Phone
Mail
Whatsapp

The Word for the day

வார்த்தையினால் விடுதலை

Listenகேட்க Watchபார்க்க

36. மேகம் - கர்த்தர் - நாமம்

36. மேகம் - கர்த்தர் - நாமம்

Sorry for the inconvience, Currently English version is not avalilable.

Switch to Tamil language

(அறிவிக்கப்பட்ட நாள்: 13.04.14)

    கிறிஸ்துவுக்குள் அருமையானவர்களே, மீண்டுமாக இந்த ஓய்வுநாளில் கர்த்தருடைய வார்த்தையினை முன்னிட்டு நாம் ஒன்றுகூட கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கின்ற மகா உன்னத கிருபைகளுக்குக் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக!

மத். 13-ல் கொடுக்கப்பட்ட உவமைகளிலிருந்து 27, 28ம் வசனங்களின்படி நாம் பார்த்தோமானால்,

    "வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.

    அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள்."

    இந்தப் பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. இவை எல்லாவற்றையும் உருவாக்கியது தேவன். இந்தப் பூமியில் தான் சிருஷ்டித்த மனிதனுக்குள் ஆத்துமா என்ற உள்ளான மனிதனைப் பெற்றுக்கொள்ள ஒருவனைத் தெரிந்தெடுத்தார்.

    ஆதாம் ராஜ்யத்தின் புத்திரனாக வேறுபிரிக்கப்பட்டான். அவனுக்குள் ஜீவ சுவாசத்தை ஊதினார்; அவன் ஜீவாத்துமாவானான். அவனது ஆத்துமா ஜீவன் கொண்டதாகவே உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் ஆதாமின் புத்திரர் ராஜ்யத்தின் புத்திரர்களாக வேறுபிரிக்கப்பட்டார்கள். கர்த்தர் ஜீவனுக்குரியவனாக ஆதாமை உருவாக்கினார். அவனுக்குள் விதைக்கப்பட்ட விதையானது நித்திய ஜீவனுக்குரிய வார்த்தையாக இருந்தது. ஆனால் அங்கே களை என சாட்சியிடப்பட்டுள்ள மாறுபாடான வார்த்தை விதைக்கப்பட்டது. அதனை விதைத்தவன் சத்துரு, பிசாசு, சாத்தான் என்று சொல்லப்பட்டுள்ள சர்ப்பம். கர்த்தர் விதைத்த அந்த விதை ஜீவனுக்குரியதாக இருந்தது, அது இந்தக் கனியினை நீ புசிக்காதே என்று சாட்சியிட்டது. ஆனால், அவனை புசிக்கும்படியாய் இச்சிக்கச் செய்தவன் சர்ப்பம்.

    மேலும் இந்த உவமையில் நாம் பார்த்தோமானால், அவரது ஊழியர்கள் வந்து, இந்தக் களையினைப் பிடுங்கிப் போட உமக்குச் சித்தமா என்று கேட்டபோது, அவைகளையும் வளரவிடும்படியாய் எஜமான் கூறுவதைக் காணலாம். ஆதாம் பாவம் செய்தான். ஆதாம் செய்த பாவத்தினால், அவன் மரணத்திற்குள்ளானான். அவனிடத்திலிருந்து காயீன், ஆபேல் என்ற இரண்டு சந்ததிகள் உருவாக ஆரம்பிக்கின்றது. காயீனும் ஆபேலும் தங்கள் நிலையில் பூரணப்படவேண்டும். எனவே அறுப்பு மட்டும் வளரவிடுங்கள் என்று கட்டளை பிறந்ததைக் காண்கின்றோம். பொல்லாங்கனுடைய புத்திரர்களும் தங்களது கிரியைகளில் பூரணப்பட வேண்டும். வார்த்தையின் பிள்ளைகளும் தங்களின் கிரியைகளில் பூரணப்படவேண்டும். எனவே இரண்டையும் வளரவிடும்படியாய் கட்டளையிடப்பட்டது. அறுப்புக்காலம் மட்டும் அவைகளை வளரவிடும்படியாய் கட்டளை கொடுக்கப்பட்டது.

    அறுப்புக் காலத்தில் தன்னுடையவைகளை வேறுபிரித்து தன்னுடைய களஞ்சியமான பரலோக ராஜ்யத்திற்குள்ளாகக் கொண்டுசெல்கின்றார். கர்த்தரது இரகசிய வருகையின்போது அவர் தன்னுடைய மந்தையின் ஆடுகளை மாத்திரம் வேறுபிரித்து எடுத்துக்கொள்கின்றார். அப்படி எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் ஆக்கினைக்குரிய கிறிஸ்தவர்கள் மாத்திரமே இந்தப் பூமியில் இருப்பார்கள். அவர்களைக் குறித்து பொல்லாங்கனுடைய புத்திரர்கள் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. காயீனுடைய சந்ததியாரை இந்தப் பூமியை விட்டு முழுமையாய் அவரால் ஒரேநாளில் அழிக்க இயலும். ஆனால் அது அவரது திட்டம் அல்ல. அறுப்புக்கால மட்டும் வளர வேண்டும் என்பதே அவரது திட்டம். அறுப்புக்காலத்திற்குப் பின்னர் களைகள் யாவும் தீக்கிரையாக்கப்படும்.

    நல்ல விதைகள் களஞ்சியத்திற்குக் கொண்டுபோகப்படும். களைகளையோ அவர் சுட்டெரிக்கப் போகின்றார். அதன் பின்னர் உலகத்தின் முடிவு.

    யோனா தீர்க்கதரிசிக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டானது. யோனாவிடம் உண்டான வார்த்தை: "நீ நினிவே பட்டணத்திற்குப் போ, அங்கே உள்ள ஜனத்திற்கு நான் கூறும் வார்த்தைகளை அறிவி; இந்தப் பட்டணத்தினை நான் அழிக்கப் போகின்றேன்" என்பதாகும். மேலும் அதனை அந்தப் பட்டணத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கவும் கட்டளையிட்டார். கர்த்தர் எந்தவொரு காரியத்தினையும் முன் அறிவியாமல் செய்வதில்லை என்று வேதம் சாட்சியிட்டுள்ளதைக் காணலாம்.

மத். 13: 41, 42-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து,

    அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்."

    அவருடைய ஜனத்தாருக்கு வார்த்தை என்ற பிரமாணம் விதைக்கப்படுகின்றது. முதலாவது விதைக்கப்பட்ட விதை நல்ல விதையாகவே இருந்தது. அது அவரது வார்த்தையாக இருந்தது. அதன் பின்னர் பொல்லாங்கனுடைய வித்தாகிய வார்த்தை அவனுக்குள் விதைக்கப்பட்டது. அவன் வஞ்சிக்கப்பட்டு ஆக்கினைக்குரியவனானான். பொல்லாங்கனால் உருவான காயீனைப்போல் அவர்களது கிரியைகள் மாறியதால், அவர்கள் ஆக்கினைக்குரியவர்களாக மாறினார்கள்; அவர்கள் களைகளாக மாறினார்கள்; நல்ல கனி கொடாத மரங்களாக மாறினார்கள். அவைகளை அறுப்புமட்டும் வளரவிட்டார்; நல்ல விதைகளை உடையவைகளையும் அறுப்புமட்டும் வளரவிட்டார்; அறுப்புக்காலம் மட்டும் அப்படியான ஒரு கிரியை இரு தரப்பிலும் நிகழவேண்டும். அறுப்புக்காலத்தில் அவர் தம்முடைய தூதர்களை அனுப்புகிறார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கின்ற சகல இடறல்கள் அதாவது அவர்கள் எதனால் இடறி விழுந்தார்களோ, அந்த இடறுதலையும், அதனை செய்தவனையும், அதினால் இடறி விழுந்தவனையும் கொண்டுபோய் அக்கினிக்குள்ளாகப் போடுவார்கள்.

    அக்கினிக்குள்ளாக ஆக்கினைக்கென்று தீர்க்கப்படும் முன்னதாகவே கர்த்தர் தம்முடைய ஊழியர்கள் மூலம் அதனை முன் அறிவிக்கின்றார். காரணம், அவர் நீதியுள்ள நியாதிபதி. நினிவே பட்டணத்தார் பாவம் செய்தவர்களாயிருந்தார்கள். கர்த்தருக்கு முன்பாக அவர்கள் அக்கிரமம் செய்கின்றவர்களாகக் காணப்பட்டார்கள். எனவே அங்கே தமது தூதனாக யோனாவை அனுப்புகின்றார். யோனா கர்த்தரது சாட்சியாய் அங்கே அனுப்பப்படுகின்றான். ஆனால் அவன் நினிவே பட்டணத்திற்குள் செல்லாமல், தர்சீசுக்குப் போகின்ற கப்பலில் ஏறிப்போய், கர்த்தரது சமுகத்தினை விட்டு விலகிச் சென்றான்.

    அங்கே கர்த்தர் கட்டளையிட்டபடி கடல் கொந்தளித்தது. அப்போது கப்பலில் இருந்தவர்கள் அவரவர்களுடைய கடவுள்களை தேட ஆரம்பித்தார்கள். மேலும் கப்பலின் உள்ளே இருக்கின்ற பொருட்களை எடுத்துக் கடலில் போட்டார்கள். அதிலும் அங்கே தீர்வு கிடைக்கவில்லை. அப்போது கப்பலில் பயணித்த எல்லோருடைய பெயருக்கும் சீட்டு எழுதிப்போட்டார்கள். சீட்டில் யோனா தீர்க்கதரிசியின் பெயர் வருகின்றது. எனவே அவரிடம் கேட்கின்றார்கள்: "நீர் யார்? உம்முடைய தொழில் என்ன? உம்முடைய பெயரில் சீட்டு விழுந்திருக்கின்றதே என்பதாக. அங்கே அவன் தன்னுடைய மீறுதலை ஒப்புக்கொண்டான். தர்சீசின் கப்பலில் பயணித்த மற்ற பயணிகள் அனைவரும் கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்ட வேலையினைத்தான் செய்துகொண்டிருந்தார்களா? இல்லையே, அவர்களுக்கு அவர் எந்தக் கட்டளையும் இடவில்லை; அவர்கள் இன்றைக்கு இருந்து நாளைக்கு வாடிப்போகும் புல்லைப் போன்றவர்களாயிருந்தார்கள். காலையில் மலர்ந்து மாலையில் வாடிப்போகும் பூவைப் போன்றவர்களாய் இருந்தார்கள். அவர்கள் இந்தப் பூமிக்குரியவர்களாயிருந்தார்கள்.

    தர்சீஷ் கப்பல் என்பது வாணிப கப்பலாகும். இந்தக் கப்பலில் பெரும்பாலும் வணிகர்களே பயணிப்பார்கள்; அல்லது வேறு ஏதோ ஒரு காரியத்திற்காகக் கப்பலில் செல்லக்கூடிய வசதி படைத்தவர்களாய் இருந்திருக்கவேண்டும். தர்சீஷ் என்பது பொன் விளையக்கூடிய இடம்; அது செழிப்பான இடம்.

    அங்கே அந்த கப்பலுக்குள்ளாக யோனாவும் இருந்தான்; ஆனால் அவன் அந்த ஜனங்களைக் காட்டிலும் வேறுபிரிக்கப்பட்டவனாகக் காணப்பட்டான். நீ யார் என்று அவனிடம் கேட்கும்போது அவன்:-

யோனா 1: 9-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அதற்கு அவன்: நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான்."

    அவன், நான் எபிரெயன்; அதாவது இஸ்ரவேலன். மேலும்: "நான் சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தரிடத்தில் பயபக்தியுள்ளவன்" என்றான். அவர்களுக்கு அந்த பயபக்தியைப் பற்றிய காரியமில்லை. தாங்கள் கடலின் அமளியில் இருந்து காக்கப்பட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது; ஆனால் யோனா தீர்க்கதரிசியோ அவர்களிலிருந்து வேறுபிரிக்கப்பட்டவன். தர்சீசின் கப்பலில் பயணித்தவர்களிடத்திலும் கர்த்தரைக் குறித்த பயம் இருந்தது. எனவே, அவர்களும் கர்த்தருக்குப் பலியிட்டு பொருத்தனைகளைச் செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

யோனா 1: 16-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அப்பொழுது அந்த மனுஷர் கர்த்தருக்கு மிகவும் பயந்து, கர்த்தருக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைப் பண்ணினார்கள்."

    அங்கே ஆச்சரியப்படத்தக்க ஒரு நிகழ்வு நடக்கின்றது. யோனாவைக் கடலில் போட்டவுடன், கடல் அமைதியாயிற்று. எனவே, அவர்களுக்குக் கர்த்தரிடத்தில் பயம் உண்டாகி, பலி செலுத்தினார்கள் என்று பார்க்கிறோம். அவர்கள் கர்த்தருக்குப் பலி செலுத்துவதோடு மாத்திரமல்ல, பொருத்தனையும் பண்ணினார்கள். இப்படியாக அவர்கள் செய்தபடியினால், அவர்கள் பரலோகராஜ்யத்தினை சுதந்தரித்திருப்பார்களா? வார்த்தை அப்படியாக சாட்சியிடவில்லை.

    எபிரெயர்களிடத்தில் காணப்பட்ட பக்தியினைப் போன்று, எபிரெயர்களுக்கு கர்த்தரிடத்தில் காணப்பட்ட பயத்தினைப் போன்று எபிரெயர் அல்லாத தர்சீஷின் கப்பலில் பயணித்தவர்களும் பக்தியுள்ளவர்களாய் இருந்தார்கள். அவர்கள் கர்த்தருக்குப் பயந்தார்கள். அவர்கள் கர்த்தருக்குப் பலியிட்டார்கள். அவர்கள் கர்த்தருக்கென்று பொருத்தனைகளை பண்ணினார்கள்.

    தர்சீஷின் கப்பலில் பிரயாணம் செய்த அநேகருக்குள் யோனாவும் ஒருவனாக இருந்தான். யோனா கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடாததால், அங்கே கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. யோனா ஒருவேளை தன்னுடைய தவறை உணராதிருந்தால், கடலுக்குள் வீசி எறியப்படாதிருந்தால், அந்தக் கப்பல் மூழ்கிப்போயிருக்கும். அதில் பயணம் செய்த அத்தனை பயணிகளும் மரணம் அடைந்திருப்பார்கள். ஆத்துமா கொண்டவனின் மீறுதலால் அங்கே ஜென்மசுபாவத்தாரும் மரணம் அடைந்திருப்பார்கள். இவைகள் நிழந்திருந்தாலும், அது கர்த்தருடைய சமுகத்தில் நீதியாகவே எண்ணப்பட்டிருக்கும். நோவா காலத்தில் ஜலப்பிரளயத்தினால் ஆதாமின் சந்ததியார் உட்பட அநேக ஜென்ம சுபாவத்தாரும் மரித்தார்கள்.

    பூமியில் மாமிச சரீரங்களாக மானுடம் உருவானது. ஆறாம் நாளில் அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது. அதைத்தான் ஆதியாகம் 1ம் அதிகாரத்தில் வாசிக்கின்றோம்.

    மண்ணில் உருவான மற்ற மனிதர்களிடமிருந்து ஆதாம் என்ற ஒரு மனிதனை வேறுபிரிக்கின்றார். இவைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இரகசியங்கள். மாமிச சரீரம் இல்லாமல் ஆத்துமா உருவாகாது. தீர்ப்பிற்குள்ளாகப்பட வேண்டும் என்பதற்காக ஆத்துமா மாமிச சரீரத்திற்குள்ளாக அனுப்பப்படுகின்றது. மாமிச சரீரம் இல்லாவிட்டால், ஆத்துமா பூரணப்படாது. ஆத்துமா பூரணம் அடையும்பொருட்டு மாமிச சரீரத்தில் அனுப்பப்படுகின்றது. அது தன் கிரியைகளில் பூரணப்பட வேண்டும் என்பதற்காக அனுப்பப்படுகின்றது. இன்னான் இன்னான் இங்கே பிறப்பான் என்பது முன்னமே தீர்மானம் பண்ணப்பட்டிருக்கின்றது. இது கர்த்தத்துவ ஜனத்திற்குரிய முன்குறித்தலாகும். யோனாவின் பொருட்டு அன்று அநேகர் உபத்திரவத்திற்குள்ளானார்கள். எவ்வளவாய் கதறியிருப்பார்கள்? கொஞ்சம் இருதயம் பலவீனம் உள்ளவனானால், அப்போதே மரித்தும் போயிருக்கக்கூடிய ஒரு நிர்ப்பந்தமான நிலை.

    ஜென்மசுபாவத்தாருக்கு மரணத்தினைக் குறித்து பயம். அது மாமிச மரணத்தினைக் குறித்த பயம். ஏனென்றால், அவர்களுக்குள் ஆவியின் சரீரம் கட்டளையிடப்படவில்லை. ஆனால், கிறிஸ்தவர்களாகிய நாம் ஆவியின் சரீரம் கொண்டவர்கள். இதில் நாம் மாமிச மரணத்தைக் குறித்து பயப்படுகிறோமா, அல்லது ஆவியின் சரீர மரணத்திற்காக பயப்படுகிறோமா, சற்று சிந்தியுங்கள். யோனாவோ தான் செய்தது தவறு என்று உணர்ந்து இனி நான் இந்த மாமிச சரீரத்தில் இருந்து என்ன பயன்? இந்த மாமிச சரீரம் அழிக்கப்பட்டாலும் பரவாயில்லை. என்னுடைய மீறுதலுக்கு என்னுடைய மாமிச சரீரமே பலியாகட்டும் என்ற சிந்தையிலே தன்னைக் கடலில் போட சம்மதித்தான்.

    புதிய ஏற்பாட்டின் நிறைவில் பாபிலோனாக சித்தரிக்கப்பட்டுள்ள புதிய எருசலேமான சபைகள் அழிக்கப்படப்போகின்றது. காரணம், சபைகள் தங்களின் மீறுதலுக்காக மனஸ்தாபப்படாது; வார்த்தையை அங்கீகரிக்காது. சத்தியத்திற்கு கீழ்ப்படியாதவர்களாக, கிறிஸ்தவர்கள் காணப்படுவார்கள். காரணம், அவர்கள் ஐக்கியம் கொண்டுள்ள சபைகள் சத்தியத்தினை அங்கீகரிக்காது. அவைகள் கர்த்தத்துவ வார்த்தைக்கு எதிர்த்து நிற்கும்.

    ஆதாமிற்குக் கொடுக்கப்பட்ட ஜீவனுக்கேதுவான கிரியையானது, தடை செய்யப்பட்ட விருட்சத்தின் கனியினை புசியாதிருப்பதாகும். அவனுக்குக் கொடுக்கப்பட்ட சத்தியம், நீ அதனைப் புசிக்கின்ற நாளில் சாகவே சாவாய் என்பதாகும். இதனை ஆதி. 2: 17-ல் வாசிக்கின்றோம்.

ஆதி. 2: 17-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்."

    அதைப் புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்பது கற்பனையாய், வார்த்தையாய், சத்தியமாய் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. ஆதாமின் சிந்தை கொண்டவனாய் யோனா இருந்திருக்கவில்லை. தன்னைக் கடலில் போட்டால், தான் மரித்துவிடுவேன் என்பதை அவன் அறிவான். ஆனாலும் அவன் தன் மாமிச சரீரத்தின் மரணத்தினைக் குறித்து பயம் கொள்ளவில்லை. அவன் சிந்தை ஆவியின் சிந்தையாக இருந்தது. ஆவியின் சிந்தையே ஜீவன் என்று வேதம் கூறுகின்றது. அந்தக் கனியினைப் புசித்தால், தனது மாமிச சரீரத்தில் தான் சாகப்போவதில்லை என்பதை ஆதாமும் அறிவான். காரணம், தடை செய்யப்பட்ட அந்தக் கிரியைகளை ஜென்மசுபாவத்தார்கள் செய்துகொண்டிருந்தார்கள். நன்மைதீமையினை அறியத்தக்க இந்த விருட்சமானது பூமியிலிருந்தே எடுக்கப்பட்டது. நன்மை தீமை அறியத்தக்க இந்த விருட்சம் ஏதேனில் உருவாக்கப்படவில்லை. அது பூமியிலிருந்து கொண்டுவந்து நடப்பட்டது. அப்படியானால், பூமியில் இருந்த ஜென்மசுபாவத்தார்கள் அதின் கனியினைப் புசித்தார்கள். தடை செய்யப்பட்ட கிரியைகளையெல்லாம் அவர்கள் செய்தார்கள். ஆனால், அவர்களின் சரீரம் மரணத்திற்குள்ளாகவில்லை. மாமிசத்திற்குரிய இந்த சிந்தையே ஆதாமிடம் காணப்பட்டதால், ஏவாள் தன்னிடம் அந்தக் கனியினைக் கொடுத்தபோது அவன் புசித்தான்.

    ஆதாமிற்குக் கட்டளையிடப்பட்ட பிரமாணமானது அவனது மாமிச சரீரத்திற்குரிய பிரமாணமாய் சாட்சியிடப்படவில்லை.. அது ஆத்துமாவிற்குரியது. யோனா தனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையினை மாமிசப்பூர்வமாய் சிந்திக்கவில்லை. ஆனால், ஆதாமோ மாமிசத்தில் சிந்தித்திருந்தான்.

ஆதி. 3: 6-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்."

    ஆதாமுக்கு தடை செய்யப்பட்ட கனியானது பார்வைக்கு நன்றாகவும், புத்தியைத் தெளிவிக்கத்தக்கதாகவும் இருந்தது என்று கூறப்பட்டுள்ளது. இதுவே இச்சை என்று சாட்சியிடப்பட்டுள்ளது. பாபிலோனின் போதனைகளும் புத்தியைத் தெளிவிக்கக்கூடியதாகவே காணப்படும். எனவே அது இச்சைக்குரிய போதகம் என்று சாட்சியிடப்படுகின்றது.

    காயீன் சபிக்கப்பட்ட கிரியையினைச் செய்தான். ஆகவே அவன் சாபத்திற்குள்ளானான். ஆதாமினிடத்திலிருந்து மூன்றுவிதமான சந்ததிகள் உருவானது:

  1. காயீன் - பொல்லாங்கனால் உருவானவன், அதாவது ஆக்கினைக்குரியவன் என்று சாட்சியிடப்பட்டுள்ளது.
  2. ஆபேல் - நீதிமான். ஆனாலும் அவனுடைய சந்ததி பூமியில் விருத்தியாகவில்லை.
  3. சேத் - ஆபேலின் தன்மையில் உருவானவன். காயீனிடத்தில் காணப்படாத ஒன்று சேத்தினிடத்தில் காணப்பட்டது. அதைத்தான்

ஆதி. 4: 26-ல் பார்க்கின்றோம்.

    "சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று போரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்."

    காயீன் கர்த்தரது நாமத்தினை அறியாதிருந்தான். சேத்தோ கர்த்தரின் நாமத்தை அறிந்து, அந்த நாமத்தில் தொழுதுகொண்டான். காயீன் பொல்லாங்கனால் உருவானவன், அவன் ஆக்கினைக்குரியவன்; சேத் நீதிமான்; காயீனிடத்திலிருந்து சேத் வேறுபிரிக்கப்பட்டான். காரணம், காயீனுக்குத் தெரியாத ஒன்று சேத்திற்குத் தெரிந்திருந்தது. அதாவது காயீன் அறியாத ஒன்றை சேத் அறிந்திருந்தான். அது கர்த்தரது நாமமாகும். நாமமே சத்தியம் என்று வேதம் சாட்சியிடுகின்றது. சேத் சத்தியத்தை அறிந்தவன். காயீன் சத்தியத்தை அங்கீகரியாதவன். காயீனுக்குக் கர்த்தருடைய நாமம் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று. சேத் நாமத்தின் மூலம் கர்த்தரைத் தொழுதுகொண்டான். காயீனுக்கு கர்த்தருடைய நாமம் மறைக்கப்பட்டிருந்தது. தடை செய்யப்பட்ட வழியில் அவன் சென்றபடியினால், அவனுக்குக் கர்த்தருடைய நாமம் மறைக்கப்பட்டது. அவன் கர்த்தருடைய நாமத்தினைத் தொழுதுகொள்ளவில்லை. ஆனால், சேத் கர்த்தருடைய நாமத்தினைத் தொழுதுகொண்டான். நித்திய ஜீவனுக்குரியவர்கள் கர்த்தரது நாமத்தினை விசுவாசிப்பார்கள்; ஆக்கினைக்குரியவர்கள் நாமத்தினை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஜீவனுக்குரியவனான சேத் நாமத்தினை ஏற்றுக்கொண்டான். நாமத்தினை ஏற்றுக்கொள்ளாதவன் காயீன்.

    காயீனுடைய சந்ததியார் எல்லாக் காலத்திலும் இருந்து வருகின்றார்கள். இயேசுகிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்டபோதும் காயீனுடைய வம்சத்தார் இருந்தார்கள் என்பதை நிருபங்கள் சாட்சியிடுகின்றது.

யூதா 11-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்."

    சேத் கர்த்தருடைய நாமத்தினைத் தொழுதுகொண்டான். எனவே, அவன் நித்திய ஜீவனை சுதந்தரிக்க கிருபை பெற்றான். கர்த்தருடைய நாமத்தினைத் தொழுதுகொள்பவர்களே நித்திய ஜீவனுக்குரியவர்களாவார்கள். கர்த்தருடைய நாமத்தினைத் தொழுதுகொள்ளாதவர்கள் ஆக்கினைக்குரியவர்களாகத் தீர்க்கப்படுவார்கள். சேத் கர்த்தருடைய நாமத்தினைத் தொழுதுகொண்டதுபோல, ஆபிரகாமும் கர்த்தருடைய நாமத்தினைத் தொழுதுகொண்டார். அதைத்தான் நாம் ஆதி. 13: 4-ல் வாசிக்கின்றோம்.

    "தான் முதல்முதல் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான ஸ்தலமட்டும் போனான்; அங்கே ஆபிராம் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்."

    சேத்திற்கு வெளிப்படுத்தப்பட்ட கர்த்தரது நாமம் "தேவனாகிய கர்த்தர்" என்ற நாமமாகும். ஆபிரகாமிற்கு வெளிப்படுத்தப்பட்ட கர்த்தரது நாமம் "சர்வவல்லமையுள்ள தேவன்" என்பதாகும். நாமத்தினை ஏற்றுக்கொள்பவர்கள் நித்திய ஜீவனுக்குரியவர்கள் எனவும், நாமத்தினை ஏற்றுக்கொள்ளாதவர்கள் ஆக்கினைக்குரியவர்கள் எனவும் தீர்க்கப்பட்டார்கள். ஆபிரகாம் கர்த்தருடைய நாமத்தினைத் தொழுதுகொண்டார். அதுபோல ஈசாக்கும் கர்த்தருடைய நாமத்தினைத் தொழுதுகொண்டான்.

ஆதி. 26: 25-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள்."

    ஆபிரகாம் தொழுதுகொண்ட கர்த்தருடைய நாமத்தையே ஈசாக்கு தொழுதுகொண்டான். ஈசாக்கிற்குக் கட்டளையிடப்பட்ட கர்த்தருடைய நாமமும் சர்வவல்லமையுள்ள தேவன் என்பதே. கர்த்தருடைய நாமம் இன்னதென்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது. அவன் அதனை ஏற்றுக்கொண்டான். ஆபிரகாம் கர்த்தருடைய நாமத்தினை ஏற்றுக்கொண்டார்; கர்த்தருடைய வார்த்தையினை ஏற்றுக்கொண்டார்; தூதர்களை ஏற்றுக்கொண்டார்.

    அடுத்தபடியாக யாக்கோபும் கர்த்தருடைய நாமத்தை அறிந்தவனாகவே சாட்சியிடப்பட்டுள்ளான்.

ஆதி. 32: 29-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்க வேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார்."

    இங்கே கர்த்தரது நாமத்தினை யாக்கோபும் அறிந்த நிலையிலேயே காணப்படுகின்றான். ஆபிரகாம் கர்த்தரைத் தொழுதுகொண்டார்; ஈசாக்கும் கர்த்தரைத் தொழுதுகொண்டான். ஆனால் யாக்கோபோ கர்த்தரது நாமத்தினை போராடி பெற்றுக்கொண்டான். யாக்கோபுக்கும் வெளிப்படுத்தப்பட்ட கர்த்தருடைய நாமம் "சர்வவல்லமையுள்ள் தேவன்" என்பதே. யாக்கோபின் சந்ததி இஸ்ரவேலர். இஸ்ரவேலர்களுக்காக கட்டளையிடப்பட்ட நாமம் "யேகோவா" என்ற நாமமாகும்.

    ஆபிரகாம் கர்த்தருடைய நாமத்தினைத் தொழுதுகொண்டார். ஆபிரகாம் கர்த்தருடைய நாமம் இன்னதென்று அறிந்திருந்தார். ஈசாக்கு கர்த்தருடைய நாமத்தினைத் தொழுதுகொண்டார். ஈசாக்கும் கர்த்தருடைய நாமம் இன்னதென்று அறிந்திருந்தான். யாக்கோபு போராடி கர்த்தருடைய நாமத்தினை அறிந்திருந்தான். அவனும் கர்த்தருடைய நாமம் இன்னதென்று அறிந்திருந்தான். இவர்களுக்கு கட்டளையிடப்பட்ட கர்த்தரது நாமமானது ஆதாமிற்கு அறிவிக்கப்படவில்லை; ஆபேலுக்கு அறிவிக்கப்படவில்லை; இஸ்மவேலுக்கு அறிவிக்கப்படவில்லை; கேத்தூராளுடைய பிள்ளைகளுக்கும் அறிவிக்கப்படவில்லை. இங்கே ஆபிரகாமின் சந்ததிகள் இருபிரிவாக சாட்சியிடப்படுகின்றார்கள்: 1. இஸ்மவேல், 2. ஈசாக்கு.

    ஈசாக்கு கர்த்தரது நாமத்தினை அறிந்தவன்; இஸ்மவேல் கர்த்தரது நாமம் இன்னதென்று அறியாதவன். நாமத்தினை ஏற்றுக்கொள்ளாதவன் ஏசா. நாமத்தினை ஏற்றுக்கொண்டவன் யாக்கோபு. அவன் போராடி நாமத்தினை பெற்றுக்கொண்டான்.

    கர்த்தரது நாமத்தினை அறிந்த ஈசாக்கிற்கு இம்மைக்குரிய ஆசீர்வாதம் மாமிசத்திலும், மறுமைக்குரிய ஆசீர்வாதம் நித்திய ஜீவனாயும் கொடுக்கப்பட்டது. இஸ்மவேலுக்கோ மாமிசத்தில் மாத்திரம் ஆசீர்வாதம் கொடுக்கப்பட்டது. கர்த்தரின் நாமம் இஸ்மவேலுக்கு அறிவிக்கப்படவில்லை. ஈசாக்கு ஏற்றுக்கொண்ட கர்த்தரது நாமத்தினை ஏசா ஏற்றுக்கொள்ளவில்லை. ஏசாவின் பர்வதம் வலுசர்ப்பத்தின் தாபரம் என்று கூறப்பட்டிருக்கின்றது. ஒருவனை சிநேகித்து, ஒருவனைப் பகைத்தேன் என்றார் (மல். 1: 2, 3). யாக்கோபு நாமத்தினைத் தொழுதுகொண்டான். அவனுக்கு தெரிந்துகொள்ளுதலின்படி கிருபை கட்டளையிடப்பட்டது.

யாத். 6: 3-ல் வாசிக்கின்றோம்,

    "சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை."

    ஆபிரகாமும், ஈசாக்கும், யாக்கோபும் தொழுதுகொண்ட கர்த்தரது நாமம் "சர்வவல்லமையுள்ள தேவன்" என்பதாகும். இஸ்ரவேல் ஜனங்கள் சர்வவல்லமையுள்ள தேவன் என்ற நாமத்தில் தொழுதுகொண்டு வந்தபோது, மோசே மூலம் ஒரு புதிய நாமம் கட்டளையிடப்பட்டது. அது யேகோவா என்ற நாமமாகும். இந்த நாமமானது அதற்கு முன்னர் அறிவிக்கப்படாத நாமமாகும்.

யாத். 34: 5-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார்."

    இங்கே ஒரு மேகத்திலிருந்து கர்த்தரின் நாமம் சாட்சியிடப்பட்டுள்ளதைப் பார்க்கின்றோம். அப்போது மோசே அங்கே அந்த மேகத்திற்குள்ளாக இருக்கின்றான். எல்லா ஏற்பாட்டின் காலத்திலும் கர்த்தர் மேகத்திற்குள்ளாக தம்மை வெளிப்படுவதைப் பார்க்கலாம். மேகம் என்பது மறைவுக்குரிய நிகழ்வாகும். ஆபிரகாம் கர்த்தரைக் கண்டார். ஈசாக்கிடம் அவர் தம்மை வெளிப்படுத்தினார்; யாக்கோபிடம் தாரிசனத்தில் வெளிப்பட்டார். மோசேயோடு கர்த்தர் முகமுகமாய் பேசினார் என்று வேதம் சாட்சியிடுகின்றது; ஆனால் மற்ற ஜனத்திற்குள்ளாக அவர் மேகத்திற்குள்ளிருந்து தம்மை வெளிப்படுத்தியதாகவே பார்க்கின்றோம். சீனாய் மலையில் மேகம் வந்து இறங்கினது. மேகத்திற்குள்ளாக அவர் சாட்சியிட்டார். மலையின் கீழே இருந்த மற்ற ஜனங்கள் அவர் மேகத்திற்குள்ளாக இருந்து இறங்கியபோது பயந்திருந்தார்கள் என்று வேதம் கூறுகின்றது. ஆனால் பின்னர் அவர்கள் மேகம் வந்து இறங்கியதையும், மேகத்திற்குள்ளாகச் சென்ற மோசேயினையும் மறந்துவிட்டார்கள்; மேகத்திலிருந்து உண்டான சத்தத்தினையும் மறந்துவிட்டார்கள்; வெளிப்பட்ட இடிமுழக்க சத்தத்தினையும் மறந்துவிட்டார்கள். நம்மை நடத்திக்கொண்டு வந்த மோசேக்கு ஏதோ நேர்ந்துவிட்டது; நம்மை நடத்திக்கொண்டு வந்த தெய்வம் எது என்று தெரியவில்லை. அதனால் ஒரு கன்றுகுட்டியைத் தெய்வமாக உருவாக்கினார்கள். அதற்கு கர்த்தர் என்ற நாமமிட்டார்கள்.

    யேகோவா என்ற நாமம் அறிவிக்கப்பட்டபோது, அவர் மேகத்திற்குள்ளாகத் தம்மை வெளிப்படுத்தினார். ஒரு மேகம் - அந்த மேகத்திற்குள்ளாகக் கர்த்தர் - அந்த மேகத்தின் அருகில் மோசே, இவைகள் இவ்விதமாக சாட்சியிடப்பட்டுள்ளது. ஒரு விமானமானது மேகத்திற்குள்ளாகச் செல்லும்போது நாம் அந்த விமானத்தினை நம் கண்களால் காண முடியாது. அதனை மேகத்திற்குள்ளாக நம்மால் பார்க்கமுடியாது. மோசே அந்த மேகத்திற்குள் இருந்தபோது வெளியே இருந்த இஸ்ரவேலர்களுக்கு மேகம் மட்டுமே தெரிந்தது. உள்ளே இருந்த கர்த்தரை அவர்களால் காண இயலவில்லை. மோசே, மேகத்திற்குள்ளாக வெளிப்பட்ட அந்த நாமத்திற்கு சாட்சி கொடுத்தான். கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்கள் யாவருக்கும் முன்பாக தனது நாமம் யேகோவா என்று சாட்சியிடவில்லை. ஆறு இலட்சத்திற்கும் அதிகமான புருஷர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் எகிப்திலிருந்து அழைத்து வரப்பட்டார்கள். அவர்களை அவர் தனித்தனியாக அழைத்து தன்னுடைய நாமத்தினை "யேகோவா" என்று கூறவில்லை. மோசேயிடம் கர்த்தர் தமது நாமத்தினை வெளிப்படுத்தினார்.

    மேகத்திற்குள்ளாக வெளிப்பட்ட கர்த்தரைக் குறித்தும், அவருடைய நாமத்தினைக் குறித்தும் மோசே சாட்சியிட்டான். அதுவரையிலும் கர்த்தருடைய நாமம் சர்வவல்லமையுள்ள தேவன் என்றே மோசேயும் அறிந்திருந்தான். முட்செடியின் மத்தியில் காட்சி கொடுத்தபோதுதான் கர்த்தர் தமது "யேகோவா" என்ற நாமத்தை அவனுக்கு வெளிப்படுத்தினார். கர்த்தருடைய நாமம் மோசேயிடம் அறிவிக்கப்பட்டவுடன், கர்த்தருடைய நாமத்தில் வைத்த விசுவாசம் அங்கே அநேக அற்புதங்களையும், அடையாளங்களையும் எகிப்து தேசத்தில் செய்து காட்டியது.

யாத். 20: 24-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதான பலியாகவும் செலுத்துவாயாக; நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்."

    அறிவிக்கப்பட்ட நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தலமாக இருந்தாலும், அங்கே வந்து உன்னை ஆசீர்வதிப்பேன் என்று கர்த்தர் சாட்சியிட்டுள்ளதைப் பார்க்கின்றோம்.

    அவருடைய நாமத்தினைப் பிரஸ்தாபப்படுத்தும் இடம் என்பது - அவருடைய நாமம் எந்த இடத்தில் சாட்சி கொடுக்கப்படுகின்றதோ, அந்த இடமாகும்.

உபா. 12: 5-7-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "உங்கள் தேவனாகிய கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி, உங்கள் சகல கோத்திரங்களிலும் தெரிந்துகொள்ளும் ஸ்தானமாகிய அவருடைய வாசஸ்தலத்தையே நாடி, அங்கே போய்,

    அங்கே உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், தசமபாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், உங்கள் பொருத்தனைகளையும், உங்கள் உற்சாகபலிகளையும், உங்கள் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் கொண்டுவந்து,

    அங்கே உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியிலே புசித்து, நீங்கள் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதித்ததுமான யாவுக்காகவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக."

    அவருடைய நாமத்தினை பிரஸ்தாபப்படுத்தும் இடத்தில் மாத்திரமே பலிகளை செலுத்த வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டின் காலத்தில் எருசலேம் தேவாலயம் அவர் நாமத்தினைப் பிரஸ்தாபப்படுத்த தெரிந்தெடுக்கப்பட்ட ஸ்தலமாக இருந்தது. நாமம் விளங்க தெரிந்தெடுத்த அந்த ஸ்தலத்திற்குள்ளாக எபிரெயர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். புறஜாதியார் அனுமதிக்கப்படவில்லை. கானான் தேசத்தில் இஸ்ரவேல் அல்லாதவர்களும் இஸ்ரவேலர்களோடு இருந்தார்கள். பழைய செருப்பைப் போட்டு, பழைய வஸ்திரத்தினை அணிந்து, பழைய ரொட்டித் துண்டை எடுத்துக்கொண்டு, நாங்கள் நீண்ட பிரயாணம் செய்து வந்திருக்கின்றோம் என்று கூறி, குடியமர்ந்த நிகழ்வை வேதம் சாட்சி கொடுக்கின்றது.

2 சாமு. 7: 13-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்."

    "அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்" என்று சாலோமோனைக் குறித்து கர்த்தர் தாவீதினிடம் கூறியதை பார்க்கின்றோம். "யேகோவா" என்ற கர்த்தருடைய நாமத்திற்கென்று அவன் ஆலயத்தினைக் கட்டினான். அந்த ஆலயத்தில் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி இருந்தது, அவருடைய நாமம் அங்கே பறைசாற்றப்பட்டது. அவருடைய நாமம் பிரஸ்தாபப்படுத்தப்படும் இடமாக அந்த ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்படி பிரஸ்தாபப்படுத்த தெரிந்தெடுத்த ஸ்தலமாக எருசலேம் தேவாலயம் இருந்தது. அப்போது தேவாலயப் பிரமாணங்களை பற்றிக் கொண்டவர்கள் ஜீவனுக்குரியவர்களாக இருந்தார்கள். தர்சீஷின் கப்பலில் இருந்ததுபோல, அநேகர் அந்த தேவாலயத்திற்கு வெளியே இருந்தார்கள். அவர்கள் உட்பிரகாரத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இஸ்ரவேலர்கள் மட்டுமே அதற்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களுக்காக பிரமாணம் கொடுக்கப்பட்டது. வெளிப்பிரகாரத்திலிருந்து புறஜாதிகள் வேண்டுதல் செய்தார்கள். புறஜாதிகளும் கர்த்தரது சமுகத்தில் வைத்த விண்ணப்பத்தின்படியாக தேவத்துவ ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் ஜீவனுக்குரிய ஆசீர்வாதமாகிய ஆவியின் சரீரத்திற்குரிய நன்மை இஸ்ரவேலருக்கு மட்டுமே அருளப்பட்டது.

    பரிசுத்த ஸ்தலத்திற்குள் ஆசாரியன் மாத்திரம் அனுமதிக்கப்பட்டான். மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரதான ஆசாரியன் மட்டுமே செல்லமுடியும். அவரது நாமம் அந்த எருசலேம் தேவாலயத்தில் மட்டுமே பிரஸ்தாபப்படுத்தப்பட அனுமதிக்கப்பட்டது. அந்த நாமம் மேகத்திற்குள்ளிருந்து மோசேயின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட நாமமாகும். அதன்பின்னர் புதிய ஏற்பாடு; அது இயேசுகிறிஸ்து மூலம் ஏற்பட்டது. இப்போதும் அவரது நாமத்தினைப் பிரஸ்தாபப்படுத்த வேண்டும்; இயேசுகிறிஸ்து என்ற நாமம் கொண்ட குமாரனைக் குறித்து பிதா மேகத்திற்குள்ளாக சாட்சியிட்டதைப் பார்க்கின்றோம்.

மத். 17: 5-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று."

    மேகத்திற்குள்ளிருந்து ஒரு சத்தம் உண்டாகி, "இவர் என்னுடைய நேசகுமாரன்; இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன்; இவருக்குச் செவிகொடுங்கள்" என்று சாட்சியிட்டது. இந்த சத்தம் உண்டானபோது, அவருடைய சீஷர்களில் தெரிந்தெடுக்கப்பட்டவர்களான யோவானும், பேதுருவும், யாக்கோபும் அவரோடு இருந்தார்கள். அப்போது மோசேயும், எலியாவும் அவரோடு அங்கே காணப்பட்டார்கள். யேகோவா என்ற நாமம் மோசேக்கு அறிவிக்கப்பட்டது; அப்போது அவன் மேகத்திற்குள்ளாக இருந்தான். இப்போது இயேசுகிறிஸ்துவைக் குறித்து சாட்சியிடப்படும்போதும், அந்த மேகத்திற்குள்ளாக மோசே இருக்கின்றான். இங்கே மேகத்திற்குள்ளாக மோசேயோடு கூட எலியாவும் காணப்பட்டான். மேகத்திற்குள்ளாக ஒரு வார்த்தை சாட்சியிடப்பட்டது. அது இவர் என்னுடைய நேச குமாரன் என்று சாட்சியிட்டது. இந்த நாமத்தின்மேல் விசுவாசம் வைப்பவனே மரித்தாலும் பிழைப்பான் என்று சாட்சியிடப்பட்டுள்ளதை வேதத்தில் நாம் பார்க்கின்றோம்.

    மேகத்திற்குள்ளாக குமாரனின் நாமம் சாட்சியிடப்பட்டது; அது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற நாமமாகும். இந்த நாமமே பின்னர் பிதாவின் நாமங்களுள் மேலான நாமமாய் உயர்த்தப்பட்டது. யேகோவா என்ற நாமம் பிதாவின் நாமமாய் சாட்சியிடப்பட்டபோது, அந்த நாமத்தை இஸ்ரவேலர்களிடம் மோசே அறிவித்தான். ஆனால் கிறிஸ்து மகிமைப்படும் முன் இவைகளை அறிவிக்காதபடிக்கு அவர் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். சீஷர்கள் கண்களுக்கு முன்பாக மேகம் வந்தது; அந்த மேகத்திற்குள்ளாக கிறிஸ்துவோடுகூட இருந்த மோசேயையும் எலியாவையும் அவர்கள் கண்டார்கள். பேதுரு, யாக்கோபு, மற்றும் அவருக்கு அன்பான சீஷனான யோவானும் அங்கே இருந்தார்கள். நாமம் அறிவிக்கப்பட்டபோது, மேகத்திற்குள்ளாக இருந்த மோசேயும், எலியாவும் கர்த்தரது நாமத்தை அறிந்தவர்களாக இருந்தார்கள்; அவருடைய சீஷர்களுக்குள் தெரிந்தெடுக்கப்பட்டவர்களான பேதுரு யாக்கோபு மற்றும் யோவானும் அதனை அறிந்தார்கள். இயேசுகிறிஸ்து மகிமைப்பட்டபின், அவரது நாமத்தினைக் குறித்து அப்போஸ்தலர்கள் யாவரும் சாட்சியிட்டார்கள். அதன்பின் சபைக்காலங்களில் கொடுக்கப்பட்ட சுவிசேஷத்தின் மூலம் நாமும் அவரது நாமத்தினை அறிந்துகொள்ள கிருபையினைப் பெற்றோம். மேகம் என்பது மறைக்கப்படும் காரணியாகும், அதற்குள்ளாக இட்ட சாட்சி எல்லார் முன்பாகவும் அறிவிக்கப்படாத ஒன்றாகும். அப்போஸ்தலர்கள் கர்த்தரது நாமத்தினை சுவிசேஷமாய் அறிவித்தார்கள். அப்போது கர்த்தரது நாமத்தின்மீது விசுவாசம் கொண்டவர்கள் அவரது பிள்ளைகளானார்கள். அவர்கள் கிறிஸ்துவின் நாமமே பிதாவின் நாமம் என்பதை அறிந்திருந்தார்கள். நாமத்தை அறிந்தவர்கள் மோசேயையும் எலியாவையும் அவர்களுடைய தேவனையும் அறியக்கூடிய கிருபையைப் பெற்றார்கள். அதுபோலவே ஒவ்வொரு சபைக்காலங்களிலும், அனுப்பப்பட்ட சபைத்தூதர்கள் மேகத்திற்குள்ளாகி சாட்சியை அறிவித்தார்கள்; அவர்கள் மோசேயையும், எலியாவையும் அறிந்தவர்களாய் இருந்தார்கள். அவர்கள் இயேசுவின் வலதுகரத்திலிருந்து பிரமாணங்களைப் பெற்று வந்து இந்தப் பூச்சக்கரத்தில் சாட்சியிட்டார்கள்.

    ஏழு சபைத்தூதர்களும் வெவ்வேறு காலங்களில் கிறிஸ்துவின் வலதுகரத்திலிருந்து அனுப்பப்பட்டார்கள். அவர்கள் கர்த்தருடைய நாமம் இன்னதென்று அறியக்கூடிய அறிவைப் பெற்றவர்களாய் இருந்தார்கள். அவர்களோடு ஐக்கியமாய் இருந்தவர்கள் பரிசுத்த ஆவியினைப் பெற்றார்கள்.

    கர்த்தரை அறிந்தவர்கள், கர்த்தருடைய நாமம் இன்னதென்று அறிவார்கள்; கர்த்தரை அறிந்தவர்கள், கர்த்தருடைய நாமத்தினைப் பற்றி சாட்சியிட்ட மோசேயினையும், எலியாவையும் அறிவார்கள். அவர்கள் ஏழு சபைக்காலங்களிலும் அனுப்பப்பட்ட தூதர்களையும் அறிவார்கள். நாம் இதுபோன்றுகூட யோசிக்கலாம். எல்லா சபைக்காலங்களிலும் மோசே யாரென்று கிறிஸ்தவர்களுக்குத் தெரியாதா? மோசே நாணற்பெட்டியிலிருந்து எடுக்கப்பட்டவன் என்பது தெரியாதா? நியாயப்பிரமாணத்தைக் கொண்டுவந்தவன் என்று தெரியாதா? என்பதாய் யோசிக்கலாம். அவர்கள் மோசேயைக் குறித்தும், எலியாவைக் குறித்தும், மாமிசத்தில் அவர்கள் மூலம் நடந்த நிகழ்வுகளை மாத்திரமே அறிய இயலும். மாமிசத்தில் நடந்த நிகழ்வுகளை ஜென்மசுபாவம் கொண்ட யாவரும் அறிவார்கள். ஆனால், அதற்கு மேலான ஒரு காரியத்தினைக் குறித்து நாம் அறிந்தவர்களாய் இருக்கவேண்டும்.

    கர்த்தரது நாமம் விளங்கும் இடத்தில் மட்டுமே பலி செலுத்த அனுமதிக்கப்பட்டது. நாமத்தினைப் பிரஸ்தாபப்படுத்தும் இடத்திலிருந்துதான் ஆசீர்வதிப்பேன் என்று கர்த்தரும் சாட்சியிட்டார்; மேலும் நாமம் விளங்க தெரிந்துகொள்ளும் இடத்தில் சென்றுதான் புசிக்கவும் கட்டளையிடப்பட்டது; இரண்டு ஏற்பாட்டிலும் நாமத்தினை விளங்கச் செய்கின்ற இடமே தெரிந்துகொள்ளப்பட்ட இடமாகும். 7-ம் சபைக்காலத்தில் நாமத்தினை விளங்கச் செய்த இடமாக 7-வது சபையாகிய லவோதிக்கேயா சபையே அனுமதிக்கப்பட்டது. அது அந்தக் காலத்தில் நாமத்தினை விளங்கச் செய்த சபையாகும். ஜீவனுக்குரியவர்கள் அந்த சபையோடு ஐக்கியப்பட்டார்கள். அவர்களுக்கு கர்த்தரின் நாமம் இன்னதென்று அறியக்கூடிய கிருபை கொடுக்கப்பட்டது. அவர்கள் மோசேயினைப் பற்றியும், எலியாவைப் பற்றியும் மற்ற சபையார் அறியாததை அறிந்திருந்தார்கள். கர்த்தரின் நாமத்தை அறிந்திருக்கக்கூடிய கிருபையினைப் பெற்றவர்களாக இருந்தார்கள்.

    அதுபோலவே ஏழு சபைக்காலங்களும் நிறைவுபெற்றபின், கர்த்தரது நாமம் விளங்கும் ஸ்தலமாய், அவருடைய நாமத்தினை பிரஸ்தாபப்படுத்தும் ஸ்தலமாய் ஒரு கூடுகை சாட்சியிடப்பட்டுள்ளது.

வெளி. 1: 7-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்."

    முந்தைய ஏற்பாட்டின் காலங்களில் அவர் மேகங்களுடனே வந்ததுபோல இப்போதும் வருவார். புதிய ஏற்பாட்டின் ஆரம்பத்தில் மேகத்திற்குள்ளாக வந்து சாட்சியிட்டார். பழைய ஏற்பாட்டிலும் மேகத்திற்குள்ளாக வந்து நாமத்தை அறிவித்தார். அதுபோல சபைக்காலங்கள் நிறைவுபெற்ற பின்னரும், மேகங்களுடனே வருவார் என்று இங்கே சாட்சியிடப்பட்டுள்ளது. புதிய ஏற்பாடு நிறைவு பெற்றபின், மற்றுமொரு ஏற்பாடு ஆரம்பமாகும். அது கடைசி ஏற்பாடு என்று சாட்சியிடப்படுகின்றது.

    கடைசி ஏற்பாட்டிலும் ஒரு மேகம் எழும்பும். அது கர்த்தரது நாமத்தினை சாட்சியிடும். நாமத்தினை அறிக்கையிடும் போது ஒரு மேகம் வெளிப்படும். "அது மறைக்கப்பட்ட இரகசியத்தினை வெளிப்படுத்தும். கர்த்தரது நாமம் மேகத்திற்குள்ளாகவே ஒவ்வொரு ஏற்பாட்டின் காலத்திலும் சாட்சியிடப்பட்டுள்ளது. மோசேயினிடம் "நான் யேகோவா" என்று சாட்சியிட்டார். தாத்தான், அபிராம், கோராகு என்பவர்களை அழைத்து, "நான்தான் யேகோவா" என்றும், நான்தான் மோசேக்கு என்னை வெளிப்படுத்தினேன் என்றும் அவர் கூறவில்லை. மோசே மாத்திரமே மேகத்திற்குள் சென்றான். மோசேயின் மூலமாகவே நாமம் சாட்சியிடப்பட்டது. மோசேயிடம் மாத்திரமே பிரமாணங்களை அறிவித்தார். மோசேயின் பிரமாணத்தின்படி செய்தவர்கள் ஜீவனுக்குரியவர்கள் ஆனார்கள். அவர்கள் நித்திய ஜீவனை சுதந்தரிக்க கிருபை பெற்றார்கள்.

    வார்த்தையும் நாமமும் மேகத்திற்குள்ளாகவே மறைக்கப்பட்டுள்ளது. அது மேகத்திற்குள்ளாக இருந்து அறிவிக்கப்பட்டபோது, அதனை ஏற்றுக்கொண்டவர்கள் கிருபை பெற்றவர்களாகின்றார்கள். மேகத்திற்குள்ளாக சாட்சியிடும் சாட்சியினை விசுவாசித்தவர்கள் வார்த்தையையும் நாமத்தையும் அறிந்துகொண்டார்கள்.

    கடைசி ஏற்பாட்டிலும் மேகத்திற்குள்ளாகவே வார்த்தையும் நாமமும் சாட்சியிடப்படும். அந்த சாட்சிக்குள்ளாக மோசேயும் எலியாவும் இருப்பார்கள்.

வெளி. 11: 12-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்."

    ஒலிவ மரங்களாய் நின்று சாட்சியிட்டவர்கள் மேகத்தில் ஏறி வானத்திற்குச் செல்லக்கூடிய ஒரு நிகழ்வு ஏற்படும். இதனை அவர்களுடைய சத்துருக்களும் காண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இது ஆவிக்குரிய அர்த்தம் கொண்டதாகும்.

வெளி. 10: 1-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது."

    "மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது" என்று கூறப்பட்டுள்ளது. இந்த மேகத்திற்குள்ளாகி பலமுள்ள தூதன் வார்த்தை என்ற அவரது நாமத்திற்குச் சாட்சியிடுவான். அந்த தூதனை மேகத்திற்குள்ளாக தான் கண்டதாக யோவான் சாட்சி கொடுத்துள்ளான். அந்த தூதன் நாமத்தைக் குறித்தும், மறைக்கப்பட்டுள்ள தேவரகசியங்களைக் குறித்தும் சாட்சியிடுவான்.

வெளி. 19: 8, 9-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.

    பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்."

    இங்கே கூறப்பட்ட அந்த நீதியானது மெல்லிய வஸ்திரமாக சாட்சியிடப்பட்டுள்ளது. இந்த நீதி என்பது விசுவாசம் ஆகும்.

    ஆட்டுக்குட்டியானவரின் மனைவி நித்திய ஜீவனை சுதந்தரிக்க கிருபை பெற்றவள். அவள் பரலோக ராஜ்யத்தைச் சுதந்தரிக்கப்போகும் மணவாட்டி. மேகத்திற்குள்ளிருந்து அறிவிக்கப்படும் கர்த்தருடைய நாமத்தினை மணவாட்டி அறிந்துகொள்வாள். அந்த நாமம் மேகத்திற்குள்ளிருந்து தூதன் மூலம் அறிவிக்கப்படும். அது மேகத்திற்குள்ளாக அதாவது மறைவாயிருந்து பெறப்பட்டு யாவரும் அறியும்படியாய் சாட்சியிடும். எல்லோரும் காண்கின்ற வண்ணமாக அந்த சுவிசேஷம் அறிவிக்கப்படும்.

    மறைக்கப்பட்டுள்ள மேகத்திற்குள்ளாக கர்த்தருடன் மோசேயும் எலியாவும் இருந்தார்கள். அப்போது அவருடைய நாமம் மேகத்திற்குள்ளாக இருந்து அறிவிக்கப்பட்டது. அங்கே பிரமாணம் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் ஒவ்வொரு சபைக்காலத்திலும் சபையின் தூதன் மூலம் பிரமாணம் அறிவிக்கப்பட்டது; அவர்கள் அதனை சாட்சியிட்டார்கள். அதனை ஏற்றுக்கொண்ட ஊழியர்கள் அதனை சுவிசேஷமாய் அறிவித்தார்கள். சுவிசேஷத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் நித்திய ஜீவனுக்குரியவர்களாய் இளைப்பாறுதலுக்குள் செல்ல கிருபை பெற்றார்கள். காயீனுடைய தன்மை கொண்டவர்கள் நாமத்தினை அறியமாட்டார்கள். பிரமாணத்தினை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எல்லா சபைக்காலங்களிலும் இதுபோன்ற நிலையே சாட்சியிடப்பட்டுள்ளது. தான் பொல்லாங்கனால் உருவானவன் என்று காயீன் ஏற்றுக்கொள்ளவில்லை. காயீனுடைய சந்ததியாரும் அதே தன்மையில்தான் சாட்சியிடப்பட்டுள்ளார்கள்.

    இயேசுகிறிஸ்து தம்மைச் சூழ்ந்திருந்த யூதர்களைப் பார்த்து: நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள் என்றார். அவர்களோ, நாங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள், நாங்கள் யாருக்கும் அடிமைகள் அல்ல என்றார்கள். தாங்கள் பிசாசினால் உண்டானவர்கள் என்ற அவரது சாட்சியை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சபைக்காலங்களிலும் அதேபோன்ற நிலையே காணப்பட்டுள்ளது. அந்த சபைக்குரிய தூதனின் சாட்சியின்படி பிரமாணத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் கர்த்தருடைய நாமத்தினை ஏற்றுக்கொண்டவர்களானார்கள். கர்த்தருடைய நாமத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் நித்திய ஜீவனுக்குரிய கிருபையினைப் பெற்றார்கள். கர்த்தருடைய நாமத்தினை ஏற்றுக்கொள்ளாதவர்கள் ஆக்கினைக்குரியவர்களானார்கள்.

    அதுபோலவே கடைசி ஏற்பாட்டின் காலத்திலும் "வார்த்தை" நாமமாய் சாட்சியிடப்படும். இஸ்ரவேலர்களிடத்தில் அப்போஸ்தலர்கள் நாமத்தைக் கொண்டுசென்றதுபோல, விளக்குத்தண்டில் உள்ள அகல்கள் காணாமற்போன ஆடுகளாகிய கிறிஸ்தவர்களுக்குள் நாமத்தினைக் குறித்து சாட்சியிடுவார்கள். வலப்புறத்து மந்தையின் ஆடுகள் நாமத்தினை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய மணவாட்டியாக சாட்சியிடப்பட்டுள்ளார்கள்.

    ஆட்டுக்குட்டியானவருடைய மணவாட்டி முன்குறிக்கப்பட்டவள். அவள் அகல்கள் மூலம் அனுப்பப்படும் வார்த்தையினை ஏற்றுக்கொள்வாள். அகல்கள் மூலம் கொடுக்கப்படும் வார்த்தையினை ஏற்றுக்கொள்பவர்கள் எலியாவை ஏற்றுக்கொள்வார்கள்; மோசேயினை ஏற்றுக்கொள்வார்கள். எலியாவின் மூலமும் மோசேயின் மூலமும் சாட்சியிடப்படும் நாமத்தினை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் கர்த்தருடைய நாமத்தினை அறிந்து கொள்வார்கள். கர்த்தருடைய நாமத்தை அறிந்தவர்கள் மேகத்திற்குள்ளாகி வெளிப்படுத்தப்படும் எல்லா இரகசியங்களையும் அங்கீகரிப்பார்கள்.

    தெரிந்து கொள்ளுதலின்படி, கர்த்தரை அறிந்தவர்கள் கர்த்தருடைய நாமம் இன்னதென்று அறிவார்கள். கர்த்தருடைய நாமத்தினை அறிந்தவர்கள் சாட்சியிடப்படும் ஏழு அகல்களையும் அறிவார்கள்.

வெளி. 19: 12, 13-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.

    இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே."

    சிரசின் மேல் அநேக கிரீடங்கள் இருப்பது இங்கே சாட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிரசு ஒன்றே; ஆனால் கிரீடங்கள் அநேகம். தலை கிறிஸ்து. ஆனால் இங்கே அநேகக் கிரீடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரீடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவிக்கப்பட வேண்டும்.

    முதலாவது கிரீடமாக "தேவனாகிய கர்த்தர்" என்ற நாமம் சாட்சியிடப்பட்டுள்ளது. அதன்பின்னர் அணிவிக்கப்படும் ஒவ்வொரு கிரீடமும் அவரது நாமமாக சாட்சிடப்பட்டுள்ளது. கிரீடம் என்பது மகிமையாகும். மகிமை என்பது அவரின் நாமமாகும்.

    இரண்டாவதாக அறிவிக்கப்பட்டுள்ள கிரீடம் "சர்வ வல்லமையுள்ள தேவன்" என்ற நாமமாகும். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுக்காக இந்தக் கிரீடமானது அணிவிக்கப்பட்டது.

    அதன்பின்னர் அணிவிக்கப்பட்ட கிரீடம் "யேகோவா" என்ற நாமமாகும். கர்த்தர் அணிந்த இந்த கிரீடத்திற்கு மோசே சாட்சியிட்டான். மோசே கர்த்தர் அணிந்திருந்த முந்தைய கிரீடங்களைக் குறித்து அறிந்தவனாக இருந்தான்.

    அதன்பின்னர், மேகத்திற்குள்ளாக மோசே எலியா என்பவர்களோடு இருந்தபோது, சாட்சியாய் அறிவிக்கப்பட்ட கிரீடம் "கர்த்தராகிய இயேசுகிறிஸ்து" என்ற நாமமாகும். மேகத்திற்குள்ளாக மோசேயும் எலியாவும் அவரது நாமத்தினை அறிய கிருபை பெற்றவர்களாக இருந்தார்கள். சாட்சிகளாகிய இவர்களைக் காட்டிலும் ஆட்டுக்குட்டியானவரின் மணவாட்டி மிகவும் சிலாக்கியம் பெற்றவள் ஆவாள். காரணம், அவள் மாமிசத்தில் ஜீவிக்கும்போதே அவருக்கு அணிவிக்கப்பட்டுள்ள கிரீடங்களைப் பற்றி அறிந்துகொள்ள கிருபை பெற்றவளாகின்றாள். ஆபிரகாம் இவைகள் யாவையும் அறிந்தவனாக சாட்சியிடப்பட்டுள்ளார். ஆபிரகாம் இன்றைக்கும் அந்த நிகழ்வுகளைக் கண்டு களிகூர்ந்துகொண்டிருக்கின்றார். வார்த்தை என்ற ஒரு ஒளி பூச்சக்கரத்தில் எழும்பப்போவதை அவரும் காண்கின்றவராய் இருக்கின்றார். அந்த ஒளி கிறிஸ்துவாய் வெளிப்பட்டது. அந்த ஒளி அவருடைய வார்த்தை என்று அதன்பின்னர் சாட்சியிடப்படும்.

    ஈசாக்கு ஜீவனுள்ளோராகிய முற்பிதாக்களில் ஒருவர். யாக்கோபு உபத்திரவப்பட்டு சுதந்திரத்தினைத் தன்னுடைய ஜனத்திற்குக் கொண்டுசேர்த்தவர். அவரும் நம் முற்பிதாக்களில் ஒருவர். ஆபிரகாம் உடன்படிக்கைக்குத் தகப்பன். எனவே அவரே நமக்கும் விசுவாச தகப்பனாக சாட்சியிடப்படுகின்றார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவன் என்றே கர்த்தர் தம்மைக் குறித்து சாட்சியிட்டுள்ளார். மோசேயும் எலியாவும் கர்த்தரது சமூகத்தில் எப்போதும் தரிசிக்க கிருபையினைப் பெற்றவர்கள். இவர்கள் 24 மூப்பர்களுள் ஒருவராக சாட்சியிடப்பட்டிருக்கிறார்கள். நாமத்தினைப் போலவே பிரமாணமும் கிரீடமாக சாட்சியிடப்பட்டுள்ளது. காரணம் நாமமே பிரமாணமாய் அறிவிக்கப்படுகின்றது.

    நியாயப்பிரமாணம் என்பது ஒரு கிரீடமாகும். நியாயப்பிரமாணம் என்ற கிரீடத்தினை அடுத்து, சபைப்பிரமாணம் என்ற கிரீடம் தரிப்பிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்து மகிமைப்பட்டபின் கி.பி. 53-ல் சபைக்காலம் ஆரம்பமானது. அவர் மகிமைப்பட்ட காலத்திற்கும் சபைக்காலத்திற்கும் முன்னதான காலம் "சங்கம காலம்" என்று சாட்சியிடப்படுகின்றது. அவர் மகிமைப்பட்டபின், பரிசுத்த ஆவி அவருடைய நாமத்தில் அனுப்பப்பட்டது. அவர் மகிமைப்பட்ட பின்னர், எழுந்த 7 சபைக்காலங்களிலும் பிரமாணங்கள் 7 தூதர்கள் மூலம் சபைப்பிரமாணங்களாய் அறிவிக்கப்பட்டது. நித்திய ஜீவனுக்குரியவர்கள் அதனை ஏற்றுக்கொண்டார்கள். காயீனுடைய சந்ததியார் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. சபைக்காலம் நிறைவுபெற்று கடைசி ஏற்பாட்டின் காலத்திற்குள்ளாக நாம் கடந்து வந்துள்ளோம். இதன்பின்னர் கிருபை புறஜாதியாரை விட்டு எடுக்கப்பட்டுவிடும்.

    சபைக்காலத்தின் நிகழ்வுகளைக் குறித்து முன்குறிக்கப்பட்டவர்கள் அறிந்திருந்தார்கள். சபைக்காலங்களைப் பற்றி ஆறு சபைக்காலங்களும் நிறைவுபெறும் வரையிலும் அறிவிக்கப்படவில்லை. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபிற்கு சர்வவல்லமையுள்ள தேவன் என்ற நாமம் அறிவிக்கப்பட்டபோது, யேகோவா என்ற நாமம் அவர்கள் அறியாத நாமமாக இருந்தது. மோசேயின் மூலமாகவே யேகோவா என்ற நாமம் சாட்சியிடப்பட்டது. அதே நிலையில் ஆறு சபைக்காலங்களிலும் சபைக்காலங்களைக் குறித்து அறிவிக்கப்படவில்லை. 7-ம் சபைக்காலத்தின்போது ஆறு சபைக்காலங்களைக் குறித்து அறிவிக்கப்பட்டது. அதனை சாட்சியிட்ட மாமிச சரீரம் சகோ. வில்லியம் பிரன்காம் ஆகும். அவரின் சாட்சியினை கிறிஸ்தவர்கள் யாவரும் அறிந்துள்ளார்களா? கர்த்தரது கண்களில் கிருபை பெற்றவர்கள் மாத்திரமே அறிந்திருந்தார்கள். ஆபிரகாம் கர்த்தரது நாமமாகிய சர்வவல்லமையுள்ள தேவன் என்ற நாமத்தினைத் தொழுதுகொண்டான். ஈசாக்கும் அந்த நாமத்தினையே தொழுதுகொண்டான்; யாக்கோபுக்கும் அந்த நாமமே சாட்சியிடப்பட்டது. அதன்பின்னர் "யேகோவா" என்ற நாமம் மோசே மூலம் சாட்சியிடப்பட்டது. அதன்பின்னர் எலியா அந்த நாமத்திற்குச் சாட்சியிட்டான். பழைய ஏற்பாட்டின் காலத்தில் மோசேயும் எலியாவும் கொடுத்த சாட்சியினைக் குறித்துப் பார்க்கின்றோம். அவர்கள் அதன்பின்னர், புதிய ஏற்பாட்டின் காலத்திலும் வந்து சாட்சியிட்டார்கள். அதுபோல, கடைசி ஏற்பாட்டின் காலத்திலும் வந்து சாட்சியிட வேண்டும். இயேசுகிறிஸ்துவோடு மேகத்திற்குள்ளாக காணப்பட்ட மோசேயும் எலியாவும் மாமிச சரீரத்தில் வெளிப்படவில்லை. ஆனால் கடைசி ஏற்பாட்டில் அவர்கள் ஒரு மாமிச சரீரத்தின் மூலம் வந்து சாட்சியிட வேண்டும். இதற்கு முன்னர் அறிவிக்கப்படாத வேறொரு நாமம் அவர்கள்மூலம் அறிவிக்கப்படும். அந்த நாமம் "தேவனுடைய வார்த்தை" என்று சாட்சியிடப்பட்டுள்ளது.

ஏசா. 52: 6-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "இதினிமித்தம், என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச் சொல்லுகிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்."

    என் ஜனங்கள் என் நாமத்தினை அறிவார்கள் என்ற ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவருடைய ஜனம் அவருடைய நாமத்தினை அறியக்கூடிய கிருபை பெற்றமைக்கு சாட்சியிடும் தீர்க்கதரிசனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபைக்காலங்களின் நிறைவில் தூதர்கள் மூலம் சாட்சியிடப்படும் நாமத்தினை அறிந்தவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் ஆட்டுக்குட்டியானவரின் மணவாட்டி என்று சாட்சியிடப்பட்டுள்ளார்கள். ஆயிரம் வருடம் இந்தப் பூமியில் அவரோடு கூட கிறிஸ்துவின் அரசாட்சியில் பங்கடையப் போகின்ற கிருபை பெற்றவர்களாகின்றார்கள்.

யோவே. 2: 32-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்."

    "கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான்" என்றே வேதம் சாட்சியிடுகின்றது. கர்த்தருடைய நாமத்தினை அறிந்துகொள்பவனே நித்திய ஜீவனுக்குரியவன். கர்த்தருடைய நாமத்தினை ஏற்றுக்கொள்ளாதவர்கள் ஆக்கினைக்குரியவர்கள் ஆவார்கள். வார்த்தை அன்று மாமிசமாய் வந்து மகிமைப்பட்டது. அதன்பின்னர், அவருடைய நாமமே பிதாவின் எல்லா நாமத்திற்கும் மேலான நாமமாக உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் அவருடைய நாமம் "தேவனுடைய வார்த்தை" என்ற நாமமாய் உயர்த்தப்பட வேண்டும். மோசேயும் எலியாவும் அறிவிக்கப்படும் புதிய நாமத்திற்கு சாட்சியிடுவார்கள்.

    யோவேல் தீர்க்கதரிசி உரைத்தபடி "கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான்". யோவேல் இந்த தீர்க்கதரிசனம் உரைத்தபோது, கர்த்தருடைய நாமம் "யேகோவா" என்ற நாமமாக இருந்தது. அது பழைய ஏற்பாடு. இயேசுகிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்டபோது, இஸ்ரவேலர்கள் "யேகோவா" என்ற நாமத்தை விசுவாசித்தார்கள். அவர்கள் "கர்த்தருடைய நாமத்தினைத் தொழுதுகொள்ளுகின்றவன் இரட்சிக்கப்படுவான்" என்பதை விசுவாசித்தார்கள். அவர்கள் கர்த்தருடைய நாமமாகிய "யேகோவா" என்ற நாமத்தில் தொழுதுகொண்டிருந்தார்கள். ஆனால், கர்த்தருடைய நாமம், அங்கே புதிய கிரீடமாய் "கர்த்தராகிய இயேசுகிறிஸ்து" என்ற நாமத்தில் அணிவிக்கப்பட்டிருந்தது. அதனை அறியாது, யூதர்கள் அந்த நாமத்தினை ஏற்றுக்கொள்ளாது ஆக்கினைக்குரியவர்களானார்கள். கிருபையானது புறஜாதிகளிடம் வந்தது. இது புதிய ஏற்பாடு.

வெளி. 19: 12-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது."

    இங்கே அறிவிக்கப்பட்டுள்ளபடி அவருடைய சிரசின் மேல் இருக்கும் கிரீடங்களில் ஒன்று, அவருக்கேயன்றி வேறொருவருக்கும் அறிவிக்கப்படாத நாமம் என்று கூறப்பட்டுள்ளது. காரணம், அவருக்கேயன்றி வேறொருவருக்கும் இந்தப் பூமியில் அந்த நாமம் அறிவிக்கப்படவில்லை. அந்த நாமம் மேகத்திற்குள்ளாக இருக்கின்றது. அந்த நாமம் மாமிச சரீரம் கொண்டவர்கள் மத்தியில் அறிவிக்கப்படாத பரிசுத்த நாமமாகும். கர்த்தரின் மற்ற நாமங்கள் யாவும் இந்தப் பூச்சக்கரத்தில் அறிவிக்கப்படும். மேகத்திற்குள் கிரீடம் சூட்டி அமர்ந்திருப்பவர் ஆட்டுக்குட்டியானவர். அவர் சிரசின்மீது அநேக கிரீடங்கள் சூட்டப்பட்டுள்ளது. அது அவருக்கு சூட்டப்படும் வேளையே அந்தக் கிரீடத்திற்குரிய நாமம் இன்னதென்று வெளிப்படுத்தப்படும். இயேசுகிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்டபோதுதான், இயேசு என்ற நாமம் வெளிப்படுத்தப்பட்டது. அந்த நாமத்திற்குச் சாட்சியிட்டவர்கள் அப்போஸ்தலர்கள். அந்த நாமம் புறஜாதிகளாகிய நமக்குக் கிருபையினைக் கொடுத்துள்ளது. இதன்பின்னர், கடைசி ஏற்பாட்டின் காலத்தில் கர்த்தருக்கு அணிவிக்கப்படும் கிரீடமாகிய நாமம் "தேவனுடைய வார்த்தை" என்று சாட்சியிடப்பட்டுள்ளது.

வெளி. 19: 13-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே."

    கர்த்தருடைய நாமம் "தேவனுடைய வார்த்தை" என்பது இந்தக் கடைசி ஏற்பாட்டின் காலத்திற்காக அவருக்குக் கட்டளையிடப்பட்டுள்ள நாமமாகும். இது இந்தக் கடைசி ஏற்பாட்டின் காலத்திற்காக அவர் தரித்திருக்கும் கிரீடமாகும். இந்த நாமமே மேகத்திற்குள்ளிருந்து வெளிப்படுத்தப்படும் நாமமாகும். இது இரகசியங்களை வெளிப்படுத்தும் நாமமாக சாட்சியிடப்பட்டுள்ளது. அந்த சாட்சியின் வார்த்தைக்கு செவிகொடுப்போம். நம்மை நித்திய ஜீவனுக்குள்ளாக கர்த்தர் வழிநடத்துவார்.

ஆமென்!     ஆமென்!!     ஆமென்!!!

All Sermonsஅனைத்து பிரசங்கங்கள்