Phone
Mail
Whatsapp

The Word for the day

வார்த்தையினால் விடுதலை

Listenகேட்க Watchபார்க்க

40. எகிப்தும் பிரமாணமும்

40. எகிப்தும் பிரமாணமும்

Sorry for the inconvience, Currently English version is not avalilable.

Switch to Tamil language

(அறிவிக்கப்பட்ட நாள்: 14.12.14)

லூக். 4: 17-30"-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:

    கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,

    கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,

    வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.

    அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.

    எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்.

    அவர் அவர்களை நோக்கி: வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமூரில் உன்னால் செய்யப்பட்ட கிரியைகள் எவைகளோ அவைகளை உன் ஊராகிய இவ்விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடன் சொல்லுவீர்கள் என்பது நிச்சயம்.

    ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

    அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.

    ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை.

    அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்; ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

    ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும், இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு,

    எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டுபோனார்கள்.

    அவரோ அவர்கள் நடுவினின்று கடந்துபோய்விட்டார்."

    ஏசாயா தீர்க்கதரிசி மூலமாய் அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்க்கதரிசன வார்த்தையானது தம் மூலம் நிறைவேறியுள்ளதாக கிறிஸ்து சாட்சியிட்டார். அங்கே ஜெப ஆலயத்தில் கூடியிருந்தவர்கள், இதனைக் கேட்டபோது அவரை மலை உச்சிக்குக் கொண்டுபோய் தள்ளிவிட எத்தனித்தார்கள். அந்த ஜெப ஆலயம் யாருக்குரியதாயிருந்தது? அந்த ஜெப ஆலயத்தில் கூடியிருந்தவர்கள் எதற்காகக் கூடியிருந்தார்கள்? அவர்கள் அங்கே கர்த்தரை ஆராதிப்பதற்காக வந்திருந்தார்கள். யாரை ஆராதிக்க வந்தார்களோ, அவரே அவர்கள் முன் நிற்கின்றார். அவர்கள் யாரை ஆராதிக்க வேண்டும் என்று எருசலேம் தேவாலயத்திற்குச் சென்றிருந்தார்களோ, அவரே அதாவது அந்த ஆராதனைக்குரியவரே அங்கே அவர்கள் முன் நின்றிருந்தார். அந்த ஆராதனைக்குரியவரை அவர்கள் மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்யும்படியான ஒரு கிரியையினைச் செய்தார்கள். ஆனால் லேகியோனுக்குள் இருந்த பிசாசுகள் அவர் இன்னாரென்று அறிந்திருந்தது.

லூக். 4: 41-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது. அவரைக் கிறிஸ்து என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவொட்டாமல் அதட்டினார்."

    பிசாசு அவரை இன்னாரென்று அறிந்திருந்தது. அவர் கிறிஸ்து என்று பிசாசுக்குத் தெரிந்திருந்தது. பிசாசு ஆவியின் சரீரம் கொண்டவன். அவன் அவரை இன்னார் என்று அறிந்து கொண்டான். ஆனால் தேவாலயத்தில் யாரை ஆராதிக்க வேண்டும் என்று வந்திருந்தார்களோ அவர்களுக்கு, வந்திருந்தவர் இன்னார் என்று தெரியவில்லை. காரணம், அவர்கள் ஆவிக்குரியவர்களாய் இல்லாதிருந்தார்கள்; அழைக்கப்பட்டவர்கள் ஆவியின் சிந்தையினை இழந்து நின்றார்கள். அதேபோலொத்த ஒருநிலை மனுஷகுமாரனுடைய வருகையின் நாட்களிலும் நடக்கும். எந்தக் காரணத்திற்காக இஸ்ரவேலரை விட்டு கிருபை எடுக்கப்பட்டதோ அதே நிலையில் புறஜாதிகளாகிய கிறிஸ்தவர்களும் காணப்படுவார்கள். இவைகள் யாவும் தீர்க்கதரிசனமாய் முன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆராதனைக்குரியவரை சபைகளை விட்டு வெளியே தள்ளிவிடக்கூடிய ஒரு நிலை கடைசி ஏற்பாட்டிலும் நிகழும்.

    மனுஷகுமாரன் மாமிச சரீரம் கொண்டவராய் இனி வருவதில்லை. அவர் ஆவியின் சரீரம் கொண்டவராய் வரப்போகின்றார்.

    கர்த்தரை ஆராதிக்கவேண்டும் என்று விரும்பிய தாவீதிடம், "நீ எனக்காக தேவாலயத்தினைக் கட்ட வேண்டாம். ஏனென்றால், உன் கைகளில் இரத்தம் படிந்திருக்கின்றது. ஆதலால் ஆலயத்தினை நீ கட்டவேண்டாம்; உன் மகன் எனக்காக ஒரு ஆலயத்தினைக் கட்டுவான் என்றார். அந்த ஆலயத்தினை எப்படி எல்லாம் கட்டவேண்டும் என்று அவர் கூறியபடி யாவற்றையும் செய்திட அவன் அறிவித்திருந்தான். இப்படியாக அவர் சொப்பனத்தில் கூறிய எல்லாவற்றினையும் தன்னுடைய மகனிடத்தில் கூறி இந்த மாதிரியினைக் கொண்ட தேவாலயத்தினைக் கட்டவேண்டும் என்று கூறினான். தேவாலயத்தினைக் கட்டுவதற்காக தனது பொக்கிஷசாலையில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைத்தான். அப்படி சேர்த்து வைத்துக் கட்டப்பட்ட அந்த எருசலேம் தேவாலயம் யாருக்காகக் கட்டப்பட்டது என்பதை அறியாது தேவாலயத்திற்குரியவரை கொலை செய்ய அவர்கள் எத்தனித்தார்கள். எருசலேம் தேவாலயத்தினைக் கட்டவேண்டும் என்று தாவீதினுடைய ஆவி முதன்முதலாக எழுப்பப்பட்டது. ஆயினும் கர்த்தர் தாவீதைக் கொண்டு கட்ட அனுமதிக்கவில்லை. சாலொமோன் அந்த தேவாலயத்தினைக் கட்டினான். அவனுடைய நாட்கள் அமரிக்கையாக இருந்தது. அப்போது அந்த தேவாலயம் கட்ட அனுமதிக்கப்பட்டது. அப்படிக் கட்டப்பட்ட தேவாலயத்தில் உடன்படிக்கைப் பெட்டி இருந்தது. அந்த உடன்படிக்கைப் பெட்டியினைக் கொண்டுவரும்போது அதனை ஏற்றி வந்த வண்டி சாய்ந்தபோது, பெட்டி கீழே விழாதிருக்கும்படியாய் அதனைப் பிடிக்கக் கை நீட்டியவன் மரித்தான். அன்று உடன்படிக்கைப் பெட்டிக்கு மகிமை இருந்தது; அதனுள் பிரமாணம் இருந்தது; அதனுள் மன்னா இருந்தது; அதனுள் ஆரோனுடைய துளிர்த்த கோல் இருந்தது. ஆனால், உடன்படிக்கைப் பெட்டி வைக்கப்பட்டிருந்த தேவாலயத்திற்குள் இருந்த யூதர்கள் கிறிஸ்துவை அங்கீகரிக்கவில்லை. காரணம், அவர்கள் உள்ளான இருதயத்தோடு அவரை ஆராதிக்க வரவில்லை. ஆவியின் சிந்தையோடு வரவில்லை. ஆவியின் சிந்தையோடு இன்று சபைகளில் ஆராதனை நடக்கின்றதா? சபைகளில் கூடுகின்றவர்கள் உள்ளான இருதயத்தோடு சபைகளில் கூடுகின்றார்களா? சற்று சிந்தியுங்கள்.

    எந்தக் காரணத்திற்காக இஸ்ரவேலருக்குக் கட்டளையிடப்பட்ட கிருபை எடுக்கப்பட்டதோ, அதே நிலை கிறிஸ்தவர்களிடமும் காணப்படுகின்றது. எனவே கிருபை இஸ்ரவேலரிடத்தில் மீண்டும் கொண்டுசெல்லப்படும்.

    எல்லா ஜனங்களின் முன்பாகவும் பிரமாணம் கொடுக்கப்படுவதில்லை. மோசே சீனாய் மலையில் தனித்திருந்தபோது, கற்பனைகளைப் பெற்றுக்கொண்டான். அது நியாயப்பிரமாணமானது.

    தேவன் எல்லா ஜீவராசிகளையும் உருவாக்கினார். எல்லா கனி கொடுக்கக்கூடிய விருட்சங்களையும் உருவாக்கினார். அப்படி எல்லாவற்றினையும் உருவாக்கி, நீங்கள் இவை யாவற்றையும் புசியுங்கள், அவைகள் உங்களுக்கு ஆகாரமாய் இருக்கக்கடவது என்றார்.

ஆதி. 1: 29-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;"

    இங்கே கனிகொடுக்கக்கூடிய சகல விருட்சங்களின் கனிகளையும் நீங்கள் புசித்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், விதை தரக்கூடிய சகலவிதப் பூண்டுகளையும் நீங்கள் புசித்துக் கொள்ளுங்கள் என்றும் கர்த்தர் கூறியுள்ளதை நாம் பார்க்கின்றோம். இவைகளில் எந்தவொரு விருட்சத்தின் கனியும் அவர்களுக்குத் தடை செய்யப்படவில்லை. இவைகள் யாவற்றையும் புசிக்கும்படியாகவே அவர் கூறியுள்ளார். இவைகள் தேவத்துவத்தில் கூறப்பட்ட கட்டளைகளாகும். தேவத்துவத்தில் எந்தவொரு விருட்சத்தின் கனியும் தடை செய்யப்படவில்லை. சகலவித விருட்சத்தின் கனிகளையும் புசிக்கலாம் என்றே கட்டளையிடப்பட்டது.

ஆதி. 2: 7-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்."

    ஆதாம் என்ற மனிதன் கர்த்தர் உருவாக்கிய தேவத்துவ கிரியையான பூமியின் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டான். அவனுக்குள் ஜீவ சுவாசத்தினை ஊதினார். அவன் ஜீவாத்துமா ஆனான். ஆத்துமா கொண்ட அந்த மனிதனுக்கு ஒரு பிரமாணம் கட்டளையிடப்பட்டது. அது கர்த்தத்துவ கிரியையினால் உருவான மனிதனுக்கு கொடுக்கப்பட்ட பிரமாணமாகும்.

ஆதி. 2: 16, 17-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.

    ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்."

    இங்கே ஒரு காரியத்தினைக் குறித்து கர்த்தர் கூறுவதை நாம் பார்க்கின்றோம். ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் எல்லாவற்றையும், அதாவது சகலத்தையும் புசிக்கலாம் என்றார். அதிலே தடையே கிடையாது என்று சாட்சியிட்டவர், ஆதாமிடம், நீ தோட்டத்திலுள்ள சகலவித விருட்சங்களின் கனிகளையும் புசிக்கலாம்; ஆனாலும் நன்மை தீமை அறிய செய்யக்கூடிய அந்த விருட்சத்தின் கனியினை மாத்திரம் புசிக்கக்கூடாது என்று கட்டளையிட்டார். இந்தக் கட்டளை அவரது பிரமாணமாக சாட்சியிடப்பட்டுள்ளது.

    தேவத்துவத்தில் இத்தகைய பிரமாணம் ஏதும் கட்டளையிடப்படாத நிலையில், கர்த்தத்துவத்தில் உருவாக்கப்பட்ட ஆதாமிற்கு மாத்திரம் இந்தப் பிரமாணம் கட்டளையிடப்பட்டது. ஜென்மசுபாவத்தாருக்கு அதாவது தேவத்துவத்தில் உருவாக்கப்பட்டவர்களுக்கு இந்தப் பிரமாணம் கட்டளையிடப்படவில்லை. ஜென்மசுபாவத்தாருக்குக் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதம் "பலுகிப் பெருகுங்கள்" என்பதேயாகும். அவர்களை ஆணும் பெண்ணுமாய்ப் பலுகிப் பெருகுங்கள் என்று ஆசீர்வதித்தார்.

    இப்படியான கிரியைகளைச் செய்யாதே, அதாவது இத்தகைய கனியினைப் புசிக்காதே என்பது ஆதாமிற்குக் கட்டளையிடப்பட்ட பிரமாணமாகும். அது கர்த்தத்துவத்தில் அவர் சிருஷ்டித்த ஆதாமுக்குக் கொடுக்கப்பட்ட பிரமாணமாகும். கர்த்தத்துவ ஜனங்களுக்குள் மற்றவர்களிடம் கட்டளையிடப்படாத கிருபையின் பாத்திரமான ஆவியின் சரீரம் உருவாக்கப்பட்டது. அன்று மற்ற ஜனங்களுக்குள் இல்லாத கிருபையின் பாத்திரமான ஆத்துமா என்ற உள்ளான சரீரம் ஆதாமிற்குள் இருந்தது. அதனால்தான் ஆதாமிற்கு பிரமாணம் சாட்சியிடப்பட்டது. கர்த்தத்துவத்திற்குரியவர்களுக்கு மாத்திரமே பிரமாணம் கட்டளையிடப்படுகின்றது. அன்று மற்ற ஜனங்களுக்கு கிடைக்காத ஒரு ஆசீர்வாதம் ஆதாமிற்குள் இருந்தது. அது கர்த்தர் அவனுக்குள்ளாகக் கொடுத்த ஜீவசுவாசத்தினால் பிறந்த உள்ளான மனிதனாகும். அந்த உள்ளான மனிதன் கொண்ட ஜனத்திற்குத்தான் கர்த்தத்துவத்தில் பிரமாணங்கள் கட்டளையிடப்பட்டுள்ளது. கர்த்தத்துவத்திற்கான இந்தப் பிரமாணமும் காலத்திற்குக் காலம் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது. ஆதாமிற்குக் கொடுக்கப்பட்ட அந்தப் பிரமாணம் அவன் சந்ததியாருக்கு தொடர்ந்து கட்டளையிடப்படவில்லை. அப்படியிருந்திருக்குமேயானால், பிந்தின ஆதாமின் பிள்ளைகளான நமக்கும் அந்த விருட்சமும் அதின் கனிகளும் தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இன்றைக்கும் இருந்திருக்கும்.

ஆதி. 6: 5, 6, 8-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,

    தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.

    நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது."

    நோவாவின் காலம் கர்த்தத்துவத்தின் அடுத்த கிரியையின் காலமாகும். நோவாவின் நாட்களில் ஆத்துமா கொண்ட ஆதாமின் மற்ற சந்ததியார் யாவரும் மாமிச அழிவைக் கண்டார்கள்; அவர்களோடு அந்தப் பகுதியில் குடியிருந்த ஜென்மசுபாவத்தாரும் மரித்தார்கள். கர்த்தர் அதைக் குறித்து வேதனைப்பட்டார். ஆனால்,நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது என்று வேதம் கூறுகின்றது. நோவா, அவனுடைய காலத்தில் வாழ்ந்த ஆவியின் சரீரம் கொண்டவர்கள் மத்தியில் நீதிமானாகக் காணப்பட்டான். அதனால்தான் அவன் குடும்பத்தை இரட்சிக்க பேழையினைக் கட்டும்படி கர்த்தர் கட்டளையிட்டார். நீ வாழும் இந்தப் பூமி ஜலத்தினால் அழிக்கப்படப்போகின்றது; உன்னையும் உன் குடும்பத்தாரையும் காக்கும்பொருட்டு பேழையினைக் கட்டு என்று கட்டளையிடப்பட்டது. கர்த்தர் கூறியபடி வானத்தின் மதகுகளும், பூமியின் ஊற்றுகளும் திறவுண்டன. ஜலத்தினால் அந்தப் பகுதி அழிக்கப்பட்டது. பேழை அரராத் மலையின்மேல் நின்றது. ஆத்துமா கொண்ட நோவா குடும்பத்தினர் மாத்திரம் அப்போது காக்கப்பட்டார்கள். அதன்பின்னர் நோவாவின் சந்ததியார் ஆத்துமா கொண்டவர்களாக இந்தப் பூமியில் பெருக ஆரம்பித்தார்கள். ஆதாமின் மற்ற சந்ததியார் யாவரும் ஜலத்தினால் அழிக்கப்பட்டார்கள். அப்போது ஒரு பிரமாணத்தினைக் கர்த்தர் கட்டளையிட்டார்.

ஆதி. 9: 1-4-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.

    உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன.

    நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.

    மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்."

    பூமியில் நடமாடுகின்ற ஜீவஜந்துக்கள் யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும் அவர்களுக்கு ஆகாரமாய் கொடுக்கப்பட்டது. பூமியில் நடமாடுகின்ற எல்லா ஜீவஜந்துக்களையும் அவர்கள் புசித்துக்கொள்ளலாம். பசும்பூண்டுகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன் என்றார்.

    ஆனால் அப்போது "மாமிசத்தினை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்" என்ற புதிய பிரமாணம் கட்டளையிடப்பட்டது. அவர்கள் நடமாடுகின்ற எல்லா ஜீவஜந்துக்களையும் புசிக்கலாம்; ஆனால் அவைகளை அவர்கள் இரத்தத்தோடே புசிக்கக்கூடாது. இதுதான் நோவாவின் சந்ததியார்களுக்கு கொடுக்கப்பட்ட பிரமாணமாகும். அப்போதும் ஜென்மசுபாவத்தார்களுக்கு இந்தப் பிரமாணம் கட்டளையிடப்படவில்லை. அவர்கள் இரத்தத்தைப் புசித்துக் கொள்ள தடை செய்யப்படவில்லை. பிரமாணம் நோவாவிற்கும் அவன் சந்ததிகளுக்கும் மாத்திரமே கட்டளையிடப்பட்டது. நோவாவும் நோவாவின் குடும்பத்தாரும் அப்போது ஆத்துமா என்ற உள்ளான மனிதனைக் கொண்டவர்களாக இருந்தார்கள். கர்த்தத்துவத்திற்குள்ளானவர்களாக அவர்கள் இருந்தார்கள். எனவே பிரமாணம் அவர்களுக்காக மாத்திரம் கட்டளையிடப்பட்டது.

    பிரமாணம் அவர்களுக்குள்ளாக மாத்திரம் கொடுக்கப்பட்டது. அவர்கள் கர்த்தத்துவத்திற்குள்ளான கிருபை பெற்ற ஜனமாதலால், அவர்களுக்கு மாத்திரம் பிரமாணம் கட்டளையிடப்பட்டது. பிரமாணத்தின்படி நடப்பவன் தேர்ச்சி பெற்றவன்; பிரமாணத்தின்படி நடக்காதவர்கள் தேர்ச்சி பெறாதவர்கள். தேர்ச்சி பெற்றவர்கள் கர்த்தருடைய சுதந்திரத்தில் பங்கடைய கிருபை பெற்றவர்கள்.

    ஆதாமிற்கு ஒரு பிரமாணத்தினைக் கொடுத்தார். ஆதாம் அந்தப் பிரமாணத்தினை மீறி நடந்தான். எனவே தம்மோடு இருக்கக்கூடிய உறவை அவனிடத்திலிருந்து துண்டித்துவிட்டார். அவன் தேவசமுகத்தில் பெற்றுக்கொள்ள இருந்த சுயாதீனம், ஆசீர்வாதம், சுதந்திரபாகம் எல்லாம் பறிபோய்விட்டது. அவன் ஏதேனிலிருந்து துரத்தியடிக்கப்பட்டான். ஏதேன் கர்த்தரின் தோட்டம். அது கர்த்தத்துவ ஜனங்களுக்கான ஸ்தலம். அதுபோல கிறிஸ்தவம் என்பது கர்த்தத்துவ ஜனங்களுக்காக உருவாக்கப்பட்ட தோட்டமாகும். கர்த்தத்துவ ஜனங்களுக்கு மற்ற ஜனங்களைக் காட்டிலும் அதிகப்படியான ஆசீர்வாதம் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆதாமுடைய சந்ததி ஆபேல், காயீன் என்று இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. அதற்குப்பின்னர் ஏனோக்கின் காலம். அது தேவனோடு சஞ்சரிக்கும் பிரமாணத்தின் காலம். ஏனோக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான். அதன் பின்னர் நோவாவின் நாட்கள். இப்போது பிரமாணம் மாற்றியமைக்கப்பட்டது. பேழைக்குள் பிரவேசிக்க வேண்டும் என்ற புதிய பிரமாணம் கட்டளையிடப்பட்டது. அதற்குமுன் இப்படியான ஒரு பிரமாணம் கட்டளையிடப்படவில்லை.

    ஆதாமிடம் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியினைப் புசிக்கக்கூடாது என்று கட்டளையிட்டார். ஆனால், நோவாவிடம் இந்தத் தடை நீக்கப்பட்டு, எல்லாக் கனிகளையும் புசிக்கலாம்; எல்லா ஜீவஜந்துக்களையும் புசிக்கலாம், ஆனால் இரத்தத்தோடு மாமிசத்தைப் புசிக்கக்கூடாது; காகம், நீர்க்காகம், முயல், பன்றி போன்றவற்றைக்கூட புசிக்கலாம். ஆனால் எதைப் புசித்தாலும் அதின் இரத்தத்தோடே புசிக்கக்கூடாது. இதுதான் நோவாவிற்கும் அவன் சந்ததிகளுக்கும் கட்டளையிடப்பட்ட பிரமாணமாகும்.

    அதற்குப்பின்னர், கர்த்தத்துவ ஜனங்கள் பலுகிப் பெருக ஆரம்பித்தார்கள். அதன்பின்னர் கர்த்தர் ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்தார். ஆபிரகாமை ஆசீர்வதித்தார்; ஈசாக்கை ஆசீர்வதித்தார்; யாக்கோபை ஆசீர்வதித்தார்; தன்னை ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய தேவன் என்று சாட்சியிட்டார். அவர்கள் நோவாவின் சந்ததிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டார்கள்.

    கர்த்தர், தான் கர்த்தராக இருந்தும், தான் சகலத்தினையும் சிருஷ்டித்தவராக இருந்தும், தன்னைக்குறித்து "நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய தேவன்" என்று சாட்சியிட்டார். முற்பிதாக்களாகிய அவர்களின் சந்ததியில் வந்த இஸ்ரவேலர்களுக்கு அந்தக் கிருபை கட்டளையிடப்பட்டது. பூமியில் குடியிருந்த மற்ற எந்த ஜனத்திற்கும் கிடைக்காத ஒரு கிருபை அன்று யாக்கோபின் வம்சத்தாராகிய இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்டது. இங்கே பிரமாணம் அவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்டது.

    ஆத்துமா கொண்ட முதல் மனிதனான ஆதாமிற்கு ஒரு விருட்சத்தின் கனி மாத்திரம் தடை செய்யப்பட்டது. மீதமுள்ள எல்லாவற்றையும் புசிக்கலாம் என்றார்.

    அதன்பின்னர் நோவாவின் சந்ததியார்கள் எல்லா கனிகளையும் புசிக்கலாம், அவர்களுக்கு எந்தக் கனியும் தடை செய்யப்படவில்லை, எல்லா ஜீவராசிகளையும் புசிக்கலாம், ஆனால் அவைகளை இரத்தத்தோடே புசிக்கக்கூடாது.

    முதலாவது தடை செய்யப்பட்டது நன்மைதீமை அறியக்கூடிய விருட்சத்தின் கனி.

    இரண்டாவது தடை செய்யப்பட்டது மாமிசத்தின் உயிரான இரத்தம்.

    மூன்றாவதாக, இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்டது நியாயப்பிரமாணமாகும். இந்தப்பிரமாணமானது பல பிரமாணங்களை தன்னகத்தே கொண்டதாகக் கட்டளையிடப்பட்டது.

    இப்போது கிருபை ஆதாமின் சந்ததியில் வந்த இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இஸ்ரவேல் வம்சத்தார் பரிசுத்தமுள்ள ஜனம் என்றும், கர்த்தரது ஜனம் என்றும் சாட்சியிடப்பட்டார்கள். பூமியில் குடியிருந்த எல்லா ஜனங்களைக் காட்டிலும் அவர்களிடத்தில் அவர் அன்பு கூர்ந்தார்; அவர்கள் விசேஷித்தவர்களானார்கள். அதற்குக் காரணம், அவர்களுக்குள்ளாக இருந்த உள்ளான மனுஷனான ஆத்துமா என்ற விசேஷித்த தன்மையாகும். அதனால் அவர்கள் விசேஷித்தவர்கள். மற்றவர்களுக்கு இல்லாத ஒரு கிருபை அவர்களுக்குள் இருந்தது. அது ஆசீர்வாதமாய் அவர்களுக்கு அமைந்தது. இங்கே எந்தக் கனியினை வேண்டுமானாலும் அவர்கள் புசித்துக்கொள்ளலாம்; தடையில்லை. ஆனால் மாமிசத்தில் புசிக்கத்தக்கவைகள் இவை என்றும், புசிக்கத்தகாதவைகள் இவை என்றும் வேறுபிரிக்கப்பட்டது. ஜீவராசிகளில் ஊர்வன, பறப்பன, நீரில் உள்ள மச்சங்கள், மிருக ஜீவன்கள் என இவைகளில் புசிக்கத்தக்கது இன்னதென்றும், புசிக்கத்தகாதது இன்னதென்றும் வேறு பிரிக்கப்பட்டது. லேவியராகமத்தில் இவைகளைக் குறித்து நாம் பார்க்கின்றோம். லேவியன் ஆசாரியன்; ஜனங்களை வழிநடத்துகிறவன்; பிரமாணம் அவன் மூலமாகக் கட்டளையிடப்பட்டது. எது புசிக்கத்தக்கது, எது அருவருப்பானது, எதை புசிக்கலாம், எதை புசிக்கக்கூடாது என்று வேறுபிரிக்கப்பட்டது. அதுவே பிரமாணமாகக் கொடுக்கப்பட்டது.

    முதல் இரண்டு கற்பனைகளைக் காட்டிலும் நியாயப்பிரமாணமானது அநேக கற்பனைகளை தன்னகத்தே கொண்டதாய் இருந்தது. திரள் ஜனமாயிருந்த இஸ்ரவேலாரில் இருந்து தமக்கு உரியவனைப் பிரித்தெடுக்க பிரமாணம் கொடுக்கப்பட்டது. இந்தப் பிரமாணமானது கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், இரத்தத்திற்கு இரத்தம், ஜீவனுக்கு ஜீவன், கைக்கு கை, காலுக்கு கால் என்று கடினப்படுத்தப்பட்டது. இஸ்ரவேலர்களாகிய தமது ஜனம் புசிக்கத்தக்க ஜீவராசிகள் இன்னதென்றும், புசிக்கத்தகாத ஜீவராசிகள் இன்னதென்றும் வேறுபிரித்தார். புசிக்கத்தக்கதான உயிரினங்களாக இருந்தாலும், அதனை இரத்தத்தோடே புசிக்க அவர் அனுமதிக்கவில்லை.

    நோவா காலத்தில் மிருகங்கள் வேறுபிரிக்கப்படவில்லை. எந்த மிருகத்தினை வேண்டுமானாலும் புசித்துக்கொள்ளலாம். ஆனால், அவைகளின் இரத்தம் தடை செய்யப்பட்டது.

    ஆனால் இங்கே இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணம் சற்று கடினப்படுத்தப்பட்டதாகவே கொடுக்கப்பட்டது. அவர்களுக்குள் இரத்தம் பூரணமாய் தடை செய்யப்பட்டது. ஆனால் ஜீவராசிகளில் இவைகளைப் புசிக்கலாம் என்றும், இவைகளைப் புசிக்கக்கூடாது என்றும் வேறுபிரிக்கின்றார். புசிக்கத்தகாத ஜீவராசிகள் அருவருப்பானவைகள் என்றும், தீட்டானவைகள் என்றும், அவைகளைத் தொடுகின்றவன் தீட்டாயிருப்பான் என்றும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இவைகள் இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட பிரமாணமாகும். அதனை அடுத்து கிருபையான கர்த்தத்துவம் புறஜாதிகளிடம் இயேசுகிறிஸ்து மூலம் கொண்டுவந்து சேர்க்கப்படுகின்றது. கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்ட இந்தக் கிருபையின் காலம் சபைக்காலங்களாக பிரிக்கப்பட்டது. அது புதிய ஏற்பாடாகும். இப்போது கிறிஸ்தவர்களாகிய நாம் பிரமாணத்திற்குரிய ஜனங்களாகின்றோம்.

    கடினப்படுத்தப்பட்டிருந்த பிரமாணமானது கிறிஸ்தவர்களுக்குள்ளாக வரும்போது சற்று இலகுபடுத்தப்பட்டது. எப்படி இலகுபடுத்தப்பட்டது?

அப். 21: 25-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "விசுவாசிகளான புறஜாதியார் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்ததற்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள்."

  1. விக்கிரகத்திற்கு படைக்கப்பட்டதற்கு

  2. இரத்தத்திற்கு

  3. நெருக்குண்டு செத்ததற்கு

  4. வேசித்தனத்திற்கு

    மேற்கூறிய இவைகளுக்கு விலகியிருக்க வேண்டும் என்று சாட்சியிடப்பட்டது. இவைகள் சங்கம காலத்தில் அதாவது புதிய ஏற்பாட்டின் முன்பகுதியில் பிரமாணமாகக் கட்டளையிடப்பட்டது. மேலும் ஏழு சபைக்காலங்களாகப் பிரிக்கப்பட்டு ஏழு சபைகளுக்குரிய பிரமாணங்கள் கட்டளையாக கொடுக்கப்பட்டது. இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட பிரமாணங்களைவிட புறஜாதிகளுக்கு, அதாவது கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பிரமாணம் மிகவும் இலகுபடுத்தப்பட்ட பிரமாணமாகும். காரணம், கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பிரமாணம் கிருபைப் பிரமாணமாகும்.

    இஸ்ரவேலரைக்காட்டிலும் திரள் கூட்டமான ஜனம் புறஜாதியிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. இது கிருபையினால் கிடைத்த தெரிந்துகொள்ளுதல் ஆகும். இதற்கு முன்னர் ஜென்மசுபாவத்தாருக்கு கர்த்தத்துவத்தில் கிருபை கட்டளையிடப்படவில்லை. எனவே பிரமாணங்கள் கட்டளையிடப்படவில்லை. பிரமாணங்கள் கர்த்தத்துவத்திற்குரியது. ஆவியின் சரீரம் கொண்டவர்கள் மாமிசத்தில் செய்யவேண்டிய கிரியைகளே பிரமாணம் என்று சாட்சியிடப்படுகிறது.

    ஆறாம் நாளில் சிருஷ்டிக்கப்பட்ட ஜென்மசுபாவத்தாருக்குள் பிரமாணங்கள் கட்டளையிடப்படவில்லை. அவர்கள் விசுவாசத்தின்மூலம் கிறிஸ்தவர்களாக மாறிய பின்னரே, அவர்களுக்குள் ஆவியின் சரீரம் உருவாகிற்று. அப்படி ஆவியின் சா£ரம் கொண்டவர்களுக்குள் மாத்திரமே கர்த்தத்துவப் பிரமாணம் கட்டளையிடப்படுகின்றது. ஆவியின் சரீரம் கொண்டவர்களுக்குள் கொடுக்கப்பட்ட பிரமாணங்கள் கீழ்க்காணுமாறு சாட்சியிடப்படுகின்றது:

  1. ஆதாமிற்குக் கொடுக்கப்பட்ட பிரமாணம்.

  2. நோவாவிற்குக் கொடுக்கப்பட்ட பிரமாணம்.

  3. இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட பிரமாணம்.

  4. கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பிரமாணம்.

    சிருஷ்டிப்பில் எந்தவொரு காரியமும் தடைசெய்யப்படவில்லை. ஆனால் கர்த்தத்துவத்தின் சிருஷ்டிப்பில் மாத்திரமே பிரமாணங்கள் கட்டளையிடப்பட்டுள்ளது. அங்கே சில காரியங்கள் தடை செய்யப்படுகின்றது. அந்தத் தடை ஜென்மசுபாவத்தார்களுக்கு இல்லை.

    எகிப்து தேசத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் மீட்டெடுக்கப்பட்டு வழிநடத்தப்பட்டார்கள். அவர்கள் எகிப்திற்குள் 430 வருடம் சிறைப்பட்டு இருந்தார்கள். யோசேப்பு முதலாவதாக எகிப்து தேசத்தில் விற்கப்பட்டான். அதன்பின்னர் அங்கே பார்வோனுக்கு அடுத்த நிலையில் உயர்த்தப்பட்டான். யோசேப்பு அங்கே சென்றபின்னர் யாக்கோபு தன் குமாரரோடு எகிப்திற்குச் சென்றான். 70 பேர் எகிப்திற்குச் சென்றார்கள். அதன்பின்னர் இஸ்ரவேல் சந்ததி அங்கே பெருக ஆரம்பித்தது. அந்த தேசத்தில் அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள். யோசேப்பை அறியாத ராஜா வந்தபோது இஸ்ரவேலர் அடிமைப்படுத்தப்படுகின்றார்கள். ஆளோட்டிகள் மூலம் வேதனைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். அப்போது அவர்களுக்கு அந்த அடிமைத்தன வேதனையிலிருந்து வெளியேறி வரக்கூடிய சிந்தனை மாத்திரமே இருந்தது. அந்த நிலையில் அவர்களுக்குள் எந்தப் பிரமாணமும் கொடுக்கப்படவில்லை.

    எகிப்தில் இருக்கும்வரையிலும் இஸ்ரவேலர்கள் பின்பற்ற பிரமாணம் எதுவும் கட்டளையிடப்படவில்லை. எகிப்தினை விட்டு வெளியேறி வரும்போதுதான் பிரமாணம் கொடுக்கப்பட்டது. எகிப்தில் இருந்த காலம்வரை அவர்கள் சகலத்தையும் புசித்தார்கள்.

    எகிப்து தேசத்தினைவிட்டு வெளியேறி வந்தபின்னரே மோசேயின் மூலம் பிரமாணத்தினைக் கர்த்தர் கட்டளையிட்டார். எகிப்திலிருந்த ஜனங்கள் கானானுக்குள் குடியமர்த்தப்பட்டார்கள். எருசலேமிலும் குடியமர்த்தப்பட்டார்கள். குடியமர்த்தப்பட்ட அந்த தேசத்திற்குள்ளாக எருசலேமைத் தமக்கென்று தெரிந்தெடுத்தார். அங்கே அவருக்கென்று தேவாலயம் எழுப்பப்பட்டது. அதுவே மகாராஜாவின் நகரமாயிற்று. எகிப்தில் இருந்த காலம்வரையிலும் இஸ்ரவேலர்களுக்குள் எந்தவொரு பிரமாணமும் கட்டளையிடப்படவில்லை; எருசலேமில் பிரமாணம் கொடுக்கப்பட்டது.

    எகிப்தினைவிட்டு வெளியேறி செல்லும்போதே அங்கே பிரமாணத்தினைக் கட்டளையிட்டார். அவர்கள் பிரமாணங்களைப் பெற்றவர்களாக எருசலேமில் குடியமர்த்தப்பட்டார்கள். கண்ட இடத்தில் பலி செலுத்த பிரமாணம் அனுமதிக்கவில்லை; எருசலேம் தேவாலயத்தில்தான் பலி செலுத்தவேண்டும் என்பது பிரமாணம். எருசலேமிலுள்ள பண்டகசாலையில்தான் தசமபாகங்களைக் கொண்டு சேர்க்கவேண்டும் - இதுவும் பிரமாணம்.

    எருசலேம் பிரமாணத்திற்குரிய இடமாயிருந்தது. ஆனால் எகிப்து பிரமாணத்திற்குரிய இடமாயிருக்கவில்லை. இஸ்ரவேலர் - எருசலேம் நகரம் என்று பொருள் கொள்ளும்படியாய் சாட்சியிடப்பட்டுள்ளது. எனவே பிந்தின எருசலேம் கிறிஸ்தவர்கள் என்று பிரிக்கப்பட்டார்கள். முந்தின எருசலேம் நியாயப்பிரமாணம் என்ற அடிமைத்தனத்திற்குள்ளாக சென்ற நிலையினை பவுல் சாட்சியிடுவதை நாம் பார்க்கின்றோம்.

கலா. 4: 25-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "ஆகார் என்பது அரபிதேசத்திலுள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி, இவள் தன் பிள்ளைகளோடேகூட அடிமைப்பட்டிருக்கிறாளே."

    கிருபைப் பிரமாணத்தைக் கொண்ட புதிய ஏற்பாடு ஆரம்பமானவுடன் இஸ்ரவேலர்களின் எருசலேம் கிருபை இழந்து அடிமையாகி ஆகாராக மாறிற்று. ஆகார் எகிப்து தேசத்தினைச் சேர்ந்தவள்.

ஆதி. 16: 1-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர்கொண்ட ஒரு அடிமைப்பெண் அவளுக்கு இருந்தாள்."

    அவளைக் குறித்து "எகிப்து தேசத்தாளாகிய ஆகார்" என்று கூறப்பட்டுள்ளது. ஆகார் எகிப்து தேசத்தினைச் சேர்ந்தவள். எருசலேம் அடிமைத்தனத்திற்குள்ளாக மாறியிருக்கும்போது, அது எகிப்தாக சாட்சியிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலர்கள் எகிப்தில் இருந்து எருசலேமிற்கு வந்தார்கள். இது பழைய ஏற்பாடு. அதன்பின்னர் புதிய ஏற்பாட்டின் காலத்தில் எருசலேம் எகிப்தாக மாற்றப்பட்டிருந்தது. இயேசுகிறிஸ்து மாமிசத்தில் வந்தபோது எருசலேம் நகரம் கிருபை இழந்த நகரமாக இருந்தது. அது கர்த்தரை ஏற்றுக்கொள்ளவில்லை. அது எகிப்தாக மாறியிருந்தது. அதனால்தான் புதிய பிரமாணத்தைக் கொண்டுவந்தவரை அது ஏற்றுக்கொள்ளவில்லை; மேசியாவை அங்கீகரிக்கவில்லை. அவரை வெளியே தள்ளிற்று. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் அவர்கள் எகிப்திலிருந்து எருசலேமிற்குள் வந்தார்கள். புதிய ஏற்பாட்டுக்காலத்தில் அந்த எருசலேம் எகிப்தாக, அதாவது நியாயப்பிரமாணத்தினால் அடிமைப்படுத்தப்பட்டதாயிருந்தது. காரணம், அவர்கள் நிறைவேறின நியாயப்பிரமாணத்தினைப் பற்றிக்கொண்டிருந்தார்கள். எனவே, எருசலேமிலிருந்து வெளியே வர கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அது புதிய ஏற்பாட்டு பிரமாணமாய் சாட்சியிடப்பட்டது. பழைய பிரமாணத்தை விட்டு வெளியேறி வந்தவர்கள் சுயாதீனமுள்ளவளாகி, மேலான எருசலேமாக சாட்சியிடப்பட்டார்கள். சுயாதீனமுள்ளவள் சாராள்; மேலான எருசலேம் சுயாதீனமுள்ளவள். அவர்கள் அவளின் பிள்ளைகளானார்கள்.

யோசுவா 5: 6-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்தபுருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேல் புத்திரர் நாற்பதுவருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார்."

    எகிப்து தேசத்தில் இருந்து வெளியேறி வந்த இஸ்ரவேலர்கள் அடிமைத்தன நுகத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு எருசலேமிற்குள் குடியமர்த்தப்பட்டார்கள். அப்போது எருசலேம் சுயாதீனமுள்ளவளாகச் சாட்சியிடப்பட்டாள். எகிப்து தேசத்திலிருந்து பிரயாணப்பட்டவர்களில் சுயாதீனமுள்ளவர்கள் வேறுபிரிக்கப்பட்டார்கள். எகிப்தில் இருந்து புறப்பட்ட யாவரும் சுயாதீனத்திற்குரியவர்கள் அல்ல. சுயாதீனத்திற்குரியவர்களைப் பிரித்தெடுப்பதற்காகவே பிரயாணக் காலம் என்று ஒரு கால அளவு நிர்ணயிக்கப்பட்டது. அது கிரியைக்குரிய காலமாகும்.

    எகிப்திலிருந்து எருசலேமிற்குள் சென்றடைய ஒரு பிரயாணக் காலம் திட்டம் செய்யப்பட்டது. இந்தப் பிரயாணக் காலத்தில் யார் யாரெல்லாம் இடறலுக்கு என்று நியமிக்கப்பட்டார்களோ, அவர்கள் இடறிவிழுந்தார்கள். பிரயாணக் காலத்தில் இடறி விழுந்தவர்கள் மரணத்திற்கு உரியவர்கள் ஆனார்கள். இந்தப் பிரயாணக் காலத்தில் இடறலடையாமல் இருந்தவனே சுயாதீனமுள்ளவன். அவன் நித்திய ஜீவனுக்குரியவனானான். ஜீவனுக்குரியவர்களை வேறுபிரிக்கவே இந்தப் பிரயாணக் காலம் என்ற கால அளவு நிர்ணயிக்கப்பட்டது. அது வனாந்திரக் காலம் என்று சாட்சியிடப்பட்டிருக்கின்றது. எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலர்கள் வாக்குத்தத்த தேசத்தை சென்றடையும் முன் ஒரு வனாந்தர காலம் என்பது இடைநிகழ்வாகக் கட்டளையிடப்பட்டது. இந்த வனாந்திர யாத்திரையில் ஆக்கினைக்குரியவர்கள் இடறலுக்கும், ஜீவனுக்குரியவர்கள் எருசலேமிற்குள்ளும் சென்றடைந்தார்கள். மீறுதலின் காரணமாக அவர்கள் எருசலேமுக்குள் செல்ல இயலாதவர்களாகி ஆக்கினைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அவர்கள் ஆத்தும மரணம் என்ற இரண்டாம் மரணத்திற்குரியவர்களாக தீர்க்கப்பட்டார்கள்.

    எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலர்கள் யாவரும் விசுவாசம் கொண்டவர்களாகவே இருந்தார்கள். விசுவாசம் இல்லாதிருந்தால், அவர்கள் எகிப்தில் இருந்து வெளியேறி வந்திருக்கமாட்டார்கள். எகிப்தில் இருந்து புறப்பட்டபோது விசுவாசத்தோடே புறப்பட்டார்கள். அநேக அற்புதங்களும் அடையாளங்களும் எகிப்திலே அவர்கள் கண்முன் நிகழ்ந்தது. அற்புதங்களையும் அடையாளங்களையும் கண்ணாரக்கண்டு எகிப்திலிருந்து வெளியேறினார்கள். கண்டு விசுவாசித்தவர்களாய் அவர்கள் வெளியேறினார்கள். எகிப்தியரிடமிருந்து பொன், பொருள்களை வாங்கிக் கொண்டு வெளியேறினார்கள். இப்போது அவர்களின் விசுவாசம் இன்னமும் அதிகமானது. அவர்கள் எகிப்தின் அடிமைத்தன வீட்டிலிருந்து விசுவாசத்தோடே வெளியேறினார்கள்.

    எகிப்திலிருந்து வெளியேறியபோது கானானை சென்றடைவோம் என்ற நம்பிக்கை கொண்டவர்களாகவே புறப்பட்டார்கள். ஆனால் செங்கடலைக் கண்டவுடன், வனாந்திரத்தில் எங்களைக் கொன்றுபோடவா அழைத்து வந்தீர் என்று மோசேக்கு எதிராக முறுமுறுத்தார்கள். பின்னாக பார்வோனுடைய சேனை, முன்னால் செங்கடல். எனவே இந்த முறுமுறுப்பு. கர்த்தரின் அற்புத கரம் செங்கடலைப் பிளக்கச் செய்தது. அதன் வழியாய் நடந்து சென்றார்கள். அதன்பின், மாராவின் தண்ணீர். அங்கே ஒரு முறுமுறுப்பு. பின்னர் இறைச்சிக்காய் ஒரு முறுமுறுப்பு. இப்படியாக அவர்கள் மாமிசத்தில் வனாந்தரத்தில் இருந்தாலும், அவர்களின் இருதயம் எகிப்திற்கு திரும்பியது என்று வேதம் கூறுகின்றது. எனவே அவர்கள் வழியிலே மரணத்திற்குள்ளானார்கள். அவர்களின் அவிசுவாசம் வனாந்தரத்திலே மரணத்தைக் காணச்செய்தது. இப்படியாக அவிசுவாசத்தில் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் மரிக்கும் மட்டும் வனாந்திரத்தில் சுற்றித் திரிந்தார்கள். அந்த அவிசுவாசமானது வார்த்தைக்கு எதிரான அவிசுவாசமே.

    ஆத்தும ஜனனத்திற்கென்று ஒரு பருவம் இருக்கின்றது. குழந்தைப்பருவம் ஆத்தும ஜனனத்திற்குரிய பருவம் அல்ல. ஆத்தும ஜனனத்திற்கென்று ஒரு கால அளவு இருக்கின்றது. மாமிச சரீரம் தன் வளர்ச்சியில் பூரணப்படும்போதுதான், ஆத்துமா என்கின்ற உள்ளான மனிதன் உருவாகின்றான். ஆத்துமா என்கின்ற உள்ளான மனிதன் மாமிச சரீரத்திற்குள் பூரணப்படும்போது, அந்த சரீரம் மரணத்திற்குள்ளாகின்றது.

    தாயின் வயிற்றில் ஒரு கரு குழந்தையாக உருவாக ஒரு கால அளவு இருக்கின்றது. கருவானது கை, கால், தலை, சரீரம் என அவயவங்களாக வளர்ச்சியடைந்து, குழந்தையாகப் பூரணப்பட்டு பிரசவிக்கப்படுவதுபோல, மாமிச சரீரத்திற்குள்ளாக ஆத்துமாவும் உருவாகி வளர்ந்து தன் நிலையில் பூரணப்படவேண்டும். அதற்காக ஒரு காலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. யுத்த புருஷனாகத் தீர்மானிக்கப்படும் வயது 20 ஆகும். அதுபோல, மாமிச சரீரத்தின் வளர்ச்சி பூரணப்படும்போதுதான் ஒரு மனிதனுக்குள் ஆத்துமா என்ற உள்ளான மனிதன் உருவாகின்றான். அப்படி உருவான ஆத்துமா அதற்கென்று கொடுக்கப்படும் காலத்திற்குள் பூரணப்பட வேண்டும். அது தன் வளர்ச்சியில் பூரணப்பட வேண்டும், கிரியைகளில் பூரணப்பட வேண்டும், தன் நிலையிலும் பூரணப்பட வேண்டும். அப்படி பூரணப்படுவதற்கென்று கர்த்தரது ஆதீனத்தில் ஒரு கால அளவு கட்டளையிடப்பட்டுள்ளது. சில ஆத்துமாக்கள் வாலிப வயதிலேயே பூரணமடைந்து விடும். சில ஆத்துமாக்கள் வயது சென்றபின் பூரணப்படும். இந்தப் பூரணம் என்பது மாமிச சரீரத்தில் ஆத்துமா இருக்கக்கூடிய கால அளவாகும். இவையாவும் கர்த்தத்துவத்தில் கர்த்தரால் திட்டம் செய்யப்பட்டுள்ள கால அளவு ஆகும்.

    யோவான்ஸ்நானனின் மாமிச சரீரமானது வாலிப வயதிலேயே மரணத்திற்குள்ளானது. அவன் மாமிசத்தில் இருந்த காலம் கிட்டத்தட்ட 33½ ஆண்டுகள் மட்டுமே.

    ஆபிரகாம் 175 வருடம் இந்தப் பூமியில் ஜீவித்தார் என்று வேதம் சாட்சியிடுகின்றது. வாக்குத்தத்தங்களின் தகப்பன் வாக்குத்தத்தங்களைப் பெறவும் தனது பின்சந்ததியாரை மாமிசத்தில் காணவும் கிருபை பெற்றவராக சாட்சியிடப்பட்டுள்ளார். அவர் செய்த நீதியின் கிரியையானது விசுவாசம் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. ஆபிரகாம் விசுவாசித்தான்- அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்றே வேதம் கூறுவதைக் காணலாம். விசுவாச மார்க்கத்தாரே ஆபிரகாமின் சந்ததிகளாகும். ஆபிரகாம் மாமிசத்தில் செய்த கிரியைகளே அவரைத் திரள் சந்ததியின் தகப்பனாய் உயர்த்தியிருக்கின்றது. கிரியைகளின் மூலமாக ஆத்துமா பூரணப்படும். அது வரையிலும் மாமிச சரீரத்திற்குள் ஆத்துமா காத்துக் கொண்டிருக்கும். ஆத்துமா கிரியைகளில் பூரணப்பட்ட பின்னர், மாமிச சரீரத்தினை விட்டு வெளியேறும். ஆத்துமா பூரணப்பட்ட பின்னரே மாமிச சரீரம் மரணத்திற்குள்ளாகும்.

    கோழி முட்டைக்குள் குஞ்சு வளர்ந்து பூரணப்படும் வரையிலும் அந்த முட்டை ஓட்டுக்குள்தான் இருக்கும். அது வளர்ந்தபின், தன் அலகினால் கொத்தி முட்டைக்கூட்டினை உடைத்து விட்டு வெளியேறிவிடும். அது பூரணப்பட்டபின், முட்டைக்குள்ளாக அதனால் தங்க இயலாது. ஒரு குழந்தை தன்னுடைய வளர்ச்சியில் பூரணப்பட்டபின், அது தன் தாயின் வயிற்றினுக்குள்ளே இருக்க இயலாது. தாமதமானால் அது நல்லதல்ல. அதனால் மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மூலம் அந்தக் குழந்தையினை வெளியே எடுத்துவிடுவார்கள். இது வளர்ச்சியின் பூரணத்தைக் காட்டுகிறது.

    எகிப்திலிருந்து புறப்பட்ட ஜனங்கள் விசுவாசத்தோடேதான் புறப்பட்டார்கள். ஆனால், கானானுக்குள் செல்லும் இடைப்பட்ட தூரத்திலே அவர்களுடைய இருதயம் கர்த்தருக்கு விரோதமாக முறுமுறுத்தபடியினால் கர்த்தருடைய கோபத்திற்கு உள்ளாகி வனாந்திரத்தில் அவர்களின் மாமிச சரீரங்கள் பிணமானது. அவர்களின் உள்ளான மனிதன் ஆக்கினைக்குரிய கிரியைகளில் பூரணப்பட்ட படியினால், அவர்கள் ஆக்கினைக்குரியவர்களாக தீர்க்கப்பட்டார்கள். 40 நாள் பிரயாணத்தூரம் 40 வருடமாக மாறிற்று. கானானுக்குள் செல்வதற்கு முன்னமே மீறுதலினால் வனாந்திரத்தில் மாரித்தது அவர்களது மாமிச சரீரம் மாத்திரமல்ல, அவர்களுக்குள் இருந்த உள்ளான மனிதனான ஆத்துமாவும் ஆக்கினைக்குரியதாக தீர்க்கப்பட்டது.

    ஆபிரகாம் முதலாவதாக எகிப்திற்குள் சென்றார் என்று பார்க்கின்றோம்.

ஆதி. 12: 10-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான்."

    ஆபிரகாம் எகிப்திற்கு மாமிச பூர்வமான நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்காகச் சென்றார்.

ஆதி. 12: 16-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அவள் நிமித்தம் அவன் ஆபிராமுக்குத் தயைபாராட்டினான்; அவனுக்கு ஆடுமாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும் கிடைத்தது."

    ஆடுமாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், ஒட்டகங்களும் அவருக்கு அங்கே கிடைத்தன என்று பார்க்கின்றோம்.

ஆதி. 13: 1-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள்."

    ஆபிரகாம் எகிப்திலிருந்து ஆசீவாதங்களைப் பெற்றுக்கொண்டு வெளியேறினார். எகிப்திற்கு பஞ்சத்தின் நிமித்தம் சென்றவர் அங்கிருந்து மாமிச நன்மைகளைப் பெற்றுக்கொண்டு வெளியேறினார். ஆசீர்வாதங்களைப் பெற்றபின் அங்கிருந்து வெளியேறினார். ஆபிரகாமின் காலத்திற்குப்பின்னரும், ஒரு பஞ்சம் யாக்கோபினுடைய காலத்தில் வந்தது. பஞ்சக்காலத்தில் தானியத்தினை வாங்கி வர தனது குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகின்றான் யாக்கோபு. அப்போது எகிப்தில் யோசேப்பு உயர்ந்திருந்தான். அதன்பின்னர் மாமிச நன்மைகளைப் பெறுவதற்காக யாக்கோபு தனது குடும்பத்தார் யாவருடனும் எகிப்திற்குச் சென்றான்.

    எகிப்திற்குப் போன ஆபிரகாம் ஆசீர்வாதங்களைப் பெற்றதும் வெளியேறி வந்துவிட்டார். ஆனால் யாக்கோபு மரணம் வரையிலும் அங்கேயிருந்தான். மரித்தபின்னர் அவன் சரீரத்தினை கானான் தேசத்தில் அவனுக்குச் சொந்தமான நிலத்தில் அடக்கம் பண்ணினார்கள். அதன்பின் யாக்கோபின் சந்ததிகளான இஸ்ரவேலர்கள் எகிப்திலே தங்கினார்கள்.

    ஆபிரகாம் எகிப்திற்குள் சென்று ஆசீர்வாதங்களைப் பெற்றபின்னர், வெளியேறினான். இஸ்ரவேலர்கள் ஆசீர்வாதங்களைப் பெற்றபின்னரும் அங்கேயே தங்கிவிட்டார்கள்.

ஆதி. 46: 2-6-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி: யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார்; அவன் இதோ, அடியேன் என்றான்.

    அப்பொழுது அவர்: நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன்; நீ எகிப்துதேசத்துக்குப்போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்.

    நான் உன்னுடனே எகிப்துக்கு வருவேன்; நான் உன்னைத் திரும்பவும் வரப்பண்ணுவேன்; யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான் என்று சொன்னார்.

    அதற்குப்பின்பு, யாக்கோபு பெயர்செபாவிலிருந்து பிரயாணம் புறப்பட்டான். இஸ்ரவேலின் குமாரர் தங்கள் தகப்பனாகிய யாக்கோபையும் தங்கள் குழந்தைகளையும் தங்கள் மனைவிகளையும் பார்வோன் அனுப்பின வண்டிகளின்மேல் ஏற்றிக்கொண்டு,

    தங்கள் ஆடுமாடுகளையும், தாங்கள் கானான் தேசத்தில் சம்பாதித்த தங்கள் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு, யாக்கோபும் அவன் சந்ததியார் யாவரும் எகிப்துக்குப் போனார்கள்."

    "நான் உன்னோடு கூட எகிப்து தேசத்திற்கு வருவேன். நான் உன்னைத் திரும்பவும் வரப்பண்ணுவேன்." என்ற வாக்குத்தத்தங்களைப் பெற்றுக்கொண்டு யாக்கோபு எகிப்திற்குச் சென்றான். ஏனென்றால், கானானுக்குள் பஞ்சம் ஏற்பட்டது. அங்கே தானிய குறைவு ஏற்பட்டது. எகிப்தில் நிறைய தானியங்கள் இருந்தது. யோசேப்பு யாக்கோபுவினுடைய கண்களை மூடுவான் என்று கர்த்தர் கூறியபடி யாக்கோபு எகிப்திலே மரணமடைந்தான். யாக்கோபை அவனுடைய சுதந்தர பூமியில் அடக்கம்பண்ணினார்கள். அதற்குப்பின்னர், இஸ்ரவேலர்கள் எகிப்தின் தேசத்தில் பலுகிப் பெருகினார்கள். கர்த்தர் குறித்தகாலத்தில் அவர்கள் எகிப்து தேசத்தினை விட்டு புறப்பட்டார்கள். அப்படி அங்கிருந்து புறப்பட்டபோது அவர்கள் வெறுமையாய் புறப்படவில்லை.

யாத். 12: 35, 36-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியாரிடத்தில் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள்.

    கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததினால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இவ்விதமாய் அவர்கள் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள்."

    எகிப்தியரை அவர்கள் கொள்ளையிட்டார்கள் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. எகிப்திலிருந்து ஆசீர்வாதத்தினை எடுத்துக்கொண்டு அவர்கள் புறப்பட்டார்கள். ஆபிரகாம் எகிப்திற்கு ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்ளச் சென்றார்; பெற்றுக்கொண்டார்.

    யாக்கோபும் எகிப்து தேசத்திற்குள்ளாக ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளச் சென்றார்; பெற்றுக்கொண்டார். இஸ்ரவேலர்களும் எகிப்து தேசத்தில் போஷிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்படும்போதும், பொன் பொருள் எல்லாவற்றையும் கொள்ளையாய் பெற்றுக்கொண்டு வெளியேறினார்கள். இவையாவும் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் நிறைவேறியவைகள். ஆசீர்வாதத்தினைக் கொடுக்கக்கூடிய ஒரு ஸ்தலமாய் எகிப்து இருந்தது என்று பார்க்கின்றோம். அதன்பின்னர் புதிய ஏற்பாடு ஆரம்பமாயிற்று.

மத். 2: 15, 18-20-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "ஏரோதின் மரணபாரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

    எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.

    ஏரோது இறந்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு:

    நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்திற்குப் போ; பிள்ளையின் பிராணனை வாங்கத்தேடினவர்கள் இறந்துபோனார்கள் என்றான்."

    இயேசுகிறிஸ்து என்ற குழந்தையை அதின் தாயும் தகப்பனும் எகிப்திற்குக் கொண்டு சென்றார்கள் என்று பார்க்கிறோம். ஏரோது கொன்று விடுவான் என்று பயந்து, குழந்தையினை இஸ்ரவேல் தேசத்திற்குள்ளாகக் கொண்டுசெல்லவில்லை. "எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்" என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறும்பொருட்டு இப்படி நடந்தது என்று பார்க்கிறோம். ஏரோது மரணமடையும் வரையிலும் குழந்தையும் அதின் தாயும் தகப்பனும் எகிப்தில் தங்கியிருந்தார்கள்.

    அதன்பின்னர் எகிப்திலிருந்து இஸ்ரவேல் தேசத்திற்குள் சென்றார்கள். இஸ்ரவேலர்கள் கானான் தேசத்திற்குள்ளாகக் குடியமர்ந்து அதை இஸ்ரவேல் தேசமாக மாற்றினார்கள். கர்த்தருடைய தூதன் இயேசுகிறிஸ்துவை எகிப்திலிருந்து இஸ்ரவேல் தேசத்திற்குள் கொண்டுசெல்லும்படியாய் அறிவித்தான். எகிப்து என்பது ஒரு ஆசீர்வாதத்தின் ஸ்தலமாகவே இருந்து வந்துள்ளது. வாக்குத்தத்தம் பெற்றவர்களுக்கு அது ஆசீர்வாதத்தினைக் கொடுக்கும் ஸ்தலமாகும். எகிப்து என்பது அடிமை தேசமாகும். அது சுயாதீனமுள்ளவனை அடிமைப்படுத்திவிடும். எனவேதான் ஆசீர்வாதத்தினைப் பெற்றபின் அதிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று ஒவ்வொரு நிலையிலும் சாட்சியிடப்பட்டுள்ளது. ஆசீர்வாதத்தினை கொடுத்த எகிப்து தன்னைவிட்டு வெளியே வந்த இஸ்ரவேலர்களை துரத்தி சென்றது. இரதங்கள், குதிரைவீரர்கள் முதலான அதனுடைய சேனைகள் இஸ்ரவேலர்களைத் துரத்திக்கொண்டு வந்ததைக் குறித்துப் பார்க்கின்றோம்.

    எகிப்து தேசத்தில் இருந்து பொருட்களைக் கொள்ளையாய் கொடுத்து அனுப்பியவர்கள் அதன்பின்னர் துரத்தி வந்த நிலையினைப் பார்க்கின்றோம். எகிப்து என்பது மாமிச நன்மையினைக் கொடுத்த ஒரு தேசமாக இருந்தாலும், அது சுதந்தரவாளியை அடிமைப்படுத்தும் தேசமாகவே சான்றிடப்பட்டுள்ளது.

    கடைசி ஏற்பாட்டின் காலத்தில் சபைகள் நிறைவேறிய பிரமாணத்தைப் பற்றிக்கொண்டு கர்த்தரது சாட்சிகளைக் கொலை செய்து, அவர்களது உடல்களை வீதியிலே எறிவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

வெளி. 11: 8-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அவர்களுடைய உடல்கள் மகா நகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்று ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்."

    இங்கே எகிப்து ஒரு பட்டணமாக சித்தாரிக்கப்பட்டிருக்கின்றது. இந்த எகிப்து என்பது மாமிச நன்மைகளைக் கொடுக்கும் சபைகளாகவே சாட்சியிடப்பட்டுள்ளது. எனவே அது தன்னைவிட்டு வெளியேறும் ஜனங்களுக்கு எதிரான கிரியைகளைச் செய்யும். அது சுயாதீனமான ஜீவனுக்குரியவர்களுக்கு எதிரான கிரியைகளைச் செய்யும். அந்த சாட்சிகளின் உடல்கள் வீதியில் வீசி எறியப்படும் அந்த வேளை புறஜாதிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கிருபையினை இழந்திருப்பார்கள் என்றே வேதம் சாட்சியிட்டுள்ளது. அதன்பின்னர் கிருபையானது மீண்டும் இஸ்ரவேலரைச் சென்றடையும். எகிப்தியர் தீர்க்கதரிசிகளுக்கு எதிராக மேலெழும்பி சாட்சிகளைக் கொன்று போடுவார்கள். இதுவே கடைசி யுத்தமாகும்.

    எகிப்து ஜீவனுக்குரியவனுக்கு பஞ்சக்காலத்தில் ஆசீர்வாதத்தினைக் கொடுக்கின்ற ஒரு இடமாக உள்ளது. ஜீவனுக்குரியவர்கள் ஆசீர்வாதத்தினைப் பெற்றபின் அதினின்று வெளியேறி வந்துள்ளார்கள்.

    ஜீவன் என்ற ஆவியின் சரீரம் கொண்டவர்களின் மாமிச தேவைகளில் பஞ்சம் ஏற்பட்டபோது, எகிப்து அந்த நன்மைகளைக் கொடுத்து வந்துள்ளது. எகிப்து என்பது தேவத்துவ ஆசீர்வாதத்திற்கான ஒரு தேசமாகும். ஆனால் அங்கே ஜீவனுக்குரிய வார்த்தை இருக்காது.

1 கொரி. 5: 10, 11-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப் போகவேண்டியதாயிருக்குமே.

    நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது."

    அப்போஸ்தலனாகிய பவுல் சகோதரன் என்னப்பட்ட ஒருவன் விக்கிரகாராதனைக்காரனாக இருந்தால், அவனோடு கலந்திருக்கக்கூடாது என்று இங்கே கூறியுள்ளதைப் பார்க்கின்றோம். நாம் யாரோடெல்லாம் கலந்து புசிக்கக்கூடாது என்று அவன் சாட்சியிட்டுள்ளான்.

    எகிப்து என்பது தேவத்துவ ஆசீர்வாதத்திற்கான ஒரு தேசமாகும். ஆபிரகாம் எகிப்திலிருந்து ஆசீர்வாதத்தினைப் பெற்றார். யாக்கோபும் எகிப்திலிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டதைப் பார்க்கின்றோம். இஸ்ரவேலர் எகிப்தில் தங்கி ஆசீர்வாதங்களைப் பெற்றார்கள். பாலகனாய் இருந்தபோது இயேசுகிறிஸ்துவும், எகிப்தில் அடைக்கலம் புகுந்த ஒரு சூழலைப் பார்க்கின்றோம். இஸ்ரவேலர்கள் எகிப்தினை விட்டு வெளியேறியபின்னர், மீண்டுமாக அவர்கள் எகிப்திற்குள்ளாகச் செல்லவில்லை.

    இயேசுகிறிஸ்துவும் எகிப்தில் தஞ்சம் புகுந்து வெளியே கொண்டுவரப்பட்டார். அதற்குப்பின்னர் அவர் எகிப்திற்குச் செல்லவில்லை.

    ஆசீர்வாதங்களைக் கொடுத்த இந்த எகிப்து கடைசி ஏற்பாட்டில் கொலை வெறி கொண்ட ஒரு மிருகமாக தன்னை வெளிப்படுத்தும். அது தன்னகத்தே நன்மையினைப் பெற்று, வெளியேறிய சிலரை கொலை செய்யும். அவர்கள் இரத்த சாட்சிகளாக ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். கடைசி ஏற்பாட்டில் எழும்பக்கூடிய கர்த்தரது ஊழியத்தினை எகிப்து துன்பப்படுத்தும். அது கர்த்தரது இரண்டு சாட்சிகளையும் கொலை செய்யும் என்று வேதம் சாட்சியிடுகின்றது. எனவே அந்த நகரம் எகிப்து என்று ஞான அர்த்தமாய் கூறப்பட்டுள்ளது.

    குமாரன் எகிப்து தேசத்தில் இருந்து வெளிவந்து வாலிபனாகிவிட்டார். வெளியேறி வந்த நிலையில் அவரைக் குறித்து யோவான்ஸ்நானன் சாட்சி கொடுத்தார். குமாரன் எகிப்து தேசத்தினை விட்டு வெளியேறி வந்தபின்னரே இந்த சாட்சி கொடுக்கப்பட்டது.

    இயேசுகிறிஸ்துவின் ஜனனம், இஸ்ரவேலர்களின் மாமிச சரீரங்களுக்கு கிடைக்கக்கூடிய கிருபையினை நிறைவுக்குள்ளாக்கிற்று. அதன்பின்னர் கிருபையானது புறஜாதிகளாகிய நமக்கு கட்டளையிடப்பட்டது.

யோவான் 5: 33, 35-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்குச் சாட்சிகொடுத்தான்.

    அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்."

    யோவான்ஸ்நானன் எழும்பிப் பிரகாசிக்கின்ற விளக்காய் இருந்தார் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. விளக்கிலிருந்து ஒளி வெளிப்படும். யோவான் ஸ்நானன் வெறும் விளக்காயிருந்தான். அவன் அந்த ஒளி அல்ல. யோவான்ஸ்நானன் எழும்பிப் பிரகாசிக்கின்ற விளக்காய் இஸ்ரவேலருக்குள் இருந்தார். அந்த விளக்குக்கு கொடுக்கப்பட்ட ஒளி யார்? யோவான்ஸ்நானன் தன் தாயின் வயிற்றில் உருவானதிலிருந்தே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தான் என்று வேதம் சாட்சியிடுகின்றது. அந்தப் பரிசுத்த ஆவியே ஜீவனுக்குரிய ஒளியாய் அவனுக்குள் பிரகாசித்தது. யோவான்ஸ்நானன் அந்த ஒளிக்குச் சாட்சி.

வெளி. 18: 21, 23-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய ஏந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகாநகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒரு போதும் காணப்படாமற்போகும்.

    விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணவாளனும் மணவாட்டியுமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன் வர்த்தகர் பூமியில் பெரியோர்களாயிருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம்போனார்களே."

    விளக்கின் வெளிச்சம் பாபிலோனில் பிரகாசிப்பதில்லை என்று சாட்சியிடப்பட்டுள்ளது. யோவான்ஸ்நானன் மாமிசத்தில் வெளிப்பட்ட கர்த்தரைக் குறித்து சாட்சி கொடுத்தான். அப்போது, எருசலேம் தேவாலயத்திலிருந்த விளக்கு வெளிச்சம் கொடுப்பதாக இருந்தது. ஆனால் அந்த வெளிச்சம் ஜீவனுக்குரிய வெளிச்சமாக இல்லை. ஆவிக்குரிய வெளிச்சம் அங்கே இல்லை. அந்த வெளிச்சம் எந்த மனுஷனையும் உயிர்ப்பிக்கின்ற ஜீவ ஒளியாகிய கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதால் ஜீவனுக்குரிய தன்மையினை இழந்திருந்தது. எருசலேம் அவரை ஏற்றுக்கொள்ளாததால் அதனுள் இருள் இருந்தது.

    எருசலேம் தேவாலயத்தில் குத்துவிளக்குகள் இருந்தன. குத்துவிளக்கினுள் ஒலிவ எண்ணெய் ஊற்றப்பட்டிருந்தது. எரிந்துகொண்டிருந்த குத்துவிளக்குகள் ஆவியின் சரீரத்திற்கு ஜீவனைக் கொடுக்கக்கூடிய ஒளியாய் இருக்கவில்லை. காரணம், எருசலேம் அப்போது எகிப்தாக மாறியிருந்தது. அது அடிமைத்தனத்திற்குள்ளாக இருந்தது. ஜீவனுக்குரிய விளக்கினை எருசலேம் தேவாலயம் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அந்த விளக்கு வனாந்திரத்தில் நின்று அறைகூவலிட்டது. வனாந்திரத்தில் இருந்த அந்த விளக்கு யோவான்ஸ்நானன். எருசலேமின் கிரியைகள் நியாயப்பிரமாணத்தினைப் பற்றிக்கொண்டிருந்தபடியால், அது அடிமைத்தன எகிப்தாக மாறியிருந்தது.

    அதேபோலொத்த ஒரு நிகழ்வு கடைசி ஏற்பாட்டின் காலத்திலும் ஏற்பட வேண்டும். மேலான எருசலேம் என்று சாட்சியிடப்பட்டுள்ள சபைகள் நிறைவேறிய பிரமாணங்களைப் பற்றிக்கொண்டிருக்கும். எனவே அது எகிப்தாக மாறிவிடும். அங்கே வைக்கப்பட்டுள்ள குத்துவிளக்குகள் ஜீவனுக்குரிய ஒளி கொடுக்காது. குத்துவிளக்கான சபைகள் ஒளி இழந்திருக்கும். எனவே அங்கே இருக்கக்கூடிய விளக்குகள் ஜீவனுக்குரிய வெளிச்சத்தினை கொடுக்காது. ஆயிரக்கணக்கான வண்ண விளக்குகள் வைத்து அலங்கரித்து கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் மிகப்பெரிய கனமுள்ள மனிதர்கள் கலந்துகொண்டாலும், ஜீவனுக்குரிய விளக்கில்லாத அந்த சபை ஒளி கொடுக்கக்கூடிய தன்மையினை இழந்ததாகவே காணப்படும். விளக்கிற்கு ஜீவ ஒளியைக் கொடுக்கக்கூடிய பரிசுத்த ஆவி சபைகளுக்குப் புறம்பாக்கப்படும். மாமிச சிந்தை கொண்டதாக எகிப்தும், ஆவியின் சிந்தை கொண்டதாக எருசலேமும் சாட்சியிடப்பட்டுள்ளது. தேவத்துவ கிரியைகளாக எகிப்தும், கர்த்தத்துவ கிரியைகளாக எருசலேமும் வேறுபிரிக்கப்பட்டுள்ளது. எருசலேம் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள விளக்கு எப்படி ஜீவனுக்குரிய ஒளியினைக் கொடுக்க இயலாதிருந்ததோ, அதே தன்மையில் சபைகளில் வைக்கப்பட்டுள்ள விளக்குகளும் ஜீவனுக்குரிய ஒளியை கொடுக்க இயலாத தன்மை கொண்டதாக இருக்கும்.

    தடை செய்யப்பட்ட விருட்சத்தின் கனியினைப் புசித்ததால் ஆதாம் ஏதேன் தோட்டத்தினை விட்டு வெளியே அனுப்பப்பட்டான். வெளியே அனுப்பப்பட்ட பின்னர் ஏவாள் குழந்தைகளைப் பெற்றாள். அவள் காயீனைப் பெற்றபோது, தான் கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்று கூறினாள்.

ஆதி. 4: 1-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்."

    ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள். அவனை கர்த்தத்துவத்திற்குள்ளாக அவள் பெற்றெடுத்தபடியினால், கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்று சாட்சியிட்டாள்.

ஆதி. 4: 2-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்."

    அதன்பின் காயீனின் சகோதரன் ஆபேல் பிறக்கின்றான். தான் செலுத்திய காணிக்கையை கர்த்தர் அங்கீகரிக்கவில்லை என்பதற்காக ஆபேலைக் காயீன் கொலை செய்தான். காணிக்கை கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்டதால் ஆபேல் ஜீவனுக்குரியவனானான்; அங்கீகரிக்கப்படாத காணிக்கையை செலுத்திய காயீன் மரணத்திற்குரியவனானான்; ஆதாமின் சந்ததி இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டது. இந்தப் பிரிவு கர்த்தத்துவ கிரியைகள் நிறைவடையும்வரை தொடரும். இதுவே தேவதிட்டம். காயீன், ஆபேல் என இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டதுபோல, ஈசாக்கின் சந்ததியில் ஏசா, யாக்கோபு என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றார்கள்.

ஆதி. 4: 25-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள்."

    ஆபேலுக்குக் கிடைத்த ஜீவனுக்குரிய அந்த ஆசீர்வாதம் சேத்திடம் கொடுக்கப்படுகின்றது.

    இவையாவும் முன்குறித்தலின்படி நிறைவேறிற்று. காயீன் ஆக்கினைக்கென்று முன்குறிக்கப்பட்டவன். எனவே, அவன் அதற்கேற்ற கிரியைகளை நடப்பிக்க வேண்டும். காயீன் ஆபேலின் சரீரத்தினைக் கொன்றுபோட்டதால், இந்த ஆக்கினைக்குரிய கிரியை முன்குறித்தலின்படி நிறைவேறிற்று. கர்த்தர் ஆபேலை நித்திய ஜீவனுக்குரியவனாக முன்குறித்திருந்தார். அங்கே இருவரின் கிரியைகளும் கர்த்தரால் திட்டம் பண்ணினபடி நடந்து முடிந்தது. இவையாவும் ஏற்கனவே தீர்மானம் பண்ணப்பட்டவைகளாகும்.

    அதுபோல ஏசாவும் யாக்கோபும் வேறுபிரிக்கப்பட்டார்கள். பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில் ஏசாவை வெறுத்தேன்; யாக்கோபை சிநேகித்தேன் என்றும் கர்த்தர் சாட்சியிட்டுள்ளார் (ரோமர் 9: 11-13). ஏசாவின் பர்வதம் வலுசர்ப்பத்தின் தாபரம் ஆனது (மல். 1: 3). கர்த்தர் தம்மை யாக்கோபின் தேவன் என்று சாட்சியிட்டார். மாமிசத்தின்படியான கிரியைகளின்படி பார்த்தோமென்றால், ஏசாவை ஏமாற்றியது யாக்கோபுதான். ஏசா தனது சேஷ்ட புத்திர பாகத்தை உதாசீனம் செய்தான்; இது முன்குறித்தலின்படியான கிரியை. ஜீவ கிரீடத்தை அவன் இழந்தவனானான். இவை யாவும் ஏற்கனவே திட்டம் செய்யப்பட்டதாய் இருந்தால், ஏன் இந்த மாமிச ஜனனம் என்று சிந்திக்கலாம். திட்டம் செய்யப்பட்டதை அவர்கள் தங்கள் கிரியைகளில் பூரணப்படுத்த வேண்டும். கிரியைகளில் பூரணப்படுத்தப்படவே இந்த ஜனனம்.

    ஆபேலுக்குப் பின் சேத் ஜீவனுக்கென்று தெரிந்தெடுக்கப்பட்டான். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கர்த்தரின் நாமத்தினை அறிந்துகொள்வார்கள்.

ஆதி. 4: 26-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்."

    சேத்தினுடய வம்சத்தார் கர்த்தருடைய நாமத்தினைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள் என்று பார்க்கின்றோம். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் எருசலேம் தேவாலயத்தில் ஒரு பொன்குத்துவிளக்கு இருந்தது. எருசலேம் தேவாலயம் கர்த்தர் தனது நாமத்திற்கென்று தெரிந்தெடுத்த ஸ்தலமாகும்.

    ஆத்துமா கொண்ட ஜனங்கள் எப்போதுமே இரண்டு பிரிவு ஜனங்களாகப் பிரிக்கப்படுகின்றார்கள். ஜீவனுக்குரியவர்கள் எனவும், ஆக்கினைக்குரியவர்கள் எனவும் வேறுபிரிக்கப்படுகின்றார்கள். இவைகள் திருஷ்டாந்தங்களாக எகிப்து என்றும், எருசலேம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    ஜீவனுக்கென்று அங்கீகரிக்கப்பட்ட எருசலேம் மீறுதலினால், எகிப்தாக மாறுகின்றது. இங்கே எருசலேம் மேலான எருசலேமாக மாறுகின்றது.

    மேலான எருசலேமும் மீறுதலினால் எகிப்தாக மாறும்போது, சீயோன் எழும்புகின்றது.

    சீயோன் பர்வதம், அது கர்த்தருடைய பர்வதம் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. அது நித்திய ஜீவனைச் சுதந்தரிப்போரின் சாட்சியின் பர்வதமாகும். அதுவே கர்த்தரால் முன்குறிக்கப்பட்ட ஜனம். அந்த ஜனமே கர்த்தரின் இரகசிய வருகையின்போது எடுத்துக்கொள்ளப்படும். சீயோன் என்ற மணவாட்டி எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர், மீதியாய் இந்தப் பூமியில் ஜீவிப்பவர்கள் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கடைபிடிக்கும் ஒரு பிரிவு ஜனங்களாக மாத்திரமே காணப்படுவார்கள். ஜீவனுக்குரிய எந்தக் கிரியைகளும் அவர்களுக்குள் இருக்காது. விளக்கு ஒளியினை இழந்து காணப்படும். அப்போது மனிதன் ஆவியின் சரீரத்தினை இழந்திருக்கும் நிலையே காணப்படும்.

    விளக்கு முதலில் எருசலேம் தேவாலயத்தில் ஒளி கொடுத்துக் கொண்டிருந்தது. அதன்பின்னர், அந்த விளக்கு யோவான்ஸ்நானனுக்குள்ளாக வந்து எருசலேமுக்கு வெளியே நின்று சாட்சியிட்டது. அது வனாந்திரத்தில் சுற்றித் திரிந்தது. எனவே ஜீவனுக்குரிய ஒளி எருசலேமிற்கு வெளியே பிரகாசிக்க ஆரம்பித்தது. ஏழு சபைகளிலும் ஏழு விளக்குகள். அது அந்தந்த சபைக் காலங்களில் அந்தந்த சபைகளில் ஜீவனுக்குரியதாய் பிரகாசித்தது. அந்த விளக்கினையும் ஒளியினையும் சபைத்தூதர்கள் சாட்சியிட்டார்கள். விளக்கு ஜீவனுக்குரிய ஒளியைக் கொடுக்கும்வரையிலும், சபையானது எருசலேமாக இருந்தது. விளக்கு ஒளி கொடுக்கும் தன்மையை இழந்தபோது, அந்த சபை எகிப்தாக சாட்சியிடப்படுகின்றது.

    வேதாகமம் அச்சிடப்பட்டு இன்று நம் யாவரின் கரங்களிலும் கிடைக்க காரணமாய் இருந்தது 5-வது சபையாகும். அதன்பின்னர், 5-ம் சபைக்காலம் நிறைவேறி ஆறு மற்றும் ஏழாம் சபைக்காலங்கள் எழும்பியது. ஏழு சபைகளும் எகிப்தாக மாறியபின்னர், வார்த்தையின் காலம் சீயோனாக எழும்பும். அப்போது எகிப்தாக தனது கிரியைகளைச் செய்துகொண்டிருக்கும் சபைகள் ஜீவனுக்குரிய ஒளியினைக் கொடுக்காது. வேதாகமம் மொழி பெயர்க்க காரணமாய் இருந்த சபைகள் அதிலுள்ள ஜீவனை மறுதலிக்கக்கூடிய நிலை எழும்பும்போது அதன் கிரியைகள் எகிப்தாக மாறிவிடுகின்றது.

    வேதாகமத்தைக் கொடுப்பதும், அநேக கிறிஸ்தவ பாடலைக் கொடுப்பதும், மேலும் அநேகம் பேருக்கு மாமிசத்தினை போஷிக்கக்கூடிய பணியினைக் கொடுப்பதாக இருந்தாலும், அவைகள் நிறைவேறிய பிரமாணங்களைக் கொண்டு செயல்படுவதால் ஜீவ ஒளியினை இழந்ததாகவே சாட்சியிடப்படுகின்றது. எனவே சபையானது பாபிலோனாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எகிப்திலிருந்து ஆசீர்வாதத்தினை இஸ்ரவேலர்கள் பெற்றுக்கொண்டதுபோல, சீயோன்கள் இந்த சபைகளிலிருந்து நன்மைகளை பெற்றுக்கொள்வார்கள். எகிப்தும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டதே. அது தேவத்துவ கிரியை. அதுவும் தன்னுடைய கிரியையில் பூரணப்பட வேண்டும்.

    பொதுவான சுவிசேஷத்தின் மூலம் சபைகள் ஒருவனைக் கிறிஸ்தவனாக மாற்றுகின்றது. அந்தக் கிறிஸ்தவனை வார்த்தை சீயோனாக மாற்றுகின்றது. கிறிஸ்தவர்களாக மாறி தேவத்துவ ஆசீர்வாதங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள நாம் அழைக்கப்படவில்லை. ஆனால், சபைகள் தேவத்துவ ஆசீர்வாதங்களுக்குரிய செய்தியினையே தனது விசுவாசிகளுக்குப் போதித்துக்கொண்டிருக்கின்றது. எனவே அதின் கிரியைகள் பாபிலோனாக சித்தாரிக்கப்பட்டுள்ளது.

    ஆபிரகாம் எகிப்திலிருந்து நன்மைகளைப் பெற்றபின் அங்கிருந்து வெளியேறினார். அதுபோலவே முன்குறிக்கப்பட்டவர்கள் நிறைவேறிய பிரமாணங்களைக் கொண்டு கிரியை செய்யும் சபைகளை விட்டு வெளியேறி வரும்படியாய் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கின்றது. அது ஊழியமாய் சாட்சியிடப்படும்.

    ஆபிரகாமின் சந்ததியார் எகிப்திலே உபத்திரவப்பட வேண்டும். இவைகள் முன்கூட்டியே திட்டம்செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

ஆதி. 15: 12, 13-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிகொண்டது.

    அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்."

    இந்த 400 ஆண்டுகால அளவு ஒளியில்லாத ஒரு கால அளவாகக் குறிக்கப்பட்டுள்ளது. அது இஸ்ரவேலரின் இருண்ட காலம். இருண்ட காலம் என்பது ஒருவனும் கிரியை செய்யமுடியாத காலமாகும். கிரியை செய்தாலும் அதற்குப் பலன் கொடுக்கப்படாத ஒரு காலமாகும். ஏன் இந்தப் பலன் இல்லையென்றால், இருண்ட காலமாகக் குறிக்கப்பட்ட அந்த 400 வருடமும் ஆத்துமா என்ற ஜீவனுக்குரிய நிகழ்வு இஸ்ரவேலருக்குள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட காலமாகும். எனவே இந்த 400 வருடமளவும் பிரமாணங்கள் ஏதும் கொடுக்கப்படவில்லை. இஸ்ரவேலர்கள் எவைகளை வேண்டுமானாலும் புசிக்கலாம், எப்படியான கிரியைகளையும் செய்து கொள்ளலாம். காரணம், அது அவர்களுக்குள் ஒளிக்குரிய கிரியை கட்டளையிடப்படாத ஒரு காலமாகும்.

    இவைகளை அறிந்த ஆபிரகாம் திகில் அடைந்தவனாகக் காணப்பட்டான். அது 400 வருடம் தன் சந்ததியார் கிருபையினை இழக்கப்போகின்றதை நினைத்ததால் வந்த திகில் ஆகும்.

    அந்த 400 வருடமளவும் அவர்களுக்குள் இருள் இருந்தது. அந்தக் காலத்திற்குள்ளாக எகிப்து தேசம் அவர்களை அடிமை கொண்டது. அவர்களை காரிருளுக்குரியவர்களாக மாற்றிய தேசம் எகிப்து தேசமாகும். 400 வருடங்களுக்குப் பின்னர் அந்த ஒளி அக்கினியாய் மோசேக்குக் காட்சி கொடுத்தது. மோசே அந்த ஒளியினைக் கண்டான்; அந்த ஒளிக்கு உள்ளானான். அதன்பின்னர் ஒளி இஸ்ரவேலருக்குள்ளாக வந்தது. இது பழைய ஏற்பாட்டின் காலம். புதிய ஏற்பாடு என்பது புறஜாதிகளுக்குள் கிருபை கட்டளையிடப்பட்ட காலமாகும். புறஜாதிகளுடைய காலம் நிறைவேறும் வரையிலும் இஸ்ரவேலர்கள் இருளுக்குரியவர்களாகவே இருப்பார்கள். காரணம் ஒளி புறஜாதிகளுடைய தேசத்திற்குள் வீச ஆரம்பித்தது. இது புறஜாதிகளின் காலம். அதற்கு முன்னர் புறஜாதிகள் இருளுக்குள் இருந்தார்கள். அப்போது ஜீவனுக்குரிய நிகழ்வுகள் ஏதும் புறஜாதிகளுக்குள் கட்டளையிடப்படவில்லை. புறஜாதிகளின் தேசம் இயேசுகிறிஸ்துவினால் ஒளியைக் கண்டது. இஸ்ரவேலர்கள் காரிருளுக்குள் சென்றார்கள்; நாம் வெளிச்சத்தில் இருக்கின்றோம். புறஜாதிகளுடைய தேசம் இப்போது ஒளியினைக் கண்டிருக்கின்றது; இஸ்ரவேலர்கள் காரிருளுக்குள்ளாக இருக்கின்றார்கள்.

    மறுபடியும் அந்த விளக்கு இஸ்ரவேலர்களுக்குள் ஒளியைக் கொடுப்பதற்காக அனுப்பப்படும். அந்த விளக்கு அவர்களுக்குள் வெளிச்சத்தினைக் கொடுக்கும். அவர்கள் இருளுக்குள் இருந்து ஒளியிடம் ஓடி வருவார்கள்.

    புறஜாதிகளாகிய நமக்குள் இப்போது அந்த ஒளி கிரியை செய்துகொண்டிருக்கின்றது. இஸ்ரவேலருக்குள் இருந்த அந்த ஒளி எடுக்கப்பட்டதைக் குறித்து யோவான்ஸ்நானன் சாட்சியிட்டான். அதுபோல புறஜாதிகளின் நிறைவின் வேளையிலும் சாட்சியிடப்படும். யோவான்ஸ்நானன், நான் அந்த ஒளி அல்ல, அந்த ஒளிக்குச் சாட்சி என்று அறிக்கையிட்டான்.

யோவான் 1: 7-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்."

    அவன் அந்த ஒளி அல்ல; அந்த ஒளிக்கு சாட்சி. அது இஸ்ரவேலர்களின் கிருபையின் நிறைவு. அதுபோல புறஜாதிகளின் கிருபையின் நிறைவிலும் அந்த விளக்கு அனுப்பப்படும். அது எலியாவின் ஆவியும் பெலமும் கொண்டதாய் வந்து சாட்சியிடும். அவனது சாட்சி எழும்பும்போது இஸ்ரவேலர்கள் ஒளியினைக் காண்பார்கள். இருள் அவர்களை விட்டு நீங்கும். இருண்ட காலம் என்பது எகிப்தின் அடிமைத்தனமாகும். இஸ்ரவேலர்கள் புதிய ஏற்பாட்டின் காலம் நிறைவடையும்வரையிலும், நியாயப்பிரமாணத்தின்மூலம் அடிமைப்பட்டிருப்பார்கள். அதன்பின்னர், ஒளியைக் காண்பார்கள். அப்போது புறஜாதிகளுடைய தேசம் கிருபையை இழந்து, ஒளி இழந்த தேசமாக மாறிவிடும். அது இருளுக்குரிய தேசமான எகிப்தாக மாறிவிடும். கடைசி ஏற்பாடு என்பது புறஜாதிகள் ஒளியை இழக்கவும், இஸ்ரவேலர்கள் மீண்டும் ஒளியைக் காணவும் ஏற்படுத்தப்பட்ட காலமாகும்.

வெளி. 11: 8-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அவர்களுடைய உடல்கள் மகா நகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்."

    அந்த நகரம் எகிப்து என்றும், சோதோம் என்றும் ஞான அர்த்தமாய்ச் சொல்லப்படும் என்று இங்கே சாட்சியிடப்பட்டுள்ளது. சோதோம் கிருபை இழந்த பட்டணமாகும். அது அழிக்கப்பட வேண்டிய நகரம். அது அழிக்கப்படுவதற்கு முன் கர்த்தர் தமது தூதர்களை அனுப்புகின்றார். சோதோம் என்பது புறஜாதியாருடைய தேசம். அந்த தேசத்திற்குள் அனுப்பப்படப்போகும் சாட்சிகளின் உடல்கள் நகரத்தின் வீதிகளில் வீசப்படும்.

    புறஜாதிகளின் காலம் நிறைவடையும் வரையிலும் இஸ்ரவேல் தேசம் தன்னுடைய மகிமையினை இழந்ததாகவே காணப்படும்.

இஸ்ரவேலுக்கு மகிமை எது?

    கர்த்தத்துவத்திற்குள்ளாகக் கட்டளையிடப்பட்டுள்ள ஜீவனே இஸ்ரவேலர்களுக்கு மகிமை. அந்த மகிமையினை புதிய ஏற்பாட்டின் காலத்தில் இஸ்ரவேலர்கள் இழந்திருக்கின்றார்கள்.

ராஜ்யபாரமா மகிமை?

    ராஜ்யபாரம் என்பது தேவத்துவ மகிமையாகும். அதில் இல்லை அவர்களுக்கு மகிமை.

    இஸ்ரவேலர்களுக்குள்ளே கொடுக்கப்பட்டிருந்த உள்ளான மனுஷனாகிய ஆத்துமாவே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த மகிமை. மற்ற ஜனங்களுக்கு இல்லாத இந்த கிருபை இஸ்ரவேலருக்குள் மாத்திரமே கட்டளையிடப்பட்டிருந்தது. அது நிறுத்தப்பட்ட நிலையே அவர்களுடைய இருண்ட காலமாகும்.

    சோதோம், அது சுண்ணாம்புப் பட்டணம். அது நீர்க்கப்பட வேண்டிய பட்டணம். அதுபோல எகிப்தும் தன் நிலையில் அழிக்கப்பட வேண்டிய பட்டணமாகும்.

    தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் எகிப்திலிருந்து வெளியேறுவார்கள். அவர்கள் ஆபிரகாமிற்குக் கொடுக்கப்பட்ட ஆவிக்குரிய நன்மைகளுக்காகத் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள். எகிப்து என்பது மாமிச நன்மைகளை மாத்திரம் கொடுக்கத் தெரிந்தெடுக்கப்பட்ட ஸ்தலமாகும். எகிப்தின் ஆசீர்வாதத்தினை மாத்திரம் நாடி ஓடுபவன் நித்திய ஜீவன் என்ற கிருபையினை இழந்துபோவான். எனவே, அதில் இருந்து வெளியேற அழைப்பு கொடுக்கப்படும். அழைப்பினை ஏற்று அதிலிருந்து வெளியேறுபவன் ஜீவனுக்குரியவனாவான். வார்த்தையை விசுவாசிப்பவர்கள் எகிப்தினை விட்டு வெளியேறி வருவார்கள். எகிப்து இருள் சூழ்ந்திருக்கின்ற பட்டணம். ஒளிக்குரியவர்கள் அதில் தங்கியிருக்க மாட்டார்கள்; அவர்கள் அழிவிலிருந்து வெளியேறி வருவார்கள்; அதற்காக கடைசி எக்காளம் ஊதப்படும். அது கடைசி ஏற்பாட்டிற்கு சாட்சியாக அமையும்.

    எகிப்து என்பது அடிமை தேசமாகும். அது வார்த்தைக்கு எதிர்த்து நிற்கும். ஊதப்படும் கடைசி எக்காளத்திற்கு எதிர்த்து நிற்கும். கர்த்தரது ஜனங்கள் அழிவிற்குரிய அந்தப் பட்டணத்தைவிட்டு வெளியேறி வருவார்கள்.

    நாமும் ஜீவனுக்கேதுவான கிரியைகளைச் செய்ய கர்த்தரது சமூகத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போம். கர்த்தர் தமது கிருபையினை நமக்குக் கட்டளையிடுவாராக!

ஆமென்!     ஆமென்!!     ஆமென்!!!

All Sermonsஅனைத்து பிரசங்கங்கள்