளும் சரீர நன்மைகளைப் பெற்று ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவே இந்தப் பூமியில் ஜீவிக்கின்றார்கள். அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் மாமிச சரீரத்திற்குரிய நன்மைகள் அருளப்பட்டு வருகின்றது.

    ஆவிக்குரிய பிரமாணத்தினை ஏற்றுக்கொள்ளாத கிறிஸ்தவர்கள் மாமிச சரீரத்தில் உடனடியாக தண்டனையினைப் பெற்றுக்கொள்வதில்லை. கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் சிட்சைக்கு உட்பட்டு இரட்சிப்பிற்குள்ளாகியுள்ளதைக் குறித்து வேதம் சாட்சியிடுகின்றது. சரீர நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டதால் மாத்திரம், ஒரு ஆத்துமா நித்திய ஜீவனைச் சுதந்தரிக்காது. அது பிரமாணத்தின்படியான கிரியைகளைச் செய்தால் ஒழிய நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளாது. ஆத்துமாவை மரணத்திற்குள்ளாக திருப்புவதே பிசாசின் கிரியை ஆகும்.

    ஆத்துமா மரணத்திற்குள்ளாகத் தீர்க்கப்பட்டிருந்தாலும், சரீர நன்மைகளைப் பெற்றுக்கொள்ள கிறிஸ்து தடைசெய்வதில்லை. கிறிஸ்தவர்களாகிய நாம் யாவரும் தேவனுடைய பிள்ளைகள் என்றே வேதம் சாட்சியிடுகின்றது. மாமிச சரீரத்தின் நன்மைகள் யாவும் மாமிச சரீரத்தோடு முடிந்துவிடும்.

    கர்த்தர் காயீனை ஆசீர்வதித்தார். பூமிக்குரிய காரியத்தில் பட்டணங்களைக் கட்டக்கூடிய அறிவும், ஆசீர்வாதமும் அவனுக்குக் கட்டளையிடப்பட்டது. ஆனால் அவனது ஆத்துமா மரணத்திற்கென்று தீர்க்கப்பட்டது. காயீன் பொல்லாங்கனால் பிறந்தவன் என்று வேதம் அவனைக் குறித்து கூறுகின்றது. பிரமாணத்தினை மீறுவதே ஒரு ஆத்துமாவை மரணத்திற்குள்ளாக்கும். விசுவாசத்தின் மூலம் கிறிஸ்தவர்களாக்கப்பட்டுள்ள நமக்கு ஒரு பிரமாணம் கட்டளையிடப்பட்டுள்ளது. அது ஆவிக்குரிய பிரமாணமாகும். அந்த ஆவிக்குரிய பிரமாணமே ஒரு ஆத்துமாவை நித்திய ஜீவனுக்குரியதாக மாற்றும். ஆவிக்குரிய பிரமாணமே ஒரு கிறிஸ்தவனை கிறிஸ்து யார் என்று அறியக்கூடிய அறிவைக் கொடுக்கும்.

மத். 5: 44-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்."

    இயேசுகிறிஸ்து: "உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்" என்று சாட்சியிட்டுள்ளார். ஆனால் இங்கே கூறப்பட்டுள்ள சத்துரு மாமிசத்தில் இருக்கக்கூடிய எதிரிகளைக் குறித்து கூறப்பட்டிருக்கிறது. பிசாசினைக் குறித்தும் வேதம் சத்துரு என்று கூறுவதைப் பார்க்கின்றோம். இந்த சத்துரு ஆவிக்குரிய பிரமாணத்திற்கு சத்துரு. நம்மை ஆக்கினைக்கு வழிநடத்தக்கூடிய கிரியைகளைச் செய்யும் சத்துரு. இந்த சத்துருவை சிநேகிக்க வார்த்தை சாட்சியிடவில்லை.

மத். 13: 39-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்."

    பிசாசு ஆவிக்குரிய சரீரத்திற்கு சத்துரு. பிசாசு ஆவிக்கென்று கட்டளையிடப்படும் பிரமாணத்தை மாற்றுபவன். அவனை சிநேகிக்கும்படியாக வேதம் சாட்சியிடவில்லை. பிதா மாமிசத்தில் ஜீவிக்கும் எல்லா மனிதர்களையும் நேசிக்கின்றார். காரணம், மனிதனை அவர் தமது சாயலின்படியேயும், ரூபத்தின்படியேயும் சிருஷ்டித்துள்ளார்.

    அவரைத் தேடினாலும் சரி, அவரை தேடாவிட்டாலும் சரி; அவரை வேண்டினாலும் சரி, அவரை வேண்டாவிட்டாலும் சரி; அவர் எல்லா மனிதர்களையும் நேசிக்கின்றார். எல்லா மனிதர்களும் தேவத்துவ கிரியையினால் அவரால் சிருஷ்டிக்கப்பட்டார்கள். கர்த்தர் சாட்சியிட்டுள்ள இந்த சத்துரு தேவத்துவத்திற்கு சத்துரு அல்ல. அவன் தேவத்துவத்தில் அவரால் அபிஷேகம் பண்ணப்பட்டவன். வானமும் பூமியும் உண்டாக்கப்பட்டபோது, அவன் அந்த சிருஷ்டிப்பின் கிரியைகளில் எதிர்வினை ஆற்றவில்லை. அவன் அவ்விதமாக உருவாகாதபடிக்கு எதிர்வினையாற்றவில்லை. பிசாசினால் தேவத்துவ கிரியைகளில் எந்தவொரு மாறுதலும் செய்ய முடியாது. அவருடைய அனுமதியில்லாமல் அதனை அழிக்கவோ, உருவாக்கவோ அவனால் இயலாது. அவனால் தேவத்துவத்திற்கு எதிராக செயல்பட முடியாது. தேவனும் தேவத்துவமும் சிருஷ்டிப்பின் காரியங்கள் தொடங்கி, அழிவின் காரியங்கள் வரையிலுமான கிரியைகளாகும். பிசாசு இந்த தேவத்துவ கிரியைகளைக் காப்பாற்றுவதற்காக அபிஷேகம் செய்யப்பட்டவன்.

    மேலும் பிசாசினால் ஆவியின் சரீரமான ஆத்துமாவை உருவாக்கவோ, அழிக்கவோ முடியாது. ஆத்துமா என்பது கர்த்தத்துவ கிரியையாகும். ஆத்துமாவை அழிவிற்குரிய போதனைகளுக்கு செவிசாய்க்கவைத்து அதனை வஞ்சிக்கத்தக்கதான கிரியையைகளையே அவன் ஆதிமுதற்கொண்டு செய்துவருகின்றான். கர்த்தத்துவத்தின் பிரமாணங்களுக்கு மாறான ஒரு போதகத்தை அவன் கொடுத்து வருகின்றான். ஆதாமிற்குள் ஜீவசுவாசத்தினை ஊதினார். அவன் ஜீவாத்துமாவானான். அவன் ஆவியின் சரீரம் கொண்டவனானான். அங்கே ஒரு வார்த்தை பிரமாணமாக அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அந்த வார்த்தை, நீ இந்தக் கனியைப் புசிக்காதே என்பதே. ஆதாமுக்குக் கட்டளையிடப்பட்ட கர்த்தத்துவத்திற்கேற்ற கிரியை அந்தக் கனியினைப் புசிக்கக்கூடாது என்பதே. ஆனால் அதற்கேற்ற கிரியையினைச் செய்யாதபடிக்கு மாறுபாடான ஒரு போதனையினை பிசாசு ஏவாளிடம் கூறினான். அதுபோலவே ஒவ்வொரு காலங்களிலும் அவனது கிரியைகள் சாட்சியிடப்பட்டுள்ளது.

    அப்போஸ்தலர்களின் நாட்களில் இயேசுவே கர்த்தர் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவே கர்த்தத்துவத்திற்கேற்ற கிரியையாக சாட்சியிடப்பட்டது. அதுபோல ஒவ்வொரு சபைக்காலத்திலும் கட்டளையிடப்பட்ட பிரமாணம் கர்த்தத்துவத்திற்குள்ளான கிரியைப் பிரமாணமாக சாட்சியிடப்பட்டுள்ளது. அவைகளை ஏற்றுக்கொண்டு அதற்கு ஏற்ற கிரியைகளைச் செய்தவர்கள் நீதிமான்களானார்கள்; நித்திய ஜீவனைச் சுதந்தரித்தார்கள். அதுபோல கடைசி ஏற்பாட்டின் காலத்திலும் ஒரு பிரமாணம் கர்த்தத்துவத்திற்குள்ளாக சாட்சியிடப்படும். அது பாபிலோன் என்ற வேசியை விட்டு வெளியேறி வரவேண்டும் என்பதாகும். அந்த சாட்சிக்கு ஏற்ற கிரியைகளைச் செய்வதே ஆவிக்குரிய கிரியையாகும். அந்தக் கிரியைகளைச் செய்யாத ஆத்துமா ஆக்கினைக்கென்று தீர்க்கப்படும். கர்த்தத்துவத்திற்கேற்ற கிரியைகளின்படி செயல்படவிடாமல் தடுப்பவனே சத்துரு. அவன் சத்தியத்திற்கு சத்துரு.

    பிசாசு நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியினைப் பறித்துக்கொண்டு போய் ஆதாமிடமும் ஏவாளிடமும் கொடுக்கவில்லை. அவன் அந்தக் கனியினைப் புசிக்கும்படியாக ஏவாளிடம் ஒரு இச்சையை ஏற்படுத்தினான். அவனது போதகம் அங்கே சத்தியத்திற்கு எதிராக இருந்தது. அதுபோலவே கிறிஸ்தவர்களாகிய நம்மையும் கர்த்தத்துவ கிரியைகளுக்கு எதிரான கிரியைகளைச் செய்யத் தூண்டுபவனாகவே பிசாசு செயல்படுகிறது. அறிவிக்கப்படும் சத்திய வார்த்தைக்கு எதிர்விதமான போதனைகளையே அவன் எல்லா காலங்களிலும் கொடுத்து வருகின்றான். தன்னுடைய போதகத்தினால் ஆத்துமாக்களை வஞ்சித்து ஆக்கினைக்குரியதாக மாற்றத்தக்கதான கிரியைகளைச் செய்துவருகின்றான். கர்த்தத்துவத்தின் கிரியைகளை மீறத்தக்கதான ஆலோசனையைக் கொடுப்பவனாகவே செயல்படுகின்றான்.

    நாம் நீதியின் பாதையில் நடக்கவிழைகின்றோமா என்பதை சோதிப்பதற்காக அவன் சோதனைக்காரனாக அமர்த்தப்பட்டுள்ளான். கர்த்தத்துவத்திற்கேற்ற கிரியைகளுக்கு எதிர்வினையாற்றுவதால், அவனை சத்துரு என்று வேதம் கூறுகின்றது. கர்த்தத்துவத்தின் பிரமாணங்களை மீறி நடக்கச் செய்பவனாகவும் ஜீவனுக்குரிய மார்க்கத்தினை விட்டு விலகி ஆக்கினைக்குரிய வழியில் செல்லத் தூண்டுபவனாகவே அவன் கிரியை செய்கின்றான். மாமிசத்திற்குரிய செயல்பாடுகள் அப்படியாக இருப்பதில்லை. ஒருநாள் மாமிசத்தின்படி சத்துருவாய் இருப்பவர்கள், மற்றொரு நாள் சிநேகிதனாகவும் மாறலாம். ஆனால் பிசாசின் கிரியைகள் அப்படிப்பட்டதாக இருப்பதில்லை. அவன் எப்போதும் நீதிக்குப் பகைஞன் என்றே வேதம் கூறுகின்றது. அவன் ஆத்துமா கொண்ட கர்த்தத்துவ ஜனத்திற்கு சத்துரு.

ஆத்துமா கொண்டவர்களுக்கு சத்துரு பிசாசு.

லூக். 1: 71 - 75-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று,
அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்;
ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே,
தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கின்ற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும்படிக்கு,
தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார்."

    இரட்சணிய கொம்பாக கிறிஸ்து இங்கே சாட்சியிடப்பட்டுள்ளார். அந்த இரட்சணியக் கொம்பினைக் குறித்து சாட்சியிட யோவாஸ்நானன் அனுப்பப்பட்டான். யோவான்ஸ்நானனின் பிறப்பினைக் குறித்து அவனது தாய் தகப்பனிடம் தூதன் முன்னறிவித்தான். இஸ்ரவேலர்கள் இந்த தீர்க்கதரிசன வார்த்தையினை அறியாதிருந்தார்கள். எலியா முந்தி வரவேண்டும் என்பது தீர்க்கதரிசனம். இயேசுகிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்டபோது, யூதர்கள் ஏரோதுவின் ஆளுகைக்குள்ளாக இருந்தார்கள். எனவே அவர்கள் மேசியா வந்து தங்களை ஏரோதின் ஆளுகையினின்று விடுதலையாக்குவார் என மாமிசத்தில் சிந்தித்தார்கள். அந்த விடுதலையை இரட்சணியக் கொம்பு கொடுக்கும் என்பதாய் சிந்தித்தார்கள். ராயனுடைய ஆளுகையிலிருந்து தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்பதாய் சிந்தித்திருந்தார்கள். தாவீதின் கோத்திரத்திலிருந்து எழும்பும் அந்தக் கொம்பு ஒரு இராஜ்யத்தை தங்களுக்கென்று ஏற்படுத்தும் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இங்கே தாவீதின் குமாரன் என்று சாட்சியிடப்பட்டவர் வந்து அப்படியான கிரியைகள் எதையும் செய்யவில்லை. இன்னொருவருடைய வீட்டில் கட்டப்பட்டிருந்த கழுதையினை அவிழ்த்துக் கொண்டுவரச் செய்து, அதன்மீது அவர் ஏறிவந்தார். முன்நடப்பாரும் பின்நடப்பாரும் ஓசன்னா, ஓசன்னா, தாவீதின் ராஜ்யத்தை ஏற்படுத்தப்போகும் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள். ஆனால், அவர் தாவீதின் ராஜ்யத்தை மாமிசத்தில் ஸ்தாபிக்கவில்லை. இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகையின்போதும், கிறிஸ்தவர்களின் மத்தியிலும் அப்படியான ஒரு சிந்தையே காணப்படும்; கிறிஸ்தவர்களுடைய சிந்தனையும் மாமிச சிந்தையாகவே காணப்படும். காரணம் சத்துருவானவன் அறிவிக்கப்பட்ட சத்தியத்தினை மாமிசத்திற்குள்ளான சிந்தனைக்குள்ளாக்குவான். சத்துரு ஆவியின் சிந்தையை எடுத்துப்போட்டு, தீர்க்கதரிசனங்களை சத்துரு மாமிசத்திற்குள்ளாக சிந்திக்கச் செய்வான்.

    ஆவிக்குரிய சத்துருவினை அடையாளம் காட்டிட கர்த்தர் தமது தூதனை அனுப்புகின்றார். அவர்கள் அவனை அடையாளம் காண்பிப்பார்கள். யூதர்கள் அன்று ஆவிக்குரிய விடுதலையினை அறியாமல், மாமிச விடுதலையினைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். மேசியா தங்களுக்கென்று தனி இராஜ்யத்தினை எற்படுத்தி, தங்களை ஆளப்போகின்றார் என்ற சிந்தை கொண்டிருந்தார்கள். ஆனால், யோவான்ஸ்நானன்: "இதோ, உலகத்தின் பாவத்தினைச் சுமந்து தீர்க்க வந்த தேவ ஆட்டுக்குட்டி என்று" அவரைக் குறித்து சாட்சியிட்டான். ஆவிக்குரிய நிகழ்வினைக் குறித்து அவன் சாட்சியிட்டான். அவன் ஆட்டுக்குட்டியானவரை அடையாளம் காட்டினான். யோவான்ஸ்நானன் பெற்றிருந்த பரிசுத்த ஆவி அந்த ஆட்டுக்குட்டியினை அவனுக்கு அடையாளம் காட்டிற்று. யோவான்ஸ்நானனுக்குள் அனுப்பப்பட்ட எலியாவின் ஆவி அவரை அவனுக்கு அடையாளம் காட்டிற்று. ஆனால் மாமிச சிந்தை கொண்ட ஆசாரியனால் அந்த ராஜாவை அடையாளம் காண இயலவில்லை. யோவான்ஸ்நானனோடு இருந்த அவனது சீஷர்கள் அந்த ஆட்டுக்குட்டியினை அடையாளம் கண்டார்கள்.

சங். 110: 1-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்."

    தாவீதும் இயேசுகிறிஸ்துவைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்துள்ளான். உம்முடைய சத்துருக்களைப் பாதபடியாக்கிப் போடும்வரையிலும் என் வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி கூறினார் என்று சாட்சியிட்டுள்ளான். மாமிசத்தில் வெளிப்படப்போகும் ஆண்டவரைக் குறித்து அவன் முன்னறிவித்துள்ளான். தாவீது சாட்சியிட்ட அந்த ஆண்டவர் அன்று மாமிசத்தில் வெளிப்பட்டார். மாமிசத்தில் வெளிப்பட்ட அந்த வார்த்தைக்கு சத்துரு எதிர்வினையாற்றுபவனாகக் கிரியை செய்தான். அனுப்பப்பட்ட அந்த வார்த்தைக்கு எதிரான கிரியையே சத்துருவின் கிரியையாகும். அந்த சத்துருவினை பாதபடியாக்கிப்போடும் வரையிலும் நீர் என் வலதுபாரிசத்தில் உட்காரும் என்று பிதா தம்முடைய குமாரனிடம் சாட்சியிட்டதாக இந்த தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. தீர்க்கதரிசன வார்த்தை மாமிசமாகி மகிமைப்பட்டதும் இங்கே ஒரு சாட்சி கொடுக்கப்பட்டது.

அப். 2: 34, 35-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "தாவீது பரலோகத்திற்கு எழுந்துபோகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும்,
நீர் என் வலதுபாரிசத்தில் உட்காருமென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கின்றான்."

    மாமிசத்தில் வெளிப்பட்ட அந்த வார்த்தை சத்துருக்களை ஜெயம் கொண்ட வார்த்தையாகும். அந்த வார்த்தைக்குக் கொடுக்கப்பட்ட நாமம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற நாமமாகும். கிறிஸ்துவின் கிரியைகள் யாவும் கர்த்தத்துவத்திற்கேற்ற கிரியைகளாகவே சாட்சியிடப்பட்டுள்ளது. அன்று இஸ்ரவேலருக்குள் கொடுக்கப்பட்ட நீதிக்குரிய கிரியையானது இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும் என்பதாகும். இதுவே கர்த்தத்துவத்திற்கேற்ற கிரியையாக இருந்தது. இயேசுகிறிஸ்துவை இஸ்ரவேலர்கள் விசுவாசிக்க வேண்டும் என்பதே பிதாவின் சித்தமாய் இருந்தது. அவரை மேசியா என்று விசுவாசிக்க வேண்டும் என்றே வார்த்தை சாட்சியிட்டது. ஆனால் அவரை ஏற்றுக்கொள்ள பிசாசு தடை செய்தான். அவன் கர்த்தத்துவத்தின் கிரியைகளுக்கு எதிர்வினையாற்றுவதாகவே கிரியை செய்து வருகின்றான். கர்த்தத்துவத்தின் கிரியைகள் ஒருநாள் நிறைவடையும். ஆத்தும ஜனனம் என்ற உள்ளான மனிதனுக்குரிய கிரியையானது அப்போது முடிவடையும். புறஜாதிகள் மத்தியில் கர்த்தத்துவத்தின் கிரியைகள் நிறையவடையும் வரையிலும் அவர் பிதாவின் வலதுபாரிசத்தில் உட்கார்ந்திருக்க வேண்டும். இதுவே தீர்க்கதரிசனமாகும்.

    பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பவர் மீண்டும் இந்தப் பூமிக்கு வருவார். அது இரகசியமாய் இருக்கும். அதன்பின்னர் அவர் ஆயிரம் வருடம் பூமியில் தன்னுடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்க வருவார்.

    இயேசுகிறிஸ்து குஷ்டரோகிகளைச் சுகப்படுத்தினார்; குருடர்கள் பார்த்தார்கள்; சப்பாணிகள் நடந்தார்கள்; வியாதியஸ்தர்மேல் கைகளை வைத்தார், அவர்கள் சுகம் பெற்றார்கள்; வஸ்திரத்தினைத் தொட்ட ஸ்திரி சுகம் பெற்றாள். சேறுண்டாக்கினார், பூசினார், சீலோவாம் குளத்தில் போய்க் கழுவு என்றார்; கழுவினான், சுகம் பெற்றான்; இப்படி அநேகக் காரியங்கள்; மரித்த லாசருவை வெளியே வா என்றார்; அவன் உயிரோடு வந்தான். இந்தக் கிரியைகளினால் யூதர்கள் அவருக்கு எதிராக எழும்பவில்லை. நான் செய்த எந்தக் கிரியையினால் நீங்கள் என்னைக் குற்றப்படுத்துகின்றீர்கள் என்று இயேசுகிறிஸ்து கேட்டபோது, நீர் செய்த கிரியைகளின்படி அல்ல; உமது வார்த்தையின்படியாகவே உம்மைக் குற்றப்படுத்துவதாக கூறியதை வேதத்தில் நாம் பார்க்கின்றோம். மாமிசத்தில் நற்கிரியை செய்ததினால், அவரைப் பின்பற்றினார்கள். அவர் சீமோன் வீட்டில் இருந்தபோது, பாவியான ஒரு ஸ்திரி வந்து, கண்ணீரினால் அவருடைய பாதங்களைக் கழுவி, தலைமயிரினால் அதனைத் துடைத்து, பரிமளதைலம் பூசினாள். அப்போது சீஷர்கள் மாத்திரமல்ல; இஸ்ரவேலின் மூப்பர்களும் அவரோடுகூட அமர்ந்திருந்தார்கள். அப்போது அவரைக் குறித்த ஒரு முறுமுறுப்பு எழுந்தது. இயேசுகிறிஸ்து பரிமள தைலம் பூசிய அந்த ஸ்தீரியின்மீது அன்புகூர்ந்து, இனி பாவம் செய்யாதிருப்பாயாக என்றார். அப்போது அவளது பாவம் மன்னிக்கப்பட்ட நிலை. ஆனால் நியாயப்பிரமாணம் அப்படியாகக் கூறவில்லை. நியாயப்பிரமாணம் அவளது பாவத்தை மன்னிக்கவில்லை. ஆனால் கிறிஸ்துவின் கிருபைப் பிரமாணம் அவளது கிரியைகளை மன்னித்தது.

    இயேசுகிறிஸ்துவிடம் சரீர நன்மையினை பெற்றுக்கொள்ள யூதர்கள் தடை செய்யவில்லை. ஆசாரியரும், வியாதியஸ்தர்கள் வந்து அவரிடம் சுகம் பெற்றுக்கொள்ள தடைசெய்யவில்லை. சுகமாவதற்கு ஆறுநாள் உண்டே, ஏன் ஓய்வு நாளில் வந்து சுகமாக்குகின்றீர்கள் என்றுதான் கேள்வி எழுப்பினார்கள். ஆறுநாளும் ஆலயத்திலிருந்து சுகத்தினைப் பெற்றுக்கொள்ள தடையில்லை. ஆசாரியர்கள் அதனை அனுமதித்தார்கள். சுகப்படுத்திய அவரின் கிரியைகளினால் அவரைச் சிலுவையில் அறைய ஒப்புக்கொடுக்கவில்லை. அவர் கூறிய வார்த்தைகளை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவர் சாட்சியிட்ட பிரமாணத்தினை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. காரணம், அவர்கள் நியாயப்பிரமாண அடிமைகளாயிருந்தார்கள். அதுபோலவே, ஒவ்வொரு காலத்திலும் ஆவிக்குரிய பிரமாணத்தினை ஏற்றுக்கொள்ளாதிருக்கும் நிலையே சாட்சியிடப்பட்டு வருகின்றது.

    இயேசுகிறிஸ்து: மனுஷகுமாரன் பிதாவின் வலதுபாரிசத்தில் சென்று வீற்றிருக்கப்போவதினைக் குறித்து சாட்சியிட்டார்.

மத். 26: 64-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்."

    கிறிஸ்து கொடுத்த இந்த வார்த்தைக்கு ஸ்தேவானும் சாட்சி கொடுத்தான். ஸ்தேவான் ஆசாரியர்களிடமும், அவர்களோடிருந்த கூட்டத்தினரோடும் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்பதைக் கண்டு சாட்சியிட்டான். அவனது அந்த சாட்சியினை ஏற்றுக்கொள்ளாத எருசலேம் பக்தர்கள் அவன்மீது கல்லெறிந்து அவனைக் கொலைசெய்தார்கள். அவன் சாட்சியிட்டபடி பிதாவின் வலதுபாரிசத்தில் நின்ற குமாரனை பிரதான ஆசாரியன் காணவில்லை. அவனோடிருந்த மற்ற்வர்களும் அதனைக் காணவில்லை. பரிசுத்த ஆவியினால் நிறைந்திருந்த ஸ்தேவான் அதினைக் கண்டு சாட்சியிட்டான்.

அப். 7: 55, 56-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அவன் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு:
    அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்."

    பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள் பிதாவினையும் குமாரனையும் அறிவார்கள். கடைசி ஏற்பாட்டின் காலத்திலும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள் கிறிஸ்து மீண்டும் வருவதைக் காண்பார்கள்.

வெளி. 11: 5-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும்."

    கடைசி ஏற்பாட்டில் பிதாவையும் குமாரனையும் குறித்து சாட்சியிட இரண்டு ஒலிவ மரங்கள் அனுப்பப்படும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. ஒலிவமரங்களாய் சாட்சியிடப்பட்டுள்ள தூதர்கள் கொடுக்கப்போகும் சாட்சியே பிரமாணமாகும். இந்தப் பிரமாணமானது ஆவியின் சரீரத்திற்குக் கொடுக்கப்படும் பிரமாணமாகும். அந்த தூதர்கள் மூலம் கொடுத்தனுப்பப்படும் பிரமாணத்தினை ஏற்றுக்கொள்ளாத ஆத்துமாக்கள் ஆக்கினைக்கென்று தீர்க்கப்படும். அந்த தூதர்கள் இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகைக்கு முன் சாட்சியிட அனுப்பப்படுவார்கள். தன்னிலை அறிந்த மணவாட்டி அதனை அறிந்துகொள்வாள். அவள் பிதாவையும் குமாரனையும் அறிந்தவளாகவே சாட்சியிடப்பட்டுள்ளாள்.

    புறஜாதிகளுக்கென்று கொடுக்கப்பட்டுள்ள கிருபையின் காலம் சபைக்காலமாகும். அந்த சபைக்காலம் நிறைவு பெற்றபின் மணவாட்டி அலங்கரிக்கப்படுவாள். மணவாட்டி இவை யாவற்றையும் அறிந்தவளாகவே சாட்சியிடப்பட்டுள்ளாள். மணவாட்டி கர்த்தர் கட்டளையிட்டுள்ள வார்த்தையினையும் அந்த வார்த்தைக்குரிய நாமத்தினையும் நன்கு அறிந்தவளாகவே சாட்சியிடப்பட்டுள்ளாள். அவள் ஆவிக்குரிய கிரியைகளில் பூரணப்பட்டவள். மணவாட்டியின் தன்மையில் பூரணப்படக் கர்த்தர் நம்மை அழைக்கின்றார். கர்த்தரது வார்த்தைக்குச் செவிகொடுப்போம்.

கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்!

ஆமென்!     ஆமென்!!     ஆமென்!!!

All Sermonsஅனைத்து பிரசங்கங்கள்