Sorry for the inconvience, Currently English version is not avalilable.
Switch to Tamil language
(அறிவிக்கப்பட்ட நாள்: 04.09.2016)
வெளி. 18: 7-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள்."
வெளி. 18: 2, 3-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.
அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான்."
இங்கே பாபிலோன் தன்னைக் குறித்து "நான் கைம்பெண் அல்ல" என்று சாட்சியிடுவதைப் பார்க்கின்றோம். "நான் கைம்பெண்ணல்ல" என்று கூறுகின்ற இந்தப் பாபிலோனுடைய கிரியைகள் வேசித்தனமான கிரியைகளாக இருந்தது என்று சாட்சியிடப்பட்டுள்ளது.
புருஷனை இழந்த பெண் அவனது மரணத்திற்குப்பின் 'கைம்பெண்' என்று அழைக்கப்படுவாள். அவளை "விதவை" என்று கூறுவோம். ஆனால் இங்கே பாபிலோன் தன் கணவன் இல்லாத நிலையிலும் "தான் விதவை இல்லை" என்று கூறுகின்றாள். மேலும் தன்னை விதவை இல்லை என்று கூறும் கைம்பெண் தன்னுடைய கிரியைகளைச் செய்வது வேசித்தனக் கிரியையாகும். அப்படியானால், பாபிலோன் தன்னுடைய மணவாளனை இழந்துவிட்டாள்; அவளோடு சேர்ந்துள்ளவன் மணவாளன் அல்ல. தனது மணவாளன் மரித்துப் போன நிலையிலும் பாபிலோன்: "நான் கைம்பெண் அல்ல; நான் விதவை அல்ல; நான் ராஜஸ்திரீ" என்று கூறுவதைப் பார்க்கின்றோம். ராஜாவினுடைய அரசவையில் அவரின் அருகில் அமர்ந்து கொண்டிருப்பவளே ராஜஸ்திரீ. இங்கே மணவாளன் மரணித்த பின்னரும் தன்னை அலங்கரித்துக்கொண்டும், மணவாட்டியின் வஸ்திரத்தைத் தரித்துக்கொண்டும் அனுமதிக்கப்படாத ஒருவனுக்காக காத்துக்கொண்டிருப்பவளாக காணப்படும் பாபிலோனின் கிரியைகள் வேசித்தனம் என்று சாட்சியிடப்பட்டுள்ளது.
ரோம. 7: 2-6ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"அதெப்படியென்றால், புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள், புருஷன் மரித்தபின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள்.
ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம் பண்ணினாலும் விபசாரியல்ல.
அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி,தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.
நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது.
இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதனின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்."
புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின் நிபந்தனைகளுக்கு மனைவியானவள் உட்பட்டிருக்கின்றாள்; ஆனால் புருஷன் மரித்தபின்பு அவன் கட்டளையிட்ட பிரமாணத்தினின்று விடுதலையாகின்றாள். அவள் வேறொருவனை விவாகம் பண்ணினாலும் அது விபச்சாரம் அல்ல. ஆனால் விவாகமற்ற நிலையில் ஒரு புருஷனோடு இணைவது வேசித்தனம் என்று சாட்சியிடப்படுகின்றது. "நியாயப்பிரமாணம் என்ற புருஷன் மரித்த நிலையில், அங்கே அந்த ஸ்திரீயாக கூறப்படுகின்ற இஸ்ரவேல் வேறொரு பிரமாணத்திற்கு உட்படுத்தப்படுகின்றாள். அது புருஷனாக சாட்சியிடப்படும் கிருபைப் பிரமாணமேயாகும். இங்கே கிறிஸ்துவின் பிரமாணம் புதிய புருஷனாகின்றது.
லூக்கா 6-ம் அதிகாரத்தில் இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் நியாயப்பிரமாணத்தினை மீறிய ஒரு காரியம் சாட்சியிடப்பட்டுள்ளது.
நியாயப்பிரமாணத்தின்படி ஓய்வுநாளில் யாதொரு வேலையும் செய்யக்கூடாது. ஆனால் இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் கதிர்களை கொய்தார்கள்; அவர் சூம்பின கையையுடையவனை ஓய்வுநாளில் சுகப்படுத்தினார். இந்தக் கிரியைகள் அங்கே நடந்தபோது, நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் நிறைவேறியிருந்தது.
ரோமர் 7-ம் அதிகாரத்தில், புருஷன் நியாயப்பிரமாணம் என்று கூறப்பட்டுள்ளது. நியாயப்பிரமாணம் என்கின்ற புருஷன் உயிரோடு இருக்கின்றபோது, அதாவது அந்த வார்த்தைக்கென்று கட்டளையிடப்பட்டுள்ள காலம் நிறைவடையும் முன்னர், வேறொரு வார்த்தைக்குச் செவிகொடுத்தல், அது வேறொரு புருஷனுக்கு தன்னை ஒப்புக்கொடுக்கும் தன்மையாகும். அதுவே வேசித்தனம் என்று கூறப்பட்டுள்ளது.
பிசாசு ஏதேன் தோட்டத்தில் நன்மைதீமை அறியத்தக்க ஞானத்தோடு ஒரு வார்த்தையினைக் கொடுத்தான், அது "நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் புசிக்கும்நாளில் தேவர்களைப் போல் இருப்பீர்கள்; ஏனென்றால், உங்களுக்குள் இதைப் புசிக்கின்ற நாளிலே மரணம் ஏற்படாது என்றான். அது சத்தியமான வார்த்தைதான். இங்கே வார்த்தை புருஷன் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. வார்த்தை அன்றைக்குரிய பிரமாணமாய் சாட்சியிடப்படும்போது அது மணவாட்டிக்குரிய சத்தியமாகும். நியாயப்பிரமாணம் என்ற புருஷன் ஜீவனோடு இருந்த வேளையில் "சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்" என்ற புருஷன் நிறைவேறிய நிலை. எனவே அது ஜீவனற்றதாய் சாட்சியிடப்பட்டுள்ளது. ஜீவனற்ற நிலை என்பது மரணமாகும். யேகோவா என்ற நாமத்தில் கட்டளையிடப்பட்ட பிரமாணம் அப்போது ஜீவன் கொண்டதாயிருந்தது. நியாயப்பிரமாண காலம் நிறைவடைந்தபின் யேகோவா என்ற புருஷனின் நிலை மரணித்த நிலையாகும். யேகோவா என்ற நாமம் கொண்ட புருஷன், இஸ்ரவேல் என்ற மணவாட்டிக்காக நிச்சயிக்கப்பட்ட புருஷனாயிருந்தான். அவனை விவாகம் செய்தல் இஸ்ரவேல் என்ற மணவாட்டிக்கு உத்தமமாகும்.
ஏதேன் தோட்டத்தில் கர்த்தர் கட்டளையிட்ட பிரமாணம், மணவாட்டியாய் தெரிந்தெடுக்கப்பட்ட ஏவாள் செயல்படுத்த கட்டளையிடப்பட்ட பிரமாணமாகும். கர்த்தர் தனக்கு ஒப்புவித்த அந்தப் பிரமாணத்தை புருஷனான ஆதாம், ஏவாள் என்ற தனது மணவாட்டிக்குக் கொண்டுசென்றான். ஆனால், ஏவாள் சர்ப்பத்தின் வார்த்தையாகக் கட்டளையிடப்பட்டிருந்த பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு தடைசெய்யப்பட்ட அந்தக் கனியைப் புசித்தாள். அங்கே ஒரு மீறுதல். அதுவே வேசித்தனம். முந்தைய பிரமாணம் தேவத்துவ தன்மை கொண்டதாய் மாறுகின்றது. அதனைப் பற்றிக்கொள்ளும் கிரியையே வேசித்தனத்திற்குரிய கிரியையாயிற்று. ஏவாள் சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்டாள். அந்த வஞ்சகம் அவளைப் புசிக்காதே என்று கட்டளையிட்ட அந்த வார்த்தையை மீறி, அந்நிய புருஷனான சர்ப்பத்தின் வார்த்தைக்குள்ளாக விழச் செய்தது.
எனவே அங்கே பொல்லாங்கனால் ஒரு சந்ததி உருவாயிற்று. அது மீறுதலினால் வேறொரு புருஷனைப் பற்றிக்கொண்ட நிலை. அதுவே வேசித்தனம். எனவே அவளின் அந்த சந்ததி பொல்லாங்கனின் சந்ததியாகப் பிரிக்கப்பட்டது. இங்கே பிரமாணமே புருஷனாக சாட்சியிடப்பட்டுள்ளது.
பாபிலோன் என்ற ஸ்திரீயும் தன்னைக் குறித்து தான் கைம்பெண்ணல்ல என்று கூறுவதைப் பார்க்கின்றோம். நியாயப்பிரமாணம் இஸ்ரவேலர்களுக்குள் புருஷனாக இருந்தது. அந்த நியாயப்பிரமாண புருஷனுடைய நாமம் யேகோவா என்று சாட்சியிடப்பட்டது. இயேசுகிறிஸ்து மகிமைப்பட்ட பின்னர் யேகோவா என்ற நாமம் தரித்த அந்தப் புருஷன் ஜீவனற்றவன் ஆனான். அது மரித்துப்போன ஒரு நிலை. எனவே அந்த ஸ்திரீக்கென்று அப்போது வேறொரு பிரமாணம் அனுப்பப்பட்டது. அந்தப் பிரமாணம் இயேசுகிறிஸ்து என்ற புருஷனாய் அனுப்பப்பட்டது. அந்தப் புருஷனோடு ஐக்கியப்படாமல் வேறொரு புருஷனை, அதாவது வேறொரு பிரமாணத்தினைப் பற்றிக்கொள்தல் வேசித்தனமானது.
எப்படி யேகோவா என்ற வார்த்தை ஜீவனற்றதாய் நிறைவேறித்தீர்ந்த வார்த்தையாய் இஸ்ரவேல் என்ற ஸ்திரீயை கைம்பெண்ணாக்கியதோ, அதுபோல கிறிஸ்து என்ற வார்த்தையும் தன்னகத்தே இருக்கும் ஜீவனை இழந்தபின் அது நிறைவேறித் தீர்ந்திருக்கின்ற பிரமாணமாகவே சாட்சியிடப்பட்டுள்ளது. அப்படி நிறைவேறிய பிரமாணத்தைப் பற்றிக்கொண்ட பாபிலோனும் தன்னைக் கைம்பெண் அல்ல என்று சாட்சியிடுகின்றாள். தன் புருஷனில் இருந்த ஜீவன் எடுக்கப்பட்டதை அறியாத நிலை அவளை உணர்வற்றவளாக்கிற்று. எனவேதான் கைம்பெண் என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள இயலாத நிலை.
"பழைய ஏற்பாடு" என்ற ஸ்திரீயானவள் யேகோவா என்ற நியாயப்பிரமாண புருஷனைக் கொண்டிருந்தாள். அது அவளுக்கென்று அனுமதிக்கப்பட்டுள்ள பிரமாணமான வார்த்தையாகும். அதன்பின்னர் புதிய ஏற்பாட்டு பிரமாணம். இப்போது சபைப் பிரமாணமே மணவாளன் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. அது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற நாமத்தில் ஜீவன் பெற்றுள்ள புதிய பிரமாணமாகும். அது புதிய ஏற்பாடு. இப்போது மணவாட்டி கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற நாமத்தில் ஜீவனைப் பெற்றுள்ள சபைப்பிரமாணத்திற்குள்ளாக கடந்து வருகின்றாள். முதலாவது சபைப்பிரமாணத்திற்குள்ளாக அவள் கடந்து வரும்போது, அவளது கிரியைகள் அங்கே வேசித்தனமாகக் காணப்படவில்லை. ஏனென்றால், அப்போது முந்தைய பிரமாணமாகிய நியாயப்பிரமாணம் நிறைவேறி இருந்தது. நியாயப்பிரமாணமாகிய புருஷன் மரித்த நிலை. அதற்கென்று கொடுக்கப்பட்ட காலம் நிறைவேறிவிட்டதால் கிறிஸ்துவின் சரீரமாகிய சபை என்ற புருஷனோடு ஐக்கியப்பட்டாள். அப்போது நியாயப்பிரமாண புருஷனோடு ஐக்கியப்பட்டிருந்த இஸ்ரவேலர்கள் எருசலேம் என்ற அந்த ஸ்திரீயோடு இணைந்தார்கள். எருசலேம் தன்னை ராஜஸ்திரீயாக அலங்காரித்தது. ஒரே பிதா எங்களுக்கு உண்டு என்று இஸ்ரவேலர்கள் சாட்சியிட்டார்கள். அந்த ஸ்திரீ தன் புருஷனாகிய யேகோவா எடுத்துக்கொள்ளப்பட்டதை மறைத்து கைம்பெண்ணான அவள் தன்னை ராஜஸ்திரீயாக அலங்கரித்தாள். ஆனால், கர்த்தர் அவளை அங்கீகரிக்கவில்லை. தன்னை ஏற்றுக்கொள்ளாதவர்களை "நீங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்கள்" என்றார். அந்த வேசித்தனமானது மாமிசத்திற்குரிய வேசித்தனம் அல்ல. அது மாமிசத்திற்கு அப்பாற்பட்ட ஆவிக்குள்ளான கிரியையாகும்.
நியாயப்பிரமாணம் தன்னில் உள்ள ஜீவனை இழக்கும்போது, அது தன்னுடைய புருஷன் மரித்துவிட்ட நிலையினைக் குறித்ததாகும். அதனையே அப்போஸ்தலனாகிய பவுல் சாட்சியிட்டுள்ளான். அதனை அன்றைய இஸ்ரவேலர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. யேகோவா என்ற நாமமிடப்பட்ட அந்தப் பிரமாணம் ஜீவனற்ற தன்மையில் இருப்பதாய் அவன் கொடுத்த சாட்சியின் வார்த்தையினை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அப்போஸ்தலனாகிய பவுல், நியாயப்பிரமாண புருஷன் மரித்துவிட்டான், யேகோவா என்ற அந்த நாமத்தின் கிரியை நிறைவேறிவிட்டது என்று சாட்சியிட்டான். யேகோவா என்ற இரட்சிப்பின் வார்த்தை, தான் புறப்பட்ட அந்த இடத்திற்கே திரும்பிச் சென்றது. பிரமாணமானது நிறைவேறுகின்ற அந்த நிலையையே மரித்தல் என்று சாட்சியிடப்பட்டுள்ளது.
நியாயப்பிரமாணம் நிறைவடைந்தபோது யேகோவா என்ற நாமம் கிரியைகளை நிறைவேற்றிற்று. அது ஜீவனற்றதாய் தனது கிரியைகளில் பூரணப்பட்டது. பின்னர் எழுந்த சங்கம காலத்தில் இஸ்ரவேலர்களும் கிறிஸ்தவர்களும் வார்த்தையான கிறிஸ்து மூலமாய் ஒன்றிணைய வேண்டும். கிருபை பிரமாணம் என்ற புதிய பிரமாணத்தோடு இணைய வேண்டும். அதேபோலொத்த ஒரு நிகழ்வு புதிய ஏற்பாட்டின் நிறைவிலும் நிகழ வேண்டும். அதன்பின்னர் கடைசி ஏற்பாடு என்ற நிலை எழும்பும். புதிய மற்றும் கடைசி ஏற்பாடுகளின் இடைபட்ட காலம் சங்கமகாலமாகும். இந்த சங்கமகாலத்தில் இலகுபடுத்தப்பட்ட பிரமாணம் சாட்சியிடப்படும். முந்தைய சங்கமகாலத்தினைப் போன்ற ஒரு கிரியை கடைசி ஏற்பாட்டின் சங்கம காலத்திலும் நிகழும். அதனைக் கிறிஸ்தவர்களும், தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேலர்களும் அங்கீகரிப்பார்கள். அங்கே வார்த்தைப் பிரமாணம் என்ற புருஷன் எழுப்பப்படுவான். அவனோடும் இணையவேண்டும். இந்த நிகழ்வுகள் ஏற்படும் முன்னர் ஏழு சபைக்கால சபைப்பிரமாணங்களும் நிறைவேறியிருக்கும். கட்டளையிடப்படும் பிரமாணத்திற்கு ஒரு நாமம் கட்டளையிடப்பட்டுள்ளது.
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்ற நமது முற்பிதாக்களுக்கு கிருபை, "சர்வவல்லமையுள்ள தேவன்" என்ற நாமத்தில் கொடுக்கப்பட்டது.
நியாயப்பிரமாணத்தினை மோசேயின் மூலம் கட்டளையிடும்போது, "யேகோவா" என்ற நாமம் சாட்சியிடப்பட்டது.
அதுபோல புதிய ஏற்பாட்டின் காலத்தில் சபைப்பிரமாணத்தினைக் கட்டளையிடும்போது, "கர்த்தராகிய இயேசுகிறிஸ்து" என்ற நாமம் சாட்சியிடப்பட்டது. கிருபை புறஜாதிகளுக்கு கொடுக்கப்பட்டது. கிறிஸ்து சபைக்குத் தலையாகச் சாட்சியிடப்பட்டார்.
நியாயப்பிரமாணம் நிறைவேறியிருந்தபோதும், கர்த்தர் அதனை தம்முடைய சாட்சிகள் மூலம் அறிவித்தார். ஆனால் அதனை அன்றைய இஸ்ரவேலர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போஸ்தலனாகிய பவுலும் இதனை திருஷ்டாந்தமாய் சாட்சியிட்டுள்ளார்; புறஜாதிகளுக்கு கிருபை அருளப்படும் என்று தீர்க்கதரிசிகள் மூலம் முன்அறிவிக்கப்பட்டிருந்ததையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இயேசுகிறிஸ்துவின் மூலம் புறஜாதிகளுக்குள் கிருபை கொண்டுசெல்லப்பட்டது என்று சாட்சியிட்ட அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைக்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை. அப்போஸ்தலனாகிய பவுல் புறஜாதிகளுக்கு சுவிசேஷ தகப்பன் என்ற பேறு பெற்றார்.
பவுலுக்கும் அன்றைய எருசலேம் தேவாலயத்திற்கும் மாமிசபிரகாரமான எந்த விரோதமும் ஏற்பட்டிருக்கவில்லை. தேவதிட்டம் நிறைவேறவேண்டும் என்பதால், அவன் இருதயம் அவ்விதமாய் திருப்பப்பட்டது. அவன் எருசலேமின் கிரியைகளை எச்சரித்தான்.
எல்லா காலங்களிலும் கர்த்தரது பிரமாணம் நிறைவேறும்போது கர்த்தருடைய சாட்சிகள் எழும்பி அதனை சாட்சியிட்டு வந்துள்ளார்கள். அதுவே தேவதிட்டம். தேவதிட்டத்தினை எந்த மனிதனாலும் மாற்ற இயலாது. தேவதிட்டத்தினை சாட்சியிட்டவர்கள் மற்ற மனிதர்களைப்போல மாமிசமும் இரத்தமும் பெற்ற சரீரங்களைக் கொண்டவர்களாகவே வாழ்ந்து வந்துள்ளார்கள்.
நம்மெல்லோருக்கும் பசி எடுப்பதுபோலத்தான் அப்போஸ்தலனாகிய பவுலுக்கும் பசி எடுத்தது. இயேசுகிறிஸ்து மாமிசத்தில் வந்தபோது அந்த சரீரத்திற்கும் பசி எடுத்தது, தாகம் எடுத்தது. சபைத்தூதர்களாக அனுப்பப்பட்ட 7 சபை தூதர்களும் (சாட்சியிட்ட சரீரங்கள்) மாமிச சரீரத்திற்குள்ளான எல்லா உபாதைகளையும், பசியும், தாகமும் கொண்டவர்களாகவே காணப்பட்டார்கள். மோசே நியாயப்பிரமாணத்தினைக் கொண்டுவந்தவன். அவனது மாமிச சரீரமும் எந்தவொரு சிறப்பான நிலைகொண்டதாக சாட்சியிடப்படவில்லை.
பழைய ஏற்பாடு நிறைவுபெற்றபோது முந்தைய புருஷனாகிய நியாயப்பிரமாணம் நிறைவுபெற்றதுபோல, புதிய ஏற்பாடு நிறைவேறும்போதும் அந்தப் புருஷன் மூலமாகக் கட்டளையிடப்பட்ட சபைப்பிரமாணமும் நிறைவேறிவிடும்.
கிறிஸ்துவின் சரீரமாய் கட்டளையிடப்பட்ட சபைக்காலங்கள் யாவும் நிறைவேறியுள்ள காலத்தில் நாம் ஜீவிக்கின்றோம். காரணம், தற்போது அவரது நாமமாய் சாட்சியிடப்படும் "தேவனுடைய வார்த்தை" என்ற நாமம் மேலோங்கி நிற்கின்றது. ஒவ்வொரு சபைக்காலமும் நிறைவடைந்து தற்போது ஏழாம் சபைக்காலமும் நிறைவேறியுள்ள நிலையாகும். இவைகள் அவரது தூதர்கள்மூலம் சாட்சியிடப்படும். ஏழு சபைக்காலங்களும் நிறைவேறிய பின்னர், வார்த்தைக்குரிய காலம் எழும்பும். வார்த்தைக்குரியவர்கள் அதனண்டை சேர்க்கப்படுவார்கள்.
அப்போது சபைப்பிரமாணம் நிறைவேறித்தீர்ந்த பிரமாணமாய் காணப்படும். அப்போது கிறிஸ்துவின் சரீரமாகிய சபை தனது ஜீவனை இழந்து நிற்கும். இதுவே கடைசி ஏற்பாடு என்று சாட்சியிடப்படுகின்றது. யோவான்ஸ்நானன் கிருபைப் பிரமாணத்திற்கு முதன்முதலில் சாட்சி கொடுத்தான். ஞானஸ்நானம் என்ற புதிய முறைமை அவன்மூலம் கொண்டுவரப்பட்டது. விருத்தசேதனம் என்ற முந்தைய முறைமை அப்போது நிறைவேறியது. விருத்தசேதனமானது யேகோவா என்ற புருஷன் கொடுத்த அடையாளமாய் சாட்சியிடப்பட்டது. அதுபோல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்ற புருஷனுக்குரியவளான அந்த ஸ்திரீக்கு கொடுக்கப்பட்ட அடையாளம் ஞானஸ்நானமாகும். இந்தப் புதிய அடையாளமாகிய ஞானஸ்நானம் கடைசி ஏற்பாட்டில் நிறைவடையும். கடைசி ஏற்பாட்டு பிரமாணம் மணவாட்டியைப் பிரித்தெடுக்க அனுப்பப்படும் பிரமாணமாகும். மணவாட்டி வார்த்தைப் பிரமாணத்தைக் கொண்டு வேறுபிரிக்கப்படுவாள்.
கீழ்க்காணும் கிரியைகள் வேசித்தனம் என்று வேதம் சாட்சியிடுகின்றது:
கடைசி ஏற்பாட்டின் பிரமாணம் அது "வார்த்தைப் பிரமாணமாகும்". உலகத் தோற்றமுதல் முத்திரித்து வைக்கப்பட்டுள்ள இரகசியங்களை வெளிக்கொணர்வது வார்த்தை என்ற பிரமாணமாகும். வார்த்தைப் பிரமாணம் இரகசியங்களை வெளிக்கொணரும். வார்த்தை என்ற நாமம் இரகசியங்களை வெளிக்கொணரும் நாமமாகும்.
பவுல் மூலமாக இரகசியங்கள் வெளிக்கொணரப்பட்டது. தன்னை இரகசியங்களுக்கு உக்கிராணக்காரன் என்று பவுல் சாட்சியிட்டுள்ளான். மறைபொருளானது வெளிக்கொணரப்படும் காலம் வரையிலும் மறைபொருளாய் இருக்கும். மறைக்கப்பட்டிருந்த இரகசியங்கள் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு முன்னர் வேறு ஒருவருக்கும் வெளிப்படுத்தப்படவில்லை. அவைகள் இரகசியமாய் இருந்து பவுல்மூலமாய் சபைகளுக்குள் வெளிப்படுத்தப்பட்டது.
ஏசாயாவிற்குத் தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று;
எசேக்கியேலுக்குத் தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று;
எரேமியாவிற்குத் தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று;
வனாந்திரத்தில் யோவான்ஸ்நானனுக்குத் தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று;
கர்த்தருடைய ஆவியானவர் வந்து அமரும்போது வார்த்தை வெளிப்படுத்தப்பட்டது. அது தீர்க்கதரிசன வார்த்தைகளாகும். தீர்க்கதரிசனங்களைக் கர்த்தர் யார் மூலமாக வேண்டுமானாலும் வெளிக்கொணர்வார். அது அவருடைய தீர்மானம்; அது அவரது திட்டம். இரகசியங்களை வெளிக்கொணர்வதில் பவுலினுடைய மாமிச சரீரம் ஒரு கருவியாக அன்று தெரிந்தெடுக்கப்பட்டது. அதனால் பவுலின் சரீரம் விசேஷித்த சரீரமல்ல. அதுவும் பாடுள்ள ஒரு சரீரம்தான். அதனை அவரே சாட்சியிட்டுள்ளார். சபைக்காலங்கள் நிறைவடைந்த பின்னர், கிறிஸ்துவின் சரீரமாய் இருந்த சபையிடமிருந்து அந்த ஜீவன் எடுக்கப்பட்டுவிடும். அது மரித்த நிலைக்குள் தள்ளப்படும்.
பிசாசு கர்த்தத்துவத்தின் கிரியைகளுக்கு எதிர்த்து நிற்பவன். அவன் தேவத்துவத்தில் காப்பாற்றுவதற்காக அபிஷேகம் செய்யப்பட்டவன். கர்த்தத்துவத்தின் பிரமாணம் மாற்றியமைக்கப்படும்போது கர்த்தரின் நாமத்திற்குரிய முந்தைய கிரியைகள் நிறைவு பெறும். நியாயப்பிரமாணம் நிறைவுபெற்றபோது யேகோவா என்ற நாமத்திற்குரிய கிரியைகள் யாவும் நிறைவடைந்தது. யேகோவா மரிக்கவில்லை. அந்த நாமமும் பிதாவின் நாமமாக அழியாமைக்குள்ளதாகவே இருக்கின்றது. ஆனால் யேகோவா என்ற நாமத்தின் கிரியை மாற்றப்பட்டு கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற நாமத்திற்குரிய கிரியை ஆரம்பமானது. யேகோவா என்ற நாமத்தின்மூலம் பிதாவைத் தேடினவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கிருபையானது அப்போது நிறைவடைந்திருந்தது. அதன்பின் புதிய நாமம் புதிய பிரமாணத்தினைக் கொண்டுவந்தது. புதிய பிரமாணம் கட்டளையிடப்பட்டதும் முந்தைய பிரமாணத்தின் ஜீவன் எடுக்கப்பட்டுவிடும். அதன்பின்னர் எழுந்த பிரமாணமே புதிய பிரமாணமாகும் - அது சபைப்பிரமாணமாகும். இயேசுகிறிஸ்துவின்மீது விசுவாசம் வைத்து கிறிஸ்தவர்களாக மாறியவர்களுக்கு இந்த சபைப்பிரமாணம் கட்டளையிடப்பட்டது.
நியாயப்பிரமாணம் இஸ்ரவேலர்களுக்கு கட்டளயிடப்பட்ட பிரமாணமாகும். இஸ்ரவேலர்களுக்கு கிருபை கொடுக்கப்பட்ட காலம் வரையிலும் அது மாற்றியமைக்கப்படவில்லை. புறஜாதிகளுக்குள் சபைப்பிரமாணம் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு சபைக்காலத்திற்கும் ஜீவனுக்குரிய ஒரு பிரமாணம் சாட்சியிடப்பட்டது. இந்த சபைப்பிரமாணமானது ஏழு சபைத்தூதர்கள் மூலமாக கொடுத்து அனுப்பப்பட்டது. இந்தக் கால அளவுக்குள்ளாக நிறைவேறிய சபைப்பிரமாணத்தை மாத்திரம் பற்றிக்கொண்ட சபைகள் பாபிலோன் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. இந்தப் பாபிலோன் தன்னைக் கைம்பெண் அல்ல என்று கூறுவதாகக் கூறப்பட்டுள்ளது. அது, தான் ஒரு ராஜஸ்திரீ, அதாவது தான் ஆளுகை கொண்டவள் என்று தன்னைக் குறித்து பொய் சாட்சியிடுகின்றது என்று கூறப்பட்டுள்ளது. பிரமாணம் ஜீவனை இழந்தபின்னரும் அதனைப் பின்பற்றும்படியான போதனைகளைக் கொடுத்து வஞ்சனைக்குள்ளாக்குகின்றாள். நிறைவேறிய பிரமாணத்தினைக் கொண்டு வஞ்சிப்பவன் சத்துரு என்று வேதம் கூறுகின்றது. அவளது இந்தக் கிரியைகளை வேசித்தனம் என்று வேதம் சாட்சியிடுகின்றது.
வேத வார்த்தையின்படியாக வேசிக்குரிய ஆடை ஆபரணங்கள் எனவும், மணவாட்டிக்குரிய ஆடை ஆபரணங்கள் எனவும் இருபிரிவாக சாட்சியிடப்பட்டுள்ளது. இந்த வஸ்திரங்கள் கிரியைகளாகும்.
நீதி. 7: 10-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந்தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள்"
இங்கே கூறப்பட்டுள்ள ஸ்திரீயானவள் "வேசியின் ஆடையாபரணந்தரித்த ஒரு தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீயாகும்". அணியக்கூடிய வஸ்திரத்தைக் கொண்டு அந்த ஸ்திரீ வேசி என்று தீர்க்கப்படுகின்றாள்.
தாமார் முக்காடு போட்டிருந்தாலும், அவள் வேசியைப்போன்று உட்கார்ந்திருந்தாள். அவளது முக்காடு மணவாட்டியின் முக்காடு அல்ல. ரெபேக்காளும் ஈசாக்கினைப் பார்த்ததும் முக்காடிட்டுக் கொண்டாள் என்று பார்க்கின்றோம். ரெபேக்காள் இங்கே ஈசாக்கின் மணவாட்டி ஆவாள், அவள் வேசி அல்ல.
"வேசியின் ஆடை ஆபரணம் தரித்தவள்" என்று இங்கே யேசபேலினைக் குறித்து கூறப்பட்டுள்ளதைப் பார்க்கின்றோம்.
2 இராஜா. 9: 20 - 22-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"அப்பொழுது ஜாமக்காரன்: அவன் அவர்கள் இருக்கும் இடமட்டும் போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றும், ஓட்டுகிறது நிம்சியின் குமாரனாகிய யெகூ ஓட்டுகிறதுபோல இருக்கிறது; அதிவேகமாய் ஓட்டுகிறான் என்று சொன்னான்.
அப்பொழுது யோராம்: இரதத்தை ஆயத்தப்படுத்து என்றான், அவனுடைய இரதத்தை ஆயத்தப்படுத்தினபோது, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமும், யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அவனவன் தன் தன் இரதத்தில் ஏறி யெகூவுக்கு நேராகப் புறப்பட்டு, யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் நிலத்திலே அவனுக்கு எதிர்ப்பட்டார்கள்.
யோராம் யெகூவைக் கண்டவுடனே, யெகூவே, சமாதானமா என்றான். அதற்கு யெகூ: உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லிசூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் ஏது என்றான்."
இங்கே யெகூ: "உன் தாயினுடைய வேசித்தனம்" என்று கூறுவதைப் பார்க்கின்றோம். யேசபேலை யெகூ வேசி என்று அழைப்பதைக் காணலாம். அவள் யோராமுக்கு தாய். அவள் வேசியாய் யோராமுக்குத் தோன்றவில்லை. யேசபேல் மணவாளனை இழந்த ஒரு இராஜஸ்திரீ; அவளின் கிரியைகள் யெகூவின் பார்வைக்கு வேசித்தனமாய் தோன்றுகின்றது. ஆனால் யோராமுடைய பார்வைக்கு அவள் தனது தாய் என்பது மட்டுமே தெரிந்தது. அவனுக்கு அவள் வேசியாய்த் தெரியவில்லை. பாபிலோனுடைய கிரியைகளும் அதைப்போன்ற ஒரு கிரியை கொண்டதாகவே சாட்சியிடப்பட்டுள்ளது. பாபிலோன் தனது குமாரர்களுக்கு வேசியாய் காணப்படுவதில்லை. பாபிலோனுடைய குமாரர்கள் யோராமைப்போல தனது தாயின் வேசித்தனத்தை அறியாதவர்களாகக் காணப்படுவார்கள். யேசபேல் உலக ஆசீர்வாதத்தில் ஐசுவரியமுள்ளவளாகக் காணப்பட்டாள். ஆனால் யெகூவினுடைய பார்வைக்கு அவள் வேசியாகவே காணப்பட்டாள். பாபிலோனும் "பூமியிலுள்ள வேசிகளுக்கெல்லாம் தாய் என்ற நாமம் தரிப்பிக்கப்பட்டவளாகவே சீயோன்களின் கண்களுக்கு காணப்படுவாள்".
பாபிலோனின் இந்த வேசித்தனத்தினை மாமிச கண்களினால் காணமுடியாது. இவைகள் மறைந்திருக்கக்கூடிய காரியங்கள். இவைகள் மாமிசத்திற்குரிய கிரியைகளாக சாட்சியிடப்படவில்லை; மாமிசத்திற்கு அப்பாற்பட்ட கிரியைகளாக இவைகள் சாட்சியிடப்பட்டுள்ளது. வேசி தரித்துக்கொள்ளும் ஒரு வகை ஆடை ஆபரணங்கள் இருக்கின்றது. இந்த வகை ஆடை ஆபரணத்தை யெகூவால் அடையாளம் கண்டுபிடிக்க முடிந்தது. யெகூவிற்கு கொடுக்கப்பட்ட கிருபை அவனுக்கு அதனை வெளிப்படுத்தியது. யேசபேலை அவன் கொலை செய்ய வேண்டும் என்பதே தேவதிட்டம்; இந்த தேவதிட்டத்தினை செயல்படுத்திட தெரிந்தெடுக்கப்பட்டவன் யெகூ. எனவே, யேசபேலுடைய வேசித்தனங்களை அவனால் அடையாளம் காணமுடிந்தது. யேசபேலுடைய வேசித்தனத்திற்கு அவன் ஒரு முடிவு கட்டவேண்டும். அது திஸ்பியனாகிய எலியா மூலம் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தை. அந்த தீர்க்கதரிசன வார்த்தை யெகூ மூலமாய் நிறைவேறவேண்டும். அதுவே தேவதிட்டம். எனவே, அவனுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவனுக்குள் அந்த உணர்வு உந்தப்பட்டது. அவன் அவளது வேசித்தனங்களை தோலுரித்துக் காட்டுகின்றான். அவனுக்குள் இருந்த ஆவி அப்படியாக அவனை எழுப்பிற்று.
2 இராஜா. 9: 25 - 37-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"அப்பொழுது யெகூ, தன் சேனாபதியாகிய பித்காரை நோக்கி: அவனை எடுத்து, யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் வயல்நிலத்தில் எறிந்து போடு; நானும் நீயும் ஒரு சோடாய் அவன் தகப்பனாகிய ஆகாபின் பிறகே குதிரை ஏறி வருகிறபோது, கர்த்தர் இந்த ஆக்கினையை அவன்மேல் சுமத்தினார் என்பதை நினைத்துக்கொள்.
நேற்று நாபோத்தின் இரத்தத்தையும், அவன் குமாரன் இரத்தத்தையும் கண்டேன் அல்லவா என்றும், இந்த நிலத்தில் உனக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் என்றும் அப்பொழுது கர்த்தர் சொன்னாரே; இப்பொழுதும் அவனை எடுத்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே இந்த நிலத்தில் எறிந்துபோடு என்றான்.
இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு, தோட்டத்தின் வீட்டுவழியாய் ஓடிப்போனான்; யெகூ அவனைப் பின்தொடர்ந்து: அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றான்; அவர்கள் இப்லேயாம் கிட்ட இருக்கிற கூர்மலையின்மேல் ஏறுகிற வழியிலே அப்படிச் செய்தார்கள்; அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே செத்துப்போனான்.
அவனுடைய ஊழியக்காரர் அவனை இரதத்தின்மேல் எருசலேமுக்குக் கொண்டுபோய், அவனைத் தாவீதின் நகரத்தில் அவன் பிதாக்களோடு அவனுடைய கல்லறையிலே அடக்கம்பண்ணினார்கள்.
இந்த அகசியா, ஆகாபுடைய குமாரனாகிய யோராமின் பதினோராம் வருஷத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.
யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; அதை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையைச் சிங்காரித்துக்கொண்டு, ஜன்னல்வழியாய் எட்டிப்பார்த்து,
யெகூ ஒலிமுகவாசலில் வந்தபோது, அவள்: தன் ஆண்டவனைக் கொன்ற சிம்ரி ஷேமம் அடைந்தானா என்றாள்.
அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என் பட்சத்தில் இருக்கிறது யார்? யார்? என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று பிரதானிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள்.
அப்பொழுது அவன்: அவளைக் கீழே தள்ளுங்கள் என்றான்; அப்படியே அவளைக் கீழே தள்ளினதினால், அவளுடைய இரத்தம் சுவரிலும் குதிரைகளிலும் தெரித்தது; அவன் அவளை மிதித்துக்கொண்டு,
உள்ளேபோய், புசித்துக் குடித்தபின்பு: நீங்கள் போய் சபிக்கப்பட்ட அந்த ஸ்திரீயைப் பார்த்து, அவளை அடக்கம்பண்ணுங்கள்; அவள் ஒரு ராஜகுமாரத்தி என்றான்.
அவர்கள் அவளை அடக்கம்பண்ணப்போகிறபோது, அவளுடைய தலையோட்டையும் கால்களையும் உள்ளங்கைகளையுமே அல்லாமல் வேறொன்றையும் காணவில்லை.
ஆகையால் அவர்கள் திரும்பவந்து அவனுக்கு அறிவித்தார்கள்; அப்பொழுது அவன்: இது கர்த்தர் திஸ்பியனாகிய எலியா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு சொன்ன வார்த்தை; யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் யேசபேலின் மாம்சத்தைத் தின்னும் என்றும்,
இன்னது யேசபேலென்று சொல்லக்கூடாதபடிக்கு, யேசபேலின் பிரேதம் யெஸ்ரயேலின் நிலத்திலே வயல்வெளியின்மேல் போடும் எருவைப்போல் ஆகும் என்றும் சொன்னாரே என்றான்."
கர்த்தர் இந்த ஆக்கினையை யேசபேல் மேல் சுமத்தியதுபோல பாபிலோன்மேலும் ஆக்கினையைச் சுமத்தப்போகின்றார். இதனை தீர்க்கதரிசனம் முன்னறிவித்துள்ளது. "அன்று கர்த்தர் திஸ்பியனாகிய எலியா என்னும் தன்னுடைய ஊழியக்காரரைக் கொண்டு சொன்ன அந்த வார்த்தை" கர்த்தருடைய ஊழியனாகிய யெகூ மூலம் நிறைவேறியதுபோல, கடைசி ஏற்பாட்டிலும் கர்த்தர் தெரிந்தெடுத்த பாத்திரத்தின்மூலம் பாபிலோனின் கிரியைகளும் அடையாளம் காட்டப்படும். யேசபேலுடைய கிரியைகளை எலியா மூலம் எச்சரித்த தேவன், அதனை நிறைவேற்றிட யெகூவை அனுப்பியதுபோல, பாபிலோனுக்கு எதிராக உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறும்போது அவரால் முன்குறிக்கப்பட்டவர்கள் மூலம் அதனை நிறைவேற்றுவார். அவர்களுக்கு அவளின் வேசித்தனம் அடையாளம் காட்டப்படும். அப்போது அவளின் வேசித்தனத்தினை எதிர்த்து முழக்கமிட தெரிந்தெடுக்கப்பட்டவன் எக்காள சத்தமிடுவான். அப்போது எவர்களுடைய இருதயங்களை கர்த்தர் திறந்து கொடுக்கின்றாரோ, அவர்களும் அதனை அறிந்து சாட்சியிடுவார்கள். யோராமைப் போல தாயாகிய பாபிலோனோடு இணைக்கப்பட்டுள்ளவர்கள் அதனை அறியமாட்டார்கள். கர்த்தர் சாட்சியிட அனுப்பும் சாட்சியினை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
2 இராஜா. 10: 10, 11-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"ஆதலால் கர்த்தர் ஆகாபின் குடும்பத்தாருக்கு விரோதமாகச் சொன்ன கர்த்தருடைய வார்த்தைகளில் ஒன்றும் தரையிலே விழவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள், கர்த்தர் தம்முடைய ஊழியக்காரனாகிய எலியாவைக்கொண்டு சொன்னதைச் செய்தார் என்றான்.
யெஸ்ரயேலிலும் ஆகாபின் குடும்பத்தாரில் மீதியான யாவரையும், அவனுக்கு இருந்த எல்லா மந்திரிகளையும், அவனைச்சேர்ந்த மனுஷரையும், அவனுடைய ஆசாரியர்களையும், அவனுக்கு ஒருவரையும் மீதியாக வைக்காதபடிக்கு, யெகூ கொன்றுபோட்டான்."
யேசபேலுக்கு எதிராக எலியாவைக் கொண்டு கர்த்தர் சொன்ன அந்தத் தீர்க்கதரிசனம் அன்று நிறைவேறியது. அதுபோல பாபிலோனுக்கு எதிராக கர்த்தரின் தீர்க்கதரிசன வார்த்தை வெளிப்படுத்தின விசேஷம் 18: 6-ல் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்க்கதரிசன வார்த்தை நிறைவேறும்போது, அவளின் வேசித்தனம் வெளியரங்கமாகும்.
வெளி. 18: 6-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"அவள் உங்களுக்குப் பலனளித்ததுபோல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்துகொடுங்கள்."
புறஜாதிகளின் கிருபை நிறைவடைந்தபின், கடைசி ஏற்பாட்டின் காலத்தில் ஒரு பெரிய எழுப்புதல் உண்டாகும். அது அதற்குமுன் ஏற்பட்டிராத ஒரு எழுப்புதலாக இருக்கும். அது கர்த்தரது சாட்சிகள் மூலம் கொடுக்கப்படும் எழுப்புதலாகும். அப்போது கட்டளையிடப்பட்டிருக்கின்ற கர்த்தரது நாமம் வெளியரங்கமாக சாட்சியிடப்படும்; அது கர்த்தத்துவத்தில் கர்த்தர் நிறைவேற்றும் ஒவ்வொரு கிரியையினைக் குறித்தும் சாட்சியிடும். யெகூவோடு இருக்கக் கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களைப்போல, அந்த சாட்சிகளோடு இருக்கக் கர்த்தர் தெரிந்தெடுத்துள்ளவர்கள் அந்த சாட்சிகளோடு இணைந்தவர்களாய் பாபிலோனை எதிர்த்து வார்த்தையின் யுத்தம் செய்வார்கள். யேசபேல் வேசியாக யெகூவின் கண்களுக்குத் தெரிந்ததுபோன்று, தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் கண்களுக்கு பாபிலோனின் வேசித்தனம் அடையாளம் காட்டப்படும். அவளோடு ஐக்கியப்படும் மற்றவர்களுக்கு அவள் ராஜஸ்திரீயாகவே காணப்படுவாள்.
கலா. 6: 12-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளக் கட்டாயம்பண்ணுகிறார்கள்."
இங்கே வேஷம் தரிக்கக்கூடிய கிரியையானது வேசியின் அணிகலன் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. அப்போஸ்தலனாகிய பவுல்: "மாமிசத்தின்படி நல்வேஷம்" என்று கூறியுள்ளார். மாமிசத்தின்படியான அந்த வேஷம் ஒரு வேசிக்கு அலங்காரமாகக் காணப்படுகின்றது; மாமிசத்தின்படி நல்வேஷமாக அன்று அப்போஸ்தலனாகிய பவுலுக்கு காணப்பட்டது விருத்தசேதனம் என்ற அலங்காரமாகும். அதுபோல ஞானஸ்நானம் என்ற அடையாளமும் கடைசி ஏற்பாட்டின் காலத்தில் வேஷமாகவே காணப்படும்.
கடைசி ஏற்பாட்டின் காலத்தில் மாமிசத்தின்படியான வேஷம் தரித்திருப்பவர்களுக்கு இந்த ஞானஸ்நானமானது ஜீவனுக்குரியதாகவே காணப்படும். ஆனால் வார்த்தையைப் பற்றிக்கொண்டவர்களுக்கு அது வேசியின் ஆடையாபரணமாகக் காணப்படும். பாபிலோனின் வேசித்தனத்திற்குள்ளானவர்களின் கண்களுக்கு பாபிலோன் ராஜஸ்திரீயாகவே காணப்படுவாள். அவளது ஆடையாபரணங்கள் அவர்களுக்கு செல்வமிகுதியாகவே காணப்படும். ஜீவனுக்குரியவர்களின் கண்களுக்கு முன்பாக அது வேஷமாகவே காணப்படும். சபைகள் கொடுக்கும் ஞானஸ்நானம் என்ற அடையாளம் அவர்களுக்கு நிறைவேறிய அடையாளமாகவே காணப்படும்.
ரோம. 12: 2-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்."
அப்போஸ்தலனாகிய பவுல் மாமிசத்தின்படியான வேஷம் என்று கூறியுள்ளது விருத்தசேதனம் என்ற மாமிச அடையாளமாகும். அதுபோல புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்ட ஞானஸ்நானம் என்ற அடையாளம் கடைசி ஏற்பாட்டில் மாமிசத்தின்படியான வேஷமாய் காணப்படும். இது பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் என்று கூறப்பட்டுள்ளது. "தேவசித்தத்தினை உணராதிருத்தலே" இப்பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் என்று சாட்சியிடப்பட்டுள்ளது.
தேவசித்தத்தினை ஏற்றுக்கொள்ள இயலாத நிலையே வேஷமாகும். பவுல் தேவனுடைய சித்தத்தினை புறஜாதிகள் மத்தியில் நிறைவேற்றிட அனுப்பப்பட்ட தூதன். "புறஜாதிகளுக்குக் கிருபை கட்டளையிடப்பட வேண்டும் என்பது தேவசித்தமாய் அன்று சாட்சியிடப்பட்டது". அது புதிய ஏற்பாடு. இதன்பின்னர் புறஜாதிகளாகிய கிறிஸ்தவர்களிடமிருந்து கிருபை இஸ்ரவேலர்களுக்குள்ளாகக் கொண்டு செல்லப்பட வேண்டும். இதுவே கடைசி ஏற்பாடு. இந்தக் கடைசி ஏற்பாட்டினில் கர்த்தர் சாட்சியிடும் அவரது சித்தத்தின்படி செயல்படாதவர்கள் இப்பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரித்தவர்களாகவே சாட்சியிடப்பட்டுள்ளார்கள்.
பிரபஞ்சம் என்றால் இந்த பூமி. "இந்தப் பூமிக்கு ஒத்த வேஷம்" என்பது தேவத்துவ கிரியையை மாத்திரம் பற்றிக்கொண்டுள்ள மற்ற ஜனங்களைப் போன்ற கிரியையினை செய்வதாகும். எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கின்றது என்று கிறிஸ்துவின் சித்தத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள் அப்போஸ்தலர்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிந்தை என்ற புதிய சிந்தைக்கு சாட்சியிட்டார்கள். அதுபோன்ற சாட்சிகள் கடைசி ஏற்பாட்டிலும் எழும்புவார்கள். அவர்கள் தேவசித்தத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள். அவர்கள் தேவனால் முன்குறிக்கப்பட்டவர்கள். அவர்களுக்காக கடைசி எக்காளம் ஒன்று ஊதப்படும்.
வெளி. 18: 4-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்."
இங்கே தேவசித்தம் சாட்சியிடுகிறது: "பாபிலோனின் வேசித்தனத்தினை விட்டு வெளியேறி வாருங்கள்" என்று. வார்த்தை அழைக்கின்றது, "அவளை விட்டு வெளியே வா" என்று. பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரித்தவர்களால் அந்த சத்தத்தினை ஏற்றுக்கொள்ள இயலாது. தேவனுடைய சித்தத்தினை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாது. அது அவர்களின் கண்களுக்கு மறைக்கப்பட்ட ஒன்றாகவே காணப்படும். நிறைவேறிய பிரமாணங்களைப் பற்றிக்கொள்வது பாவம், அத்தகைய கிரியைகளைச் செய்யும் அவளுடைய பாவங்களுக்கு நீ உடன்படாதே என்பதே இங்கே தீர்க்கதரிசனமாகக் கூறப்பட்டுள்ளது. அதுவே தேவனுடைய சித்தமாய் இருக்கின்றது. ஆனால் அந்த வேசி தான் அணிந்திருக்கின்ற பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் என்ற அந்த அணிகலனைக் கொண்டு தேவசித்தத்தினை அறியவிடாதபடி தடை செய்கின்றதாய் தனது கிரியைகளைச் செய்வாள்.
2 கொரி. 11: 14-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே."
இங்கே "ஒளியின் தூதனுடைய வேஷம்" என்று சாட்சியிடப்பட்டுள்ளது. இந்த வேஷம் பிசாசினுடையது. அவன் சத்தியத்திற்கு எதிரான வேஷாதாரி.
தானி. 7: 25-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்."
அவன் "காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பவன்" என்று கூறப்பட்டுள்ளது. ஓய்வுநாளில் யாதொரு வேலையும் செய்யக்கூடாது என்பது நியாயப்பிரமாணம். ஆனால் அந்தப் பிரமாணம் இயேசுகிறிஸ்து மூலம் அப்போது நிறைவேறியிருந்தது. இந்த மாறுதல் கர்த்தரால் கர்த்தத்துவத்தில் கட்டளையிடப்பட்ட மாறுதல். ஆனால், பிசாசு நிறைவேறிய பிரமாணத்தினைக் கொண்டு விசுவாசிகளை வேறுபிரித்தான். தேவத்திட்டமாய் கட்டளையிடப்படும் மாறுதல்களை தனது சுயத்தினால் மாற்றுபவன் அந்த வேஷாதாரி. அதுவே ஒளியின் தூதனுடைய வேஷமாகும். அவனது இந்தக் கிரியை அந்த வேஷாதார கிரியையாகும். அது அவள் அணியும் வேஷாதார கிரியையிலான ஆபரணமாக சாட்சியிடப்பட்டுள்ளது.
2 தீமோ. 3: 5-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டுவிலகு."
"தேவபக்தியின் வேஷம்" என்பதும் அவள் அணியக்கூடிய ஆபரணமாக சாட்சியிடப்பட்டுள்ளது. பாபிலோன் என்ற இந்த வேசி இத்தகைய வேஷம் அணிந்தவளாக சாட்சியிடப்படுகின்றாள். "தேவபக்தி" என்பது எனக்கு இவைகளைச் செய்ய அதிகாரம் உண்டென்று நினைக்கின்றாயா? என்று இயேசுகிறிஸ்து கேட்டபோது, "ஆம் ஆண்டவரே, நான் விசுவாசிக்கின்றேன்; ஆனாலும் என்னுடைய அவிசுவாசம் நீங்கும்படி எனக்கு உதவிசெய்யுங்கள்" என்று கூறின அந்த சிறுவனின் தகப்பனுடைய பக்தியாக இருந்தது.
இயேசுகிறிஸ்து ஐந்து அப்பம் இரண்டு மீன்களை ஆசீர்வதித்துக் கொடுத்தபோது, 5000 பேர் புசித்தார்கள். சாப்பிட அமர்ந்த ஒவ்வொருவருக்குள்ளும் விசுவாசம் இருந்தது. அந்த விசுவாசம் அவர்களை பரலோகராஜ்யம் கொண்டு சென்றதா? இல்லையே! அவர்கள் இம்மைக்குரியவைகளில் மாத்திரம் விசுவாசம் கொண்டவர்களாக இருந்தார்கள். மாமிச போஜனத்திற்கு அப்பாற்பட்டதாக ஒரு போஜனம் இருக்கின்றதே, அதன்மீது அவர்கள் அனைவருக்கும் நாட்டம் இல்லாதிருந்தது.
அப்பம் புசித்துத் திருப்தியானவர்கள் எல்லோரிடத்திலும் பக்தி இருந்தது; விசுவாசம் இருந்தது. விசுவாசத்தோடு பந்தியில் வந்து அமர்ந்தவர்களுக்கு மாமிசத்திற்குரிய ஆகாரம் கிடைத்தது. இந்த விசுவாசம் அவர்களது மாமிச தேவைகளுக்காக மாத்திரம் கர்த்தரைத் தேடக்கூடியதாய் இருந்தது. இது பரிதபிக்கத்தக்க ஒரு கிரியையாகவே வேதம் சாட்சியிட்டுள்ளது.
எண். 25: 11-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"நான் என் எரிச்சலில் இஸ்ரவேல் புத்திரரை நிர்மூலமாக்காதபடிக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர்மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான்."
பினெகாஸ் பிரமாணத்தின் மீது பக்தி கொண்டவனாய் இருந்தான். அப்போது அந்தப் பிரமாணம் அவருடைய நாமமாக இருந்தது. உண்மையான பக்தி என்பது அவருடைய பிரமாணத்திற்கேற்ற கிரியையாகும். பினெகாசுக்கு பிரமாணத்தின்மேல் பக்தி இருந்தது. எனவே, ஆசாரியத்துவம் பினெகாசின் சந்ததிக்குக் கட்டளையிடப்பட்டது.
1 இரா. 19: 10-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்."
எலியா கொண்ட பக்தி கர்த்தர் கட்டளையிட்ட உடன்படிக்கையின்மீது இருந்தது. அது அவரின் பிரமாணத்தின் மீதிருந்த பக்தி. இன்னொரு பக்தி யெகூவின் பக்தி.
2 இராஜா. 10: 16-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"நீ என்னோடே கூடவந்து கர்த்தருக்காக எனக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைப் பார் என்றான்; அப்படியே இவனை அவன் இரதத்தின்மேல் ஏற்றினார்கள்."
யெகூ கொண்ட பக்தியும், எலியா கொண்ட பக்தியும் கர்த்தரிடத்தில் கொண்ட பக்தியாகச் சாட்சியிடப்பட்டுள்ளது. அது அனுப்பப்பட்ட பிரமாணமான வார்த்தையிடம் கொண்ட பக்தியாகும்.
யேசபேலுக்கு எதிராக யெகூ எழும்பியபோது, "தன் எஜமானனைக் கொன்ற சிம்ரி ஷேமம் அடைந்தானா" என்று யேசபேல் கேட்பதைக் காணலாம். அது, எஜமானனுக்கு விரோதமாய் எழும்புகின்ற நீ ஷேமம் அடையமாட்டாய் என்பதாய் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் யெகூ செய்த கிரியைகள் யாவும் கர்த்தரால் திட்டம் பண்ணப்பட்ட காரியம் ஆகும். இங்கே தேவதிட்டத்தை, தேவசித்தத்தினை நிறைவேற்றுவதில் யெகூ ஒரு பாத்திரம். அவன் கொண்ட பக்தி இந்தக் கிருபையை அவனுக்குக் கொடுத்தது. அவனைப்போல தேவதிட்டத்தில் பக்தியாய் இருப்பவர்கள் இந்த வேஷங்களில் ஒன்றையும் தன் அணிகலன்களாக அணியமாட்டார்கள். இவைகளைத் தன்னுடைய அணிகலனாக அணிந்திருப்பவள் பாபிலோன் என்ற வேசியாகும்.
மணவாட்டியின் தன்மையானது:
மேலே குறிப்பிடப்பட்ட இந்தத் தன்மைகளைக் கொண்டுள்ளவர்கள் பாபிலோனின் வேசித்தனத்தினை அடையாளம் காண்பார்கள்; அவளின் அந்த வேசித்தன அணிகலன்களை அடையாளம் காண்பார்கள்; இவைகளை அறிந்தவர்கள் அவளின் வேசித்தனத்தினை விட்டு வெளியேறி வருவார்கள்.
வெளி. 18: 7-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள்."
பாபிலோனில் வேசித்தனங்களாக இங்கே சாட்சியிடப்பட்டுள்ளவைகள்:
அவள் தன்னை மகிமைப்படுத்தியது,
அவள் செல்வச்செருக்காய் வாழ்ந்தது,
அவள் தன்னை ராஜஸ்திரீ என்று சாட்சியிட்டது,
அவள், தான் கைம்பெண் அல்ல என்று சாட்சியிட்டது,
அவள், தான் துக்கத்தினைக் காண்பதில்லை, அதாவது ஆக்கினைத்தீர்ப்பிற்குள்ளாவதில்லை என்று எண்ணிக்கொண்டது.
அவள் தன்னை மகிமைப்படுத்தியது:
அவள் தன்னை மகிமைப்படுத்தியது அவளுடைய வேசித்தனம் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. கைம்பெண் அல்ல என்று கூறிய அந்தக் காரியத்தினைப் பார்த்தோம். "கைம்பெண்" என்பது இங்கே "நிறைவேறித்தீர்ந்த வார்த்தையோடு இணைக்கப்பட்டு இருப்பதைக் காட்டுகின்றது".
அவள் தன்னை மகிமைப்படுத்துகின்றவள். யாரை மகிமைப்படுத்த வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளதோ, அவரை அவள் மகிமைப்படுத்தவில்லை. சபைகள் கர்த்தரை மகிமைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டது. மகிமை என்பது சிரசு என்று அர்த்தம் கொள்ளப்படும். இந்த சிரசு கிறிஸ்து என்று வார்த்தை கூறுகின்றது. சிரசாக இருக்கவேண்டிய கிறிஸ்துவை அவரின் அந்த மகிமைக்குள்ளாக சபைகள் ஏற்றுக்கொள்ளாதபோது அது தன்னை மகிமைப்படுத்துவதாக சாட்சியிடப்பட்டுள்ளது. கிறிஸ்து பிரமாணமாக இருக்கின்றார். அவர் சபைப் பிரமாணமாக இருக்கின்றார். சபை தன்னுடைய நிறைவுக்குள்ளான காலத்திற்குள் வந்தபின், அந்த சபைக்குரிய பிரமாணமானது நிறைவேறியிருப்பதால் அது மரித்த நிலைக்குள் வந்துவிடும்.
ஏவாளிடம், நீங்கள் சாகவே சாவதில்லை என்றும்; "நீங்கள் தேவர்களைப்போல மாறுவீர்கள்" என்றும் பிசாசு கூறினான். புசிக்காதே என்று ஆதாமிற்குக் கொடுக்கப்பட்ட அந்தப் பிரமாணம் இன்று ஒருவனுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்காது. காரணம், அந்தப் பிரமாணம் இன்று மரித்த ஒரு நிலை. அதுபோலவே நியாயப்பிரமாணமும் நிறைவேறிய பிரமாணமானதால் அதுவும் மரித்த நிலை. 7 சபைக்காலங்களும் நிறைவேறிய பின்னர், சபைகளுக்குரிய பிரமாணமும் நிறைவடைந்துவிடும். அப்போது அந்தப் பிரமாணத்திற்குக் கொடுக்கப்பட்ட ஜீவன் எடுக்கப்பட்டுவிடும். அது மரித்த நிலைக்கு சமமாகும்.
ஏழு சபைக்காலங்களும் நிறைவடைந்த பின்னர், கர்த்தரது மகிமை சபைகளிலிருந்து எடுக்கப்பட்டுவிடும். ஆதாமிற்குள் ஜீவசுவாசத்தினை ஊதினார். அவன் தனக்குள்ளாக ஜீவன் கொண்டவனானான். பிசாசின் உபதேசத்திற்கு அவன் இணங்கி செயல்பட்டபின், கர்த்தர் அவனிடம் "நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்?" என்று கூறுவதைக் காண்கின்றோம். ஆதாம் மற்ற ஜனங்களுக்கு அருளப்படாத ஒரு ஜீவனை தான் பெற்றிருந்ததை உணராதிருந்தான். இப்பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரித்தவனாய் தன்னிலை மறந்திருந்தான். தனக்குத் தடை செய்யப்பட்டிருந்த கனியினைப் புசித்தான். தான் பெற்றுக்கொண்ட ஜீவனை இழக்கச் செய்யும் கிரியைகளைச் செய்ததால், அவன் அந்தத் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டான்.
கர்த்தருடைய மகிமை சீனாய் மலையில் இறங்கிற்று என்று பார்க்கின்றோம்.
யாத். 24: 15 - 18-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று.
கர்த்தருடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறுநாள் அதை மூடியிருந்தது; ஏழாம் நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.
மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது.
மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும்பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான்".
கர்த்தருடைய மகிமை தங்கும் ஸ்தலத்திலிருந்து அவர் பிரமாணத்தினைக் கட்டளையிட்டார். அது சீனாய் மலை என்று சாட்சியிடப்பட்டுள்ளது. அங்கே நியாயப்பிரமாணம் மோசேயின் மூலம் கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் கர்த்தர் சபைகளில் மகிமைப்பட்டார். கர்த்தர் சபைகளுக்குள்ளாக ஜீவனுக்குரிய தம்முடைய வார்த்தையினை வெளிப்படுத்தினார். அவைகள் சபைப் பிரமாணங்களாக சாட்சியிடப்பட்டது. சீனாய் மலையின்மேல் கர்த்தர் தன்னை வெளிப்படுத்தியதினால், கர்த்தருடைய மகிமை தொடர்ந்து அந்த மலையின்மீது எப்போதும் தங்கியிருக்கவில்லை. கர்த்தரது மகிமை தங்கியிருக்கும்போது, அந்த சீனாய் மலை ஜீவனுக்குரிய பிரமாணத்தினைக் கொடுத்தது. அதன்பின்னர், பிதாவின் ஒரேபேறானவரின் மகிமைக்கு ஏற்ற மகிமையாய் குமாரன் வெளிப்பட்டபோது, சீனாய் மலையின்மீதிருந்த மகிமை ஜீவன் அற்றதாய் போய்விட்டது. காரணம், நியாயப்பிரமாணம் கிறிஸ்து இயேசுவினால் அங்கே நிறைவேற்றப்பட்டுவிட்டது.
நியாயப்பிரமாணம் நிறைவேறித்தீர்ந்தபோது, "சீனாய் மலை, அது ஆகார்" என்ற தன்மையில் மாறியதை பவுல் சாட்சியிட்டார். காரணம், அப்போது அவள் வாக்குத்தத்தத்திற்கு சுதந்தரவாளி அல்ல. அந்த அடிமையினையும் அவள் பிள்ளையினையும் புறம்பே தள்ளு என்று சாட்சியிடப்பட்டதுபோல, சுதந்திரபாகம் அவளது குமாரனிடமிருந்து பறிக்கப்பட்டது. எனவே ஆகார் என்ற பர்வதம் மகிமை இழந்த பர்வதமாயிற்று. அதன்பின்னர் சாராளாய் உயர்த்தப்பட்டது இயேசுகிறிஸ்துவின் சரீரமான சபை. கிறிஸ்து மகிமைப்பட வேண்டிய காலத்தில் அவர் மகிமைப்பட்டார். முதலாவது சபையில் அவர் அந்த சபைக்குரிய வார்த்தையாய் மகிமைப்பட்டார். 2-வது சபையில் 2-வது சபைக்குரிய வார்த்தையாய் வெளிப்பட்டு மகிமைப்பட்டார். இப்படியாக ஒவ்வொரு சபைக்காலங்களிலும் அந்த சபைக்கென்று அனுப்பப்பட்ட வார்த்தையின் மூலமாக அவர் மகிமைப்பட்டார். அந்த மகிமை பிதாவினிடமிருந்து பெறப்பட்டு குமாரன்மூலம் அனுப்பப்பட்ட பிரமாணமாய் ஒளிவிட்டு பிரகாசித்தது. சபைக்குரிய காலம் நிறைவடைந்தபின்னர், அந்த மகிமை சபைகளைவிட்டு எடுக்கப்பட்ட நிலை. சபைகள் மகிமையினை இழந்த வேளை கடைசி ஏற்பாடு என்று சாட்சியிடப்படுகின்றது.
சபைகளின் மகிமை எடுபட்ட பின்னரும் சபைகளுக்குரிய மகிமையினைத் தன்னகத்தே கொண்டிருப்பவளே பாபிலோன். எனவே அவளது கிரியைகள் வேசித்தனம் என்று வார்த்தை சாட்சியிடுகின்றது.
சபைகளுக்குரிய மகிமை அற்றுப்போன பின்னரும் அற்றுப்போன கர்த்தருடைய மகிமையினை தன்னகத்தே எடுத்து தன்னைத்தானே அவள் மகிமைப்படுத்துகின்றவளாகக் காணப்படுவாள்.
லூக். 7: 24, 25-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"யோவானுடைய தூதர்கள் போனபின்பு அவர் யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?
அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? அலங்கார வஸ்திரந்தரித்துச் செல்வமாய் வாழ்கிறவர்கள் அரசர் மாளிகைகளிலே இருக்கிறார்கள்."
யோவானிடத்தில் எதற்காகப் போனார்கள்? யோவானிடத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வதால், செல்வம் கிடைக்கும்; ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதற்காகவா போனார்கள்? "செல்வமாய் வாழ்பவர்கள் அரசர் மாளிகையிலே இருக்கின்றார்கள்" என்று கிறிஸ்து கூறினார். அன்று நியாயப்பிரமாண விசுவாசிகளான ஆசாரியர்களை தேவத்துவத்திற்குள்ளான ஆசீர்வாதங்களுக்காய் யூதர்கள் பற்றிக் கொண்டிருந்தார்கள். சரீர உபாதைகளினாலும் அங்கவீனத்தினாலும் வியாதிப்படுக்கையில் இருந்தவர்களும் பிசாசு பிடித்தவர்களும் கிறிஸ்துவைத் தேடி ஓடினார்கள். ஆனால் மாமிச சரீரத்தில் எந்தவிதமான உபத்திரவமும் இல்லாது உலக ஆசீர்வாதங்களிலும் எந்தவிதமான குறைவும் இல்லாதிருந்தவர்கள் கிறிஸ்துவை நாடி ஓடவில்லை. அந்த வார்த்தைக்கு எதிரான கிரியைகளையே செய்தார்கள். ஆசாரியரோடும் மூப்பர்களோடும் இருந்தவர்கள் செல்வத்தில் குறைவில்லாதவர்களாய் இருந்தார்கள். அவர்கள் ஏதோ ஒரு மாமிச ஆதாயத்திற்காக எருசலேம் தேவாலயத்தைப் பற்றிக் கொண்டிருந்தார்கள். எருசலேம் அன்று செல்வசெருக்காய் வாழ்ந்துகொண்டிருந்தாள். அதைப்போல சபைகளும் பூமிக்குரிய நன்மைகளைக் காட்டி தங்களின் விசுவாசிகளைக் கட்டி வைக்கும் நிலை கடைசி ஏற்பாட்டில் ஏற்படும். அப்போது அவளோடு ஐக்கியப்பட்டவர்கள் தேவத்துவ நன்மைகளுக்காய் அவளைப் பற்றிக்கொண்டிருப்பார்கள். எனவே அவளுக்குள் கர்த்தர் தனது வாதையினை அனுப்பப்போகின்றார்.
கர்த்தத்துவ ராஜ்யபாரம் தன்னைவிட்டு நீங்கியபின்னரும் தன்னை ராஜஸ்திரீ என்று எருசலேம் கூறியதுபோல சபை என்ற அந்த ஸ்திரீயும் சாட்சியிடுவாள். மணவாட்டிக்குரிய கிரியைகள் நிறைவேறின பின்னரும் தன்னை மணவாட்டி என்று அவள் வெளிக்காட்டுவாள். மணவாட்டிக்குரிய கிரியைகளைப் பற்றிக்கொள்ளாமல் மணவாளனுடைய பிரமாணத்திற்கு செவிகொடாமல் அவள் தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்துவாள். அவளிடமிருந்து ஆவிக்குரிய பரம ராஜ்யத்தின் அங்கீகாரம் எடுக்கப்பட்ட பின்னரும் அவள் தன்னை ராஜஸ்திரீ என்று சாட்சியிடுவாள்.
எஸ்.1: 9-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:
"ராஜஸ்திரீயாகிய வஸ்தியும் ராஜாவாகிய அகாஸ்வேருவின் அரமனையிலே ஸ்திரீகளுக்கு ஒரு விருந்து செய்தாள்."
ராஜா விருந்து செய்ததுபோல, வஸ்தியும் ஒரு விருந்துபண்ணினாள். எனவே அவள் ராஜாவின் அழைப்பினை ஏற்றுக்கொள்ளவில்லை. அவளது மகிமை ராஜாவின் மகிமையை ஏற்றுக்கொள்ளவில்லை. ராஜாவின் அழைப்பிற்குச் செவிகொடாததால், அவள் செய்த அந்த விருந்து அங்கீகரிக்கப்படவில்லை. ராஜ ஸ்திரீக்கான அங்கீகாரம் அவளைவிட்டு எடுபட்டது. ஓய்வுநாளில் யாதொரு வேலையும் செய்யக்கூடாது என்று பிரமாணம் சாட்சியிட்டது. அது நியாயப்பிரமாணம். ஓய்வுநாளுக்கும் மனுஷகுமாரன் ஆண்டவராய் இருக்கின்றார் என்று சாட்சியிட்டவர் அந்த நியாயப்பிரமாணத்தினை நிறைவேற்றினார். எனவே நியாயப்பிரமாணம் ஆளுகைக்குரிய தன்மையை இழந்திருந்தது. நிறைவடைந்த அந்தப் பிரமாணத்தினைப் பற்றிக்கொண்டிருந்த எருசலேம் அங்கே கிறிஸ்து என்ற ராஜாவின் வார்த்தைக்குச் செவிகொடுக்கவில்லை.
ராஜா தனக்குக் கட்டளையிட்ட பிரமாணத்தின்படி ராஜஸ்திரீயாகிய வஸ்தி செயல்படவில்லை. எனவே தனது நிலையினை இழந்துபோனாள். சற்று யோசித்துப் பாருங்கள். அரசரோடு இருந்தவர்கள் மதுபோதையில் இருந்தார்கள். மாமிசத்தில் சிந்தித்தால் அவர்கள் மத்தியில் ராஜசமுகத்திற்கு வஸ்தி வராதது நீதியாகக் கூட காணப்படலாம். ஆனால் பிரமாணம் கொடுத்தவர் ராஜா, மணவாளன். அவர் தனது மணவாட்டிக்குப் பிரமாணத்தைக் கொடுத்தார். அவள் அதற்குக் கீழ்ப்படியவேண்டும். அதுவே நீதி. ஆனால் ராஜஸ்திரீயாய் வந்த வஸ்தி தன்னை உயர்த்தி, ராஜாவின் கட்டளைக்கு செவிகொடுக்கவில்லை. எனவே அவள் ராஜஸ்திரீ என்ற தன்மையிலிருந்து தள்ளிவிடப்பட்டாள். அதுபோல பாபிலோனாக சாட்சியிடப்படும் சபைகளும் மணவாளனின் வார்த்தைக்குச் செவிகொடாமல் போவதால் தன் நிலையிலிருந்து தள்ளப்படும். எனவே மணவாட்டி அவளிடமிருந்து வெளியேறி வர கர்த்தர் அழைப்பு விடுக்கின்றார். தான் ராஜஸ்திரீ என்று கூறி தன்னைத்தானே மகிமைப்படுத்திக் கொண்டிருக்கும் அவள் வாதைக்கு உட்படுத்தப்படப் போகின்றாள். அவர் அவளுக்கு வாதையையும் உபத்திரவத்தையும் கட்டளையிடப்போகின்றார். எனவே, தனக்குரியவர்களை அவர் வேறுபிரித்து அவளைவிட்டு வெளியேறி வரும்படியாய் வார்த்தை அழைக்கும். இது மணவாளன் கொடுக்கும் அழைப்பு.
நான் துக்கத்தினைக் காண்பதில்லை என்று அவள் சாட்சியிடுவாள் என்று தீர்க்கதரிசனம் கூறுகின்றது. ஆனால் அவளுக்கு ஏற்படப்போகும் துக்கம் மாமிசத்தில் கொடுக்கப்படுவது அல்ல. அது அழுகையும் புலம்பலும் கொண்ட எரிநரகத்திற்குள்ளாக தள்ளப்படுவதின்மூலம் கொடுக்கப்படப்போகின்ற துக்கமாகும். அது அக்கினிக் கடலில் தள்ளப்படப்போகும் வேதனை. ஆனால் அவள் தானும் தன்னுடையவர்களும் ஆக்கினைக்குத் தப்பிப்பவர்கள் என்றே அறிக்கையிடுவாள். அவளின் இந்த மாறுபாடான போதகம் வேசித்தனம் என்று கூறப்பட்டுள்ளது. சத்தியத்திற்கு மாறானது வேசித்தனமாகும். அவள் சத்தியத்திற்கு எதிராக கிரியை செய்வதால் அவளை வேசி என்று வேதம் சாட்சியிடுகின்றது. எனவே அந்த வேசித்தனத்தினை விட்டு வெளியேறி வா என்று கர்த்தர் தன்னுடைய ஜனங்களை நோக்கி அறைகூவல் விடுவார். அவரின் அந்த சத்தம் எக்காளமாய் தொனிக்கும். இதுவே கடைசி கிருபை. இரகசிய வருகைக்குப் பின் இந்தப் பூமியில் மீதம் இருக்கும் கிறிஸ்தவர்கள் ஆக்கினைத் தீர்ப்புக்குரியவர்களாக தீர்க்கப்படுவார்கள். கர்த்தர் தன்னுடைய சுதந்தரவாளியை அழைக்கின்றார். அந்த சுதந்தரவாளி அவருடைய சத்தத்திற்கு செவிகொடுக்கக்கூடிய அவருடைய மந்தையின் ஆடுகளாகும்.
கர்த்தர் சாட்சியிடும் வார்த்தையினைக் கொண்டுசெல்பவர்கள் தூதர்கள் என்று வேதம் சாட்சியிடுகின்றது. வார்த்தை மணவாளனுடையது; மணவாளன் மணவாட்டியை அழைக்கின்ற தொனி வார்த்தையாகச் சாட்சியிடப்படும்.
ஆத்துமா என்ற உள்ளான மனிதனைப் பெற்றிருக்கின்ற கிறிஸ்தவர்களுக்குள் கர்த்தரின் வார்த்தை சாட்சியாய் அறிவிக்கப்படும். அது கடைசி ஏற்பாட்டின் எக்காள வார்த்தையாய் தொனிக்கும். இந்தத் தொனி பிரமாணத்தினைச் சாட்சியிடும். அது இரண்டாம் சங்கம காலத்தின் பிரமாணமாகும். அந்தப் பிரமாணம் வார்த்தை என்ற நாமம் கொண்டதாய் தொனிக்கும்.
அந்தப் பிரமாணத்தினை ஜீவனுக்குரியவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் அவளுடைய வேசித்தனத்தில் பங்கு பெறாதபடிக்கு தங்களைக் காத்துக்கொள்பவர்கள். அவர்கள் நித்திய ஜீவனைச் சுதந்தரிப்பார்கள். அந்தக் கிருபையினை நாமும் பெற்றுக்கொள்ள கர்த்தர் அனுக்கிரகம் செய்வாராக!
ஆமென்! ஆமென்!! ஆமென்!!!