Phone
Mail
Whatsapp

The Word for the day

வார்த்தையினால் விடுதலை

Listenகேட்க Watchபார்க்க

37. கிருபையும் சத்தியமும்

37. கிருபையும் சத்தியமும்

Sorry for the inconvience, Currently English version is not avalilable.

Switch to Tamil language

(அறிவிக்கப்பட்ட நாள்: 20.07.2014)

    சங்கீதம் 136-ல், அவர் கிருபை என்றுமுள்ளது, அவர் கிருபை என்றுமுள்ளது என்று தொடர்ந்து கூறப்பட்டுள்ளதை நாம் வாசிக்கின்றோம். கிருபை என்றால் என்ன? கிருபை என்றால் நாம் ஒரு காரியத்தைப் பெற்றுக்கொள்ள பாத்திரவானாய் இல்லாதிருந்தும், அருகதை இல்லாதிருந்தும் நமக்கு அது அருளப்படுவதுதான் கிருபையாகும். அபாத்திரரான நமக்குக் கொடுக்கப்படும் மிதமிஞ்சின ஒரு ஈவே கிருபையாகும்.

மீகா. 7: 20-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "தேவரீர் பூர்வநாட்கள்முதல் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட சத்தியத்தை யாக்கோபுக்கும், கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுவீராக."

    இங்கே "பூர்வநாட்களில் ஆணையிட்டபடி சத்தியத்தினை யாக்கோபுக்கும், கிருபையினை ஆபிரகாமிற்கும் கட்டளையிடுவீராக" என்று வேண்டப்பட்டுள்ளதாகப் பார்க்கின்றோம். மீகா தீர்க்கதரிசி ஆபிரகாமின் நாட்களுக்குப் பின்னர், அதாவது கி.மு. 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தீர்க்கதரிசி ஆகும். ஆபிரகாம் கிட்டத்தட்ட கி.மு. 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இங்கே மீகா தீர்க்கதரிசி மூலம் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனமானது ஆபிரகாமுக்கு கிருபையினையும், யாக்கோபுக்கு சத்தியத்தினையும் கட்டளையிடுவீராக என்று கூறப்பட்டுள்ளது. ஆபிரகாமுடைய குமாரன் ஈசாக்கு, ஈசாக்கினுடைய குமாரன் யாக்கோபு. ஆபிரகாமும் யாக்கோபும் மரித்த நிலையில் இங்கே அவர்களது சந்ததியார்களுக்கு கிருபையினையும் சத்தியத்தினையும் கட்டளையிடுவீராக என கூறப்பட்டுள்ளது. இஸ்ரவேல் ஜனங்கள் ஏற்கனவே கிருபையினையும் சத்தியத்தினையும் மீகா சாட்சியிடும் முன்னரே பெற்றுக்கொண்டவர்கள். கர்த்தர் தம்மைக் குறித்து, "நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய தேவன்" என்று கூறியவற்றை வேதத்தில் நாம் பார்க்கின்றோம். மேலும், பிரமாணமே சத்தியம் என்றும் பார்க்கிறோம். ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்ற முற்பிதாக்கள் யாவரும் கர்த்தர் கட்டளையிட்டபடி யாவற்றையும் செய்து வந்தவர்கள். அவர்கள் சத்தியத்தினை அறிந்தவர்களாக சாட்சியிடப்பட்டுள்ளார்கள். கர்த்தரது சித்தமும், கர்த்தரது கிரியைகளும் சத்தியம் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். முற்பிதாக்களாகிய இவர்கள் நன்கு அறிவார்கள்.

    சோதோம் கொமோரா பட்டணங்கள் அழிக்கப்படுவதற்கு முன்பாக கர்த்தர் தம்முடைய இரண்டு தூதர்களோடு சேர்ந்து ஆபிரகாமிடம் வந்தார்; ஆபிரகாமிற்கு தன்னை வெளிப்படுத்தினார்.

    ஆனால் இங்கே மீகா தீர்க்கதரிசி, எங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிடப்பட்ட சத்தியத்தினை யாக்கோபிற்குக் கட்டளையிடுங்கள் என்றும், கிருபையினை ஆபிரகாமிற்கு கட்டளையிடுவீராக என்றும் விண்ணப்பிக்கின்றதைப் பார்க்கின்றோம். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் முற்பிதாக்கள் பரலோக சுதந்திரமான நித்திய ஜீவனை சுதந்தரித்தவர்கள். விசுவாசமார்க்கத்தார் ஆபிரகாமுடைய சந்ததி என்று அப்போஸ்தலனாகிய பவுல் சாட்சியிட்டுள்ளான். அந்த மார்க்கத்தாராகிய ஆபிரகாமுடைய சந்ததியார்களுக்கு கிருபையினையும் சத்தியத்தினையும் கட்டளையிடும்படியாக இங்கே வேண்டப்பட்டுள்ளது. கிருபையும் சத்தியமும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டது. இவைகளைக் குறித்து நாம் பார்ப்போம்.

நீதி. 16: 6-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்."

    பாவம் நிவிர்த்தியாகிட கிருபையும் சத்தியமும் தேவைப்படும் ஒரு காரணியாக இங்கே சாட்சியிடப்பட்டுள்ளது. பாவம் இன்னதென்று சத்தியம் உணர்த்தும். மேலும் சத்தியம் ஒரு மனிதனை உணர்வுள்ளவனாக்கும்; ஆனால் கிருபையே பாவத்தினை நீக்கும் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. சத்தியம் இன்னதென்று அறியாவிட்டால் பாவம் நீங்காது. ஒரு காரியம் பாவம் என்று உணரப்படும்போதுதான், அங்கே மன்னிப்பு என்ற ஒன்று தேவைப்படுகின்றது. ஆதாம் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியினைப் புசித்தது பாவம். அவனது பாவத்தை உணர்த்தக் கூறப்பட்டதே சத்தியமாகும். நோவாவின் நாட்களில் பேழைக்குள் செல்லவேண்டும் என்பது சத்தியம். நோவாவின் காலத்தில், நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியினைப் புசிக்கக்கூடாது என்று கூறப்படுமேயானால், அது சத்தியமாக இருக்காது. நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியினைப் புசிக்கக்கூடாது என்பது ஆதாமுக்குக் கொடுக்கப்பட்ட பிரமாணம். அந்தப் பிரமாணமே சத்தியம். ஆதாமிற்கு கொடுக்கப்பட்ட இந்த சத்தியம் நோவாவின் காலத்தில் பாவத்தினை நிவிர்த்தியாக்கக் கூடாத ஒன்றாகும். பாவத்தினை நிவிர்த்தியாக்கக் கொடுக்கப்படுகின்ற வார்த்தையே சத்தியம்.

    இயேசுகிறிஸ்து மாமிசத்தில் வந்தபோது, "நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்" என்று கூறினார். அது அன்றைக்கு இஸ்ரவேலர்களிடம் கொடுக்கப்பட்ட சத்தியம். காரணம் அன்று இயேசுகிறிஸ்துவே சத்தியமாக சாட்சியிடப்பட்டார். புறஜாதிகளாகிய நமது பாவத்தினை நீக்கி, நம்மை ஆபிரகாமின் உடன்படிக்கைக்குரியவர்களாக்கும் பொருட்டு இயேசு கிறிஸ்து என்ற நாமம் நமக்குக் கட்டளையிடப்பட்டது. இது சத்தியம். புறஜாதிகளாகிய நாம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற நாமத்தில் வைக்கக்கூடிய விசுவாசமே நமக்குள் ஆவியின் சரீரமாகிய ஆத்துமாவை உருவாக செய்யும். இது சத்தியம். ஆவியின் சரீரம் பெற இயலாத நிலைக்குட்படுத்திய பாவத்திலிருந்து விடுதலையாக்கும்பொருட்டு கிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்டார். இது சத்தியம். புறஜாதிகளின் காலம் நிறைவேறும்வரையிலும் பாவ நிவிர்த்திக்கென்று கட்டளையிடப்பட்ட நாமம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற நாமமாகும். பாவ நிவிர்த்தி நமக்குள் ஆவியின் சரீரம் உருவாகக்கூடிய கிருபையினைக் கொடுத்துள்ளது. ஆவியின் சரீரமாகிய ஆத்துமா பெற்றபின் சபைப்பிரமாணம் நம்முடைய ஆவியின் சரீரத்திற்குக் கட்டளையிடப்பட்ட பிரமாணமாகும். சபை பிரமாணமே புறஜாதிகளுக்குக் கொடுக்கப்பட்ட சத்தியமாகும்.

    ஆத்தும ஜனனம் பெற இயலாதிருந்த இந்தப் பாவம் நிவிர்த்தியாகும்பொருட்டு கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற நாமம் புறஜாதிகளுக்குள் கட்டளையிடப்பட்டது. இந்த விசுவாசப் பிரமாணமானது பொதுவான சுவிசேஷத்தின் மூலம் சாட்சியிடப்படுகின்றது. ஆவியின் சரீரம் உருவாகாத பாவத்திற்குள்ளான ஜென்மசரீரம் கொண்ட புறஜாதிகள் பாவ நிவிர்த்தியாக பலியிடப்பட்ட இயேசுகிறிஸ்துவின் சரீரத்தினையும், அந்த சரீரத்திற்குக் கொடுக்கப்பட்ட நாமத்தினையும் விசுவாசிக்க வேண்டும். இது புறஜாதிகளுக்குள் சாட்சியிடப்படும் சத்தியமாகும். கிருபைக்குப் பின்னர் கிரியை. அது ஆத்துமா என்ற ஜீவன் பெற்றவன் கடைப்பிடிக்க வேண்டிய கிரியைகளுக்குரிய பிரமாணமாகும். அதுவே ஆத்துமா என்ற ஜீவனைப் பெற்றவர்களுக்குள் சாட்சியிடப்படும் சத்தியமாகும். கிறிஸ்தவர்களுக்குள்ளாக இந்த சத்தியம் சபைப் பிரமாணமாக சாட்சியிடப்பட்டது.

    அன்றைக்குரிய சபைக்கென்று கட்டளையிடப்பட்ட வார்த்தையே அன்றைக்குரிய சத்தியமாகும். இந்த சத்தியமே ஜீவன் பெற்றவன் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள அனுப்பப்பட்ட பிரமாணமாகும். இயேசுகிறிஸ்து இஸ்ரவேலர்களைப் பார்த்து, "நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் நீங்கள் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்" என்று கூறினார். ஆசாரியர்கள் மற்றும் பிரதான ஆசாரியர்களைப் பார்த்து, "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள்" என்றும் கூறினார். ஆசாரியர்களின் மாமிச சரீரம் பிசாசினால் உண்டான மாமிச சரீரம் அல்ல. அவர்கள் ஆபிரகாமின் சந்ததியார். ஆனால் அவர்கள் ஆபிரகாம் கண்டு களிகூர்ந்த அந்த சத்தியத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆபிரகாம் கண்டு களிகூர்ந்த குமாரனே அந்த சத்தியமாக இருந்தார். ஆனால், எருசலேம் தேவாலயத்தில் நியாயப்பிரமாணத்திற்கு ஊழியம் செய்துவந்த ஆசாரியர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆரோனின் சந்ததியாரே எருசலேம் தேவாலயத்தில் ஆசாரியர்களாக இருந்தார்கள். அவர்கள் தங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிடப்பட்ட விதமாகவே பலியினை செய்து வந்தார்கள். நியாயப்பிரமாணம் அதை அவர்களுக்குக் கட்டளையிட்டது. ஆனால் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்த இயேசுகிறிஸ்து அதைக்காட்டிலும் மேன்மையானவராக அனுப்பப்பட்டார். அவரை ஏற்றுக்கொள்ளாத ஆசாரியனைக் குறித்தே, நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள் என்று இயேசுகிறிஸ்து சாட்சி கொடுத்தார். சத்தியமாய் வந்த இயேசுகிறிஸ்துவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுவே அவர்களுக்குப் பாவமானது. தங்களுக்காக அனுப்பப்பட்ட அந்தக் கிருபையின் தேவனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரது கிருபையினைப் பெற்றுக்கொள்ளாமல் பாவம் நிவிர்த்தி ஆகாது. எனவே, "கிருபையினாலும் சத்தியத்தினாலும் மாத்திரமே பாவம் நிவிர்த்தியாகும்" என்று மீகா தீர்க்கதரிசி முன்னறிவித்தான்.

சத்தியம் மூன்று தன்மையிலானதாக சாட்சியிடப்பட்டுள்ளது.

1. நிறைவேறிய சத்தியம்:

    கர்த்தத்துவ பிரமாணமே சத்தியமாகும். இந்தப் பிரமாணமானது காலத்திற்குக் காலம், ஜனங்களுக்கு ஜனம் மாற்றியமைக்கப்பட்டு வந்துள்ளது. ஆவியின் சரீரமாகிய ஆத்துமா பெற்றவன் பாவத்திலிருந்து மீட்கப்பட சத்தியம் சாட்சியிடப்பட்டது. அந்த வார்த்தைக்கு அதிகாரம் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆதாமிற்கு கொடுக்கப்பட்ட சத்தியம் என்ற பிரமாணம் இன்றைக்கு நிறைவேறிய சத்தியமாகும்; நோவா நாட்களில் கட்டளையிடப்பட்ட சத்தியம் இன்றைக்கு சத்தியமாக இல்லை. அது நிறைவேறிய சத்தியம். இயேசுகிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்டபோது, இஸ்ரவேலர்களுக்குள் மோசே மூலம் கொடுக்கப்பட்ட பிரமாணம் நிறைவேறிய சத்தியமாகவே சாட்சியிடப்பட்டது; அதுபோல, சபைக்காலங்களில் கட்டளையிடப்பட்ட பிரமாணங்களும் சபைக்காலங்கள் நிறைவேறிய பின்னர், நிறைவேறிய பிரமாணமாகவே சாட்சியிடப்படுகின்றது. சபைக்காலங்கள் நிறைவேறிய பின்னர் சபைப் பிரமாணமானது பாவத்தினை நிவிர்த்தியாக்கக்கூடிய சத்தியமாக சாட்சியிடப்படவில்லை. நிறைவேறிய சத்தியம் என்பது முன் நிகழ்வுகளுக்குச் சாட்சியாக வேதத்தில் கூறப்பட்டுள்ளது; நிறைவேறிய சத்தியம் என்பது ஒரு வரலாறு. நிறைவேறிய சத்தியங்கள் யாவும் பின்னர் வரக்கூடிய சந்ததியார் தனது முன்னோர் எதனால் விழுந்துபோனார்கள் என்பதை அறிவதற்காகக் கொடுக்கப்படுவதாகும். முற்பிதாக்களிடத்தில் கர்த்தர் நிறைவேற்றிய கிரியைகளை நமக்குச் சாட்சியிடக்கூடிய சாட்சியின் ஆகமங்களே மோசேயின் மூலமாகக் கொடுக்கப்பட்ட சாட்சியின் ஆகமங்களாகும். இயேசுகிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்டு தீர்க்கதரிசன வார்த்தைகளை நிறைவேற்றும்வரையிலும் நியாயப்பிரமாணம் பின்பற்றப்பட்டது. இயேசுகிறிஸ்து மாமிசத்தில் மகிமையடைந்த பின்னர், பரிசுத்த ஆவியானவர் இயேசுகிறிஸ்து என்ற நாமத்தில் அனுப்பப்பட்டார். இங்கே நியாயப்பிரமாணம் என்ற சத்தியம் முற்றிலுமாக நிறைவடைந்த நிலை. அப்போது இயேசுகிறிஸ்துவே சத்தியமாக பிதாவினால் சாட்சியிடப்பட்டார்.

    இயேசுகிறிஸ்துவை மேசியா என்று விசுவாசித்த யூதர்கள் பாவம் நீங்கி சுத்திகரிக்கப்பட்டார்கள். இயேசுகிறிஸ்துவை விசுவாசியாத யூதர்களின் பாவம் அவர்களைவிட்டு நீங்காதிருந்தது. அவருடைய சொந்த ஜனங்களே அவரைக் கொண்டுபோய் சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தார்கள். பிலாத்து அவரை விடுதலை செய்ய முகாந்தரத்தைத் தேடினான். பிலாத்துவின் மனைவியிடமும் அந்த நீதிமானைக் குறித்து எச்சரிக்கப்பட்டதைக் குறித்து வேதம் சாட்சியிடுகின்றது. எனவே பிலாத்து அவரைத் தண்டித்து விடாதபடிக்கு அவள் செய்தி அனுப்பினாள்: அந்த நீதிமானுக்கு எதிராக ஒன்றும் செய்யாதிருக்கும்படி அவள் வேண்டியனுப்பினாள். ஆனால் அவருடைய சொந்த ஜனமான இஸ்ரவேலர்கள் அவரை மரணத்திற்குட்படுத்தினார்கள். பிலாத்துவினுடைய மனைவி அவரை நீதிமான் என்று அறிக்கையிட்டாள். ஆனால், மேசியா வருவார் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த அவரது ஜனம் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களது பாவம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவிடாதபடி செய்தது. அந்தப் பாவம் அவர்கள் பெற்றுக்கொண்ட ஜீவனை இழந்துபோகச் செய்தது. ஆவியின் சரீரம் என்ற கிருபையினை அவர்கள் இழந்து நிற்கின்றார்கள். இஸ்ரவேலர்கள் அன்று நிறைவேறிய சத்தியத்தின்மீது அன்பு கொண்டவர்களாக இருந்தார்கள்; தாங்கள் ஆபிரகாமுடைய பிள்ளைகள் என்றும், தாங்கள் மோசேயின் பிரமாணத்தைப் பற்றிக்கொண்டிருப்பவர்கள் என்றும் அறிக்கையிட்டார்கள். சத்தியத்திற்கு சாட்சியிட வந்த இயேசுகிறிஸ்துவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுபோன்ற ஒரு நிலையே கிறிஸ்தவர்களுக்குள்ளும் ஏற்படும். அவர்கள் கடைசி ஏற்பாட்டின் காலத்தில் நிறைவேறிய சபை பிரமாணத்தின்மீது வைராக்கியம் கொண்டவர்களாகவே காணப்படுவார்கள்.

2. மறைக்கப்பட்டுள்ள சத்தியம்:

    மறைக்கப்பட்டுள்ள சத்தியம் என்பது தீர்க்கதரிசிகள் மூலம் முன் அறிவிக்கப்பட்டவைகளாகும். பின்னர் நடக்கப்போவதைக் குறித்து முன்னர் அறிவிப்பது தீர்க்கதரிசனமாகும். அந்த தீர்க்கதரிசனமானது நிறைவேறும்போது அதனை விசுவாசிக்க வேண்டும்; ஆனால் அதனை அறியவிடாதபடிக்கு கண்களைக் குருடாக்கும் நிலையே மறைக்கப்பட்டுள்ள சத்தியமாகும். இயேசுகிறிஸ்து தனக்காக சிலுவையில் அறையப்பட்டார் என்ற விசுவாசமே ஒரு மனிதனை கிறிஸ்தவனாக்குகின்றது. அதன்பின்னர் அந்தக் கிறிஸ்தவன் பின்பற்ற வேண்டிய பிரமாணங்கள் குறித்து தீர்க்கதரிசனமாய் முன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவே சத்தியமாகும். தீர்க்கதரிசனமாக முன் அறிவிக்கப்பட்டுள்ளவைகள் நிறைவேறும் காலத்தில் வெளிப்படுத்தப்படும். அதினதின் காலம் நிறைவேறும்போது மறைக்கப்பட்டுள்ள இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும். தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும் வரையிலும் அது மறைக்கப்பட்டுள்ள சத்தியமாக சாட்சியிடப்பட்டுள்ளது.

3. நிறைவேறிக் கொண்டிருக்கின்ற சத்தியம்:

    அந்த நாளுக்குரிய கர்த்தரது சித்தமே சத்தியமாகும். இவைகள் தீர்க்கதரிசகள் மூலமாய் முன்னதாகவே அறிவிக்கப்பட்டவைகளாகும். கர்த்தரது சித்தம், அது நிறைவேறும்போது வார்த்தை சாட்சியிடப்படும். முன் குறிக்கப்பட்டவன் அந்த வார்த்தைக்கு சாட்சி கொடுப்பான். அந்த வார்த்தையே சத்தியமாகும். பிசாசு, நிறைவேறிய சத்தியத்திற்கும் மறைக்கப்பட்டுள்ள சத்தியத்திற்கும் எதிர்வினையாற்ற மாட்டான். அன்றைக்குரிய வார்த்தைக்கு எதிரான கிரியையினை செய்பவனாகவே அவன் சாட்சியிடப்பட்டுள்ளான். தீர்க்கதரிசனமாய் உரைக்கப்பட்டு, பின்னர் நிறைவேறவேண்டிய காரியங்களை விசுவாசிப்பதற்கு தடை செய்யமாட்டான். அன்றைக்குரிய தேவதிட்டம் எதுவோ, அதனை விசுவாசிக்கவிடாதபடிக்கே அவன் கிரியை செய்வான். காரணம், அன்றைக்குரிய சத்தியத்தின்மீதான விசுவாசமே பாவத்தினை நிவிர்த்தியாக்கும். அன்றைய வார்த்தையினை அங்கீகரியாவிட்டால், பாவம் மன்னிக்கப்படாது. அன்றைக்குரிய வார்த்தைமீது வைக்கக்கூடிய விசுவாசமே பாவத்தினின்று இரட்சிக்கும். நிறைவேறித்தீர்ந்த எந்தப் பிரமாணமும் பாவத்தினை நிவிர்த்தி செய்யாது. அதுபோல, பின்னதாக நிகழப்போவதைக் குறித்த தீர்க்கதரிசனமும், அதன்மீது வைக்கக்கூடிய விசுவாசமும் பாவத்தினை நிவிர்த்தியாக்காது. நிறைவேறக்கூடிய அந்த நாளுக்குரிய தீர்க்கதரிசனமே சத்தியமாக சாட்சியிடப்படுகிறது. அந்த சத்தியமே பாவத்தை மன்னிக்கக்கூடிய அதிகாரம் பெற்றதாக சாட்சியிடப்பட்டுள்ளது.

    இயேசுகிறிஸ்துவின் இரகசியவருகையின்போது எடுத்துக் கொள்ளப்படப் போகின்றவர்கள் இப்படிப்பட்ட கிரியைகளைச் செய்பவர்களாக இருப்பார்கள் என்று தீர்க்கதரிசனம் முன் அறிவித்துள்ளது. வெளி. 18: 4 மற்றும் வெளி. 20: 4-ல் இவைகள் தீர்க்கதரிசனங்களாக சாட்சியிடப்பட்டுள்ளது. இந்த தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும் காலத்தில் அதுவே சத்தியமாகும். அதன்மீதான விசுவாசமே ஒரு ஆத்துமா கர்த்தரது இரசிய வருகையில் பங்கடையும் கிருபையைப் பெற்றதாக அமையும்.

    நோவா காலத்தில் கட்டப்பட்டதுபோல் பேழையினைக் கட்டினால், நாங்கள் இரட்சிக்கப்படுவோம் என்ற சிந்தை சத்தியத்திற்கு செவிகொடுக்கக்கூடிய கிரியையாக அமையுமா? நிறைவேறின பிரமாணத்திற்கு ஏற்ப செய்யப்படும் கிரியை ஒரு ஆத்துமாவை நீதிமானாக்காது. அதுபோலவே நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியினை புசிக்கக்கூடாது என்பது இன்றைக்குரிய பிரமாணம் அல்ல. எனவே இந்த வார்த்தை இன்று விடுதலையினைக் கொடுக்கக்கூடிய சத்தியம் ஆகாது. அன்றைக்கென்று கர்த்தர் கட்டளையிடும் பிரமாணமே சத்தியமாகும். பாவம் இன்னதென்று பரிசுத்த ஆவி மாத்திரமே சாட்சியிடும். காரணம், அன்றைக்குரிய சத்தியத்தினை சாட்சி கொடுப்பது பரிசுத்த ஆவியாகும். பரிசுத்த ஆவி மாமிச மகிமையோடு தன்னை ஒருக்காலும் வெளிப்படுத்தியதில்லை. அன்றைக்கென்று கட்டளையிடப்பட்ட வார்த்தைக்கு சாட்சியிட்டவர்களும் தங்களுடைய மேன்மையை மாமிச சரீரத்தில் வெளிப்படுத்தியதில்லை. இயேசுகிறிஸ்து என்ற புதிய பிரமாணம் சத்தியமாய் சாட்சியிட வந்தபோது, அது ஒரு தச்சன் மகனாகவே தன்னை வெளிப்படுத்தியது; மேன்மை பெற்ற பிரதான ஆசாரியனின் மகனாக வெளிப்படவில்லை.

    நிறைவேறிக்கொண்டிருக்கும் அன்றைக்குரிய வார்த்தையினை கிருபை பெற்றவர்களே விசுவாசிப்பார்கள். கிருபை இல்லாமல் தேவசித்தத்தையும். தேவதிட்டத்தையும் அறிய இயலாது. அன்றைக்குரிய தேவசித்தமே பிரமாணமாகும். கிருபையினைப் பெறாமல் ஒருவராலும் இதனை விசுவாசிக்க இயலாது. நிறைவேறிக்கொண்டிருக்கின்ற வார்த்தையின்மீதான விசுவாசமே பாவத்தினை நிவிர்த்தியாக்கும். பாவம் நிவிர்த்தியாக்கப்பட கிருபை வேண்டும். ஆகவேதான், "கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்" என்று சாட்சியிடப்பட்டுள்ளது. எது சத்தியம் என்பதை அறிந்து கொள்வதற்கு கிருபை வேண்டும். கிருபையினால் விசுவாசம் ஏற்படுகின்றது. விசுவாசத்தினால் பாவம் நீங்குகின்றது. விசுவாசம் இல்லாமல் பாவம் மன்னிக்கப்படாது. எதை விசுவாசிக்க வேண்டுமோ, அதனை விசுவாசிக்க வேண்டும்; அதுவே சத்தியமாகும். எனவே, சத்தியத்தை விசுவாசிக்க வேண்டும். அந்த நாளுக்கென்று அனுப்பப்பட்டுள்ள வார்த்தையே சத்தியம். இயேசுகிறிஸ்து பாவியாகிய எனக்காக சிலுவையில் அறையப்பட்டார் என்று விசுவாசிப்பதினால் மாத்திரம் ஒருவன் பரலோகராஜ்யத்திற்குள் செல்ல இயலாது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற நாமத்தினை விசுவாசிக்கும் விசுவாசம் ஒருவனை அவருடைய பிள்ளையாக மாற்றும். அவருடைய பிள்ளைகளுக்குள்ளாக சுதந்தரவாளியை அவர் பிரித்தெடுக்கின்றார். அவருடைய ஆடுகளைத்தான் அவர் வேறுபிரிக்கின்றார். வலதுபுறத்து ஆடுகள் என்றும், இடதுபுறத்து ஆடுகள் என்றும் வேறுபிரிக்கப்படுகின்றார்கள்.

ரோம. 1: 25-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத்தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப் பட்டவர். ஆமென்."

    தேவனுடைய சத்தியம் என்பது சிருஷ்டிகரை அறிந்து சேவிப்பதாகும். நாம் ஏறெடுக்கின்ற ஆராதனை, அதாவது நாம் ஏறெடுக்கின்ற ஆராதனை பலியானது, சிருஷ்டிகருக்கு ஏறெடுக்கும் ஆராதனை பலியாக இல்லாவிட்டால், அது சிருஷ்டியையே சென்றடையும். சிருஷ்டிகரை இன்னார் என்று அடையாளம் காட்டுவது சத்தியமாகும். சத்தியம் சிருஷ்டிகரையும் சிருஷ்டியையும் அடையாளம் காட்டும். இஸ்ரவேலர்கள் யேகோவா தேவனை ஆராதித்துக் கொண்டிருந்தார்கள். அதன்பின்னர் கர்த்தராகிய யேகோவா என்ற நாமம் மாற்றப்பட்டு, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற நாமம் பிதாவின் நாமமாய் உயர்த்தப்பட்டது. பிதாவின் நாமம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்று மாற்றப்பட்டபோது, யேகோவாவின் பிரமாணம் அங்கே காலாவதியான பிரமாணம் ஆனது. அப்போது இயேசுகிறிஸ்துவே சத்தியம். இயேசுகிறிஸ்து சத்தியமாய் சாட்சியிடப்பட்ட பிறகு, யேகோவாவிற்கு ஏறெடுக்கப்பட்ட பலிகள் பிதாவினால் அங்கீகரிக்கப்படவில்லை. எனவேதான், ஸ்தேவான் பலியிட கூடியிருந்த யூதர்களிடம், "நீங்கள், வானசேனைகளுக்கு ஆராதனை செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று சாட்சியிட்டான்.

லேவி. 19: 5, 6-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "நீங்கள் சமாதானபலியைக் கர்த்தருக்குச் செலுத்தினால், அதை மனோற்சாகமாய்ச் செலுத்துங்கள்.

    நீங்கள் அதைச் செலுத்துகிற நாளிலும் மறுநாளிலும் அதைப் புசிக்க வேண்டும்; மூன்றாம் நாள்மட்டும் மீதியானது அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது."

    செலுத்தப்படும் பலிகள் செலுத்துகின்ற நாளிலும் அதற்கு அடுத்த நாளிலும் புசிக்க கட்டளையிடப்பட்டது. இரண்டு நாட்கள் புசித்தபின், மூன்றாம் நாளில் மீதியாக இருப்பதை புசியாமல், அதனை அக்கினியால் சுட்டெரிக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பின்னர் ஏறெடுக்கப்படும் பலியானது கர்த்தருக்காக செலுத்தப்படும் பலியாக அவர்கள் செலுத்தினாலும் அது அங்கீகரிக்கப்படும் பலியாக சாட்சியிடப்படவில்லை. பலியினைப் புசிப்பதற்கென்று ஒரு காலஅளவு கட்டளையிடப்பட்டிருக்கின்றது. அந்தப் பலியினை இஸ்ரவேலர்கள் இரண்டு நாள் மட்டும் புசித்துக்கொள்ளலாம்; அதன்பின்னர் அதனைப் புசிக்கக் கட்டளையிடப்படவில்லை. அதுபோலவே பிரமாணமும், அது கட்டளையிடப்பட்டுள்ள காலம் வரையிலும் மட்டுமே ஜீவனுள்ளதாயிருக்கும். அதன்பின்னர் அது நிறைவேறித் தீர்ந்த வார்த்தையாக சாட்சியிடப்பட்டுள்ளது. அதன்பின்னர் அது புசிக்கத் தகாததாகின்றது. புசிக்கக் கட்டளையிடப்பட்டுள்ள காலம்வரையிலும் அதைப் புசித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள காலத்திற்குள்ளாக அதனைப் புசிக்கும்போது அது ஜீவனைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

    புசிக்கக் கட்டளையிட்ட காலம் நிறைவேறிய பின்னர், அதனைச் சுட்டெரிக்க வேண்டும் என கட்டளையிடப்பட்டுள்ளது. புசிக்கக் கட்டளையிடப்பட்ட காலத்திற்குப் பின்னர் அது அருவருப்பானதாய் மாறிவிடுகின்றது. அதனிடமிருந்த பரிசுத்த தன்மை அதனிடத்தினின்று நீக்கப்பட்டுவிடுகின்றது.

லேவி. 19: 7, 8-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "மூன்றாம் நாளில் அதில் ஏதாகிலும் புசிக்கப்பட்டால் அருவருப்பாயிருக்கும்; அது அங்கிகரிக்கப்படமாட்டாது.

    அதைப் புசிக்கிறவன் கர்த்தருக்குப் பரிசுத்தமானதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினபடியால் அவன் தன் அக்கிரமத்தைச் சுமந்து, தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்."

    கட்டளையிடப்பட்ட காலத்திற்குப் பின்னர் அதனைப் புசிப்பது; கர்த்தருக்கு முன்பாக அக்கிரம கிரியையாகவே சாட்சியிடப்பட்டுள்ளது. கட்டளையிடப்பட்ட காலத்திற்குப் பின்னர், அது தீட்டானதாக மாறிவிடுகின்றது. எனவே, அதனைப் புசிப்பவன் பரிசுத்தமில்லாதவனாய்க் காணப்படுவான். பரிசுத்தம் இல்லாதவன் கர்த்தர் கட்டளையிட்ட தேசமாகிய பரலோக சுதந்தரத்தினைப் பெற்றுக்கொள்ளக்கூடிய தகுதி இழந்தவனாக அறுப்புண்டு போகின்றான் என்று சாட்சியிடப்பட்டுள்ளது.

    கர்த்தர் கட்டளையிட்ட கால அளவிற்குள்ளாக அதனைப் புசிப்பவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள். அதன்பின்னர், அதனைப் புசிப்பவர்கள் பரிசுத்த குலைச்சலானவர்கள். பரிசுத்தமில்லாததைப் புசிப்பவன் தன் அக்கிரமத்தினைச் சுமப்பான் என்றும், அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான் என்றும் சாட்சியிடப்பட்டுள்ளது. அதுபோலவே பிரமாணமும் கட்டளையிடப்பட்ட காலம் வரையிலும் அது நித்திய ஜீவனுக்குரிய வார்த்தையாய் சாட்சியிடப்பட்டுள்ளது. கட்டளையிடப்பட்ட காலம் நிறைவேறிய பின்னர், பிரமாணம் மரணத்திற்குரியதாகவே சாட்சியிடப்படுகின்றது. கொடுக்கப்பட்ட காலம் நிறைவேறிய பின்னர், அந்தப் பிரமாணத்தில் இருக்கக்கூடிய ஜீவன் அதனின்று எடுக்கப்பட்டுவிடுகின்றது. அதன்பின்னர் அந்தப் பிரமாணம் ஆக்கினைக்குரியதாகவே சாட்சியிடப்பட்டுள்ளது. கட்டளையிடப்பட்ட வார்த்தை நிறைவேறித் தீர்ந்த பின்னர், அதில் ஜீவன் இருப்பதில்லை. அது அதன்பின் அக்கிரமமாகவே எண்ணப்படும். கட்டளையிடப்பட்ட காலம் வரை மாத்திரமே அது பரிசுத்தமானதாகக் காணப்படும்.

    நோவா காலத்தில் கொடுக்கப்பட்ட வார்த்தை, அது புசிக்கத் தகுந்த வார்த்தையாக அவனுக்குக் கட்டளையிடப்பட்டது. அவன் பேழையினைக் கட்டினான். அந்தப் பேழைக்குள் பிரவேசித்தபின், அதின் கதவினைக் கர்த்தர் மூடினார். இது நிகழும் வரையிலும் அந்த வார்த்தை புசிக்கத்தக்க வார்த்தையாக இருந்தது; அது ஜீவனுக்குரிய வார்த்தையாக இருந்தது. பேழையின் கதவு மூடப்பட ஒரு கால அளவினைக் கர்த்தர் நிர்ணயித்திருந்தார். அதுவரையிலும் அது இரட்சிப்பிற்காகக் காத்திருந்த பேழையாக இருந்தது. அதன்பின்னர் ஒருவரும் அதனுள் பிரவேசிக்க இயலாதபடி அதின் கதவு அடைக்கப்பட்டது. அதன்பின், அது நிறைவேறிய பிரமாணமாகவே சாட்சியிடப்பட்டது. அதுபோலவே சபை பிரமாணங்களும். ஒவ்வொரு சபைக்கென்றும் ஒவ்வொரு காலத்தினைக் கர்த்தர் திட்டம் செய்து வைத்துள்ளார். அந்த சபைக்குரிய பிரமாணம் செயல்பட வேண்டிய கால அளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த சபைக்குரிய பிரமாணம் பின்பற்றவேண்டிய காலத்தில் அது ஜீவனுள்ளதாகவும், அதன்பின்னர் அது ஜீவன் இழந்ததாகவும் சாட்சியிடப்பட்டுள்ளது. சகோ. வில்லியம் பிரன்காம் இந்த சபைக்காலங்களைக் குறித்து சாட்சியிட்டார். அவர் ஏழாம் சபைக்குரிய பிரமாணத்தினை சாட்சியிட்ட தூதன். சபைப் பிரமாணமானது அதினதின் கால அளவிற்குள்ளாக புசிக்கப்பட திட்டம் செய்யப்பட்டுள்ளது. அந்தக் காலம் முடிந்தபின் அது புசிக்கத்தகாததாக சாட்சியிடப்பட்டுள்ளது. கிருபையும் சத்தியமும் பாவத்தினை நிவிர்த்தியாக்கும் என்று பார்த்தோம். சத்தியமானது பாவத்திலிருந்து விடுதலையினைக் கொடுக்கும் பொருட்டு அனுப்பப்படுகின்றது. அது தனக்குக் கட்டளையிடப்பட்டுள்ள காலம் வரையிலும் விடுதலையைக் கொடுக்கும். இயேசுகிறிஸ்து மேசியா என்று கண்டுகொள்வதாலும், இயேசுகிறிஸ்துவை இரட்சகர் என்று ஏற்றுக்கொள்வதாலும், இயேசுகிறிஸ்துவை உலகத்தின் பாவத்தினைச் சுமந்து தீர்க்க வந்த தேவ ஆட்டுக்குட்டி என்று விசுவாசிப்பதின் மூலமும் ஒரு கிறிஸ்தவன் பரலோகராஜ்யத்திற்குள் செல்ல இயலாது. இவை யாவும் உள்ளான மனிதனாகிய ஆத்துமாவை பெற்றுக்கொள்ள கட்டளையிடப்பட்டவைகளாகும். இவை மாத்திரம் ஒரு ஆத்துமாவை பரலோக ராஜ்யத்திற்குள் அழைத்துச் செல்லாது. அன்றைக்குரிய சத்தியமாய் சாட்சிடப்பட்ட சபைப்பிரமாணமே நித்திய ஜீவனுக்குள் கொண்டு செல்லும் பிரமாணமாய் சாட்சியிடப்பட்டது. அதுவே ஒரு ஆத்துமாவை பரிசுத்தம் அடைய செய்யும். இது சபைக்காலங்களுக்குரிய பரிசுத்தமாகும்.

    மாமிச சரீரத்திற்காக மாத்திரம் கொடுக்கப்படும் கட்டளைகள் தேவத்துவ கட்டளைகளாகும். அதனை ஆட்சியாளர்கள் வடிவமைக்கிறார்கள். ஆனால் ஆவியின் சரீரத்திற்கென்று கொடுக்கப்படும் கட்டளைகள் பரத்திலிருந்து கொடுக்கப்படும் பிரமாணமாகும். அதனை சபைக்காலங்களில் சபைத்தூதர்கள் கொண்டுவந்து சாட்சியிட்டார்கள். அதனை அந்த நாளில் ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அது பாவமாயிற்று. வேதாகமத்தில் நசரேய விரதத்தினைக் குறித்து இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளதை பார்க்கின்றோம்.

எண். 6: 8-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அவன் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பான்."

    நசரேய விரதம் இருப்பவர்கள் கர்த்தருக்கென்று தங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொண்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நாசரேத் என்னும் ஊரிலிருந்து வந்ததினால் "நசரேயன்" என்று அழைக்கப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

    நசரேய விரதம் இருப்பவர்கள் கர்த்தருக்கென்று தங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொண்டவர்கள். நசரேய விரதம் இருப்பவர்கள் எவை எவைகளைச் செய்ய வேண்டும் என்று கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது.

எண். 6: 3-7-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அப்படிப்பட்டவன் திராட்சரசத்தையும் மதுபானத்தையும் விலக்கக்கடவன்; அவன் திராட்சரசத்தின் காடியையும் மற்ற மதுபானத்தின் காடியையும், திராட்சரசத்தினால் செய்த எவ்விதமான பானத்தையும் குடியாமலும், திராட்சப்பழங்களையாவது திராட்ச வற்றல்களையாவது புசியாமலும்,

    தான் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் திராட்சச்செடி விதைமுதல் தோல் வரையிலுள்ளவைகளினால் செய்யப்பட்ட யாதொன்றையும் புசியாமலும் இருக்கக்கடவன்.

    அவன் நசரேய விரதங்காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது; அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன்.

    அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக்கூடாது.

    அவன் தன் தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவன் தலைமேல் இருக்கிறபடியால், மரணமடைந்த தன் தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலாகிலும் சகோதரியினாலாகிலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது."

    நசரேய விரதம் இருப்பவர்கள் கீழ்க்காணுமாறு செயல்பட வேண்டும். இவை மோசேயின் பிரமாணத்தின் மூலம் கட்டளையிடப்பட்டுள்ளது.

  1. திராட்சரசத்தினைக் குடிக்கக்கூடாது;
  2. திராட்சரசத்தின் காடியினைக் குடிக்கக்கூடாது;
  3. திராட்சரசத்தினால் செய்த எந்தவித பானத்தினையும் குடிக்கக்கூடாது;
  4. திராட்சப்பழத்தினைப் புசிக்கக்கூடாது;
  5. திராட்ச வற்றல்களையும் சாப்பிடக்கூடாது;
  6. நசரேயனாயிருக்கும் காலம் வரை திராட்சச்செடியின் விதை முதல் தோல்வரை செய்யப்பட்ட யாதொன்றையும் புசியாமல் இருக்க வேண்டும்.
  7. மேலும் நசரேய விரதம் இருப்பவர்கள் தங்களைக் கர்த்தருக்கென்று பரிசுத்தமாக்க ஒப்புக்கொடுத்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

ஆதி. 14: 18, 19-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,

    அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக."

    இங்கே மெல்கிசேதேக்கு அப்பத்தையும் திராட்சரசத்தையும் கொடுத்து ஆபிரகாமை ஆசீர்வதிப்பதைப் பார்க்கின்றோம். ஆபிரகாமைக் கர்த்தர் என் தாசன் என்று சாட்சியிட்டுள்ளார். இந்த ஆபிரகாமிற்குள்ளாகவே இஸ்ரவேலர்களும், புறஜாதிகளாகிய நாமும் கிருபையினைப் பெற்றவர்களாகின்றோம்.

ஆதி. 27: 25-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அப்பொழுது அவன்: என் குமாரனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் புசித்து, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கும்படி அதை என் கிட்டக் கொண்டுவா என்றான்; அவன் அதைக் கிட்டக் கொண்டுபோனான்; அப்பொழுது அவன் புசித்தான்; பிற்பாடு, திராட்சரசம் அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான், அவன் குடித்தான்."

    ஈசாக்கு திராட்சரசம் அருந்தினதைக் குறித்து இங்கே நாம் பார்க்கின்றோம்.

ஆதி. 27: 27-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அவன் கிட்டப்போய், அவனை முத்தஞ்செய்தான்; அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல் இருக்கிறது."

    அதன்பின்னர், ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்தான். கர்த்தர் உனக்கு மிகுந்த தானியத்தினையும் திராட்சரசத்தினையும் கொடுப்பாராக என்று யாக்கோபை ஆசீர்வதித்தான்.

ஆதி. 49: 12-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அவன் கண்கள் திராட்சரசத்தினால் சிவப்பாயும், அவன் பற்கள் பாலினால் வெண்மையாயும் இருக்கும்."

    யூதாவின் கண்கள் திராட்சரசத்தினால் சிவப்பாயிருக்கும் என்று கூறப்பட்டுள்ளதைப் பார்க்கின்றோம். வாக்குத்தத்தம் பெற்ற நம் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோர் திராட்சரசம் அருந்தியதைக் குறித்து வேதம் சாட்சி கொடுக்கின்றது. ஆனால் இங்கே நசரேய விரதம் இருப்பவர்கள் திராட்சரசத்திற்குத் தூரப்படுத்தப்பட்டுள்ளார்கள். இயேசு கிறிஸ்துவும் திராட்சரசத்தினை எடுத்து, இது என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கின்றது என்று சாட்சியிட்டார். அப்படியானால், ஒரு காரியம் இங்கே ஒரு பிரிவு ஜனங்களுக்கு அங்கீகரிக்கப்படுவதாகவும், மற்றொரு பிரிவு ஜனத்திற்கு அனுமதிக்கப்படாததாகவும் காணப்படுகின்றது.

    ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்ற நமது முற்பிதாக்கள் மத்தியில் நசரேய விரதம் குறித்து கூறப்படவில்லை.

    நோவா திராட்சரசத்தினால் வெறித்திருந்தான் என்று கூறப்பட்டுள்ளதைக் காணலாம். திராட்சரசம் அங்கே அவனுக்கு தடைசெய்யப்படவில்லை. ஒரு நிகழ்வு தடைசெய்யப்பட்டிருக்கின்ற காலத்தில் அதனை மீறிச்செய்யும்போது அது பாவமாக சாட்சியிடப்பட்டுள்ளது.

    சபைக்கூடுதலை விட்டுவிடக்கூடாது என்பது, விசுவாசிகளுக்கு சபைக்காலங்களில் கட்டளையிடப்பட்ட பிரமாணமாகும். ஒரு கிறிஸ்தவன் சபைக்கூடுதலை விட்டுவிடக்கூடாது என்பது சபைக்குரிய பிரமாணம். எந்த சபை அன்றைக்கென்று கர்த்தரால் ஜீவவார்த்தையினைக் கொடுக்க அனுமதிக்கப்பட்டதோ, அந்த சபைக்கூடுதலைக் குறித்தே இவைகள் சாட்சியிடப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அந்த சபையோடு கூடக்கூடிய ஐக்கியத்தினை விட்டுவிடக்கூடாது என்பதே இங்கே கொடுக்கப்பட்ட பிரமாணமாகும். சபைக்காலங்கள் முற்றிலுமாய் நிறைவு பெற்றபின்னர், சபைகளோடு வைக்கக்கூடிய ஐக்கியம் சத்தியத்திற்கு மாறான ஒன்றாகவே சாட்சியிடப்பட்டுள்ளது. ஏனென்றால், சபைக்காலங்கள் நிறைவுபெற்றபின் சபைகளுக்குக் கட்டளையிடப்பட்ட பிரமாணங்களும் நிறைவடைந்துவிடும். எனவே எந்தவொரு சபைப் பிரமாணமும் அப்போது ஜீவனுக்குரிய பிரமாணமாய் சாட்சியிடப்படவில்லை. சத்தியமில்லாத சபை வேசி என்றே சாட்சியிடப்பட்டுள்ளது. வேசியோடு இணைக்கப்படுகின்றவன் தன் ஆத்துமாவைப் பாவத்திற்கு உட்படுத்துகின்றான். பாவம் இன்னதென்று அறிவிப்பதே சத்தியமாகும். கடைசி ஏற்பாட்டின் காலத்தில் கர்த்தர் பாவம் இன்னதென்றும், சத்தியம் இன்னதென்றும் தம்முடைய சாட்சிகள் மூலம் அறிவிப்பார் என்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிரமாணத்தில் கூறியவாறு பேழைக்குள் செல்லாதவன் நோவாவின் நாட்களில் பாவி. ஆனால் இவைகள் இன்றைக்குரிய சத்தியம் அல்ல. இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வது மாத்திரம் ஜீவனுக்குரிய கிரியை இல்லை. விசுவாசத்தின்மூலம் ஆவியின் சரீரமான ஆத்துமா பெற்றுக்கொண்ட கிறிஸ்தவர்கள் அன்றைக்குரிய பிரமாணமாய் அனுப்பி வைக்கப்படும் சத்தியத்தை அங்கீகரிக்க வேண்டும். நிறைவேறித்தீர்ந்த பிரமாணங்கள் ஒரு ஆத்துமாவின் பாவத்தை நிவிர்த்தி செய்யாது. அந்த சத்தியம் விடுதலையினை கொடுக்க இயலாததாகவே சாட்சியிடப்பட்டுள்ளது.

3. தீர்க்கதரிசன சத்தியம்:

    பழைய ஏற்பாட்டினில் தீர்க்கதரிசிகள் மூலம் உரைக்கப்பட்டவைகள் தீர்க்கதரிசன புத்தகங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏசாயா முதல் மல்கியா வரை உரைத்த இந்தத் தீர்க்கதரிசனங்கள் யாவும் தீர்க்கதரிசன ஆகமம் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. தீர்க்கதரிசனங்களில் மேசியாவைக் குறித்தும் தீர்க்கதரிசனம் கூறப்பட்டுள்ளது. அதுபோல், பூமியும் வானமும் இல்லாமல் போகுமட்டும் நிறைவேற உள்ள எல்லா நிகழ்வுகளும் தீர்க்கதரிசனமாய் அறிவிக்கப்பட்டுள்ளது. அவைகளில் சில நிறைவேறும் காலங்களில் நிறைவடைந்தும் உள்ளது. இன்னமும் நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்களும் இருக்கின்றது. தீர்க்கதரிசன புத்தகத்தில் வெவ்வேறு காலங்களில் நிகழக்கூடிய நிகழ்வுகள் யாவும் தீர்க்கதரிசனங்களாய் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. தீர்க்கதரிசன ஆகமத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா நிகழ்வுகளும் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் நடக்கக்கூடியதாக இருக்காது.

    மேசியா பிறப்பைக் குறித்தும் தீர்க்கதரிசனமாய் முன்னறிவித்துள்ளதைக் காண்கின்றோம். முன்னறிவிக்கப்பட்ட இந்த தீர்க்கதரிசனங்களை ஏற்றுக்கொண்ட இஸ்ரவேலர்கள் அவைகள் நிறைவேறும்போது ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் இஸ்ரவேல் ஜனங்களுக்குள் நிகழப்போகின்றதை தீர்க்கதரிசனமாக கூறிய எரேமியாவை அவர்கள் தண்ணீர் துரவில் போட்டதைக் குறித்து நாம் வேதத்தில் பார்க்கின்றோம். பாபிலோனுக்குள் சிறைப்பட்டுப்போகும்படியாய் அவன் தீர்க்கதரிசனம் கூறினான். அவனிடம் இந்தத் தீர்க்கதரிசனத்தைக் குறித்து கூறும்படி கட்டளையிட்டவர் கர்த்தர். ஆனால் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

    வெளிப்படுத்தின விசேஷமும் ஒரு தீர்க்கதரிசன புத்தகமாகும். அதில் இயேசுகிறிஸ்து மகிமையடைந்த பின்னர், புறஜாதிகளுக்குள்ளும் இஸ்ரவேலர்களுக்குள்ளும் நிறைவேறப்போவதைக் குறித்து தீர்க்கதரிசனமாய் உரைக்கப்பட்டுள்ளது.

வெளி. 1: 1-3-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.

    இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்.

    இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது."

    அப்போஸ்தலனாகிய யோவானுக்கு கர்த்தர் வெளிப்படுத்தின இந்த தீர்க்கதரிசனமானது, பின்னர் சம்பவிக்கப்போகின்றவற்றைக் குறித்து தீர்க்கதரிசனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட இவைகள் அதினதின் காலங்களில் நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்களாகும். இந்த தீர்க்கதரிசனங்கள் யாவும் தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், அவர் தம்முடைய தூதனை அனுப்பி யோவானுக்கு அறிவித்ததுமான தீர்க்கதரிசனங்களாகும். இவைகள் அப்போஸ்தலனாகிய யோவானிடம் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களுக்குக் காண்பிக்கும்பொருட்டு முன் அறிவிக்கப்பட்டது. இயேசுகிறிஸ்து மகிமைப்பட்ட பின்னர், பரிசுத்த ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் நாமத்தில் அனுப்பப்பட்டது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற நாமத்தில் பரிசுத்த ஆவி சாட்சியிடப்பட்ட பின் இங்கே இந்தத் தீர்க்கதரிசனங்கள் யாவும் அப்போஸ்தலனாகிய யோவானுக்கு அறிவிக்கப்பட்டது. வெளிப்படுத்தின விசேஷத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களில் 7 சபைகளைக் குறித்தும் முன் அறிவிக்கப்பட்டது.

வெளி. 1: 4-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்குமுன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,"

    இயேசுகிறிஸ்து மகிமைப்பட்டபின்னர் புறஜாதிகளுக்கு கிருபை கொடுக்கப்பட்டது. அது ஏழு சபைக்காலங்களாகப் பிரிக்கப்பட்டதைக் குறித்து முன் அறிவிக்கப்பட்டது. இந்த ஏழு சபைக்காலங்கள் குறித்த தீர்க்கதரிசனங்கள் முதன்முதலில் வெளிப்படுத்தப்பட்டது. தீர்க்கதரிசனங்கள் மூலமாக அறிவிக்கப்பட்டவை ஏழு சபைக்காலங்களிலும் விசுவாசிகளுக்கு பிரமாணங்களாகக் கட்டளையிடப்பட்டது. அந்தந்த சபைக்காலங்களில் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் வார்த்தையினை விசுவாசித்தார்கள். தூதர்கள் மூலம் கொடுக்கப்பட்ட பிரமாணங்களை ஏற்றுக்கொண்டு நித்திய ஜீவனுக்குரியவர்கள் ஆனார்கள்.

    அப்போஸ்தலனாகிய யோவானுக்கு அறிவிக்கப்பட்ட இந்த தீர்க்கதரிசனத்தின்படி அப்போஸ்தலனாகிய பவுல் முதலாம் சபைக்குரிய தூதன் என்று சாட்சியிடப்பட்டது. சபைகளைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் அதினதின் காலங்களில் நிறைவேற ஆரம்பித்தது. ஏழு சபைகளையும், ஏழு சபைக்காலங்களையும் குறித்து உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனமானது சபைக்கென்று அனுப்பப்பட்ட தூதர்கள்மூலம் வெளிக்கொணரப்பட்டது.

    அதுபோலவே ஆயிரம் வருட அரசாட்சியினைக் குறித்தும் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. சபைக்காலங்கள் நிறைவுபெற்ற பின் கர்த்தரது வருகையினைக் குறித்தும் இந்த தீர்க்கதரிசனம் சாட்சியிட்டுள்ளது.

வெளி. 4: 1-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது."

    சபைக்காலங்கள் என்பது புறஜாதிகளாகிய நமக்குக் கொடுக்கப்பட்ட இரட்சிப்பின் காலமாகும். இந்த சபைக்காலங்கள் நிறைவடைந்தபின்னர், எவை எவைகள் சம்பவிக்கவேண்டும் என்பதைக் குறித்து இந்தத் தீர்க்கதரிசனமானது உரைக்கப்பட்டுள்ளது. சபைக்காலங்கள் நிறைவேறிய பின்னர், மிருகம் எழும்பவேண்டும். அந்த மிருகத்தின் கிரியைகள் முன்னறிவித்ததுபோல நிகழ வேண்டும். ஆயிரம் வருட அரசாட்சியில் பங்கடைய கிருபை பெற்றவர்கள் மிருகத்தின் முத்திரையைத் தரித்திராத கர்த்தருடைய ஜனங்கள். அவர்கள் மாத்திரமே எடுத்துக்கொள்ளப்படுவார்கள். அவர்களைக் குறித்து மணவாட்டி என்று சாட்சியிடப்பட்டுள்ளது. மணவாட்டி எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர், கிருபையானது மீண்டும் இஸ்ரவேலர்களிடம் சென்றடையும். இவையாவும் தீர்க்கதரிசனமாக முன்அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்க்கதரிசனங்கள் யாவும் அதினதின் காலத்தில் நிறைவேறவேண்டும்.

வெளி. 14: 1-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன்."

    இங்கே முன்னறிவித்துள்ளபடியாக முதலாவது சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவர் வெளிப்படுவார். அதன்பின், அவரோடுகூட அவருடைய (ஆட்டுக்குட்டியானவருடைய) பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருக்கும் 1,44,000 பேர் இரட்சிக்கப்படுவார்கள். இதனை நன்றாகக் கவனிக்க வேண்டும்; இங்கே ஆட்டுக்குட்டியின் நாமம் அல்ல; அவரின் பிதாவின் நாமம் என்று கூறப்பட்டுள்ளது. இரகசிய வருகைக்குப் பின்னர் ஆட்டுக்குட்டியானவருடைய பிதாவின் நாமம் என்று சாட்சியிடப்பட்டுள்ள புதிய நாமம் சாட்சியிடப்பட வேண்டும். அந்த நாமம் தரிப்பிக்கப்பட்டுள்ள இஸ்ரவேலர்கள் 1,44,000 பேர் சீயோன் மலையின்மேல் ஒன்றுகூட்டப்படுவார்கள். அந்த நாமம் இன்னதென்று வெளி. 19: 13-ல் வாசிக்கின்றோம்.

வெளி. 19: 13-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே."

    இங்கே ஆட்டுக்குட்டியானவருடைய நாமமும், அவருடைய பிதாவின் நாமமும் ஒருமிக்க சாட்சியிடப்பட வேண்டும். ஆட்டுக்குட்டியின் நாமம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்பதாகும். இப்போது ஆட்டுக்குட்டியானவருடைய பிதாவின் நாமமும் சாட்சியிடப்பட வேண்டும். அந்த நாமம் "தேவனுடைய வார்த்தை" என்பதாகும் என்று தீர்க்கதரிசனம் சாட்சியிட்டுள்ளது. இஸ்ரவேலர்களில் 1,44,000 பேரை இரட்சிப்பதற்காக கட்டளையிடப்பட்டுள்ள புதிய நாமமாக "தேவனுடைய வார்த்தை" என்ற நாமம் அப்போது உயர்த்தப்படும். இந்த 1,44,000 பேரும் ஆட்டுக்குட்டியானவருடைய நாமம் தரிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல. ஆனால், ஆட்டுக்குட்டி இன்னாரென்று அறிந்தவர்கள். அவர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய பிதாவின் நாமம் தரிப்பிக்கப்பட்ட இஸ்ரவேலர்கள். ஆட்டுக்குட்டியானவருடைய நாமம் தரிப்பிக்கப்பட்டவர்களைக் குறித்து மணவாட்டி என்று சாட்சியிடப்பட்டுள்ளது. மணவாட்டி புறஜாதிகளாக இருந்து, கிறிஸ்தவர்களாக மாறிய ஜனங்கள். கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியில் பங்கடைய எடுத்துக்கொள்ளப்பட்டவர்களோடு கூட, இஸ்ரவேலர்களில் ஆட்டுக்குட்டியானவருடைய பிதாவின் நாமத்தினை தங்கள் நெற்றிகளில் எழுதப்பெற்ற 1,44,000 பேரும் சீயோன் மலையின்மேல் ஒன்றுகூடியிருப்பதைக் குறித்து இங்கே முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆட்டுக்குட்டியானவருடைய பிதாவின் நாமமே, கர்த்தத்துவ கிரியைகளில் இறுதியாக உயர்த்தப்படப்போகும் கர்த்தருடைய நாமமாகும். "அந்த வார்த்தை" (யோவா. 1: 14) என்று யோவான் முன்னர் சாட்சியிட்டதுபோல கடைசியுமாய் "அந்த வார்த்தை" (வெளி. 19: 13) சாட்சியிடப்பட வேண்டும். கர்த்தத்துவ கிரியைகள் நிறைவேறிய பின்னர் ஒருவனும் கிரியை செய்யமுடியாத இராக்காலம் வரும். அது ஒரு இருண்ட காலம். அதற்குப்பின்னர், ஆவியின் சரீரம் என்ற ஆவிக்குரிய கிரியை பூச்சக்கரத்தில் முற்றிலுமாய் நிறுத்தப்படும். அப்போது மாமிசத்தில் ஜீவிக்கும் ஜனங்கள் உபத்திரவப்படுத்தப்படுவார்கள். இது உபத்திரவ காலம். அதற்குப்பின்னர், மகா உபத்திரவக் காலம்; அது பூமி முழுவதும் அக்கினியினால் சுட்டெரிக்கப்படும் காலமாகும். அதற்குப்பின்னர், 1000 வருட கிறிஸ்துவின் அரசாட்சி; இவைகள் யாவும் நிறைவடைந்தபின், வானமும் பூமியும் அழிந்துபோகும். இது சத்தியம்.

    சபைக்காலங்கள் நிறைவடைந்தபின்னர், மணவாட்டி அலங்கரிப்பிற்கென்று ஒரு கால அளவு முன்குறிக்கப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட மணவாட்டி இரகசிய வருகையின்போது எடுத்துக்கொள்ளப்படுவாள். அப்போது அவள் மணவாட்டிக்குரிய வஸ்திரத்தினால் அலங்கரிக்கப்பட்டிருப்பாள். மணவாட்டி எடுத்துக்கொள்ளப்பட்டபின்னர், இஸ்ரவேலருக்குரிய இரட்சிப்பின் காலம். அதற்குப்பின் ஒரு இருண்ட காலம்; அது உபத்திரவக் காலம் என்றும்; மகா உபத்திரவக் காலம் என்றும் முன்அறிவிக்கப்பட்டுள்ளது; அதன்பின்னர், பூமியின் மேற்பரப்பு முழுவதும் அக்கினியினால் சுட்டெரிக்கப்படும். அதற்குப்பின்னர், 1000 வருட கிறிஸ்துவின் அரசாட்சி பாவிமில்லாத நிலையில் இந்தப் பூமியில் நிறைவடையும். அதன்பின்னர் வானமும் பூமியும் அழிக்கப்பட்டுவிடும். இவையாவும் அப்போஸ்தலனாகிய யோவானுக்கு அன்று தீர்க்கதரிசனமாக அறிவிக்கப்பட்டது. யோவான் மூலம் அறிவிக்கப்பட்ட இந்த தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடப்பட்ட கிருபையின் கடைசி பகுதியில் நாம் இருக்கின்றோம். இதனை அறிவதற்கு நாம் கர்த்தரது கண்களில் கிருபை பெற்றவர்களாக இருக்கவேண்டும். இந்த தீர்க்கதரிசனத்தின்படி இப்போது எவைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதே சத்தியமாகும். இந்த சத்தியத்தை அறியவிடாதபடிக்கு தடைசெய்வது பாவம். கர்த்தரது கிருபை இதனை அறியக்கூடிய ஞானத்தினை நமக்குக் கட்டளையிடும்.

    சத்தியமே ஆத்தும இரட்சிப்பினைக் கட்டளையிடும். சத்தியமே ஆக்கினையிலிருந்து தப்புவிக்க உதவி செய்யும். மாமிசத்தில் ஏற்படும் சஞ்சலங்கள் யாவும் வடுக்களைக் கொடுத்துவிட்டு மறைந்துவிடும். ஆனால் ஆவியின் சரீரத்திற்குரிய சஞ்சலம் இரண்டாம் மரணமான ஆக்கினைத்தீர்ப்புவரையிலும் தொடர்ந்து வரும்.

    தேவத்துவத்திலும் கர்த்தரின் கண்களில் கிருபை கிடைத்திருப்பதினால்தான், பூமி சுழன்று கொண்டிருக்கின்றது. இந்தக் கிருபை ஒருநாள் எடுக்கப்படும். அது இந்தப் பூமிக்கு ஏற்படப்போகும் உபத்திரவம். இந்த உபத்திரவ காலத்தில் பூமி அழிக்கப்படும்.

யோவா. 1: 17-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின."

    மோசேயின் மூலம் கொடுக்கப்பட்ட பிரமாணம் இஸ்ரவேலர்களுக்காகக் கொடுக்கப்பட்டது. ஆனால் கிருபைப் பிரமாணமோ கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலம் புறஜாதிகளாகிய நமக்காக உண்டாயிருக்கிறது. கிருபை இயேசுகிறிஸ்து மூலம் கட்டளையிடப்பட்டுள்ளது. இயேசுகிறிஸ்து தன்னை சத்தியம் என்று சாட்சியிட்டார். சத்தியம் பாவத்தினை அறிவிக்கும்; இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். அவர் சிந்திய இரத்தமே நமக்குக் கிருபையினைக் கொடுத்துள்ளது. புறஜாதிகளாகிய நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள கிருபையின் காலமே புதிய ஏற்பாடாகும். இஸ்ரவேலர்களுக்குக் கிருபை கொடுக்கப்பட்டிருந்த காலம் அது பழைய ஏற்பாடாகும்.

    ஜென்மசுபாவத்தார்கள் புறஜாதிகள். அவர்கள் ஆவியின் சரீரம் பெற இயலாதவர்கள். ஜென்மசுபாவத்தாராகிய நமக்கு கிருபையினைக் கொடுப்பதற்காக இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட்டது. நம்முடைய கிரியையினால் அல்ல; கிருபையினால் இந்த இரட்சிப்பைக் கொடுக்கவே இயேசுகிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்டார். "கிருபை என்ற வார்த்தை" மாமிசத்தில் வந்து கிரியை செய்து நமக்கு இரட்சிப்பின் நாமமாகிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் நாமத்தைக் கொடுத்துள்ளது. கர்த்தத்துவத்திற்குள்ளாக நமக்குக் கட்டளையிடப்பட்டுள்ள இந்தக் கிருபையே ஆத்துமா என்று சாட்சியிடப்படும் ஆவியின் சரீரமாகும். பழைய ஏற்பாட்டின் காலத்தில் இந்தக் கிருபை இஸ்ரவேலர்களுக்கு மாத்திரம் கட்டளையிடப்பட்டிருந்தது; புதிய ஏற்பாட்டுக்காலத்தில் இந்தக் கிருபையானது புறஜாதிகளாகிய நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டுக்காலத்தில் ஆவியின் சரீரம் என்ற ஆத்துமா இஸ்ரவேலர்களுக்கு மாத்திரம் கொடுக்கப்பட்டது. ஆத்தும சரீரம் என்பது கர்த்தத்துவ கிரியையாகும். பழைய ஏற்பாட்டுக்காலத்தில் இஸ்ரவேலர்களுக்குள் மாத்திரம் இந்தக் கர்த்தத்துவ கிரியை இருந்தது.

    ஜென்மசுபாவம் என்பது ஆத்தும சரீரம் இல்லாதிருக்கும் மாமிச சரீரமாகும். மாமிச சரீரம் என்பது தேவத்துவ கிரியையினால் உருவாக்கப்படும் சரீரமாகும். மனிதகுலம் தவிர வேறு எந்த சிருஷ்டியும் பெற இயலாத கிருபையே கர்த்தத்துவமாகும். ஆதாமிற்குள் கர்த்தர் தம்முடைய ஜீவசுவாசத்தினை ஊதினார்; அவனுக்குள் ஒரு ஜீவன் உருவானது. அந்த ஜீவனே ஆத்துமா என்னும் ஆவியின் சரீரமாகும். அதுமுதல் கர்த்தத்துவ கிரியை ஆரம்பமானது. ஆதாமின் சந்ததியல்லாத மற்ற ஜனங்களுக்குள் ஆத்துமா என்ற அந்த ஜீவன் அப்போது கட்டளையிடப்படவில்லை.

    பழைய ஏற்பாட்டின் கிரியை நிறைவடைந்தபின், புறஜாதிகளாகிய நாம் ஆவியின் சரீரத்தைப் பெற்றுக்கொள்ள கிருபை பெற்றவர்களானோம். அதாவது இஸ்ரவேல் அல்லாதவர்களும் இந்தக் கிருபையினைப் பெற்றுக்கொள்ள கிருபை கட்டளையிடப்பட்டது. புதிய ஏற்பாடு ஆரம்பமானது. இஸ்ரவேலர்களுக்குள் கட்டளையிடப்பட்ட ஆத்துமா என்ற உள்ளான மனிதனின் ஜனனம் நிறுத்தப்பட்டது. ஆக்கினைத்தீர்ப்பும் நியாயத்தீர்ப்பும் ஆத்துமா கொண்டவர்களுக்கு மாத்திரம் அறிவிக்கப்பட்டுள்ள தீர்ப்பாகும். சிருஷ்டிக்கப்பட்ட எல்லா மனுஷர்களுக்குள்ளும் ஆத்துமா என்ற ஆவியின் சரீரம் கட்டளையிடப்படவில்லை. கர்த்தத்துவ கிரியைகளுக்குள்ளாக தெரிந்தெடுக்கப்பட்ட ஜனமே ஆத்துமா என்ற ஆவியின் சரீரத்தினை பெற்றுக்கொள்ள கிருபை பெற்ற ஜனங்களாகும். புறஜாதியாருடைய காலம் நிறைவேறுகின்ற வரையிலும் இஸ்ரவேலருக்குரிய ஒரு பங்கு மீதியாய் இருக்கும் என்றே வேதம் கூறுகின்றது; அப்படியானால், புறஜாதிகளுக்கு கிருபை கொடுக்கப்பட்டிருக்கும் கால அளவு வரையிலும் இஸ்ரவேலர்களுக்குள் ஆத்துமா என்ற உள்ளான மனிதன் பெற்றுக்கொள்ள இயலாத நிலையே காணப்படும். இஸ்ரவேலர்கள் மாமிச சரீரத்திலே எத்தனை கனமுள்ளவர்களாக காணப்பட்டாலும், எத்தகைய நற்கிரியைகளைச் செய்தாலும் கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இரட்சிப்பின் காலம் நிறைவடையும் வரையிலும், அவர்கள் ஆவியின் சரீரத்தினை கருத்தரிக்க இயலாத மாமிச சரீரங்களாகவே இருப்பார்கள் என்றே சாட்சியிடப்பட்டுள்ளது.

    இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட கிருபை நிறுத்தப்பட்டது போல, புறஜாதிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஆவியின் சரீரம் என்ற கிருபையும் ஒருநாள் நிறுத்தப்பட்டுவிடும். அந்தக் காலமே கடைசி ஏற்பாடு என்று சாட்சியிடப்பட்டுள்ளது. புதிய ஏற்பாடும் கடைசி ஏற்பாடும் இணையும் காலம் சங்கம காலம் என்று சாட்சியிடப்படுகின்றது. இது இரண்டாம் சங்கம காலமாகும். இந்த சங்கம காலத்தில் புறஜாதிகளுக்குள்ளாக கிருபை நிறைவுபெறும். ஆவியின் சரீர ஜனனம் நிறுத்தப்பட்ட இந்த நிலையில் ஆவியின் சரீரம் கொண்டவர்கள் தங்களின் கிரியைகளில் பூரணப்பட வேண்டும். இதுவே காத்திருக்கும் காலமாகும். இது இஸ்ரவேலர்கள் ஆவியின் சரீரத்தினைத் திரும்ப பெற்றுக்கொள்ள கட்டளையிடப்பட்டுள்ள காலமாகும். கிறிஸ்தவர்கள் மாமிச சரீரத்தில் கிரியைகளுக்காகவும், இஸ்ரவேலர்கள் கிருபையின் சரீரத்தினை மாமிசத்தில் பெற்றுக்கொள்ளும் நிலையிலுமான இந்த காலமே சங்கம காலமாகும். சங்கம காலம் நிறைவடைந்தபின் ஜீவநதியான இந்த ஆத்தும சிருஷ்டிப்பு என்ற கிருபை இஸ்ரவேலர்களுக்குள் மட்டுமே கட்டளையிடப்படும். அதன்பின்னர் புறஜாதிகளுக்குள் ஆத்துமா என்ற கிருபையின் சரீரம் ஜனனமாவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விடும்.

    நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியினைப் புசிக்கின்ற நாளில் சாகவே சாவதில்லை என்று ஆதாமிடம் பிசாசு கூறியது. ஆனால், அந்தக் கனியினைப் புசித்தபின்னரும், ஆதாம் அநேக நாட்கள் மாமிச சரீரத்தில் ஜீவித்தான். அதன்பின்னரே அவன் பிள்ளைகளையும், அவர்கள் பிள்ளைகளின் பிள்ளைகளையும் கண்டான். அதன்பின்னர்தான் அவன் மரித்தான். அதைப் புசித்த நாளில் அவன் மரிக்கவில்லை; ஆனால் அவனின் ஆவியின் சரீரம் அவன் அதைப் புசித்த நாளில் ஆக்கினைக்கென்று தீர்க்கப்பட்டது. இந்த ஆக்கினைத்தீர்ப்பினை அவன் தனது மாமிச சரீரத்தில் அறியமுடியாததாக இருந்தது. கர்த்தர் ஆதாமிற்குக் கொடுத்த பிரமாணம் ஆவியின் சரீரத்திற்குக் கொடுக்கப்பட்ட பிரமாணமாகும். கர்த்தர் அவனிடம் கூறிய மரணமானது அவனின் ஆவியின் சரீரத்திற்குரிய மரணமாகும். அது மாமிச மரணமல்ல.

    இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகையில் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ளப்பட்டபின்னர், வருகையில் எடுத்துக்கொள்ளப்படாத கிறிஸ்தவர்கள் யாவரும் உடனடியாக மாமிச சரீரத்தில் மரணிக்க மாட்டார்கள். முதலாம் சங்கம காலம் நிறைவடைந்தபின், ஆவியின் சரீரம் என்ற கிருபையினை இஸ்ரவேலர்கள் இழந்துபோனதுபோல, கிறிஸ்தவர்களும் இந்த இரண்டாம் சங்கம காலம் நிறைவடையும்போதும் இருப்பார்கள். கிறிஸ்தவர்களோடு செயல்படும் ஆவியின் சரீரம் என்ற கிருபை கிறிஸ்துவோடு சென்றுவிடும். ஆக்கினைக்குரிய கிறிஸ்தவர்கள் தங்களின் கிரியைகளில் பூரணப்படும்வரையில் மாமிசத்தில் ஜீவித்துக்கொண்டிருப்பார்கள். நித்திய ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்ட யாவரும் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். அப்போது எடுத்துக்கொள்ளப்படாது ஆவியின் சரீரம் கொண்ட கிறிஸ்தவர்கள் ஆக்கினைக்கென்று தீர்மானிக்கப்பட்டவர்களாய் இருப்பார்கள். அதன்பின்னர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்கள் யாவரும் ஆத்துமா என்ற உள்ளான மனிதனை கருத்தரிக்க இயலாதவர்களாகவே இந்தப் பூமியில் ஜீவிப்பார்கள். அவர்கள் ஜென்ம சுபாவம் கொண்ட மற்ற ஜனங்களைப் போல மரித்து மண்ணோடு மண்ணாவார்கள். அப்போது இஸ்ரவேலர்கள் மாத்திரம் ஆவியின் சரீரம் பெற்றவர்களாக காணப்படுவார்கள். அவர்களில் 1,44,000 பேர் மட்டுமே பரலோக சுதந்தரத்திற்காக கர்த்தரால் முன்குறிக்கப்பட்டவர்கள் என்று வேதம் சாட்சியிடுகின்றது.

    தேவனால் 6-ம் நாளில் சிருஷ்டிக்கப்பட்ட ஜனம், 7-ம் நாள் பலுகிப் பெருக ஆரம்பித்தது. 7-ம் நாளில் அவர் ஓய்ந்திருந்தார். அப்போது அவர் சிருஷ்டித்த யாவும் பலுகிப் பெருக ஆரம்பித்தது. இப்படியாக பலுகிப் பெருகிய இந்த ஜனங்கள் யாவரும் ஜென்ம சுபாவத்தார் என்று வேதம் சாட்சியிடுகின்றது. 7-ம் நாள் கடந்தபின்னர், அவர் ஆதாமைத் தெரிந்தெடுத்து, அவனுக்குள் சுவாசத்தினை ஊதினார்; அவனிடமிருந்து ஒரு கூட்ட ஜனம் ஆவியின் சரீரம் கொண்டவர்களாக உருவாக தெரிந்தெடுக்கப்பட்டார்கள். அவர் ஒருவனையல்லவா சிருஷ்டித்தார்; ஏன் ஒருவனை சிருஷ்டித்தார்? அவனுக்குள் இருந்து தேவசந்ததி உருவாக வேண்டும் என்பதற்காகவே அந்த மனிதனைத் தெரிந்தெடுத்தார். அந்த மனிதன் ஆதாம் என்ற நாமமிடப்பட்டான். அவனிலிருந்து மாறுப்பட்ட கிரியைகளுக்குள்ளாகும் ஒரு ஜனம் உருவாகவேண்டும் என்பதற்காக அவனைத் தெரிந்தெடுத்தார். அந்த ஜனத்திற்கு மாத்திரம் கிருபையினைக் கொடுத்தார். அந்தக் கிருபை ஆத்துமா என்ற உள்ளான மனிதனாகும். அதன்பின் ஆதாமின் சந்ததியிலிருந்து கிருபையினைப் பெற்ற ஜனமாக இஸ்ரவேலர்கள் தெரிந்தெடுக்கப்பட்டார்கள். அந்த ஜனங்களுக்குள் சத்தியம் என்ற நியாயப்பிரமாணம் யேகோவா என்ற நாமத்தில் சாட்சியிடப்பட்டது. அந்த நியாயப்பிரமாணத்திற்கு ஏற்ற கிரியைகளைச் செய்துமுடித்த இஸ்ரவேலர்களின் ஆத்துமா நித்திய ஜீவனைச் சுதந்தரித்தது. அது பரலோக ராஜ்யத்தினை சுதந்தரிக்கும் கிருபையில் பூரணப்பட்டது.

    நித்திய ஜீவனுக்கென்று தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் சத்தியத்தின்படி நடந்தார்கள். மோசேயின் மூலம் நியாயப்பிரமாணம் கட்டளையிடப்பட்ட நாட்களில் அதனை இஸ்ரவேலர் யாவரும் பின்பற்றி நடந்தார்களா? இல்லையே! அங்கே தாத்தான், அபிராம் மற்றும் அவனோடு சேர்ந்த ஒரு கூட்டம் மோசேக்கு எதிராக நின்றது. ஓய்வு நாளில் விறகு பொறுக்கிக் கொண்டிருந்தவன், தண்டனைக்குள்ளானான். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று தண்டனை கொடுக்கப்பட்ட அந்த நாட்களிலேயே பிரமாணத்தினைப் பின்பற்றாதவர்களும் இருந்தார்கள். நாம் ஜீவிக்கும் காலம் கிருபையின் காலமாகும். இங்கே பாவங்களுக்குரிய தண்டனை உடனடியாக மாமிசத்தில் கொடுக்கப்படுவதில்லை. நியாயப்பிரமாண காலத்தில் தண்டனை உடனுக்குடன் கொடுக்கப்பட்டது. நியாயப்பிரமாணத்திற்கு ஏற்ற கிரியைகளைச் செய்தவர்கள் நித்திய ஜீவனை சுதந்தரித்தார்கள். அவர்கள் ஜீவனுள்ளோர் தேசத்திற்குள்ளாக செல்லக்கூடிய கிருபையினை பெற்றுக்கொண்டார்கள்.

    ஜீவனுக்குரியவர்கள் எனவும், ஆக்கினைக்குரியவர்கள் எனவும் சத்தியம் வேறுபிரிக்கின்றது. ஆத்துமா என்ற உள்ளான மனிதனைக் கொண்டவர்களை சத்தியம் நித்திய ஜீவனுக்குரியவர்கள் என்றும், ஆக்கினைக்குரியவர்கள் என்றும் வேறு பிரிக்கின்றது. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் வைத்த புறஜாதிகள் கர்த்தத்துவ கிரியையின் மூலம் ஆத்துமா என்ற உள்ளான மனிதனைப் பெற்றுக்கொண்டார்கள். கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசம் கொண்டவர்கள் கிறிஸ்தவர்கள். அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள். அவர்கள் மட்டுமே ஆத்துமா என்ற உள்ளான மனிதனை பெற்றுக்கொள்ள கிருபை பெற்றவர்கள். ஆத்துமா கொண்ட இந்த ஜனங்களுக்குள் நித்திய ஜீவனுக்குரியவர்களை வேறுபிரிக்கவே சத்தியம் அனுப்பப்படுகின்றது. சத்தியத்தினை விசுவாசிப்பவர்கள் நித்திய ஜீவனுக்குரியவர்களாகி, பரலோக ராஜ்யத்தினை சுதந்தரிக்கக்கூடிய சுதந்திரவாளிகளாகின்றார்கள். கர்த்தரது இந்த சத்தியமானது பிரமாணமாய் காலத்திற்குக் காலம், ஜனங்களுக்கு ஜனம் மாற்றியமைக்கப்படுகின்றது.

    இந்தக் கடைசி நாளுக்கென்று கர்த்தர் சாட்சியிடும் பிரமாணமே சத்தியமாகும். அந்த சத்தியம் "தேவனுடைய வார்த்தை" என்ற அவரது நாமத்தின்மூலம் சாட்சியிடப்படும். அந்த வார்த்தை என்ற நாமம் சபைக்காலங்கள் நிறைவு பெற்றுள்ளதை சாட்சியிடும். தனது கிரியைகளில் பாபிலோனாக மாறும் சபைப்பிரமாணங்களைக் கொண்ட சபையோடு வைக்கும் ஐக்கியம் சத்தியத்தினை மறுதலிக்கச் செய்யும். "தேவனுடைய நாமமாகிய வார்த்தை" என்ற நாமத்தினை சபைகள் அங்கீகரிக்காது. அந்த வார்த்தையினைக் குறித்த சாட்சி வனாந்திரத்திலிருந்து கர்த்தரது தூதர்கள் மூலம் சாட்சியிடப்படும்.

மாற். 13: 3, 4-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "பின்பு, அவர் தேவாலயத்துக்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடத்தில் தனித்துவந்து:

    இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறுங்காலத்துக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்."

    "எருசலேம் தேவாலயத்திற்கு எதிராக அவர் உட்கார்ந்தார்" என்று இங்கே கூறப்பட்டுள்ளதைக் காணலாம். எருசலேம் தேவாலயத்தில் இருந்த நியாயப்பிரமாண பக்தர்கள் அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய் தள்ளிவிட எத்தனித்தார்கள். மாமிசத்தில் வந்த "அந்த வார்த்தையினை" அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, அவரது மாமிச சரீரத்தினை மலை உச்சியிலிருந்து தள்ளி அதனைக் கொன்று போட எத்தனித்தார்கள் என்று பார்க்கின்றோம். எருசலேம் தேவாலயம் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், தேவாலயம் நியாயப்பிரமாண வார்த்தையைப் பற்றிக்கொண்டிருந்தது. மாமிசத்தில் வந்த அந்தப் புதிய பிரமாணத்தை அது ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அந்த வார்த்தை அன்று தேவாலயத்தைவிட்டு வெளியேறி ஒலிவ மலையின்மீது சென்று அமர்ந்தது. அது, பின்னர் சம்பவிக்க வேண்டியவைகளைக் குறித்து அப்போஸ்தலனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தியது. அவன் உரைத்த தீர்க்கதரிசனங்களை எருசலேம் தேவாலயம் அன்று ஏற்றுக்கொள்ளவில்லை. தீர்க்கதரிசனம் உரைத்த யோவானை கொலை செய்ய எத்தனித்தது. அதுபோலவே சபைப்பிரமாணங்களைக் கொண்டு செயல்படும் இயேசுகிறிஸ்துவின் சரீரமாகிய சபையும் அனுப்பப்படும் வார்த்தையை அங்கீகரிக்காது. வார்த்தை என்ற நாமத்தில் அனுப்பப்படும் கர்த்தத்துவ பிரமாணத்தை சபைகள் ஏற்றுக்கொள்ளாது. தூதர்கள் மூலம் சாட்சியிடப்படும் புதிய நாமமான "தேவனுடைய வார்த்தை" என்ற நாமத்தினை சபைகள் அங்கீகரிக்காது. எனவே அந்த "வார்த்தை" சபைகளுக்கு வெளியே ஒலிவ மலையின்மீது வந்தமர்ந்து சாட்சியிடும்.

    கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் இந்தப் புதிய பிரமாணத்திற்கு செவிசாய்ப்பார்கள். அவர்கள் சத்தியத்தோடு இணைந்தவர்களாய் புதிய நாமமாக சாட்சியிடப்படும் "தேவனுடைய வார்த்தை" என்ற நாமத்தை விசுவாசிப்பார்கள். மாமிச சிந்தை கொண்ட கிறிஸ்தவர்கள் நிறைவேறித்தீர்ந்த சபைக்கோட்பாடுகளைப் பற்றிக்கொண்டவர்களாய் அதனை விட்டு வெளியேறி வர இயலாத நிலையில் கட்டப்பட்டவர்களாக காணப்படுவார்கள். அப்போது சபைப்பிரமாணமானது நிறைவேறித்தீர்ந்த பிரமாணமாகவே காணப்படும். கர்த்தத்துவத்தினை தனது தோளின்மீது சுமந்துவந்த கிறிஸ்துவின் சீஷர்கள் தேவாலயத்தோடு ஐக்கியப்படவில்லை. அவர்கள் புதிய பிரமாணமான கிறிஸ்துவை அங்கீகரித்து அவரோடு ஐக்கியப்பட்டிருந்தார்கள். அதுபோலவே கடைசி ஏற்பாட்டின் காலத்திலும் நிறைவேறிய சபைப் பிரமாணத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் வார்த்தையினை அங்கீகரிக்கமாட்டார்கள்.

மாற். 13: 5-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்."

    இயேசுகிறிஸ்து தம்மோடு இருந்த சீஷர்களிடம் பாழாக்குகின்ற அருவருப்பைக் குறித்து முன் அறிவித்தார். இதனைக் குறித்து தானியேல் தீர்க்கதரிசியும் முன்னறிவித்துள்ளான்.

மாற். 13: 14-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "மேலும் பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்; அது நிற்கத்தகாத இடத்திலே நீங்கள் அதை நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்."

    நிற்கத்தகாத இடத்தில் பாழாக்குகின்ற அருவருப்பு நிற்பது குறித்து இங்கே முன் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பாழாக்குகின்றவனை ஏற்றுக்கொண்டுள்ளவர்களுக்கு அது அருவருப்பாக காணப்படாது. அதனை விட்டு வெளியேறி வந்தபின்னரே, அதன் அருவருப்பின் தன்மையினை அறியமுடியும். தேவாலயத்தினை விட்டு வெளியேறிய அப்போஸ்தலர்கள் தேவாலயத்தில் இடைபட்ட ஆவியினை அறிந்துகொண்டார்கள். வார்த்தையானவர் சாட்சியிடும் பிரமாணமானது சூடான புதிய அப்பமாக சாட்சியிடப்படுகின்றது. அது பலியிட ஏற்ற அப்பமாக சாட்சியிடப்படுகின்றது. காலாவதியான அப்பம் ஒரு ஆத்துமாவை மரணத்திற்குள்ளாக்கும். காலாவதியான அப்பம் எது என்பதை கர்த்தர் வெளிப்படுத்தினாலொழிய நம்மால் அறிய இயலாது. அதுபோல பாழாக்குகின்ற அருவருப்பையும் கர்த்தரின் பட்சத்தில் இருப்பவர்களால் மட்டுமே அறிய முடியும். கர்த்தரது அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் பட்சத்தில் இருந்தபோதுதான், அருவருப்பான எருசலேமின் பிரமாணத்தைக் கண்டார்கள். தேவாலயம் என்பது கர்த்தரை தொழுதுகொள்ளும் பொருட்டு கர்த்தரால் பரிசுத்தமாக்கப்பட்ட ஸ்தலமாக இருந்தது. அதுபோல கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட சபைகளும் அவரை வெளிப்படுத்தும்பொருட்டு தெரிந்தெடுக்கப்பட்ட ஐக்கியமாகவே இருந்தது. காலம் நிறைவடைந்தபோது மாமிசத்தில் வெளிப்பட்ட வார்த்தையினை தேவாலயம் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, கர்த்தரது சமூகத்தை விட்டு தள்ளப்பட்டது. அதேபோலொத்த ஒரு நிலையே சபைக்குள்ளாகவும் நிகழும். அந்த நிகழ்வினை "வார்த்தை" என்ற நாமம் சாட்சியிடும். அந்த நாமமானது கர்த்தரது சாட்சிகள் மூலம் சாட்சியிடப்படும். ஜீவனுள்ள தேவனானவர் அந்த சாட்சியை அங்கீகரிப்பார். ஆனால், அந்த சாட்சிகளுக்கு எதிராக சபை விசுவாசிகளும் கள்ளதீர்க்கதரிசகளும் எழும்புவார்கள்.

மாற்கு 13: 22-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்."

    தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதான கிரியையினை செய்பவன் பிசாசு என்று கூறப்பட்டுள்ளது. வார்த்தைக்கு எதிரான கிரியையை செய்யும் இந்தப் பிசாசோடு கள்ளத்தீர்க்கதரிசிகளும், கள்ளக்கிறிஸ்துக்களும் ஒன்று சேர்வார்கள். ஒன்று சேர்ந்து அவர்கள் வார்த்தைக்கு எதிரான கிரியைகளைச் செய்வார்கள். அனுப்பப்படும் கர்த்தரது வார்த்தையே கிறிஸ்து. அந்த வார்த்தைக்கு எதிரான கிரியை செய்பவன் அந்திக்கிறிஸ்து.

    வார்த்தைக்கு எதிராக கிரியை செய்யும் அந்திக் கிறிஸ்துக்களையும் கள்ளத்தீர்க்கதரிசிகளையும் நாம் எப்படி அடையாளம் காணமுடியும்? தங்க நகையினையும், தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகையினையும் நகை மதிப்பீட்டாளர்கள் கண்டறிவார்கள். அவர்கள் அதிலே பயிற்சி பெற்றவர்கள். எனவே அவர்கள் தங்க நகை இன்னது என்றும், கவரிங் நகை இன்னது என்றும் அறிந்துகொள்வார்கள். தங்கத்தின் தன்மையினை அடையாளம் காண இயலாதவர்களால் கவரிங் நகை எது என்பதை அடையாளம் காண இயலாது. தங்கம் பற்றி அறியாதவர்களால், கவரிங் நகைகளை அடையாளம் காண இயலாது. அதுபோல பரிசுத்தம் எது என்பதை அறிந்தவர்களால் மட்டுமே, பரிசுத்தம் இல்லாதது எது என்பதை அடையாளம் காண இயலும். சத்தியம் இன்னதென்று அறிந்தவர்காளால் மாத்திரமே, பாவம் இன்னதென்று அடையாளம் காண இயலும்.

    தெரிந்துகொள்ளப்பட்டவர்களே சத்தியத்தினை அறிந்து கொள்வார்கள். அனுப்பப்பட்டவரோடு இணைந்துகொள்ள கிருபை பெற்றவர்களே கர்த்தரது நாமம் இன்னதென்று அறிந்துகொள்வார்கள். "கர்த்தராகிய இயேசுகிறிஸ்து" பிதாவினால் அனுப்பப்பட்ட வார்த்தையாகும். பிதாவினால் அனுப்பப்பட்டவர்கள் பிதாவுக்குரியவைகளைக் குறித்து சாட்சியிட்டார்கள். வார்த்தையைப் பற்றிக்கொண்டவர்கள் அப்போஸ்தலரோடு இணைக்கப்பட்டார்கள். வார்த்தையை எதிர்த்து நிற்பவர்கள் நீதிக்குரிய கூடாரங்களில் தங்குவதில்லை. இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகையின்போது எடுத்துக்கொள்ளப்படப்போகும் கிறிஸ்தவர்கள் எத்தகைய தன்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று வேதம் சாட்சியிட்டுள்ளதைப் பார்ப்போம்.

வெளி. 20: 4-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிதுவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்."

  1. மிருகத்தின் முத்திரையினைத் தரிக்காதவர்களாக இருக்க வேண்டும். மற்றொன்று,
  2. அவர்கள் இரத்த சாட்சியாக மரிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.

    இந்த இரண்டு தன்மையிலான கிறிஸ்தவர்களே இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட கிருபை பெற்றவர்களாகவும், நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள தகுதியுள்ள ஜனமாகவும் முன் அறிவிக்கப்பட்டுள்ளது. மிருகத்தின் முத்திரையினைத் தரிக்காதவர்களாய் வாழ்வது எப்படியான ஒரு கடினமான காரியமாக இருக்குமென்றால், அது இரத்த சாட்சியாக மரிப்பதற்கு ஒத்த தன்மை கொண்டதாக இருக்கும் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. மிருகத்தின்மேல் அமர்ந்திருக்கின்ற ஸ்திரீயாக பாபிலோன் என்ற இந்த சபைகள் சாட்சியிடப்பட்டுள்ளது. கர்த்தரின் இரகசிய வருகைக்கு முன்னதாக மிருகத்தின் ஆளுமையானது சபைகளில் மேலோங்கி இருக்கும். பாழாக்குகின்ற இந்த அருவருப்பினை கிருபை பெற்றவர்கள் அடையாளம் காண்பார்கள். பாபிலோனை விட்டு வெளியேறி அதற்கு எதிரேயுள்ள சீயோன் மலையண்டையில் ஒன்றுசேருபவர்கள் பாழாக்குகிறவனை அடையாளம் காண்பார்கள். இதுவே சத்தியம்.

    சத்தியம் சாட்சியிடப்படும் எல்லா காலங்களிலும் "வார்த்தை" மறுநாமமிடப்பட்டதாக தன்னை வெளிப்படுத்தி வந்துள்ளது.

யோவா. 1: 1, 4, 14 ஆகிய வசனங்களில் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

    அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.

    அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது."

    "அந்த வார்த்தையில் ஜீவன் இருந்தது" என்று இங்கே சாட்சியிடப்பட்டுள்ளது. வார்த்தையிலிருந்த அந்த ஜீவன் கிரியைகளைச் செய்தது. அந்தக் கிரியைகள் நாமங்களாக சாட்சியிடப்பட்டுள்ளது.

    அந்த வார்த்தை மாமிசமானபோது, புதிய உடன்படிக்கை சாட்சியிடப்பட்டது. அது புதிய ஏற்பாடு. மாமிசமான அந்த வார்த்தைக்குக் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற நாமமிடப்பட்டது. அந்த நாமமே பின்னர் பிதாவின் நாமமாய் உயர்த்தப்பட்டது. அந்த வார்த்தையில் இருந்த ஜீவன், உயர்த்தப்பட்ட அவரின் நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளையாக மாறிட அதிகாரம் பெற்றுக்கொடுத்தது. பிதாவின் நாமமாய் உயர்த்தப்பட்ட கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் நாமத்தில் விசுவாசம் வைத்த புறஜாதிகள் தங்களுக்குள் ஜீவனைப் பெற்றுக்கொண்டார்கள். அது அவர்களுக்குள் உருவான ஆத்துமா. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற நாமத்தில் விசுவாசம் வைக்கக்கூடிய புறஜாதிகள் யாவரும் அவருடைய பிள்ளைகளாக மாறினார்கள். அதன்பின்னர் அவரது அந்தப் பிள்ளைகள் கடைப்பிடிக்க ஒரு பிரமாணம் அனுப்பப்பட்டது. அந்தப் பிரமாணத்தின்மீது விசுவாசம் கொண்டவர்கள் நித்திய ஜீவனைச் சுதந்தரிக்க கிருபை பெற்றவர்களானார்கள்.

    கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற நாமத்தில் விசுவாசம் கொண்டதால் நாம் ஜீவனைப் பெற்றோம். அந்த ஜீவன் அவரது நாமத்தில் இருந்தது. அது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற வார்த்தையில் இருந்தது. அது நமக்குள் ஆவியின் சரீரம் என்ற ஜீவனைக் கொடுத்திருக்கின்றது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற நாமம் உயர்த்தப்படாதிருந்தால், நாம் ஆவியின் சரீரமான ஆத்துமாவைப் பெற்றிருக்க இயலாது. நாம் வெறும் மாமிச பிண்டங்களாகவே இருந்திருப்போம். ஒரு ஆடு, ஒரு மாடு, ஒரு எறுமை, ஒரு பன்றி, ஒரு நாய், இவைகளெல்லாம் எப்படியாக ஜீவிக்கின்றதோ, அதே நிலையிலேயே நாமும் இருந்திருப்போம். ஆத்துமா என்ற இந்தக் கிருபை அவர் நாமத்தின் மூலம் புறஜாதிகளாகிய நமக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆத்துமா இரு தன்மை கொண்டதாகப் பிரிக்கப்படுகின்றது.

  1. நித்திய ஜீவனுக்குரியது
  2. நித்திய ஆக்கினைக்குரியது

    ஆத்துமா என்ற ஜீவன் நற்கிரியைகளில் பூரணப்படும்போது அது நித்திய ஜீவனுக்குரியதாக மாறுகிறது. எது நற்கிரியை என்பதனை சத்தியம் சாட்சியிடுகின்றது. சத்தியம் நம்மை ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து விடுவிக்கின்றது. பாவம் ஆக்கினைக்கு உட்படுத்துகின்றது. பாவமானது சத்தியத்தினை அறிவதின்மூலம் நிவிர்த்தியாகி ஒரு ஆத்துமாவை காக்கின்றது. புறஜாதியாயிருந்த நாம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற நாமத்தின்மீது கொண்ட விசுவாசத்தால் கிறிஸ்தவர்களானோம். அதனால் நமக்குள் ஆத்துமா என்ற உள்ளான மனிதன் உருவாக கிருபை பெற்றோம். உள்ளான மனுஷனைப் பெற்றுக் கொண்ட கிறிஸ்தவர்களாகிய நாம் நித்திய ஜீவன் பெற்றிட சத்தியம் அனுப்பப்படுகின்றது. இந்த சத்தியமே பரிசுத்தம் இன்னதென்றும், பாவம் இன்னதென்றும் சாட்சியிடும். சத்தியத்தினை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ற கிரியை செய்பவன் நித்திய ஜீவனைச் சுதந்தரிப்பான். அவன் ஆக்கினையின்றி தனது ஆத்துமாவைக் காத்துக்கொள்வான். இந்த சத்தியமானது சுவிசேஷமாக அறிவிக்கப்பட வேண்டும். சுவிசேஷமானது பொதுவான சுவிசேஷம் என்றும், இராஜ்யத்தின் சுவிசேஷம் என்றும் இருபிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆத்துமா கொண்டவர்களை வேறுபிரிப்பதற்காகவே சத்தியம் சுவிசேஷமாக அறிவிக்கப்படுகின்றது. இந்த சத்தியமானது காலத்திற்குக் காலம் மாறுபட்டு வந்துள்ளது. யேகோவா என்ற நாமத்தில் சாட்சியிடப்பட்ட சத்தியம் நியாயப்பிரமாணமாகும். அது மோசேயின் மூலம் கொடுத்தனுப்பட்டது. மோசே ஒரு தூதனாக கர்த்தரால் அனுப்பப்பட்டவன்.

லேவி. 26: 46-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "கர்த்தர் தமக்கும் இஸ்ரவேல் சந்ததியாருக்கும் நடுவே இருக்கும்படி மோசேயைக்கொண்டு, சீனாய்மலையின்மேல் கொடுத்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே."

    கர்த்தர் தமக்கும் இஸ்ரவேல் சந்ததியாருக்கும் நடுவாக நின்று சாட்சியிடும் பாத்திரமாக மோசேயைத் தெரிந்தெடுத்தார். ஆதாமோடு கர்த்தர் உலாவி வந்தார் என்று பார்க்கின்றோம்; மேலும் நோவாவோடு அவர் பேசினார்; ஆபிரகாமோடு பேசினார்; ஈசாக்கோடு பேசினார்; யாக்கோபோடு பேசினார். அதற்குப்பின்னர், ஒரு இடைவெளி. அது இருண்ட காலம் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. அதன்பின்னர் எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் வெளிக்கொணரப்பட்டார்கள். இந்த ஜனங்களை வழிநடத்த மோசே என்ற தூதன் அனுப்பப்பட்டான். நியாயப்பிரமாணம் அவனிடத்தில் கொடுத்தனுப்பப்பட்டது.

எண். 9: 9, 10-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "கர்த்தர் மோசேயை நோக்கி:

    நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களிலாகிலும் உங்கள் சந்ததியாரிலாகிலும் ஒருவன் பிரேதத்தினால் தீட்டுப்பட்டாலும், பிரயாணமாய்த் தூரம்போயிருந்தாலும், கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டும்."

    கர்த்தர் மோசேயினை அழைத்து, நீ இஸ்ரவேல் புத்திரரோடு இவை இவைகளைக் கூறவேண்டும் என்று கட்டளையிட்டார்.

எண். 8: 1, 2-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "கர்த்தர் மோசேயை நோக்கி:

    நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு விளக்குகளும் விளக்குத்தண்டிற்கு நேரே எரியவேண்டும் என்று சொல் என்றார்."

    அவன் பெற்றுக்கொண்ட பிரமாணங்களை தொடர்ந்து கொண்டு செல்ல லேவியரில் ஆரோன் குடும்பத்தைத் தெரிந்தெடுத்தார். ஆசாரியன் பிரமாணங்களைச் சாட்சியிட நியமிக்கப்பட்டான்.

    கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவினால் உண்டானது என்று சாட்சியிடப்பட்டுள்ளதைப் பார்க்கின்றோம். மோசேயின் மூலமாகக் கொடுக்கப்பட்ட பிரமாணம் இஸ்ரவேலர்களுக்குள்ளாகக் கட்டளையிடப்பட்ட பிரமாணமாகும். கிருபையும் சத்தியமுமான பிரமாணம் புறஜாதிகளாகிய நமக்கு கட்டளையிடப்பட்ட பிரமாணமாகும். இயேசுகிறிஸ்து அனுப்பப்படாதிருந்தால், புறஜாதிகளாகிய நமக்கு ஆவியின் சரீரம் என்ற கிருபை கிடைத்திருக்காது. ஆத்துமா என்ற கிருபையினைப் பெற்றுக்கொண்ட புறஜாதிகளாகிய நாமும் அவரது சொந்த ஜனங்களாக மாறியிருக்கின்றோம். இஸ்ரவேலர்களுக்குள் நித்திய ஜீவனுக்குரியவர்களை வேறுபிரிக்க அனுப்பப்பட்ட வார்த்தை நியாயப்பிரமாணமாகும். அந்த நியாயப்பிரமாணமே அன்றைக்குரிய சத்தியமாகச் சாட்சியிடப்பட்டுள்ளது.

    பிரமாணத்தினைக் கொண்டுசெல்ல மோசே தெரிந்தெடுக்கப்பட்டான். மோசே என்ற மாமிச சரீரம் தெரிந்தெடுக்கப்பட்டது. அந்த சரீரத்திற்குள்ளாக ஒரு தூதனின் ஆவியும் நிழலிட்டது. அது இஸ்ரவேல் ஜனங்களுக்காக கர்த்தரது சமுகத்தில் நின்றது. இஸ்ரவேலர்கள் கர்த்தரது சமூகத்தில் இணைக்கப்படுவதற்காக நியாயப்பிரமாணம் என்ற ஒரு இணைப்பு கட்டளையிடப்பட்டிருந்தது. இயேசுகிறிஸ்து மாமிசத்தில் வெளிப்படும் காலம்வரையிலும் இஸ்ரவேலர்கள் மோசேயின் பிரமாணத்தினைப் பற்றிக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் அந்த ஜனங்கள் நியாயப்பிரமாண பக்தர்களாகி, அந்த நியாயப்பிரமாணத்தினைக் கட்டளையிட்ட கர்த்தரை மறந்து மறுதலித்தவர்களானார்கள். நாங்கள் மோசேயினுடைய பிள்ளைகள்; நாங்கள் ஆபிரகாமுடைய சந்ததியார் என்று மாமிசத்திற்குரிய மகிமையினைக் கொண்டவர்களாகக் காணப்பட்டார்கள். அதேபோலொத்த ஒரு நிலை கிறிஸ்தவர்களுக்குள்ளாகவும் ஏற்படும். நாங்கள் இந்தப் பிரிவு சபையைச் சார்ந்தவர்கள் என்று சபைகளைப் பற்றிக்கொண்டவர்களாக, அந்த சபைக்குத் தலையாகிய கிறிஸ்துவை மறுதலிக்கக்கூடிய ஒரு நிலை எழும்பும். வார்த்தையை மறுதலிக்கக்கூடிய சிந்தை கொண்டவர்களாகவே கிறிஸ்தவர்கள் காணப்படுவார்கள். இயேசு மாமிசத்தில் இருந்தபோது, அவரது சீஷர்களில் தெரிந்துகொள்ளப்பட்டவர்களே அவரைக் கிறிஸ்து என்று சாட்சியிட்டார்கள்.

    திரளான கூட்டத்தின் மத்தியில் கர்த்தர் தமது நாமத்தினையோ, பிரமாணத்தினையோ சாட்சியிடுவதில்லை. தான் தெரிந்துகொண்ட ஒரு மாமிச சரீரத்தின் மூலமாகவே தன்னைக் குறித்த சத்தியத்தினை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

    இஸ்ரவேலர்களுக்கு நியாயப்பிரமாணம் என்ற இணைப்பின் மூலம் அவரோடு இணைய கிருபை கொடுக்கப்பட்டதுபோல, புதிய ஏற்பாட்டுக் காலத்தில் கிறிஸ்தவர்களுக்குள்ளும் ஒரு இணைப்பை (Link) உருவாக்கியுள்ளார். அது கிறிஸ்தவர்களுக்குள்ளாக அனுப்பப்படும் ஏழு சபைத்தூதர்கள் மூலம் கொடுத்தனுப்பப்பட்ட சபைப் பிரமாணமாகும்.

வெளி. 1: 4-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்குமுன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,"

    இந்தத் தீர்க்கதரிசனங்கள் யாவும் ஏழு சபைகளுக்கென்று முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களாகும். அது நிறைவேறும் காலத்தில் சபைப்பிரமாணமாக தூதர்கள் மூலமாகக் கொடுத்தனுப்பப்பட்டது.

வெளி. 2: 1-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன்குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;"

    ஏழு சபைக்குரிய பிரமாணங்களும் ஏழு சபையின் தூதர்கள் மூலமாகவே வெளிப்படுத்தப்பட்டது. அவைகள் சுவிசேஷமாக சாட்சியிடப்பட்டது. இவையே சபைக்காலங்களுக்கென்று கொடுக்கப்பட்ட சத்தியமாகும். இவைகள் ஏழு சபை விசுவாசிகளுக்கும் கர்த்தரோடு இணையும் ஒரு இணைப்பாக சாட்சியிடப்பட்டுள்ளது. எபேசு சபைக்கென்று ஒரு தூதன் அனுப்பப்பட்டதுபோல ஒவ்வொரு சபைக்கும் ஒரு தூதன் அனுப்பப்பட்டான். அவனே அந்த சபைக்கென்று கட்டளையிடப்பட்ட பிரமாணத்தைக் கொண்டு சபையையும் கிறிஸ்துவையும் இணைக்கின்ற இணைப்பாகச் சாட்சியிடப்பட்டான்.

வெளி. 2:8-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது;"

    சிமிர்னா சபையின் தூதன் மூலமாக அந்த சபைக் காலத்திற்குரிய சத்தியம் சாட்சியிடப்பட்டது. அந்த சத்தியம் விசுவாசிகளைக் கர்த்தரோடு இணைக்கும் ஒரு இணைப்பாக செயல்பட்டது. கிறிஸ்தவர்களில் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் இந்த இணைப்பினுக்குள்ளாகி கர்த்தருடைய இராஜ்ஜியத்திற்கு உரியவர்களானார்கள். இந்த இணைப்பின் மூலம் கடவாதவன், நித்திய ஜீவனைச் சுதந்தரிக்க கிருபை இழந்தவனானான். அது மரணத்திற்குள்ளாகத் தீர்க்கப்படுவதாகும். இது சிமிர்னா சபை தூதன் மூலம் கொடுத்தனுப்பப்பட்ட பிரமாணம். அது அந்த சபைக்காலத்திற்கென்று கட்டளையிடப்பட்ட கிறிஸ்துவின் பிரமாணமாகும்.

    அடுத்து பெர்கமு சபை தூதன் மூலம் கொடுக்கப்பட்ட இணைப்பின் பிரமாணம்.

வெளி. 2: 12-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது;"

    அடுத்து தியத்தீரா சபை தூதன் மூலம் கொடுத்தனுப்பட்ட பிரமாணம்.

வெளி. 2: 18-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜூவாலைபோன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;"

    அடுத்து சர்தை சபை தூதன் மூலம் கொடுத்தனுப்பப்பட்ட பிரமாணம்.

வெளி. 3: 1-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனிள்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்."

    ஐந்தாம் சபைக்கென்று கர்த்தரது கரத்திலிருந்து அனுப்பப்பட்ட தூதன் இறங்கி கிரியை செய்த மாமிச சரீரம் மார்ட்டின் லூதர் என்ற சரீரமாகும். அந்த தூதனுக்குள் அவர் எழும்பி பிரகாசிக்கின்றவராய் பிரமாணத்திற்குச் சாட்சியிட்டார். அந்தப் பிரமாணத்தைக் கொண்டு பிரிந்த அந்த சபை மார்ட்டீன் லூதர் மூலம் உரைக்கப்பட்ட வார்த்தையினை சத்தியமாக ஏற்றுக்கொண்டது.

    அடுத்து பிலதெல்பியா சபை தூதன் மூலம் கொடுத்தனுப்பப்பட்ட பிரமாணம்.

வெளி. 3: 7-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது;"

    அடுத்து லவோதிக்கேயா சபை தூதன் மூலம் கொடுத்தனுப்பப்பட்ட கடைசி சபைக்கால பிரமாணம். இந்த சபையோடு ஏழு சபைக்காலங்களும் நிறைவடைந்துள்ளது.

வெளி. 3: 14-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;"

    சகோ. வில்லியம் பிரன்காம் ஏழாம் சபைக்குரிய தூதனின் ஆவியை தன்னகத்தே ஏற்றுக்கொண்ட மாமிச சரீரமாகும். ஏழு சபைக்காலங்களைக் குறித்து அவர்மூலமாகவே சாட்சியிடப்பட்டது. மேலும் சபைக்காலங்களுக்குப் பின்னர் எவைகள் நிகழப்போகிறது என்பதைக் குறித்து சில வெளிப்பாடுகளையும் அவர் முன் அறிவித்துள்ளார்.

    ஏழு சபைக்காலங்களைக் குறித்து அப்போஸ்தலனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்ட பின்னர், எவை எவைகள் நிகழ வேண்டும் எனவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

வெளி. 4: 1-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது."

    அப்போஸ்தலனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்டு அவன் அறிவித்தவைகள் தீர்க்கதரிசனங்களாகும். இந்த தீர்க்கதரிசனமானது அவர் ஆவிக்குள்ளாக்கப்பட்ட பின்னரே அவருக்கு வெளிப்படுத்தப்பட்டது. அதுபோன்று ஆவிக்குள்ளான ஒரு நிலை ஏற்படும்போதுதான் இந்த தீர்க்கதரிசனத்தில் உரைக்கப்பட்டதின் பொருளை அறிந்து கொள்ள இயலும். ஏழு சபைக்காலங்களும் நிறைவடைந்த பின்னர், அப்போஸ்தலாகிய யோவான் எந்த ஆவிக்குள்ளானவனாக இருந்தானோ, அதே தன்மையிலான ஆவிக்குள்ளாகி சபைக்காலங்கள் நிறைவடைந்தது குறித்து அறிவிக்கப்படும். ஆவிக்குரியவர்கள் அதனை அறிந்துகொள்வார்கள். சபைக்காலங்கள் நிறைவடைந்தபின்னர், கடைசி ஏற்பாட்டின் காலம் ஆரம்பமாகும். இந்த கடைசி ஏற்பாட்டின் காலத்தில் சம்பவிக்கப்போவதைக் குறித்து அறிய வேண்டுமானால் நாமும் ஆவிக்குள்ளாக வேண்டும்.

    கர்த்தர் ஒரு இணைப்பினை உருவாக்கியே தனது ஜனத்தோடு அசைவாடி வந்துள்ளார். ஏழு சபைகளுக்குள்ளும் அந்த இணைப்பு சாட்சியிடப்பட்டது. மோசேயின் மூலம் கொடுக்கப்பட்ட இணைப்பினுக்குள் உட்படாதவர்களாய் தாத்தான், அபிராம், கோராகு கூட்டத்தார் செயல்பட்டதுபோல, ஒவ்வொரு இணைப்பின் காலங்களிலும் நிறைவேறி வந்துள்ளது. மோசேக்கு எதிராக இவர்கள் நின்றதுபோலவே ஏழு சபைக்காலங்களிலும் அனுப்பப்பட்ட தூதர்களுக்கு எதிர்த்து ஒரு கூட்டம் செயல்பட்டு வந்துள்ளது. அதேபோலொத்த ஒரு நிகழ்வு கடைசி ஏற்பாட்டின் காலத்திலும் நிகழும். சபைகளின் கட்டுகளின்று விடுதலையாகி ஆவிக்குள்ளாக முன் குறிக்கப்பட்டவர்கள் மணவாட்டியாய் அலங்கரிக்கப்படுவார்கள். இந்த சத்தியம் சாட்சியிடப்பட வேண்டும். அலங்கரிக்கப்பட்ட இந்த மணவாட்டியே கர்த்தரின் இரகசிய வருகையில் எடுத்துக் கொள்ளப்படுவாள். ஆவிக்குள்ளான இந்த மணவாட்டி பாபிலோனின் அருவருப்புகளை அடையாளம் காண்பாள். சபைகள் அப்போது மாமிச நன்மையினை பெற்றுக்கொள்ளக்கூடிய போதனையினையே தனது விசுவாசிகளுக்குப் போதிக்கும். சத்தியத்தினை சபைகள் ஏற்றுக்கொள்ளாது. அது தனது விசுவாசிகளையும் சத்தியத்திற்கு எதிரான பாதையிலேயே வழிநடத்தும். நிறைவடைந்த பிரமாணங்கள் என்ற கோலினால் தனது மந்தையை ஆக்கினைக்கு நேராக வழிநடத்துவதாகவே சபைகள் செயல்படும்.

    இப்போது நாம் ஜீவிக்கும் காலம் கடைசி எக்காளம் ஊதப்படும் காலமாகும். இந்த எக்காள சத்தத்திற்குப் பின்னர், புறஜாதிகள் மத்தியில் இந்த ஒளி பிரகாசிக்காது. அந்த ஒளியானது புறஜாதிகளுக்குள் அனுப்பப்படிருக்கும் ஜீவனாகும். இந்த ஜீவனானது நாம் கிருபையாய் பெற்றுக்கொண்டுள்ள ஆவியின் சரீரமேயாகும்.

வெளி. 10: 2-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலது பாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து,"

    திறக்கப்பட்ட நிலையில் ஒரு சிறுபுத்தகம் அந்த தூதனுடைய கையிலிருக்கின்றது; அதில் மறைக்கப்பட்டுள்ள தேவஇரகசியங்கள் எழுதப்பட்டிருக்கின்றது. புத்தகம் திறந்த நிலையில் இருப்பதால் அந்த தூதன் அந்தப் புத்தகத்தில் எழுதியிருந்ததை அறிந்திருந்தான். வார்த்தை சாட்சியிடுகிறது: அந்த தூதனே பின்னர் வந்து மறைக்கப்பட்ட அந்த இரகசியங்களை சாட்சியாக அறிவிப்பான்.

    யார் இந்தக் கிருபையினைப் பெற கிருபை பெற்றுள்ளார்களோ, அவர்கள் அந்த தூதனின் சாட்சியை ஏற்றுக்கொள்வார்கள். அந்த சாட்சியே கடைசி ஏற்பாட்டின் சத்தியமாகும். கிருபை பெற்றவர்கள் சத்தியத்திற்குச் செவிகொடுப்பார்கள்; அந்த சத்தியமானது கடைசி ஏற்பாட்டின் சுவிசேஷமாய் கிறிஸ்தவர்கள் மத்தியில் அறிவிக்கப்படும். தீர்ப்பிற்குரிய வார்த்தையான இந்த சத்தியமே சத்தமாய் சாட்சியிடப்படும். சாட்சியிடப்படும் அந்த சத்தமே கடைசி எக்காளமாகும். அதன்பின்னர் கர்த்தத்துவத்திற்குரிய தூதர்கள் கிறிஸ்தவர்களுக்குள்ளாக அனுப்பப்படுவதில்லை.

    அப்போஸ்தலனாகிய யோவான், தன்னிடம் அந்தத் தூதன் கூறிய யாவற்றையும் விசுவாசித்து எழுதி வைத்துள்ளான்.

வெளி. 1: 4-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்குமுன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,"

    இவைகளை எழுதும்போது அவன் பத்மூ தீவில் சிறைப்பட்டு இருந்தான். அங்கே ஆவிக்குள்ளாகி இவைகளை எழுதினான். தனக்கு வெளிப்படுத்தி கொடுத்த யாவற்றின்மீதும் அவருக்கு விசுவாசம் இருந்தது. இயேசுகிறிஸ்து அனுப்பி வைத்த தூதன் யோவானிடத்தில் இவைகளைக் கூறினான். அவர் அந்த தூதனையும், அவன் மூலம் கொடுத்தனுப்பப்பட்டதையும் விசுவாசித்தார். எனவே அதனை எழுதி வைத்தார். தான் மாமிச சரீரத்தில் குற்றவாளியாய் சிறைத்தண்டனை அனுபவித்த நிலையிலும் அவனிடம் விசுவாசம் காணப்பட்டது. அந்த விசுவாசம் அவனுக்குச் சாட்சியிடப்பட்ட வார்த்தையின்மீது இருந்தது.

    ஏழு சபைக்காலங்களிலும் அனுப்பப்பட்ட தூதர்களுடைய ஆவியை தன்னகத்தே ஏற்றுக்கொண்டவர்கள் அவைகளைச் சாட்சியிட்ட தூதர்களையும் ஏற்றுக்கொண்டார்கள். அந்த சாட்சி சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டது. அதனை கிருபை பெற்றவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் சாட்சிகளின் வார்த்தைகளை விசுவாசித்தார்கள். அவர்களுடைய ஆவி எழுப்பப்பட்டதால், அனுப்பப்பட்ட தூதர்களுடைய ஆவியை ஏற்றுக்கொண்டார்கள்; தூதன் மூலம் அனுப்பப்பட்ட வார்த்தையை ஏற்றுக்கொண்டார்கள். ஏற்றுக்கொண்டவர்கள் அதனை சுவிசேஷமாக அறிவித்தார்கள். அவர்கள் அறிவித்த சுவிசேஷத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் நித்திய ஜீவனுக்குரியவர்கள் ஆனார்கள். அவர்கள் சாட்சியிட்ட சுவிசேஷத்தினை முன்குறிக்கப்பட்டவர்களும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

    தாவீது கர்த்தரிடம் கிருபை பெற்றவன். தாவீதின்பொருட்டு சாலொமோனுக்கு ராஜ்யபாரம் கிடைத்தது. அவன் நாட்களிலே எருசலேம் தேவாலயம் எழுப்பப்பட்டது. ஆனால் சாலொமோனுடைய இருதயம் தாவீதின் இருதயத்தினைப் போல் கர்த்தரிடமாய் சார்ந்திருக்கவில்லை என்றே வேதம் சாட்சி கொடுக்கின்றது.

1 இரா. 11: 2, 4-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார்; சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கியமாயிருந்தான்.

    சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை."

    அந்நிய ஸ்திரீகளுடனான ஐக்கியம் சாலொமோனுடைய இருதயத்தினை வழுவிப்போகப் பண்ணியது. அவன் கர்த்தத்துவத்தினை மறுதலித்தவனாய் அந்நிய தேவர்களுக்குப் பலியிட்டான். உலக ஞானத்தைக் கேட்டுப் பெற்றுக்கொண்டவன் ஜீவனுக்குரியதாய் சாட்சியிடும் மெய் ஞானத்தை உணராமல் போனான். கர்த்தரை அறியக்கூடிய ஞானம் அவனிடத்தில் இல்லாதிருந்த நிலையில், அந்நிய தேவர்களை நாடிச் சென்றான். அவன் ஐக்கியம் வைத்திருந்த ஸ்திரீகள் அவனை உணர்வற்ற தன்மைக்குக் கொண்டு சென்றார்கள். அந்த ஸ்திரீகளோடு ஏற்பட்ட ஐக்கியத்தினால் நித்திய ஜீவனை அவன் இழந்துபோனான். விசுவாசத்தின் மூலம் நாமும் தாவீதின் பிள்ளைகளாகின்றோம். கிறிஸ்தவர்களாகிய நாம் யூதா கோத்திரமாகின்றோம்.

    சாலொமோனை வழிவிலகச் செய்ததுபோல, சபை என்ற அந்த ஸ்திரீயினுடனான ஐக்கியம் கடைசி காலத்தில் ஒரு ஆத்துமாவை சத்தியத்தின் பாதையினின்று வழிவிலகச் செய்யும். சத்தியத்தினை ஏற்றுக்கொள்ளவிடாது சபைகள் தனது போதங்களைக் கொடுக்கும். ஜீவ மார்க்கத்திலிருந்து வழி விலகிப்போகக்கூடிய கிரியைகளைச் சபைகள் செய்வதால் அதனைப் பாபிலோன் என்று வேதம் சாட்சியிடுகின்றது. கடைசி ஏற்பாட்டில் அவளது கிரியைகள் அடையாளம் காட்டப்படும். கர்த்தத்துவத்திற்குள்ளாக மாறுபாடான கிரியைகளை ஏற்படுத்துவதால், அவள் வேசி என்று சாட்சியிடப்படுகின்றாள். அவளை வேசி என்று அடையாளம் காட்டிட கர்த்தர் தமது வார்த்தையினை அனுப்புவார். அந்த வார்த்தையினை ஏற்றுக்கொள்பவர்கள் நித்திய ஜீவனைச் சுதந்தரிக்கக்கூடிய கிருபையினைப் பெற்றுக்கொள்வார்கள்.

கர்த்தர்தாமே நமக்கும் அத்தகைய கிருபையினைக் கட்டளையிடுவாராக !

ஆமென்!     ஆமென்!!     ஆமென்!!!

All Sermonsஅனைத்து பிரசங்கங்கள்