Sorry for the inconvience, Currently English version is not avalilable.
Switch to Tamil language
(அறிவிக்கப்பட்ட நாள்: 12.10.2014)
கிறிஸ்தவர்களாகிய நாம் யாவரும் குருத்தோலை ஞாயிறு அனுசரித்து வருகின்றோம். குருத்தோலைகளைக் கையில் பிடித்துக்கொண்டு, கர்த்தர் தாவீதின் குமாரனாய் வலம் வந்ததை நினைவுகூரத்தக்கதாய் இது அனுசரிக்கப்பட்டு வருகின்றது. கர்த்தருடைய நாமத்தினால் வந்திருப்பவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக என்று கூறி அவருக்கு முன்பாக ஓசன்னா, ஓசன்னா என்று கூறினார்கள். இன்று குருத்தோலைகளைப் பிடிக்கின்ற கிறிஸ்தவர்களாகிய நாம் தாவீதின் சிம்மாசனத்தில் வீற்றிருப்பவர் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்று ஏற்றுக்கொள்கின்றோம். அவருக்கு ஓசன்னா என்று குருத்தோலைகளைப் பிடித்துச் சாட்சியிடுகின்றோம். குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு வருகின்ற நாம் யாவரும், இயேசுகிறிஸ்து மாமிசத்தில் இருந்தபோது, முன்நடப்பாரும் பின்நடப்பாரும் ஓசன்னா, ஓசன்னா என்று கூறிக்கொண்டு சென்றபோது நாம் அவர்களோடே கூட இருந்திருப்போமா? இப்போது வேண்டுமானால் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு செல்கின்ற நாம் யாவரும், ஆம் அவருடனேகூட இருந்திருப்போம் என்றே கூறுவோம். யாரும் அதற்கு மறுத்துக் கூறமாட்டோம். நாம் எந்த சபையினைச் சார்ந்த விசுவாசிகளாக இருந்தாலும் இதனை அங்கீகரிப்போம்.
அப்படிக் கூறுபவர்களாகிய நாம், இயேசுகிறிஸ்து அன்று தீர்க்கதரிசனமாய் சாட்சியிட்டதுபோல இன்று நடப்பவைகளை ஏற்றுக்கொள்பவர்களாக இருப்போமா? இயேசுகிறிஸ்து யூதர்களிடம், "யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? (லூக். 20: 4) என்று கேட்டார். மேலும் யோவான் தீர்க்கதரிசியா, இல்லையா? என்று கேட்டபோது, அவர்கள், "எங்களுக்குத் தெரியாது" என்றனர். காரணம், ஜனங்களெல்லாம் யோவானைத் தீர்க்கதரிசி என்று ஏற்றுக்கொண்டிருந்தார்கள். எனவேதான் அவர்கள் அதுகுறித்து தங்களுக்குத் தெரியாது என்றார்கள். யோவானைத் தீர்க்கதரிசி என்று ஏற்றுக்கொண்ட யூதர்கள், அவர் கூறிய தீர்கக்தரிசனத்தினை ஏற்றுக்கொண்டார்களா? அவர் கோடாரியானது மரத்தின் கீழே வைக்கப்பட்டுள்ளது; கனி கொடாத மரமெல்லாம் வெட்டப்படப் போகின்றது; இஸ்ரவேலே, நீ வெட்டப்படப் போகின்றாய். நீ அனுப்பப்பட்ட இவரை ஏற்றுக்கொள்ளவேண்டும்; இவர்தான் ஆட்டுக்குட்டியானவர்; இவரை ஏற்றுக்கொண்டால், வரும் கோபாக்கினையினின்று நீ தப்புவிக்கப்படுவாய் என்று கூறினார். யோவான் கூறிய யாவற்றையும் விசுவாசித்தவர்கள் அவன் சாட்சியிட்ட கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்றுக்கொண்டிருந்தால், அவரை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்திருக்கமாட்டார்கள். எருசலேம் நகரத்தார் அவனிடம் வந்து ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்கள் என்றே வேதம் கூறுகின்றது. ஆனால் இந்த நிகழ்வுகள் எவரைக் குறித்து சாட்சியிட வேண்டும் என்று அனுப்பப்பட்டதோ, அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
பாவநிவிர்த்திக்கென்று நியாயப்பிரமாணத்தின்படி காளையினையோ, ஆட்டுக்குட்டியினையோ பலியிட வேண்டும். ஆனால், யோவான்ஸ்நானன் நியாயப்பிரமாணம் சாட்சியிடும் பலியின்படி இல்லாமல் உங்கள் பாவங்கள் நீங்க, யூதேயா தேசத்தாரே, எருசலேம் நகரத்தாரே, நீங்கள் வந்து யோர்தானில் முழுகி எழுங்கள்; உங்கள் பாவங்கள் நிவிர்த்தியாகும் என்றான். இந்த ஸ்நானத்தினை தவிர அவர்கள் வேறொன்றும் செய்ய தேவையில்லை என்று அவன் சாட்சியிட்டான். ஞானஸ்நானம் பெறுவதற்கு அவன் காணிக்கைகளையோ, தசமபாகங்களையோ வாங்கவில்லை. அவன் நியாயப்பிரமாணத்தினை நிறைவேற்ற வந்தவருக்கு வழியினை ஆயத்தப்படுத்த வந்தான். கர்த்தர் தன்னை ஞானஸ்நானம் என்ற இந்தப் புதிய முறைமையை செய்யும்படி அனுப்பி வைத்தார் என்று அறிக்கையிட்டான். அவனைக் குறித்து வேதம் சாட்சி கொடுக்கின்றது "தேவனால் அனுப்பப்பட்ட மனுஷன்" என்று. அவன் கிறிஸ்துவை அடையாளம் காட்ட அனுப்பிவைக்கப்பட்டவன். எனக்குப் பின் ஒருவர் வருகின்றார். அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரன் அல்ல என்று அவன் சாட்சியிட்டான். எனக்குப் பின் வருபவர் அக்கினியினால் ஞானஸ்நானம் கொடுப்பார் என்றான். யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டதுபோல இயேசுகிறிஸ்துவிடமும் அநேகர் ஞானஸ்நானம் பெற்றார்கள். அவரிடம் ஞானஸ்நானம் பெற்ற யாவரும் இயேசுவைக் கிறிஸ்து என்று ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் கட்டளையிட்ட கிரியைகளைச் செய்யவில்லை. காரணம், அவர்களிடம் ஜீவனுக்கேதுவான விசுவாசம் இல்லை. எனவே அவர்கள் அவரைப் பின்பற்றவில்லை. அப்போஸ்தலனாகிய பவுல் விசுவாசத்தினைக் குறித்து சாட்சியிட்டுள்ளான்.
அப். 26: 27-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா? விசுவாசிக்கிறீர் என்று அறிவேன் என்றான்."
தீர்க்கதரிசிகளை நாம் யாவரும் விசுவாசிக்கின்றோம். ஆனால் அந்த தீர்க்கதரிசனம் நிறைவேறும்போது அதனை ஏற்றுக்கொண்டு அதன்மீது விசுவாசம் வைப்பவர்களாக காணப்படுவோமா? சற்று சிந்தியுங்கள். விசுவாசமே ஒரு ஆத்துமாவை நித்திய ஜீவனை சுதந்தரிக்கச் செய்யும். தீர்க்கதரிசிகள் மூலமாக யூதேயாவில் உள்ள பெத்லகேமில் தாவீதின் குமாரன் பிறப்பார் என்று முன் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தீர்க்கதரிசிகள் மூலமாகக் கூறப்பட்ட வார்த்தையினை தீர்க்கதரிசனமாக யூதர்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள்; ஆனால், அது நிறைவேறும்போது அதற்கேற்ற கிரியைகளைச் செய்யவில்லை. யோவானைத் தீர்க்கதரிசி என்று விசுவாசித்தார்கள்; இவர்தான் மேசியா என்று அவன் கொடுத்த சாட்சியினை அவர்கள் அங்கீகரிக்கவில்லை.
இன்றைக்கு குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு செல்கின்ற நாம் யாவரும் நடைபெற்று முடிந்த ஒரு நிகழ்வுக்கு அடையாளமாய் இவைகளைச் செய்கின்றோம். ஆனால் இப்படி செய்வது ஜீவ்னுக்கேதுவாக அமையுமா? அன்றைக்கென கர்த்தர் சாட்சியிடும் வார்த்தைக்குரிய கிரியையே ஒரு ஆத்துமா நித்திய ஜீவனைப் பெற உதவும். எல்லாக் காலங்களிலும் இப்படி மாறுபாடான கிரியைகளையே செய்யக்கூடிய நிலையினை நாம் வேதத்தில் பார்க்கின்றோம்.
ஏசா. 8: 11-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடனே பேசி, நான் இந்த ஜனத்தின் வழியிலே நடவாதபடி எனக்குப் புத்திசொல்லி விளம்பினதாவது:"
இங்கே ஏசாயா தீர்க்கதரிசி "கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்து..." என்று சாட்சியிட்டுள்ளான். கர்த்தருடைய கரம் ஏசாயாமீது அமர்ந்தபின், கர்த்தர் ஏசாயாவோடு பேசினார். கர்த்தர் என்னுடனே பேசி, நான் இந்த ஜனத்தின் வழியிலே நடவாதபடி எனக்குப் புத்திசொல்லி விளம்பினதாவது என்று கூறப்பட்டிருக்கின்றது. கர்த்தருடைய கரம் ஏசாயாவின்மேல் வந்து அமர்ந்தது. அதனை இஸ்ரவேலர்கள் யாவரும் விசுவாசித்தார்கள்; இயேசுகிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்டபோது, எருசலேம் தேவாலய பக்தர்கள் ஏசாயாவை தீர்க்கதரிசியென்று விசுவாசித்தார்கள். எனவேதான் ஏசாயா தீர்க்கதரிசியினுடைய புத்தக சுருள் அந்தத் தேவாலயத்தில் வாசிக்கப்பட்டது. ஆனால் தீர்க்கதரிசனம் நிறைவேறியபோது எருசலேமியர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை. தீர்க்கதரிசிகள் மூலம் முன் அறிவிக்கப்பட்டவர் இவர்தான் என்று அவர்கள் அவரை அங்கீகரிக்கவில்லை. அவரது மாமிச சரீரம் மகிமை இல்லாத ஒரு சாதாரண பாத்திரமாக காணப்பட்டதால், அவர்கள் அவரை அங்கீகரிக்கவில்லை. ஆவியின் சரீரத்திற்குரிய ஜீவனைக் கொண்டுவந்த அந்த கிறிஸ்துவை அவர்கள் விசுவாசிக்கவில்லை. அதேபோலொத்த ஒரு நிகழ்வு கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கு முன்னதாகவும் நிகழும். கிறிஸ்தவர்களாகிய நாம் யாவரும் வேதாகமத்தினை விசுவாசிக்கின்றோம். அதில் எழுதியிருப்பதெல்லாம் சத்தியம் என்றும் விசுவாசிக்கின்றோம்; எனவே அதனை சத்திய புத்தகம் என்று சாட்சியிடுகின்றோம். ஆனால் தீர்க்கதரிசனமாக அதில் கூறப்பட்டவைகள் நிகழும்போது ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலை கொண்டவர்களாக எத்தனைபேர் இருக்கின்றோம்? நிறைவேறிக்கொண்டிருக்கும் தீர்க்கதரிசனங்களை விசுவாசிக்க இயலாதபடிக்கு பிசாசு தடை செய்கின்றான். அவன் காலங்களையும் பிரமாணங்களையும் மாற்றுவான் என்று வேதம் கூறுகின்றது.
இங்கே ஏசாயா தீர்க்கதரியின்மேல் கர்த்தருடைய கரம் வந்து அமர்ந்தது என்று கூறப்பட்டுள்ளது. கர்த்தருடைய கரம் ஏசாயா தீர்க்கதரிசியின்மேல் அமர்ந்தபோது, ஒரு புதிய காரியத்தினைக் குறித்து அது சொல்ல ஆரம்பித்தது. கர்த்தருடைய கரம் அமர்வதற்கு முன்பாக ஏசாயா கர்த்தரால் உரைக்கப்பட்ட அந்தக் காரியத்தில் புத்தியில்லாதவனாக இருந்தான். அதனால், கர்த்தர் அவனுக்கு அந்தப் புத்தியினைக் கொடுக்கின்றார். அவனுக்குள் உரைக்கப்பட்ட அந்த புத்தி, "நீ இந்த ஜனத்தின் வழியிலே நடவாதே" என்பதாகும்.
கிறிஸ்தவனாகப் பிறப்பதினாலும், அல்லது மாமிசத்தில் வெளிப்பட்ட அந்த வார்த்தையைக் குறித்து உலக ஞானத்தில் போதிக்கப்பட்டு முதுநிலை பட்டம் பெற்றிருந்தாலும், வார்த்தையின் இரகசியங்களைப் பற்றி அறிய ஒரு விசேஷித்த ஞானம், அதாவது புத்தி தேவைப்படுகின்றது. கற்று தேறினவர்களாய் அதன்மூலம் ஏற்படக்கூடிய ஞானத்தினால் முதுநிலை பட்டதாரியாகிட ஒரு ஞானம் அதாவது புத்தி தேவைப்படுகின்றது. புத்தியும் ஞானமும் இருந்தால்தான் போதிக்கப்படும் பாடத்தினில் தேர்ச்சி பெறமுடியும். இங்கே கர்த்தர் ஏசாயாவுக்கு ஒரு புத்தியை அருளினார். அது உலக ஞானத்தினைக் குறித்த புத்தி அல்ல. அது கர்த்தரைக் குறித்தும், கர்த்தத்துவத்தைக் குறித்தும் அறியக்கூடிய ஒரு புத்தியாகும்.
நீ இந்த ஜனத்தின் வழியில் நடவாதே என்று ஏசாயாவிடம் கர்த்தர் கூறியபோது, இஸ்ரவேலர்கள் கர்த்தர் விரும்புகின்ற வழியில் நடவாதவர்களாக இருந்தார்கள். எனவே அவர்களின் வழியில் நீ போகவேண்டாம் என்று ஏசாயாவிடம் கூறினார்.
கர்த்தருடைய கரம் ஏசாயா தீர்க்கதரிசியின்மேல் அமர்ந்தபோது, அங்கே ஒரு கட்டளை கொடுக்கப்பட்டது. கர்த்தருடைய கரம் என்பதற்கு பிரமாணம் என்றும் ஒரு பொருள்படும்.
உபா: 33: 2-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலது கரத்திலிருந்து புறப்பட்டது."
கர்த்தருடைய வலது கரத்திலிருந்து புறப்பட்ட அந்த அக்கினிமயமான கிரியைக்குள் பிரமாணம் சாட்சியிடப்பட்டது. ஏசாயாவின்மீது கர்த்தருடைய கரம் வந்து அமர்ந்ததுபோல, இங்கே ஒரு முன்நிகழ்வு, அப்போது ஒரு பிரமாணம் கட்டளையிடப்பட்டது. அது சீனாய் மலையிலிருந்து கர்த்தர் எழுந்தருளினபோது கொடுக்கப்பட்ட பிரமாணம்.
ஏசா. 8: 12, 13-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும்,
சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக."
இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்குள்ளாக இவையெல்லாம் கட்டுப்பாடு என்றும், இப்படித்தான் நடக்க வேண்டும் என்றும், இதுதான் கற்பனை என்றும், இதுதான் பிரமாணம் என்றும் கூறினால், அவர்கள் கூறுகின்றபடி நீ செயல்படாதே என்று ஏசாயாவிற்கு உரைக்கப்பட்டது. இது ஏசாயாவிற்குக் கொடுக்கப்பட்ட பிரமாணம். இஸ்ரவேல் ஜனங்கள் எவற்றைப் பிரமாணம் என்று கூறுகின்றார்களோ, அவற்றை நீ ஏற்றுக்கொள்ளாதே. அவர்கள் எதைக்கண்டு பயப்படுகின்றார்களோ, அதைக்கண்டு நீ பயப்படாதே; ஏசாயாவே, உன்மேல் கர்த்தராகிய எனது கரம் வந்து இறங்கியிருக்கின்றது; இந்தக் கரம் உனக்குள் கட்டளையிடும்படி நீ உன் கிரியைகளைச் செய் என்பதே அந்த கட்டளை. இது கர்த்தரது கரம் அவனுக்குள்ளாக உணர்த்திய புத்தி ஆகும்.
இஸ்ரவேல் ஜனங்கள் ஒருபுறமும், ஏசாயா மறுபுறமும் இருக்கின்றான். கர்த்தருடைய கரம் இங்கே ஏசாயாவை மற்ற ஜனத்திலிருந்து வேறுபிரிக்கின்றது. கர்த்தருடைய கரம் வந்து அமர்ந்தவுடன் ஏசாயா அந்த ஜனங்களின் கிரியையிலிருந்து மாறுபடுகின்றான். அவர்களைவிட்டு நான் எப்படி வெளியேறி வரமுடியும்? என்று அவன் மறுதலிக்கவில்லை. ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், சகரியா என அநேக தீர்க்கதரிசிகள் சாட்சியிட்டிருக்கிறார்கள். அவர்கள் கர்த்தரது வார்த்தைக்கு சாட்சியிட்டவர்கள். ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசி என்று வேதம் கூறுகின்றது. ஆபிரகாமின் குமாரரில் அவருக்கு அடுத்து ஈசாக்கும், அதனை அடுத்து யாக்கோபும் தெரிந்தெடுக்கப்பட்டார்கள். ஆபிரகாமுடைய குமாரன் ஈசாக்கு, ஈசாக்கினுடைய குமாரன் யாக்கோபு, யாக்கோபினுடைய குமாரர்கள் இஸ்ரவேலர்கள். இவர்கள் யாவரும் கிருபை கிடைக்கப்பெற்ற ஒரு குடும்ப நபர்கள். இந்தக் கிருபையானது ஆபிரகாமின் குடும்பத்திற்கு மாத்திரம் கட்டளையிடப்பட்டது. நம்முடைய கிரியைகளும் ஆபிரகாமைப் போல, ஈசாக்கினைப்போல, யாக்கோபினைப் போல இருக்குமேயானால் நாமும் அப்படியான கிருபை பெற்றவர்களாகின்றோம்; ஆபிரகாமின் குடும்பத்தாராகின்றோம்.
ஏசாயா தீர்க்கதரியின்மீது கர்த்தருடைய கரம் வந்து அமர்ந்தபோது, அவன் கர்த்தருடைய கரம் இறங்கினதை அப்படியே ஏற்றுக்கொண்டான். கர்த்தருடைய நுகத்தினை ஏற்றுக்கொண்டான். அந்த நுகம் அவரது கற்பனைகளாகும்; நுகத்தினை ஏற்றுக்கொண்டதால் கர்த்தர் அருளிச் செய்த அந்தப் புத்திக்குச் செவிசாய்த்தான். கர்த்தரது கட்டளைகளுக்கு செவிகொடாத மற்ற இஸ்ரவேலர் கூறுவதைக் கேட்காதே, அவர்களைவிட்டு நீ வெளியே வா என்ற கட்டளை கர்த்தரிடமிருந்து வந்தபோது, அவன் கர்த்தரைப் பற்றிக்கொண்டவனாய் வெளியேறி வந்தான். இந்த இருதயமே ஆபிரகாமுடைய இருதயம். ஆபிரகாம் கல்தேயர் தேசத்தில் குடியமர்ந்திருந்தான்; அந்த தேசத்தைவிட்டு வெளியேறி வா என்று கட்டளையிடப்பட்டதும், அதனைவிட்டு வெளியேறி வந்தான். யாரைப்பற்றியும் அவன் நினைக்கவில்லை; எதைப்பற்றியும் அவன் கவலைப்படவில்லை; இத்தகைய கிரியையே கர்த்தருடைய கரம் வந்து இறங்க கிருபை பெற்ற நிலையாகும். தன் கரத்தினை யார்மீது வைத்தால் அவர்கள் செவிகொடுப்பார்கள் என்பதை கர்த்தர் அறிவார். யூதாசைக் குறித்துப் பார்த்தோமானால்: அவன் அவரது பலத்த கரத்திற்குள் கட்டப்பட்டவனாக இல்லை.
கர்த்தருக்குள்ளாக கீழ்ப்படிந்து நடப்பவனே சீஷன். வார்த்தை என்ன கூறுகின்றதோ, அதை அப்படியே ஏற்றுக்கொண்டு பின்பற்றுகின்றவனே சீஷன். கட்டளையிடப்பட்டதை ஏற்றுக்கொள்ளாதவன் சீஷன் என்ற தன்மைக்குள் வரமாட்டான். தன்னைப் பின்பற்றிய சீஷர்களை அப்போஸ்தலர்கள் என்று கிறிஸ்து சாட்சிகொடுத்தார். அந்த சீஷர்களுக்குள்ளாகவே சாட்சி ஆகமம் வைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏசா. 8: 16-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"சாட்சி ஆகமத்தைக் கட்டி, என் சீஷருக்குள்ளே வேதத்தை முத்திரையிடு என்றார்."
இந்த தீர்க்கதரிசனமானது பின்னர் நடக்கப்போகின்றவைகளைக் குறித்து ஏசாயாவுக்கு வெளிப்படுத்தியது. இயேசுகிறிஸ்துவின் ஜனனம் மற்றும் அவரைக் குறித்த அநேக காரியங்கள் ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக முன் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்த்தருடைய கரம் யார்மீது அமருகின்றதோ, அவர்கள் மூலமாகவே "சாட்சி ஆகமம்" வெளிக்கொணரப்படும். யார் கர்த்தரது வார்த்தையினை அவர் அருளினபடியாக ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ற கிரியைகளைச் செய்கின்றார்களோ, அவர்கள்மேல் கர்த்தருடைய கரம் அமரும். உலக ஞானத்தின்படியான கிரியைகள் கர்த்தருடைய கரத்தினை ஏற்றுக்கொள்ளாது. உலக ஞானம் கர்த்தருக்குப் பகை என்று வேதம் கூறுகின்றது. அறிவிக்கப்பட்டதை அறிவித்தபடி ஏற்றுக்கொள்பவர்கள் மீது கர்த்தரது கரம் வந்தமர்ந்துள்ளதை வேதத்தில் நாம் பார்க்கின்றோம்.
சபைக்காலங்கள் நிறைவுபெற்றபின் சபைகள் மகிமை இழந்து பாபிலோனாக மாறும். அப்போது அதின் வேசித்தனத்திலிருந்து வெளியேறி வா என்று அழைப்பு வரும்போது, யார் யார் அதனை ஏற்றுக்கொள்வார்களோ அவர்கள் நித்திய ஜீவனுக்குரியவர்களாவார்கள். உலக ஞானத்தின்படி அவர்கள் ஞானிகள் அல்ல. கர்த்தர் அருளும் ஞானத்தை பெற்றுக்கொண்டவன் அதனை ஏற்றுக்கொள்வான். கர்த்தர் ஞானிகளைத் தெரிந்தெடுக்கவில்லை, உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார் என்றே வேதம் சாட்சியிடுகின்றது. இப்போது சந்திரனிலும் செவ்வாய்க் கிரகத்திலும் தண்ணீர் இருப்பதாக கண்டறிந்துள்ளார்கள். ஆனால் வேதவார்த்தையின்படி பூமி மாத்திரமே மனிதன் குடியிருக்கக்கூடிய தன்மையில் உருவாக்கப்பட்டுள்ளது. தனது சாயலில் உருவாக்கப்பட்ட மனிதனை பூமியினைப் போல வேறொரு கோளினில் குடியிருக்க அவரால் அனுமதிக்கப்படவில்லை (ஏசாயா 45: 18). இதனை அறிவித்த ஏசாயா மற்ற கோள்களில் ஹைட்ரஜன் இருக்கின்றதா, நைட்ரஜன் இருக்கின்றதா என்று ஆராய்ச்சி செய்து எழுதவில்லை.
ISRO (Indian Satellite Research Organization)-ல் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் சந்திரன், செவ்வாய் போன்ற கோள்களை ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களிடம், ஐயா, மனிதன் குடியிருப்பதற்காக பூமி உருவாக்கப்பட்டது என்று வேதத்தில் கூறப்பட்டிருக்கின்றது; மற்ற கோள்கள் மனிதன் குடியிருப்பதற்குத் தக்க இடமாக இராது என்று கூறினால், அவர்கள் அதற்குரிய ஆய்வறிக்கையினைக் கேட்பார்கள். இது உலக ஞானத்தில் அதாவது அவர்கள் கற்றறிந்த ஞானத்தில் எழக்கூடிய ஞானமாகும். ஆனால் கர்த்தருடைய மனுஷனோ, இங்கே மறு ஆய்வுக்குள் செல்லாமல் கர்த்தர் எவைகளைக் கட்டளையிட்டாரோ, அவைகளை அப்படியே எழுதினான். கர்த்தர் கூறும் வார்த்தைக்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்களை சாட்சிகளாக வைத்து தீர்க்கதரிசனங்கள் சொல்லப்படுவதில்லை. அப்படியே தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும்போதும், அதனை சாட்சியிட அனுப்பப்படும் தேவனுடைய மனுஷர்களும் அறிவியல் பூர்வமான ஆதாரங்களை சான்றாக வைத்து சாட்சியிடுவதில்லை. உலக ஞானம் கர்த்தருக்கு அருவருப்பானதென்றே வேதம் சாட்சியிடுகின்றது.
ஏசாயாவிடம், நீ இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று கூறும் காரியங்களுக்கு நீ கட்டுப்படாதே என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு உலக ஞானத்தைக் கொண்டு அவன் சான்று கேட்கவில்லை. கட்டளையிடப்பட்ட பிரமாணத்தினை அப்படியே ஏற்றுக்கொண்டான். யேகோவாவை ஏற்றுக்கொண்ட இஸ்ரவேல் ஜனங்களுக்கே நியாயப்பிரமாணம் கட்டளையிடப்பட்டது.
ஏசா. 8: 17-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்."
யாக்கோபின் குடும்பத்தார் மத்தியிலே கர்த்தரது கட்டளைகளை உரைக்கிறவனாகவே ஏசாயா காணப்பட்டான். கர்த்தர் கட்டளையிட்டவைகளையே அவன் தீர்க்கதரிசனமாய் உரைத்தான். இஸ்ரவேலர்கள் யாக்கோபின் குடும்பத்தார். இந்த ஜனங்களாகிய யாக்கோபின் குடும்பத்தார் கட்டுப்பாடு என்று கூறுவதை நீ கட்டுப்பாடு என்று ஏற்றுக்கொள்ளாதே எனவும், இந்த ஜனங்கள் பயப்படுகின்ற காரியத்திற்கு நீ பயப்படாதே எனவும் கர்த்தர் அவனிடம் அறிவித்தார். அவரே சாட்சியின் ஆகமத்தினைக் கட்டி, என் சீஷருக்குள்ளே வேதத்தை முத்திரையிடு என்றும் சாட்சியிட்டதைப் பார்க்கின்றோம். சீஷருக்குள்ளாக முத்திரைபோடப்பட்ட சாட்சியின் ஆகமத்தினைக் குறித்து ஏசாயா நன்கு அறிவார். ஆனால் அது இஸ்ரவேலர்கள் மத்தியில் மறைக்கப்பட்ட ஆகமமாய் இருந்தது.
ஏசாயாவின்மேல் கர்த்தருடைய கரம் வந்து இறங்கியிருந்ததால், அவன் அந்த சாட்சியின் ஆகமத்தினை அறிந்திருந்தான்.
ஏசா. 8: 18, 20-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.
வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை."
"இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது. இஸ்ரவேலரில் அடையாளங்களாக ஏற்படுத்தப்பட்டவர்கள் இந்த சாட்சியின் ஆகமத்தினை அறிந்தவர்களாய் இருந்தார்கள். காரணம், அவர்கள் விடியற்காலத்து வெளிச்சத்தினை அறிந்திருந்தார்கள். பிள்ளைகள் இரண்டு தன்மை கொண்டவர்களாக இருப்பதை வேதம் சாட்சி கொடுத்துள்ளது. ஒன்று மாமிசத்திற்குரியதாகவும், மற்றொன்று ஆவியின் ஆசீர்வாதத்தினைப் பெற்றதாகவும் சாட்சியிடப்பட்டுள்ளது.
ஏசா. 8: 3-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"நான் தீர்க்கதரிசியானவளைச் சேர்ந்தபோது, அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்னும் பேரை அவனுக்கு இடு."
இந்தக் குமாரன் ஏசாயாவின் மாமிசத்தின்படியான சந்ததியாகும். மற்றொரு சந்ததியானது, "நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும்" என்று கூறப்பட்டுள்ளபடியான பிள்ளைகளாகும். கர்த்தரது கரம் ஒரு சந்ததியின்மீது இறங்கியபோது அது அவர்களை மற்ற சந்ததியிலிருந்து வேறுபிரிக்கின்றது. ஏசாயா, அந்த ஜனங்கள் கூறுவதின்படியே கேட்காமலும், அந்த ஜனங்கள் பயப்படுகின்ற காரியத்திற்குப் பயப்படாமலும் இருக்கும்படியாய் கர்த்தர் கட்டளையிட்டவாறு தன்னுடைய கிரியைகளைச் செய்தான். கர்த்தரது கட்டளைகளை ஏற்றுக்கொள்பவர்கள் வேறுபிரிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் ஆவிக்குரியவர்களாய் வேறுபிரிக்கப்பட்டார்கள்.
எல்லா காலங்களிலும் இதுபோலவே கர்த்தத்துவ ஜனங்கள் வேறுபிரிக்கப்படுகின்றார்கள். இஸ்ரவேலர்கள் யாவரும் அவரது ஜனமானபோதிலும் அதில் மாமிசத்திற்குரியவர்கள் எனவும், ஆவிக்குரியவர்கள் எனவும் இருபிரிவு ஜனங்கள் இருந்தார்கள். மாமிசத்திற்குரிய இஸ்ரவேலர்கள் மாமிசத்தின் தேவைக்காய் மாத்திரம் கர்த்தரைத் தேடினார்கள். ஆவிக்குரிய பிள்ளைகள் நித்திய ஜீவனை சுதந்தரிக்கும்பொருட்டாய் கிரியை செய்தவர்களாகக் காணப்பட்டார்கள். அவர்கள் அனுப்பப்படும் வார்த்தையினை ஏற்றுக்கொண்டவர்களாய் ஜீவனுக்கென்று கிரியைகளைச் செய்தார்கள்.
அப்போஸ்தலனாகிய பவுல் "என் சுவிசேஷத்தினால் உங்களைப் பெற்றேன்" என்று சாட்சியிட்டுள்ளதைக் காணலாம். "வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனித்து, இந்த வார்த்தையின்படியே செய்யக்கூடிய பிள்ளைகளுக்கு விடியற்காலத்து வெளிச்சமுண்டு" என்று கூறப்பட்டுள்ள இந்த வெளிச்சமானது ஆவிக்குரியவர்களுக்கு சாட்சியிடப்பட்டுள்ள வார்த்தையாகும். அவர்கள் வெளிச்சத்தினை அங்கீகரிப்பார்கள். எனவே அவர்கள் ஒளியின் பிள்ளைகளென்று சாட்சியிடப்பட்டுள்ளார்கள். கர்த்தரது கரம் அவர்கள்மீது அமர்ந்துள்ளபடியால், அவர்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளாக சாட்சியிடப்பட்டுள்ளார்கள். சாட்சி ஆகமத்தில் முத்திரிக்கப்பட்டவைகளை ஏசாயா அறிந்தவனாகக் காணப்பட்டான். காரணம், ஏசாயாவின் மீது கர்த்தருடைய கரம் அமர்ந்திருந்தது. அங்கே கர்த்தருடைய கரம் ஏசாயாவிடம் ஒரு பிரமாணத்தினைக் கட்டளையிட்டது. அந்தப் பிரமாணம், நீ அந்த ஜனங்கள் கூறுவதுபோல கூறாதே எனவும், அவர்கள் பயப்படும் காரியத்திற்குப் பயப்படாதே எனவும் அறிவித்தது. பிரமாணம் முதலாவது சாட்சியிடப்படும். அதன்பின்னர் சாட்சி ஆகமம் வெளிப்படும். பிரமாணங்கள் மாறும்போது, சாட்சி ஆகமமும் மாற்றியமைக்கப்படும். மாற்றியமைக்கப்பட்ட பிரமாணங்களை ஏற்றுக்கொள்பவர்களை ஜீவனுக்குரியவர்கள் எனவும், அதனை ஏற்றுக்கொள்ளாதவர்களை ஆக்கினைக்குரியவர்கள் எனவும் வேதம் வேறுபிரிக்கின்றது. ஏற்றுக்கொள்பவர்கள் ஆவிக்குரியவர்கள்; ஏற்றுக்கொள்ளாதவர்கள் மாமிசத்திற்குரியவர்கள்.
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு - இவர்களை முற்பிதாக்கள் என்று வேதம் கூறுகின்றது. கர்த்தத்துவத்திற்குள்ளாக நோவாவின் சந்ததியிலிருந்து இவர்கள் வேறு பிரிக்கப்பட்டார்கள். இவர்கள் பரலோக சுதந்தரத்திற்கென்று வேறு பிரிக்கப்பட்டவர்கள். அதன்பின்னர், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களிலிருந்து யூதா கோத்திரத்தைக் கர்த்தர் தாம் உதிக்கத் தெரிந்துகொண்டார். அவர்கள் சாட்சி ஆகமத்தினை அங்கீகரித்தவர்களாகக் காணப்பட்டார்கள். எனவே சமாதான கர்த்தர் யூதா கோத்திரத்தில் பிறந்தார். யூதர்களுக்குள்ளாக அந்த விடியற்காலத்து வெளிச்சம் மாமிசத்தில் வந்தது. அது கர்த்தருடைய கரமாய் யூதேயா தேசம் முழுவதிலும் சுவிசேஷத்தை அறிவித்தது. ஏசாயாவினிடத்தில் கர்த்தருடைய கரம் வந்தமர்ந்ததுபோல, யோவான்ஸ்நான் மீதும் கர்த்தரது கரம் வந்து அமர்ந்தது.
லூக். 1: 66-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது."
கர்த்தருடைய கரம் யோவான்ஸ்நானனாக பிறந்த அந்தப் பிள்ளையோடே இருந்ததினால், அந்தப் பிள்ளை ஒளிக்குரியதாக இருந்தது. அந்தப் பிள்ளை ஒளிக்கு சாட்சியிட்டது. ஏசாயாவின்மீது கர்த்தருடைய கரம் வந்து அமர்ந்ததினால், அவன் வெளிச்சத்திற்குரியவனானான். அவன் அந்த வெளிச்சத்தினைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தான். அதுபோல யோவான்ஸ்நானன்மீது கர்த்தரது கரம் இருந்தபடியால் அவன் அந்த ஒளிக்குச் சாட்சியிட்டான்.
ஏசாயாமீது அமர்ந்த கர்த்தருடைய கரத்தினை ஏற்றுக்கொண்டவர்கள், அவன்மூலம் அறிவிக்கப்பட்ட பிரமாணத்தினையும் ஏற்றுக்கொண்டார்கள். அது கர்த்தருடைய பிரமாணம் என்று அங்கீகரித்தார்கள். அவர்கள் கர்த்தர் அவனுக்குக் கொடுத்த பிள்ளைகள் என்று சாட்சியிடப்பட்டார்கள். கர்த்தர் கொடுத்த அந்தப் பிள்ளைகள் அவன் சாட்சியிட்ட வார்த்தையினை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் சாட்சியின் ஆகமத்தினை அறிந்துகொண்டார்கள். அந்த சாட்சியின் ஆகமத்தில் இருந்த வெளிச்சத்தினைக் கண்டுகொண்டார்கள். இந்த வெளிச்சமே ஒளி என்று சாட்சியிடப்பட்டுள்ளது. இந்த ஒளி ஜீவனாகும்; இந்த ஜீவன் பரலோகராஜ்யத்திற்கு அழைத்துச் செல்லும் ஜீவனுள்ள பிரமாணமாகும். எந்த மனுஷனையும் உயிர்ப்பிகின்ற மெய்யான ஒளியே அந்தப் பிரமாணமாகும். அந்தப் பிரமாணமே கர்த்தருடைய கரமாய் அன்று மாமிசத்தில் வெளிப்பட்டு கிருபைப் பிரமாணத்தை இந்தப் பூச்சக்கரத்திற்கு கொண்டுவந்து சேர்த்தது. எந்த மனுஷனையும் உயிர்ப்பிக்கின்ற அந்த மெய்யான ஒளி அன்று இயேசுகிறிஸ்துவாய் இஸ்ரவேல் தேசமெங்கும் சுற்றித்திரிந்தது.
ஏசா. 9: 1, 2, 6, 7-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.
இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்."
கர்த்தரது கரம் ஏசாயாவின் மீது அமர்ந்திருந்தபடியால், அந்தப் பாலகனுடைய பிறப்பைக் குறித்து தீர்க்கதரிசனமாக முன்னறிவித்தான். நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்பதையெல்லாம் முன்னறிவித்தான். இவைகள் நிகழப்போகும் காலத்தினைக் குறித்தும் அவன் சாட்சியிட்டுள்ளான். நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த என் பிள்ளைகளும் என்று ஏசாயா சாட்சியிட்டதுபோல, அந்தப் பாலகனை அறிய கிருபை பெற்றவர்கள் யோவான்ஸ்நானன் கொடுத்த சாட்சியை அங்கீகரித்தார்கள். யோவானின் சாட்சியை ஏற்றுக்கொண்டவர்கள் அந்த ஒளியினைப் பெற்றுக்கொண்டார்கள்.
இயேசுகிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்டபோது, இந்தத் தீர்க்கதரிசன வார்த்தை நிறைவேறிற்று. தீர்க்கதரிசனம் உரைத்த ஏசாயா மரித்தான். அவன் உயிரோடு இருந்தபோது, அவன் மீது அமர்ந்த கர்த்தருடைய கரம் அவன் உரைத்த தீர்க்கதரிசனம் நிறைவேறியபோது, யோவான்ஸ்நானனிடத்தில் வந்து அமர்ந்தது. எனவே அவன், "இவர்தான் உலகத்தின் பாவத்தினைச் சுமந்து தீர்க்க வந்தவர்", என்று சாட்சியிட்டான். இவர்தான் ஏசாயா தீர்க்கதரிசியினால் முன்னறிவிக்கப்பட்டபடி நமக்கென்று கொடுக்கப்பட்ட பாலகன் என்று சாட்சியிட்டான், இவர்தான் அந்த ஆட்டுக்குட்டி என்று சாட்சியிட்டான். யோவான்ஸ்நானனுடைய சீஷர்கள் அதனை விசுவாசித்தார்கள். எனவே அவர்கள் இயேசுகிறிஸ்துவின் சீஷர்களானார்கள்.
இயேசுகிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்டபோது, ஏசாயா உரைத்த தீர்க்கதரிசன வார்த்தை உங்கள் காதுகள் கேட்க இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார். ஏசாயாவின் இந்தத் தீர்க்கதரிசனமானது எருசலேம் தேவாலயத்தில் தோல்சுருளாய் வைக்கப்பட்டிருந்தது. இஸ்ரவேலர் யாவரும் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை விசுவாசித்தார்கள். அவைகள் ஏசாயாவிற்கு கர்த்தர் அருளின தீர்க்கதரிசனம் என்பதை அங்கீகரித்தார்கள். எனவே ஓய்வுநாள்தோறும் அவைகள் தேவாலயத்தில் வாசிக்கப்பட்டது.
தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்டவர் அன்று எருசலேம் தேவாலயத்தில் இருந்தார். ஆனால் தீர்க்கதரிசனத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அவர்களுக்கு முன் நின்ற குமாரனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் யோவான்ஸ்நானன் அவரைக்கண்டு சாட்சியிட்டான். அவனது சாட்சியினை ஏற்றுக்கொண்டவர்கள் ஒளிக்குரியவர்களானார்கள். கர்த்தரது கரம் அந்த ஒளியினைக் காணும்படியாய் அவர்களது கண்களைத் திறந்து கொடுத்தது. அவர்கள் நித்திய ஜீவனைச் சுதந்தரிக்க கிருபை பெற்றவர்களானார்கள். எனவே அவர்கள் அந்த ஒளியின் பிள்ளைகளாக சாட்சியிடப்பட்டார்கள்.
புறஜாதியாருடைய தேசத்தில் இருந்த ஜனங்கள் பெரிய வெளிச்சத்தினைக் கண்டார்கள் என்று கூறப்பட்டிருப்பதைக் காணலாம். வெளிச்சத்தினைக் கண்ட புறஜாதிகள் கிறிஸ்தவர்களாகிய நாமே. புறஜாதிகள் தேசத்தில் வெளிப்பட்ட அந்த வெளிச்சம் அப்போது யூதேயா தேசத்தில் இருந்தது. அப்போது கர்த்தருடைய கரம் யோவான்ஸ்நானன்மீது வந்து அமர்ந்து, அந்த வெளிச்சத்தினைக் குறித்து சாட்சி கொடுத்தது. அந்த சாட்சி ஒரு பிரமாணத்தினைக் கொடுத்தது. அந்தப் பிரமாணமானது, இவர்தான் பலியிடுவதற்காக அனுப்பப்பட்டிருக்கின்ற ஆட்டுக்குட்டி, இவர்தான் ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் பாலகன் என்ற சாட்சியாகும்.
புறஜாதிகளிடத்தே வெளிப்பட்ட அந்த ஒளிக்குரிய நாமத்தினை ஏற்றுக்கொண்டுள்ள கிறிஸ்தவர்களாகிய நாம் வெளிச்சத்திற்குரியவர்களாக மாறியிருக்கின்றோம். சாட்சியின் ஆகமங்கள் இன்றைக்கு நமக்குள்ளாக முத்திரிக்கப்பட்டுள்ளது. கர்த்தருடைய கரம் யார்மீது வந்து அமருகின்றதோ, அவர்களிடம் முத்திரிக்கப்பட்டுள்ள ஆகமங்களின் இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும். கர்த்தருடைய கரம் பிரமாணமாய் அமரப் பெற்ற அவருடைய ஜனங்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள். முன்னர் கர்த்தருடைய கரம் வெளிப்பட்டபோது, இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட கிருபை முடிவடைந்தது. அதன்பின்னர் புறஜாதிகளாகிய நமக்கு அந்தக் கிருபை அருளப்பட்டது. இந்த இரகசியத்தினை அப்போஸ்தலனாகிய பவுல் சாட்சியிட்டான். இதனை அன்று எல்லா இஸ்ரவேலர்களும் ஏற்றுக்கொள்ளவில்லையே. ஆனால் இப்போது புறஜாதிகளுடைய காலம் என்று கிறிஸ்தவர்களாகிய நாம் யாவரும் ஏற்றுக்கொள்கின்றோம். கிறிஸ்தவர்களாகிய நாம் பெற்றுக்கொண்டுள்ள இந்தக் கிருபையும் ஒருநாள் முடிவடைந்துவிடும். அதன்பின்னர் இஸ்ரவேலர்கள் கிருபை பெற்றவர்களாக சாட்சியிடப்படுவார்கள். அதன்பின்னர் ஒருவரும் கிரியை செய்யமுடியாத இராக்காலம் வரும். அதன் பின்னர், இந்தப் பூமியும் வானமும் அழிந்துபோகும். இவைகள் யாவும் தீர்க்கதரிசனமாய் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
புறஜாதிகளின் காலம் என்று சாட்சியிடப்பட்டுள்ள இந்தக் காலம் கிறிஸ்தவர்களாகிய நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள கிருபையின் காலமாகும். இந்தக் காலமும் ஒருநாள் நிறைவடையும். சபைக்காலங்கள் என்பது கிறிஸ்தவர்களாகிய நமக்காகக் கட்டளையிடப்பட்டுள்ள கிருபைக்கு கால அளவாகும். சபைக்காலங்களில் கர்த்தரது கரத்திலிருந்து அனுப்பப்பட்ட 7 நட்சத்திரங்களும் சபைத்தூதர்களாய் வந்து சுவிசேஷத்தை சாட்சியிட்டார்கள். கர்த்தரது கரத்திலிருந்து அனுப்பப்பட்ட அந்த நட்சத்திரங்கள் அன்றைக்குரிய சபைப்பிரமாணத்தினுக்கு சாட்சியிட்டார்கள். அதனை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்கள், கர்த்தரது கரத்திற்குள்ளாகி நித்திய ஜீவனை சுதந்தரிக்க கிருபை பெற்றவர்களாய் இளைப்பாறுதலில் பிரவேசித்தார்கள். அவர்கள் சபைகளுக்குள்ளாக முத்திரிக்கப்பட்டிருந்த இரகசியங்களை அறியக்கூடிய கிருபையினைப் பெற்று ஒளிக்குரியவர்களாய் திகழ்ந்தார்கள்.
ஏழு சபைக்காலங்களும் நிறைவடைய வேண்டும் என்பது சாட்சி ஆகமங்களுக்குள்ளாக முத்திரை செய்யப்பட்டுள்ளது; அது சீஷருக்குள்ளாக முத்திரையிடப்பட்டிருக்கின்றது. கர்த்தருடைய கரம் யார்மேல் வந்து அமருகின்றதோ, அவர்கள் மூலமாக முத்திரிக்கப்பட்டவைகள் வெளிப்படுத்தப்படும். முத்திரைக்குள்ளாக கர்த்தருடைய கரம் கட்டளையிடும் பிரமாணத்தின்படி செயல்படுபவர்கள் அந்தக் கரத்திற்குள்ளாகி அவரது ஜனமாய் சாட்சியிடப்பட்டார்கள்.
ஏசா. 66: 14-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"நீங்கள் அதைக் காணும்போது, உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப்போலச் செழிக்கும்; அப்பொழுது கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய சத்துருக்களிடத்தில் அவருடைய சினமும் அறியப்படும்."
கர்த்தருடைய கரம் அவருடைய ஊழியக்காரரிடத்தில் அறியப்படும் என்று இங்கே தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்டுள்ள அவரது ஊழியக்காரர்கள் அதனை சாட்சியாக அறிவித்து வந்துள்ளார்கள். ஏசாயாவின்மேல் கர்த்தருடைய கரம் வந்து இறங்கியதையும்; யோவான்ஸ்நானன்மேல் கர்த்தருடைய கரம் வந்து இறங்கியதையும் பார்த்தோம். மேலும் எசேக்கியாவின்மேலும் கர்த்தருடைய கரம் வந்து அமர்ந்தது குறித்து இங்கே சாட்சியிடப்பட்டுள்ளது.
எசே. 1: 3-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது."
கர்த்தருடைய கரம் எசேக்கியேலின்மேலும் அமர்ந்தது. கர்த்தருடைய கரம் அவன்மேல் வந்து இறங்கினதினால், அவன் சாட்சி ஆகமத்தினைப் பற்றி அறிவித்தான். எசேக்கியேலினால் அறிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டவர்கள் கர்த்தரது பலத்த கரத்திற்குள்ளானவர்களானார்கள். அவர்கள் எசேக்கியேல் மூலம் கூறப்பட்ட வார்த்தையினை தீர்க்கதரிசனம் என்று விசுவாசித்து ஏற்றுக்கொண்டார்கள். அதுபோலவே ஒவ்வொரு தீர்க்கதரிசியின் மேலும் கர்த்தரது கரம் வந்து இறங்கி தீர்க்கதரிசனம் உரைத்தது. அவர்கள் தீர்க்கதரிசிகள் ஆனார்கள். கர்த்தருடைய ஊழியக்காரனாகத் தெரிந்தெடுக்கப்பட்டவன் எசேக்கியேல். எனவே அவன்மேல் கர்த்தருடைய கரம் வந்து இறங்கியிருந்தது. கர்த்தருடைய கரம் வந்து இறங்கியபின் அவன் தீர்க்கதரிசனம் உரைத்தான். அதுபோல தீர்க்கதரிசனம் நிறைவேறும்போது கர்த்தரது கரம் அவரது ஊழியக்காரர்கள் மீது இறங்கி தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுவதை சாட்சியிடும். இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும் என்ற பிரமாணம் கர்த்தரது கரம் இறங்கப்பெற்ற யோவான்ஸ்நானன் மூலம் சாட்சியிடப்பட்டது. யோவான் கொடுத்த ஸ்நானமானது, தனக்குப் பின் வருகின்றவரை விசுவாசிக்க வேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்பட்ட ஸ்நானமாகும். ஞானஸ்நானம் என்ற புதிய முறைமை யோவான்ஸ்நானன் மூலம் கொண்டுவரப்பட்டது. அப்போது இஸ்ரவேலர்களுக்குள் கட்டளையிடப்பட்ட பிரமாணம் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும் என்பதே. இயேசுகிறிஸ்து மாமிசத்தில் உலாவந்தபோது, நியாயப் பிரமாணம் நிறைவடைந்த பிரமாணமாய் இருந்தது. அவரைக் கிறிஸ்து என்றும், குமாரன் என்றும் விசுவாசிக்கும் பிரமாணமேயல்லாமல், வேறு எந்தப் பிரமாணமும் அப்போது கட்டளையிடப்படவில்லை. இங்கே பிரமாணம் இலகுபடுத்தப்பட்டது. கடைசி ஏற்பாட்டின் காலத்திலும் பிரமாணம் இலகுபடுத்தப்படும். வார்த்தையானவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அந்த இலகுபடுத்தப்பட்ட பிரமாணமாகும். கர்த்தரது கரம் அந்தப் பிரமாணத்திற்குச் சாட்சியிடும்.
ஒவ்வொரு ஏற்பாட்டின் நிறைவிலும் பிரமாணம் இலகுபடுத்தப்பட்டு வருகின்றது. பழைய ஏற்பாட்டின் நிறைவின்போது பிரமாணம் இலகுபடுத்தப்பட்டதுபோல, புதிய ஏற்பாட்டின் நிறைவிலும் பிரமாணம் இலகுபடுத்தப்படும். இயேசுகிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்டவுடன், பழைய ஏற்பாடு நிறைவடைந்து புதிய ஏற்பாடு ஆரம்பமானது. இந்த வேளையில் ஒரு எளிதான பிரமாணம் இஸ்ரவேலர்களுக்குள் கட்டளையிடப்பட்டது. இஸ்ரவேலர்கள் நியாயப்பிரமாணத்தின் கட்டளையின்படி செயல்பட வேண்டிய நிலை இங்கே இலகுவாக்கப்பட்டது. ஐசுவரியவானான ஒரு வாலிபன் இயேசுகிறிஸ்துவிடம், என் சிறுவயதுமுதல் நான் நியாயப்பிரமாணத்தின்படியாக தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுகின்றேன், யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை, பொய் கூறவில்லை, யாரையும் கொலை செய்யவில்லை, பிரமாணத்தின்படி சரியாக நடந்துகொண்டு வருகின்றேன் என்பதாகக் கூறினான். ஆனாலும் கிறிஸ்து அவனிடம் ஒரு குறைவினைக் கண்டார். அவர் கண்ட அந்தக் குறைவு அவன் நியாயப்பிரமாணத்தின்படி செயல்பட்டதே ஆகும். காரணம், அப்போது பிரமாணம் இலகுபடுத்தப்பட்டிருந்தது; அது அனுப்பப்பட்டவர் அவர் என்று ஏற்றுக்கொள்வதாகும். அனுப்பப்பட்ட அந்தப் புதிய பிரமாணமான இயேசுகிறிஸ்துவை அவன் அறியவில்லை. சிறுவயது முதல் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்ற கிரியைகளை மாத்திரம் செய்துவந்துள்ளான். ஆனால் அவன் யாரை விசுவாசிக்க வேண்டுமோ அவரை விசுவாசிக்கவில்லை. எனவே ஒட்டகம் ஊசியின் காதில் நுழைவது எளிதாகிவிடும் என்று கூறப்பட்ட உவமைக்குள்ளானான். இங்கே முந்தைய பிரமாணமான நியாயப்பிரமாணம் நிறைவடைந்து மிகவும் எளிதான புதிய பிரமாணம் சாட்சியிடப்பட்டது. அது இயேசுவைக் கிறிஸ்து என்று விசுவாசிக்கின்ற விசுவாசப்பிரமாணமே ஆகும். அந்த விசுவாசமே ஒரு ஆத்துமாவை பரலோகராஜ்யத்திற்குள் கொண்டுசெல்லும் கிரியைக்குரிய சாட்சியாக அமைந்தது.
அதுபோலவே புதிய ஏற்பாட்டின் நிறைவிலும் இலகுபடுத்தப்படும் பிரமாணம் சாட்சியிடப்படும். அப்போது சபைப்பிரமாணம் நிறைவு பெற்றுவிடும்; வார்த்தை எல்லாவற்றையும் இலகுபடுத்திவிடும். நிறைவேறிய பிரமாணங்களைக் கொண்டு சபைகள் ஆத்துமாக்களை அடிமைப்படுத்திக்கொண்டிருக்கும். எனவே அவைகளின் கோட்பாடுகளை விட்டு வெளியேறி வரவேண்டும் என்ற புதிய பிரமாணம் சாட்சியிடப்படும். வலதுபக்கத்தில் இருந்த கள்வனிடம், இன்று நீ என்னுடனே கூட பரதீசியிலிருப்பாய் என்றார். அவன் சிலுவையிலிருந்த நிலையில் மரிக்குமுன் இயேசுவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்தான். அதுவே அவனுக்கு அந்தக் கிருபையைக் கொடுத்தது. அவன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளை மீறியவனாய் கொலைசெய்தபடியால் சிலுவையில் அறையப்பட்டான். ஆனால், அவன் நியாயப்பிரமாண கிரியைகளின்படி செயல்படாதவனாய் இருந்தபடியால், நித்திய ஆக்கினைக்குரியவனென்று நியாயப்பிரமாணத்தின்படி தீர்க்கப்பட்டிருந்தான். ஆனால் புதிய பிரமாணத்தின்படி அவன் அந்த ஆக்கினைத்தீர்ப்பிலிருந்து விடுதலை பெற்றான். புதிய பிரமாணமான விசுவாச பிரமாணம் அவனுக்கு அந்த இரட்சிப்பைக் கொடுத்தது. எனவே அவன் பரலோகராஜ்யத்தில் அவரோடுகூட இருக்கும் சிலாக்கியம் பெற்றவனானான்.
ஏசாயா 53: 1-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?"
ஏசாயா தீர்க்கதரிசி யாரைக்குறித்து கூறுகின்றார்?
ஏசாயா 53: 2-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது."
ஏசாயா தீர்க்கதரிசி இயேசுகிறிஸ்துவைப் பற்றி இப்படியாக தீர்க்கதரிசனம் உரைத்தான். "எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்?" என்று இங்கே தீர்க்கதரிசனம் உரைத்துள்ளான். "இங்கே எங்கள்மூலமாய் கேள்விப்பட்டதை" என்று தீர்க்கதரிசி கூறியிருப்பது அது கர்த்தருடைய கரம் வந்து அமர்ந்து சாட்சி கொடுக்கப்போகும் கர்த்தரது சாட்சிகளைக் குறித்து கூறப்பட்டுள்ளது. கர்த்தரது கரம் வந்து அமர்ந்து சாட்சியிட்ட யோவாஸ்நானனின் சாட்சியினை எல்லா யூதர்களும் விசுவாசிக்கவில்லையே. அவரை சிலுவையில் அறைந்தவர்கள் யோவான்ஸ்நானன் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசிக்கவில்லையே. தீர்க்கதரிசனங்களை அறிந்த இஸ்ரவேலர்கள்தானே அவரைக் கொண்டுபோய் சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தார்கள். பிலாத்து நான் யூதனா? என்று கேட்கின்றான். பின்னர் அவனே கிறிஸ்துவை யூதருக்கு ராஜா என்று அவரைக் குறித்து, யூதர்களிடமும், பிரதான ஆசாரியர்கள் அனுப்பியவர்களிடமும் கேட்பதை வேதத்தில் பார்க்கின்றோம். ஆனால் அவர்கள், எங்களுக்கு இவன் ராஜா அல்ல; ராயன்தான் எங்களுக்கு ராஜா என்று கூறி கர்த்தத்துவத்தை அசட்டை செய்தார்கள். ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களை ஆசாரியர்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். காரணம் அவரைத் தீர்க்கதரிசி என்று எருசலேம் அங்கீகரித்திருந்தது. ஏசாயாவின் தீர்க்கதரிசன புத்தகத்தினை இயேசுகிறிஸ்து வாசிக்கும்போது, ஆசாரியர்கள் அதில் கூறப்பட்டவற்றை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். மூப்பர்களும், வேதபாரகர்களும், சதுசேயர்களும், பரிசேயர்களும் அதனையே அறிக்கையிட்டார்கள், இவர்கள் யாவரும் ஏசாயாவை ஒரு தீர்க்கதரிசி என்று அறிக்கையிட்டார்கள். ஆனால், இயேசுகிறிஸ்து அவர்கள் முன், "உங்கள் காதுகள் கேட்க இந்த தீர்க்கதரிசனம் இன்று நிறைவேறிற்று" என்று சாட்சியிட்டதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இயேசுகிறிஸ்துவின் சரீரம் முழுவதும் பிட்கப்பட்டு, இரத்தம் வடிய வடிய, அவர்கள் முன்னால் நிறுத்தப்படும்போதும், அவரை சிலுவையில் அறையும் என்றே கூக்குரலிட்டார்கள். அவர்கள் யாவரும் ஏசாயா மூலமாகக் கூறப்பட்ட தீர்க்கதரிசனத்தை விசுவாசித்தவர்கள்; ஆனால் அந்த தீர்க்கதரிசனம் நிறைவேறும்போது அதனை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவர்கள் அவிசுவாசிகளானார்கள். எனவே, ஏசாயா தீர்க்கதரிசி மூலம் உரைக்கப்பட்டது நிறைவேறிற்று என்று சாட்சியிட்டபோது அதனை ஏற்றுக்கொள்ளாதிருந்தார்கள் என்று பார்க்கின்றோம். யூதர்கள் ஏசாயா மூலம் கூறப்பட்டதை விசுவாசிக்கும் விசுவாசிகளாகவே இருந்தார்கள். ஆனால் அது நிறைவேறியதைக் குறித்து சாட்சியிட்டதைத்தான் அவர்களால் அங்கீகரிக்க இயலவில்லை. அவர்கள் நிறைவேறிய பிரமாணத்தைப் பற்றிக்கொண்டு, புதிய பிரமாணமான கிறிஸ்துவை அங்கீகரிக்கவில்லை.
ஏசாயா தீர்க்கதரிசி மூலமாய் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தினை யூதர்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். எனவேதான் அந்தத் தீர்க்கதரிசன புத்தகம் தேவாலயத்தில் இருந்தது. அந்த தீர்க்கதரிசனங்களைக் கொண்டு அநேகர் பிரசங்கம் செய்திருப்பார்கள்; அந்த வேத வசனத்தினை எடுத்து ஆராய்ந்திருப்பார்கள். இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகையினைக் குறித்து நாமும் இப்படித்தான் ஆய்வு செய்துகொண்டிருக்கின்றோம். ஏசாயா, தீர்க்கதரிசனமாய் யாரைக்குறித்துச் சாட்சியிட்டாரோ, அவரை இஸ்ரவேலர்கள் விசுவாசியாதிருந்ததுபோல, அவரது இரகசிய வருகையை குறித்து முன்னறிவிக்க அனுப்பப்படப் போகும் தூதர்களையும் ஏற்றுக்கொள்ளாதவர் களாகவே கிறிஸ்தவர்களும் காணப்படுவார்கள். யாரிடத்தில் கர்த்தருடைய கரம் வந்து அமர்ந்து சாட்சியிடுமோ, அதனை அங்கீகரிக்க இயலாதவர்களாகவே காணப்படுவார்கள். அவர்கள் தூதன் சாட்சியிடும் சாட்சியின் ஆகமத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
கர்த்தரது கரம் இறங்கப் பெற்ற அப்போஸ்தலர்கள் அவரை விசுவாசித்தார்கள். அவரைக் குறித்து சுவிசேஷமாய் சாட்சியிட்டார்கள். அதனை ஏற்றுக்கொண்டவர்கள்மீதும் கர்த்தருடைய கரம் வந்து இறங்கிற்று.
பழைய ஏற்பாட்டின் காலத்தில் கர்த்தருடைய கரம் தீர்க்கதரிசிகள்மேல் அமர்ந்து தீர்க்கதரிசனங்கள் உரைத்தது. தீர்க்கதரிசிகள் கர்த்தரால் உரைக்கப்பட்டதை சுவிசேஷமாய் அறிவித்தார்கள். எரேமியா தீர்க்கதரிசனம் உரைத்தார். எரேமியாவின் தீர்க்கதரிசனம் இரண்டு காரியங்களினைக் குறித்ததாக இருந்தது. அது அன்றைக்குரிய நிகழ்வைக் குறித்து அறிவித்த தரிசனங்களாகவும், அதன்பின்னர் சம்பவிக்கப்போகின்ற நிகழ்வைக் குறித்து அறிவித்த தீர்க்கதரிசனமுமாய் இருந்தது. அதுபோல எல்லாத் தீர்க்கதரிசனங்களிலும் தீர்க்கதரிசனம் உரைக்கும் காலத்திற்குரியவைகளாயும், அந்தக் காலத்திற்குப் பின்னர் சம்பவிக்கப்போவதைக் குறித்ததாயும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீர்க்கதரிசனங்கள் இஸ்ரவேலர்களுக்குரிய காரியமாகவும், அதன்பின்னர் மற்றவர்களுக்கு சம்பவிக்கப்போகின்ற காரியங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீர்க்கதரிசனங்கள் புதிய ஏற்பாட்டினை குறித்தும் அறிவிக்கப்பட்டதுபோல, கடைசி ஏற்பாட்டினைக் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்த்தரது கரம் ஏழு சபைத்தூதர்கள்மேலும் அமர்ந்திருந்து தீர்க்கதரிசனமாய் முன்னறிவித்ததை நிறைவேற்றிற்று.
வெளி. 1: 16-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது."
வெளி. 2: 1-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன்குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;"
சபைக்குரிய நட்சத்திரங்களாய் சாட்சியிடப்பட்டுள்ள சபைத்தூதர்கள் மீது கர்த்தரது கரம் வந்து அமர்ந்து பிரமாணத்தினைக் குறித்து சாட்சியிட்டது. அது ஏழு சபையின் தூதர்களாக தீர்க்கதரிசனம் உரைத்தது. அந்த ஏழு நட்சத்திரங்களும் கர்த்தருடைய கரத்திலிருந்து அனுப்பப்பட்டன. இப்போது சற்று சிந்தித்துப் பாருங்கள். 5-ம் சபை - மார்ட்டின் லூதர் என்ற தூதனின் ஆவியின் மூலமாக எழுப்பப்பட்ட சபையாகும். இதனை அந்த சபையின் விசுவாசிகளில் எத்தனைபேர் அறிவார்கள்? 5-ம் சபைக்காலத்தில் மார்ட்டீன் லூதரோடு இணைக்கப்பட்டவர்கள் கர்த்தரது கரத்திற்குள்ளாகி அந்த ஜீவ ஒளியைக் கண்டார்கள். அவர்கள் அன்றைக்குரிய சபைப் பிரமாணம் என்ற நுகத்துக்குள்ளாகி மறைக்கப்பட்ட தேவரகசியங்களை அறிந்தார்கள். அதேபோலொத்த ஒரு நிலையே எல்லா சபைக்காலங்களிலும் நிகழ்ந்து வந்துள்ளது. பிரிவினையாளர்களின் மீது அன்று கர்த்தரின் கரம் வந்து அமர்ந்திருந்தது. அவர்கள் மார்ட்டின் லூதரின் சுவிசேஷத்தினை ஏற்றுக்கொண்டு ஜீவனுக்குரிய பிள்ளைகளானார்கள். மார்ட்டின் லூதர்மீது கர்த்தருடைய கரம் வந்து அமர்ந்ததால், அவர்மூலம் பிரமாணம் கொடுக்கப்பட்டது. கர்த்தருடைய கரம் பிரமாணமாய் வெளிப்பட்டது.
இன்று ஏழு சபைக்காலங்களும் நிறைவடைந்துள்ளது. சபைதூதர்கள் எழும்பி பிரமாணங்களுக்கு சாட்சியிட்டார்கள். 7-வது சபையின் தூதனாய் சகோ. வில்லியம் பிரன்ஹாம் அனுப்பப்பட்டார். அவர்மீது கர்த்தரின் கரம் வந்து அமர்ந்திருந்தது. அப்போது ஒரு புதிய பிரமாணம் சபைப்பிரமாணமாகக் கட்டளையிடப்பட்டது. நாமத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிரமாணம் புதிய பிரமாணமாய் சாட்சியிடப்பட்டது. இஸ்ரவேலர்கள் ஏசாயாவை தீர்க்கதரிசி என்றும், அவர் எழுதியவை கர்த்தர் சாட்சியிட கட்டளையிட்ட தீர்க்கதரிசனங்கள் என்றும் விசுவாசித்ததுபோல, கிறிஸ்தவர்களாகிய நாமும் அப்போஸ்தலனாகிய யோவான் ஒரு தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கின்றோம். அவர் எழுதிய வெளிப்படுத்தின விசேஷம் ஒரு தீர்க்கதரிசன புத்தகம் என்று விசுவாசிக்கின்றோம். பின்னதாக நடக்கப்போகின்ற யாவும் அந்த தீர்க்கதரிசன புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது என்பதையும் விசுவாசிக்கின்றோம். ஆனால், அந்த தீர்க்கதரிசன நிகழ்வுகள் நிறைவேறிக்கொண்டிருப்பதை நம்மில் எத்தனைபேர் விசுவாசிப்போம்?
எங்கள் மூலமாய்க் கேள்விப்படுவதை விசுவாசிக்கின்றவன் யார்? என்று அன்று அறிவிக்கப்பட்டதுபோல, நிறைவேறிக்கொண்டிருக்கின்ற தீர்க்கதரிசனங்களை அறியாத நிலையில்தான் அநேக கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் சபைக்காலங்களைக் குறித்து அறியார்கள். அதற்கென்று அனுப்பப்பட்ட சபைத்தூதர்களையும் அறியார்கள். சபைப்பிரமாணங்களையும் அறியாத நிலையிலேயே காணப்படுகின்றார்கள். புதிய ஏற்பாடு நிறைவு பெற்றபின் கடைசி ஏற்பாடு என்ற இறுதி ஏற்பாடு ஆரம்பமாகும். அப்போது அவரின் நாமம் "தேவனுடைய வார்த்தை" என்று சாட்சியிடப்படும். அந்த நாமத்தில் எழும்பும் கர்த்தருடைய கரம் முத்திரிக்கப்பட்டுள்ள ஏழு இடிமுழக்க இரகசியங்களையும் வெளிக்காட்டி சாட்சியிடும். இவைகள் யாவும் தீர்க்கதரிசனமாய் முன்அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறும்போது கர்த்தரது கரம் வந்து சாட்சியிடும். கர்த்தருடைய கரம் வார்த்தையாய் மாமிச சரீரத்தில் வெளிப்பட்டதுபோல, வார்த்தையாய் அது வெளிப்படும். கர்த்தரது கரம் இறங்கப் பெற்றவர்கள் அதற்கு சாட்சியிடுவார்கள்.
ஏசா. 11: 11, 12-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், சமுத்திரத் தீவுகளிலும், தம்முடைய ஜனத்தில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்விசை தமது கரத்தை நீட்டி,
ஜாதிகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்."
"வார்த்தை" நாமமாய் சாட்சியிடப்பட்டபின், துரத்துண்ட இஸ்ரவேலர்கள் கிருபைக்குள்ளாக வருவார்கள். கர்த்தரது கரம் கர்த்தத்துவமாய் அவர்கள் மத்தியில் நிழலிடும். இவைகள் யாவும் சாட்சியாய் அறிவிக்கப்படும்.
"தம்முடைய ஜனத்தில் மீதியானவர்களை..." என்று இங்கே கூறப்பட்டுள்ளது. அது இஸ்ரவேலர்களைக் குறித்த காரியமாகும். கிறிஸ்தவர்களாகிய நாம் கிருபையினால் வாக்குத்தத்தத்தினைச் சுதந்தரித்துக்கொண்டவர்கள், புத்திரசுவிகாரம் எடுக்கப்பட்டவர்கள். நாம் உடன்படிக்கையின் தகப்பனாகிய ஆபிரகாமின் மாமிசப் பிறப்புகள் அல்ல. நாம் சுவிகாரப் பிள்ளைகள்; கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக, இந்த சுவிகாரம் எடுக்கப்பட்டுள்ளது. தகப்பனாகிய ஆபிரகாமை கர்த்தர் நேசித்தார். கர்த்தர் தனக்குக் கட்டளையிட்ட யாவற்றையும் ஆபிரகாம் செய்து முடித்தார். வெளியேறி வா என்றபோது, கல்தேயருடைய தேசத்தை விட்டு வெளியேறி வந்தார். உன் மகனைக் கொண்டுவந்து பலியிடு என்றபோது, பலியிட சென்றார். இப்படி கர்த்தரது இருதயத்தின் நினைவுகளின்படியெல்லாம் அவர் செயல்பட்டார். எனவே, கர்த்தருக்கு ஆபிரகாமின் சந்ததியார்மீது அதிகமான பரிவு, பாசம்.
யாக்கோபினைக் கொன்று போடும் சிந்தையாய் ஏசா இருந்தபோது, அவனை லாபானுடைய வீட்டிற்கு அனுப்பினாள் ரெபேக்காள். அங்கே வெறும் கோலோடே போனவன், பரிவாரங்களோடே திரும்ப வந்தான். அவன், தான் தனித்துப் போகும்போது தனக்கு இந்தப் பரிவாரங்கள் கிடைக்கும் என்ற சிந்தை கொண்டவனாய் செல்லவில்லை. அவன் தன் ஜீவனுக்குப் பயந்து ஓடினான். வேறு எதையும் எதிர்ப்பார்த்து செல்லவில்லை. ஆனால் கர்த்தர் அவனை உயர்த்தினார். ஈசாக்கு, தன் தகப்பனான ஆபிரகாம் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான். ஆபிரகாமை கனம் செய்கின்ற ஒரு பாத்திரமாய் அவன் இருந்தான். ஈசாக்கு தன் தகப்பனுக்கு நோவு கொடுக்கக்கூடிய எந்த ஒரு காரியத்தினையும் செய்யவில்லை.
ஈசாக்கு தன் தகப்பனைக் கனப்படுத்துகின்ற இருதய எண்ணம் கொண்டவன். நம்முடைய இருதயமும் நம் தகப்பனாகிய இயேசுகிறிஸ்துவிடம் அப்படியாகத்தான் இருக்கவேண்டும் என்று கர்த்தர் விரும்புகின்றார். தாம் கட்டளையிடுவதை செய்து முடிப்பவர்களாகவே நாம் இருக்கவேண்டும் என்று அவர் விரும்புகின்றார். அவர் வெளிக்கொணரும் வார்த்தைக்கு செவிகொடுப்பவர்கள்மீது அவருடைய கரம் வந்து அமரும்.
இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகைக்கு முன்னதாக அவருக்கு வழிகளை ஆயத்தப்படுத்தும்பொருட்டு ஒரு தூதன் அனுப்பப்படுவான். அவன்மீது கர்த்தரது கரம் வந்து அமர்ந்திருக்கும். அவன் அன்றைக்குரிய பிரமாணங்களைச் சாட்சியிடுவான். அவன் மணவாட்டியிடம் முத்திரித்து வைத்திருக்கின்ற இரகசியங்களை வெளிப்படுத்துவான். அந்த வார்த்தையையும் பிரமாணத்தையும் ஏற்றுக்கொள்பவளே மணவாட்டி. அவள் ஒளியை அறிந்தவள். அந்த ஒளிக்குள் இருக்கும் ஜீவனை அறிந்தவள். கர்த்தரது தோள்மீது தழுவ தன்னை அவள் ஒப்புக்கொடுப்பாள். அவளே அவரது இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவாள். மணவாட்டி தனது மாமிசத் தேவைகளுக்காக மணவாளனைத் தேடுபவள் அல்ல. அவள் மணவாளனுக்குத் தன்னை முற்றிலுமாக ஒப்புக்கொடுப்பவள். அவள் இம்மைக்குரிய தாகத்தோடு மாத்திரம் இணைபவள் அல்ல. அவள் நித்திய ஜீவன் என்ற தாகத்தோடு மணவாளனைத் தேடுபவள். எனவே, அவள் ஜீவ வார்த்தைக்குச் செவிகொடுப்பாள்.
முன்குறிக்கப்பட்டவைகள் யாவும் கர்த்தரது கரமாய் வந்து வார்த்தையை அறிவிக்கும். கர்த்தரது இரகசிய வருகைக்குப் பின்னர் கர்த்தத்துவ கிரியைகள் யாவும் புறஜாதிகள் மத்தியில் நிறைவடையும். இவையாவும் ஆதிமுதல் திட்டம் செய்யப்பட்டுள்ள இரகசியங்கள். இவைகள் யாவும் தேவனுடைய நாமமாய் சாட்சியிடப்படும். அந்த நாமம் "தேவனுடைய வார்த்தை" என்று தூதர்கள்மூலம் சாட்சியிடப்படும். வார்த்தையானவர் சாட்சி ஆகமத்தில் முத்திரிக்கப்பட்டவைகளை அவரது கரமாய் வந்து வெளிப்படுத்துவார். கர்த்தரது புயம் வார்த்தையாய் வெளிப்படுவதை விசுவாசிப்பவர்கள் நித்திய ஜீவனைச் சுதந்தரிப்பார்கள். பரலோக சுதந்திரத்தினைப் பெற்று அவரது ஆளுமைக்குள்ளான ஜனமாய் அவரது சுதந்தரத்தில் பங்கடைவார்கள். கர்த்தர்தாமே நமக்கும் அந்தக் கிருபையினைக் கட்டளையிடும்படியாய் அனுக்கிரகம் செய்வாராக!
ஆமென்! ஆமென்!! ஆமென்!!!