Sorry for the inconvience, Currently English version is not avalilable.
Switch to Tamil language
யேகோவா என்ற நாமத்தில் இஸ்ரவேலர்களுக்கு இரட்சிப்பினைக் கட்டளையிட்ட தேவனாகிய கர்த்தர் இயேசுகிறிஸ்து என்ற நாமத்தின் மூலம் புறஜாதிகளாகிய நமக்கு இரட்சிப்பினைக் கட்டளையிட்டிருக்கின்றார். புறஜாதிகளுக்கு இரட்சிப்பைக் கொடுக்க கர்த்தரிடத்திலிருந்து அனுப்பப்பட்ட வார்த்தையாகிய இயேசுகிறிஸ்து மூலமாய் நமக்கு இந்தக் கிருபையினைக் கட்டளையிட்டுள்ளார். கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்து மூலமாய் உண்டாயிருக்கின்றது (யோவா. 1: 1, 14, 17) என்று வேதம் சாட்சியிடுகின்றது. புறஜாதிகளாகிய நமக்கு (மாமிசப் பிறப்பாகிய ஆபிரகாமின் சந்ததியல்லாதோர்) இயேசுகிறிஸ்து என்ற இரட்சிப்பின் வார்த்தை மூலம் பரலோக சுதந்திரம் என்ற இரட்சிப்பு கட்டளையிடப்பட்டுள்ளது. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக! ஆமென்!
கிறிஸ்து இயேசு மாமிசத்தில் வெளிப்பட்டு 2011 ஆண்டுகள் கடந்துள்ளதை உலக சரித்திரமே சாட்சியிடுகின்றது. (இது 2011ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட வார்த்தை. எனவே 2011 என்று கூறப்பட்டுள்ளது). உலக சரித்திரம் கிறிஸ்துவுக்கு முன்னர் என்றும் கிறிஸ்துவுக்குப் பின்னர் என்றும் பிரிக்கப்பட்டிருப்பதே இதற்குச் சாட்சியாகும். ஆதாமின் சந்ததியில் ஆபிரகாமிற்கும், ஆபிரகாமின் சந்ததியில் ஈசாக்கிற்கும், ஈசாக்கிற்குப் பின்னர் யாக்கோபுக்கும் ஒரு கிருபை கட்டளையிடப்பட்டது. அது இஸ்ரவேலாக மாற்றப்பட்ட யாக்கோபின் சந்ததிக்கு கிறிஸ்து மாமிசத்தில் ஜனனமாவதற்கு முன்னர் வரையிலும் பரலோக சுதந்திரமாக கட்டளையிடப்பட்டது. கிறிஸ்து மாமிசத்தில் ஜனனமான பின்னர், இந்தக் கிருபை புறஜாதிகளாகிய நமக்குக் கட்டளையிடப்பட்டது. கிறிஸ்து பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம் செய்யப்பட்டு பின்னர் 3ம் நாளில் உயிர்த்தெழுந்தார். அதன் பின்னர் பரிசுத்த ஆவியானவருக்கு இயேசு கிறிஸ்து என்ற நாமம் தரிப்பிக்கப்பட்டது. பரிசுத்த ஆவிக்கு தரிப்பிக்கப்பட்ட அந்த நாமத்தின் மூலமே புறஜாதிகளாகிய நமக்குக் கிருபையும் பரிசுத்த ஆவியும் கட்டளையிடப்பட்டுள்ளது. இந்தக் கிருபையே நமக்குக் கட்டளையிடப்பட்ட ஜீவனாகும்.
புறஜாதிகளுக்குக் கட்டளையிடப்பட்ட இந்த கிருபையானது இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகைக்குப் பின்னர் கிறிஸ்தவர்களை விட்டு எடுத்துக்கொள்ளப்படும். அதன்பின்னர் ஜீவன் என்ற இந்தக் கிருபை புறஜாதிகளுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஜீவன் என்ற இந்தக் கிருபை புறஜாதிகளை விட்டு கடந்துபோகும். இவைகள் யாவும் பரிசுத்த ஆவியானவர் மூலம் சாட்சியாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இவைகள் நிகழும்போது அது எக்காள சத்தமாய் முன்னறிவிக்கப்படும் என்று வேதம் சாட்சியிட்டுள்ளது. கிருபை நிறைவேறும் காலத்தில் மறைக்கப்பட்டுள்ள தேவ இரகசியங்கள் யாவும் வெளிக்கொணரப்படும். இந்த நிகழ்வுகள் தீர்க்கதரிசிகள் மூலம் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
தீர்க்கதரிசிகள் மூலம் முன்னறிவிக்கப்பட்ட இந்த நிகழ்வுகள் நிறைவேறத்தக்கதான காலத்தில் நாம் இப்போது ஜீவிக்கின்றோம். கிருபையின் நிறைவில் ஜீவன் என்ற கிருபை புறஜாதிகளை விட்டு எடுத்துக்கொள்ளப்படும். அன்று கோடரியானது இஸ்ரவேலர் என்ற மரத்தின் கீழே வைக்கப்பட்டதுபோல, இன்று கோடரியானது புறஜாதி என்ற மரத்தின்கீழே வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் யாவும் ஒரு ஊழியத்தின்மூலம் சாட்சியிடப்பட வேண்டும். யோவான்ஸ்நானன் ஏற்படுத்திய ஊழியம் போலவே அந்த ஊழியமும் வனாந்திர சத்தமாய் சாட்சியிடும். அந்த சத்தமானது சபைகளின் அங்கமாயிராது.
ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டதிலிருந்து இதுவரையிலும் 105 தலைமுறைகள் ஆகின்றது.
கிறிஸ்துவின் இரகசிய வருகைக்குப்பின்னர் நித்திய ஜீவன் என்ற கிருபை புறஜாதிகளிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும்; அவரது நாமத்தின்மேல் விசுவாசம் கொண்டு அவரை ஏற்றுக் கொண்டுள்ள புறஜாதிகள் ஆத்துமா என்ற உள்ளான மனிதனைப் பெற்றுக்கொள்ள கட்டளையிடப்பட்ட கிருபையினை இழந்துபோகும். ஏழு சபைக்காலங்களும் நிறைவுபெற்ற பின் கர்த்தர் தமது மணவாட்டியினை அலங்கரிக்கும் காலம். இந்த நிகழ்வுகள் நிகழும் காலம் தற்போது ஜீவிக்கும் காலமாகும். மணவாளன் தனது மணவாட்டியின் நிர்வாணத்தைக் காண விரும்பவில்லை. நிர்வாணம் என்பது தன் மானத்தினைக் காக்காத நிலையாகும். அப்படியான நிர்வாணியினை அவர் மணவாட்டியாக ஏற்றுக்கொள்வதில்லை. மணவாட்டிக்குரிய வஸ்திரம் தரிப்பிக்கப்படுபவளே மணவாட்டி. அந்த மணவாட்டியினையே ஆட்டுக்குட்டியானவர் தமது இரகசிய வருகையில் எடுத்துக் கொள்ளப்போகின்றார்.
அப்போஸ்தலனாகிய யோவான், பத்மு தீவிலே இருந்தபோது, தம்முடைய ஊழியக்காரருக்கு காண்பிக்கும்பொருட்டு கர்த்தர் வெளிப்படுத்தின விசேஷத்தில், ஏழு சபைகளைக் குறித்து வெளிப்படுத்தி காட்டியுள்ளார். 7-ம் சபையின் காலத்தில் இந்த இரகசியங்கள் யாவும் கர்த்தர் முன்குறித்த சரீரத்தின் மூலம், அவர் முன்குறித்த காலத்தில் அறிவிக்கப்பட்டுவிட்டது.
வெளிப்படுத்தப்பட்ட 7 சபைக் காலங்களும் நிறைவுபெற்ற பின்னர் சம்பவிக்க வேண்டியவைகள் யாவும் அப்போஸ்தலனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்டது. சபைக்காலங்களுக்குப் பின்னர் நிகழ வேண்டிய நிகழ்வுகள் குறித்தும் அவன் முன் அறிவித்துள்ளான். அந்த நிகழ்வுகள் எவையென்றால்,
(1) பரலோகத்தின் வாசல் திறக்கப்படுதல் (வெளி. 4: 1)
(2) வானத்தில் சிங்காசனம் வைக்கப்படுதல் (வெளி. 4: 2)
சிங்காசனத்தில் இருந்து மின்னல்களும், இடிமுழக்கங்களும், சத்தங்களும் புறப்பட்டன என்று அறிவிக்கப்பட்டுள்ளது (வெளி. 4: 5). அப்படியான சத்தங்கள் தொனிக்கப்படும் காலமே சபைக்காலங்களின் நிறைவின் காலமாகும். அது நாம் ஜீவிக்கும் இந்தக் காலமாகும். இதுவே சபைக்காலங்களின் நிறைவின் காலமாகும். மணவாளனை எதிர்கொண்டுபோகக் காத்திருக்கும் கன்னியர்களுக்கு “இதோ மணவாளன் வருகின்றார், புறப்படுங்கள்” என்று (மத். 25: 6) அறிவிக்கும் சத்தம் எக்காளமாய் தொனிக்கும்.
தன் மானம் காக்கப்படத் தகுதியான வஸ்திரம் தரிப்பவளே மணவாட்டி. அவள் தரித்திருக்கும் வஸ்திரமானது மணவாட்டிக்குரிய வஸ்திரமாகும். அது மணவாளனோடு இணையத் தகுதிப்படுத்தும் வஸ்திரமாகும்.
குழந்தைப் பருவத்திலிருந்து மணவாட்டியின் தன்மையினை அடைவதற்கென்று ஒரு கால அளவு நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. அப்போதுதான் அவள் திருமணம் செய்துகொள்ள சரீரத்திலும், மனதிலும் தகுதியானவளாகின்றாள். அதுபோல, இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படும் மணவாட்டியும் ஒரு தகுதிக்குள்ளாக வேண்டும். அது சத்தியத்திலும், கர்த்தரை அறியக்கூடிய அறிவிலும் ஏற்படக்கூடிய வளர்ச்சியாகும்.
கர்த்தரது ஆதீனத்தில் ஆட்டுக்குட்டியானவரின் மணவாட்டி எப்படியான வளர்ச்சியில் பூரணப்பட வேண்டும் என்று திட்டம் செய்யப்பட்டுள்ளது. கர்த்தர் தமது ஆதீனத்தில் குறித்தபடி மணவாட்டி சரீரத்திலும், சத்தியத்திலும், கர்த்தரை அறியக்கூடிய அறிவிலும் வளர்ச்சியடைய வேண்டும். மாமிசத்திற்குரிய வளர்ச்சியிலும், ஆவிக்குரிய வளர்ச்சியிலும் அவள் வளர வேண்டும். மாமிசத்திற்குரிய வளர்ச்சியில் கிறிஸ்தவர்களாகிய நாம் பூரணப்பட்டுள்ளோம். கிறிஸ்தவம் உலகம் முழுவதும் வளர்ந்துள்ளது. அவள் இத்தகைய வளர்ச்சியடைவதற்காக அவளுக்குக் கொடுக்கப்பட்ட ஊட்டம் பலதரப்பிலிருந்தும் பல தன்மைகளிலிருந்தும் கொடுக்கப்பட்டது. இன்று உலகத்தில் ஜீவிக்கின்ற ஜனங்களுக்குள் அதிகமான விசுவாசிகளைக் கொண்ட மதம் கிறிஸ்தவ மதமாகும். கிறிஸ்தவள் என்ற மணவாட்டி, இன்று திரட்சியான வளர்ச்சியினைக் கண்டுள்ளாள். சரீரத்தில் அவள் கண்டுள்ள இந்த வளர்ச்சி மாமிசத்தில் பூரணப்பட்ட வளர்ச்சியாகும்.
கிறிஸ்தவர்கள் மாத்திரம் ஜீவிக்கும் உலகமாக இந்த உலகம் ஒருபோதும் மாறாது. பூமியில் ஜீவிக்கக்கூடிய கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையின் அளவு மற்ற மதத்தாரின் எண்ணிக்கையின் அளவினைவிட அதிகப்படியாக இருக்கும். இதுவே அவளின் வளர்ச்சியின் திரட்சியாகும். மணவாட்டி பூரணப்பட்ட பின்னர் அவளின் இந்தத் திரட்சியின் தன்மை மாறும். தெரிந்தெடுக்கப்பட்ட கன்னிகையாக முன்குறிக்கப்பட்டவர்கள் மணவாளனோடு எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.
மாமிசத்தில் இன்று கிறிஸ்தவம் அடைந்த வளர்ச்சி மாத்திரம் மணவாட்டியாக மாறக்கூடிய தகுதியினைப் பெறாது. அவள் சிந்தையிலும், தன்நிலை அறிவதிலும் வளர்ச்சி அடைய வேண்டும். தன்நிலை அறியாதவள் சரீரத்தின்படி வளர்ச்சி அடைந்திருந்தாலும் மணவாட்டியின் தன்மைக்குரியவள் அல்ல. சரீரத்தின் வளர்ச்சியில் 21 வயது நிரம்பி இருக்கக்கூடிய ஒரு பெண் சிந்தையிலும் செயல்பாட்டிலும் அந்த வயதிற்குரிய பக்குவமும் அறிவும் இல்லாமல், 3 வயது சிறுமிக்கொத்தச் செயல்பாட்டுடன் இருந்தால், அவள் திருமணம் என்ற இடைபாட்டுக்குள் கடந்து செல்லத் தகுதியற்றவளாகின்றாள். மணவாட்டி என்பவள் சரீரத்திலும், சிந்தையிலும் தகுதி பெற்றவளாக இருக்க வேண்டும்.
அதுபோலவே இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகையின்போது எடுத்துக்கொள்ளப்படப் போகும் மணவாட்டி என்ற இந்தக் கன்னிகையும் மாமிச அளவிலும், கிறிஸ்துவை அறிகின்ற அறிவின் அளவிலும், தன்னிலை அறிகின்ற அறிவின் அளவிலும் வளர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
இவைகளை அறிந்து கொள்வதற்காகவே பரத்திலிருந்து அனுப்பப்படும் வார்த்தையானது இடிமுழக்கங்களாகவும், சத்தங்களாகவும் வெளிப்படும். இவைகள் யாவும் ஒரு தூதன் மூலம் அப்போஸ்தலனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்டது.
இந்தக் காத்திருப்பு மற்றும் அலங்கரிப்பின் காலத்தில் கடைசி எக்காள சத்தம் பூலோக முழுவதும் தொனிக்கும். அதன் பின்னர் புத்தியுள்ள கன்னிகை மறுரூபமாக்கப்பட்டு எடுத்துக்கொள்ளப்படுவாள். புத்தியுள்ள கன்னிகையாக மாற வேண்டும் என்பதற்காகவே வார்த்தையின் சத்தம் பூச்சக்கரம் முழுவதும் தொனிக்கும். கர்த்தருடைய கிருபை உங்களைத் தாங்குவதாக. ஆமென்! ஆமென்!! ஆமென்!!!
மணவாட்டி சிறுகுழந்தையாய் இருந்த காலத்தில், “நீங்கள் இந்த வீணான தேவர்களை விட்டுக் கர்த்தரிடத்தில் திரும்புங்கள்” என்றும் (அப். 14: 15), தேவர்கள் அல்லாதவர்களை விட்டு ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்புங்கள் என்றும் (கலா. 4: 8, 9) வார்த்தை சாட்சியாகக் கொடுக்கப்பட்டது. அப்போது இயேசுவைக் கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கையிட வேண்டும் என்று சாட்சி கொடுக்கப்பட்டது. புறஜாதியாய்ப் பிறந்து இஸ்ரவேலின் தேவனை அறியாதிருந்த நமக்கு, கிருபை இயேசுகிறிஸ்து என்ற நாமத்தின்மூலம் கொடுக்கப்பட்டது. இஸ்ரவேலின் தேவனை அறியவும், அவர் நாமத்தின் மூலம் ஜீவனைப் பெற்றுக்கொள்ளவும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. இது மணவாட்டியின் பிறப்பின் காலம்.
தன் பிறப்பின் காலத்தில் தொப்புள் கொடி அறுக்கப்பட வேண்டும். அந்தக் குழந்தையானது தண்ணீரினால் கழுவப்பட வேண்டும். இவைகள் கிறிஸ்தவர்களாக மாறும் முன் புறஜாதியாய் கடைப்பிடித்து வந்த சில கிரியைகளை விட்டு விலகுதல் ஆகும். உரிய காலத்திலே தொப்புள் கொடி அறுக்கப்படாமலும் தண்ணீரினால் கழுவப்படாமலும் இருந்த அந்த நிகழ்வு போலவே புறஜாதிகளின் மார்க்கத்தினையும் அவர்களின் வழிபாடுகளையும் இன்னமும் கிறிஸ்தவர்களில் அநேகர் பற்றிக்கொண்டிருக்கின்றார்கள். அவள் பூப்பெய்தி, கன்னிகைப் பருவம் அடைந்த பின்னரும் 3 வயது சிறுபெண்ணைப் போல இருக்கும் ஒரு நிலையினைக் குறித்ததாகும்.
பிறப்பின் காலத்தில் அறிவிக்கப்பட்ட சுவிசேஷமானது புறஜாதிகள் தங்களின் வீணான தேவர்களை விட்டு கிறிஸ்து இயேசுவைத் தேவனாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதாகும். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவனாக மாறியபின், முன்னர் செய்துவந்த வழிபாடுகளுக்குள் செல்லக்கூடாது. கிறிஸ்தவமானது வளர்ந்து பூரணப்பட்ட பின்னர் அது தன்னிலை உணரவேண்டும். இந்த வளர்ச்சியானது அதினதின் காலத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வந்துள்ளது. இது சபைக்காலத்துச் செய்திகளாக ஒவ்வொரு சபைக்காலத்திலும் சாட்சியிடப்பட்டுள்ளது.
இந்தப் பிரகாரமாய் சுவிசேஷத்தினை ஏற்றுக் கொண்டும், சுவிசேஷத்தினை அறிவித்தும் வந்த நாடுகள் இன்று வல்லரசுகளாகவும், செல்வந்த நாடுகளாகவும் வளர்ந்து வந்துள்ளது. இது சரித்திரம் சான்றிடும் உண்மை.
ஒவ்வொரு சபைக்காலங்களிலும் அறிவிக்கப்பட்ட சுவிசேஷமானது அந்தக் காலத்தில் கிறிஸ்துவைப் பற்றி அறியக்கூடிய அளவில் மணவாட்டி வளர்ச்சி அடைய, அறிவிக்கப்பட்ட சுவிசேஷமாகும். இன்று வெவ்வேறு சபைக்காலங்களில் அறிவிக்கப்பட்ட சுவிசேஷ வார்த்தையின் அளவின்படி கிறிஸ்துவைப் பற்றி அறியக்கூடிய அறிவின் வளர்ச்சியில் வளர்ந்துள்ள சபைகள் தங்கள் விசுவாசிகளை அந்த வளர்ச்சிக்குள்ளாகவே நடத்திக் கொண்டிருக்கின்றது.
சபைக்காலங்கள் நிறைவு பெற்ற பின்னர், அலங்கரிப்பின் நாட்களில் தேவ இரகசியங்கள் யாவும் வெளிப்படுத்தப்படும். இவ்வாறு சத்தங்களாய் வெளிப்படுத்தப்படும் தேவ இரகசியங்களை நிறைவேறித்தீர்ந்த பிரமாணங்களைக் கொண்டுள்ள சபைகள் ஏற்றுக்கொள்ளாது. காரணம் அந்த சபைகள், தங்கள் சபையில் அறிவிக்கப்பட்ட சுவிசேஷத்தின்படியான வளர்ச்சிக்குள்ளாக மாத்திரம் வளர்ச்சியடைந்துள்ளபடியால், அடுத்தக்கட்ட வளர்ச்சியின் காலத்திற்குரிய சுவிசேஷத்தினை ஏற்றுக்கொள்ள அனுமதிக்காது. எனவே கர்த்தர் தம்முடைய ஜனமாகிய புத்தியுள்ள கன்னிகைகளுக்கு வார்த்தையின் இரகசியங்களை சத்தங்களாக வெளிப்படுத்துகின்றார். இவைகள் கர்த்தர் தம்முடைய ஜனங்களை வேறு பிரிக்க விடுக்கும் சத்தமாகும் (வெளி. 18: 4).
இயேசுகிறிஸ்துவைத் தேவன் என்று அறிவிக்கப்பட்ட சுவிசேஷம் பிறப்பின் காலத்தில் அறிவிக்கப்பட்ட சுவிசேஷமாகும். அதன்பின்னர் அடைந்த வளர்ச்சியானது பிதாவையும், குமாரனையும், பரிசுத்த ஆவியினையும் குறித்த அறிவினைப் பெற்றுக்கொள்ளும் வளர்ச்சியாகும். ஒரு பெண் குழந்தை சரீரத்தில் வளர்வது போல கிறிஸ்தவமும் கிறிஸ்துவின் சரீரமாகிய மாமிசத்தில் உலகமெங்கும் வளர்ச்சியடைந்துள்ளது. விசுவாசிகளைக் கொண்டு சபைகளும் வளர்ந்துள்ளது. கிறிஸ்துவைப் பற்றி அறியக்கூடிய அறிவில் வளர ஆவிக்குரிய சுவிசேஷங்களை ஒவ்வொரு சபைக்காலத்திலும் சாட்சிகள் மூலம் கர்த்தர் அறிவித்து வந்துள்ளார்.
புறஜாதியாயிருந்து விசுவாசத்தின்மூலம் கிறிஸ்தவர்களாய் மாறிய இந்த ஜனத்தினுக்குள்ளாக இரகசிய வருகையில் மணவாட்டி எடுத்துக்கொள்ளப்பட போகின்றாள். மாமிசத்தின்படி எண்ணிக்கையிலும், ஆவியின்படி கிறிஸ்துவை அறிகின்ற அறிவிலும் இன்று கிறிஸ்தவம் வளர்ந்துள்ளது. தன்னிலை அறியக்கூடிய பருவம் கன்னிகைப்பருவமாகும். அது மணவாளனுடைய வளர்ச்சிக்குத்தக்கதாக பூரணப்படும் வளர்ச்சியாகும். கிறிஸ்துவைப் பற்றியும் தேவத்திட்டத்தினைக் குறித்தும் இப்போது அறிவிக்கப்படுவதுபோல, சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படவில்லை. காரணம், அப்போது அவள் சரீர அவயவத்தின் வளர்ச்சியில் பூரணப்படவில்லை. சரீர அவயவத்தின் தன்மையும் செயல்பாடும் கன்னிகை அறிவதுபோல சிறு குழந்தை அறிவதில்லை. தன் சரீரத்தின் தன்மையினையும், அதன் செயல்பாட்டினையும் கன்னிகை அறிந்துகொள்வதுபோல மணவாளனின் சரீரத்தின் தன்மையினையும் அதன் செயல்பாட்டினையும் அவள் அறிந்துகொண்டிருக்க வேண்டும். கன்னிகைக்கு உரிய செய்தி குழந்தைக்கு அறிவிக்கப்படுவது இல்லை. அதனை அறிந்து உணர்ந்துகொள்ளக்கூடிய பருவம் குழந்தைப் பருவம் அல்ல.
தனது சரீரத்தின் தன்மையினை அறிகின்ற அறிவில் பூரணப்படும் நிலை கன்னிகைப்பருவமாகும். இப்போது அவள் மணவாளனைக் குறித்த அறிவைக் கொண்டவளாகின்றாள். மணவாளனைத் திருப்திப்படுத்தக்கூடிய பருவமும் பக்குவமும் இப்போது அவள் பெற்றவளாகின்றாள். இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படப் போகும் கன்னிகை தன்னை அறிந்த நிலையிலும் மணவாளனை அறியக்கூடிய அறிவின் நிலையிலும் வளர்ச்சியடைய வேண்டும்.
எது நிர்வாணம்: -
தகுதியான வஸ்திரம் தரிப்பித்திராத நிலையே நிர்வாணமாகும். அது சரீரத்தின் வளர்ச்சியின் தன்மை அறியாமல் உடுத்தப்படும் வஸ்திரமுமாகும். மாமிச சரீரத்தினை முழுமையாய்ப் போர்த்திக் கொள்ளாதிருக்கும் நிலை நிர்வாணமாகும்.
லவோதிக்கேயா சபையின் (7வது சபை) தூதனுக்கு எழுதப்பட்ட விசேஷத்தில் “நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும்… நிர்வாணியுமாய் இருக்கிறதை அறியாமல்… எனக்கு ஒரு குறைவுமில்லையென்று சொல்லுகிறபடியால்…” (வெளி. 3: 17) “உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக் கொள்வதற்கு வெண் வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக் கொள்ளவும்… வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்” (வெளி. 3: 18) என்று கர்த்தர் வெளிப்படுத்தியுள்ளார்.
சபையாகிய மணவாட்டி உடுத்தியுள்ள வஸ்திரமானது அவளின் நிர்வாணமாகிய அவலட்சணத்தினை முற்றிலும் மூடாதபடிக்கு உடுத்திக்கொள்ளப்பட்ட வஸ்திரமாக இருப்பதால், அவள் உடுத்திக்கொள்ள தம்மிடத்தில் வஸ்திரங்களை வாங்கிக் கொள்ள கர்த்தர் ஆலோசனை கூறுவதாக இங்கே சாட்சியிடப்பட்டுள்ளது.
“…நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம். தரித்துக் கொண்டவர்களானால் நிர்வாணிகளாய்க் காணப்பட மாட்டோம்” (2 கொரி. 5: 2, 3) என்று வேதம் கூறுகின்றது.
அப்போஸ்தலனாகிய பவுல் பரிசுத்த ஆவியினைப் பெற்றவன். “பரம வாசஸ்தலத்தை நாம் பெற்றுக் கொண்டோமானால் நாம் நிர்வாணிகள் அல்ல” என்று சாட்சியிடுகின்றான். பரம வாசஸ்தலமாகிய பரலோக ராஜ்யத்தினைச் சுதந்தரித்துக் கொள்பவர்கள் முழுமையான வஸ்திரம் தரித்தவர்கள். முழுமையான வஸ்திரம் தரித்தவர்கள் பரலோகராஜ்யத்தினை சுதந்தரித்துக் கொள்ளத் தகுதி பெற்றவர்கள். இத்தகைய தகுதி இல்லாதவர்கள் நிர்வாணிகள் என்று சாட்சியிடப்பட்டுள்ளது. கர்த்தருக்கு முன்பாக ஜீவனுக்குரியவர்கள் வஸ்திரம் தரித்தவர்கள் எனவும், வஸ்திரம் தரித்திராத நிர்வாணிகள் மரணத்திற்குரியவர்கள் எனவும் சாட்சியிடப்பட்டுள்ளது.
பரம வாசஸ்தலத்தினை சுதந்தரிக்கும் கிருபை பெற்றவனாக ஆதாம் முதன்முதலில் நியமிக்கப்பட்டான். அவன் ஜீவன் என்ற ஆவியின் சரீரமான ஆத்துமா பெற்றுக்கொண்டவன். வார்த்தைக்கு மாறான ஒரு சுவிசேஷத்தினை அவன் ஏற்றுக் கொண்டதால் அவன் நிர்வாணியானான். மேலும் தான் நிர்வாணி என்று அவன் கண்டு கொண்டான் (ஆதி. 3: 7) என்று வேதம் கூறுகின்றது. சர்ப்பத்தின் போதனைக்கு அவன் செவிகொடுத்ததால், பரம வாசஸ்தலத்தினைத் தரித்துக் கொள்ளக்கூடிய தகுதியினை இழந்து போனான். இரண்டாம் மரணமான ஆத்தும மரணத்திற்குள்ளாக அவன் தீர்க்கப்பட்டான்.
அந்த மரணம் அவனது மாமிசத்திற்குரிய மரணம் அல்ல. அது அக்கினியும் கந்தகமும் எரியக்கூடிய கடலில் ஆக்கினைத் தீர்ப்படையப் போகும் இரண்டாம் மரணமாகிய ஆத்தும மரணமாகும். ஆதாமின் மீறுதல் அவனை பரலோக சுதந்திரத்தினை இழந்துபோகச் செய்தது. அவன் வஸ்திரம் இல்லாதவன் ஆனான். அவன் நிர்வாணி ஆனான். அவன் மரணத்திற்குள்ளானவன் ஆனான்.
“நிர்வாணி - வார்த்தையில் இல்லாதவன்”.
கன்னிகைக்குரிய வஸ்திரம் கன்னிப்பருவத்தில் வழங்கப்படும் நீதியாகும். வஸ்திரம் என்பது நீதியினைக் குறிக்கும் அடையாளமாகும் (வெளி. 19: 8). நிர்வாணம் காணப்படாதபடி மறைப்பது என்பது தகுதியான வஸ்திரமாகும். ஒரு வஸ்திரமானது நிர்வாணமாகிய அவலட்சணத்தினை மறைக்கக்கூடியதாய் இருக்க வேண்டும். லவோதிக்கேயா சபை தனது விசுவாசிகளுக்கு உடுத்தியிருந்த வஸ்திரமானது அவளின் நிர்வாணத்தை மூடக்கூடியதாய் இல்லை. எதனை மறைக்க வேண்டுமோ, அதனை மறைக்கவில்லை. அவளின் பார்வைக்கு அவள் உடுத்திய வஸ்திரம் நிர்வாணத்தை மூடியதாகவே காணப்பட்டது. ஆனால் கர்த்தர் அவளை நிர்வாணி என்று சாட்சியிட்டுள்ளார். மேலும் அவளது நிர்வாணம் மறைக்கப்படும் தன்மையிலான வஸ்திரத்தினை தன்னிடத்திலே கேட்டுப் பெற்றுக் கொள்ளவேண்டும் எனவும் அழைத்துள்ளார். அவள் உடுத்தியிருந்த வஸ்திரம் அவள் நிர்வாணத்தினை மூடாதபடியால், அவளின் நிர்வாணம் வெளிப்படையாய் காணப்படுகின்றது. அந்த நிர்வாணம் அவள் பரம வாசஸ்தலத்தினைத் தரித்துக் கொள்ளக்கூடிய தகுதியினை இழக்கச் செய்தது.
சபைக்காலங்களில் கொடுக்கப்பட்ட நீதி என்ற வஸ்திரமானது அவளின் அன்றைய வளர்ச்சிக்குத்தக்கதாய் இருந்தது. சபைக்காலங்கள் நிறைவுபெற்ற நிலையில் அவளின் அந்த வஸ்திரம் பூரணமுள்ளதாயிற்று. ஏழு சபைகளிலும் வளர்ச்சியடைந்த நிலை இப்போது முழுமை பெறாத நிலையிலேயே இருப்பதாக சாட்சியிடப்படுகின்றது. பருவத்திற்கு ஏற்ற வஸ்திரம் அவள் உடுத்திக்கொள்ள வேண்டும். அது அந்த சபையின் வளர்ச்சிக்குத்தக்க வளர்ச்சியாகும். சபைக்கு ஏற்ற வளர்ச்சியடையாத வஸ்திரம் நிர்வாணமாகவே சாட்சியிடப்பட்டுள்ளது. சபைக்காலத்தில் அந்த சபைக்குரிய வளர்ச்சியின் தன்மையான வஸ்திரம் என்பது அந்த சபைக்குரிய வார்த்தையை அறியக்கூடிய அறிவின் வளர்ச்சியாகும். அது அந்த சபைக்காலத்தில் ஜீவித்தவர்களின் நிர்வாணத்தினை மூடத்தக்கதாய் சாட்சியிடப்பட்டது. அடுத்துவந்த சபைக்கு முந்தைய சபையின் பிரமாணமானது அவளின் நிர்வாணத்தினை மூடக்கூடியதாக இல்லை. எனவே அவர்கள் பரம வாசஸ்தலத்தினைத் தரித்துக்கொள்ளக்கூடிய நிலையில் இருந்து தகுதி இழந்தவர்கள் ஆனார்கள்.
சபைக்காலத்தில் அந்த சபைக்குரிய தூதன் மூலம் கொடுக்கப்பட்ட வார்த்தையானது அந்தச் சபைக்காலத்தில் அவர்களின் நிர்வாணத்தை மூடக்கூடிய வஸ்திரமாய் இருந்தது. அந்தச் சபைக்காலம் முடிந்து அடுத்த சபைக்காலம் ஆரம்பமானபோது, அந்த வஸ்திரமானது நிர்வாணத்தினை மூடக்கூடிய அளவுள்ளதாய் இருந்திருக்கவில்லை. காரணம் அவளின் வளர்ச்சியின் அளவானது அடுத்த சபைக் காலத்தில் அதிகமாய் வளர்ந்திருக்கக்கூடிய நிலை. எனவே அது அவளின் சரீர அளவின் வளர்ச்சிக்குரிய வஸ்திரமாய் இருக்கவில்லை. இதே நிலைதான் ஒவ்வொரு சபைக்காலத்திலும் ஏற்பட்டது. ஒரு சபைக்காலத்திற்கென்று கொடுக்கப்பட்ட வார்த்தை அந்த சபைக் காலத்தில் ஜீவித்தவர்களையே பரலோகம் கொண்டு சேர்க்கும் வார்த்தையாய்க் காணப்பட்டது. அந்த வார்த்தை அந்தச் சபைக்காலத்தில் ஜீவித்தவர்களின் நிர்வாணமாகிய அவலட்சணத்தினை மறைக்கக் கூடிய வஸ்திரமாய் இருந்தது.
கன்னிகை:
கன்னிகையின் வளர்ச்சியினை நான்கு பகுதிகளாக பிரித்துப் பார்க்கின்றோம். நாம் ஜீவிக்கும் இந்தக் காலமானது, ஆவியின் சரீரமானது வளர்ச்சியில் பூரணப்படும் காலம். ஆவியின் வளர்ச்சியில் பூரணம் என்பது வெளிப்படுத்தப்படும் ஆவிக்குரிய இரகசியங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளும் காலமாகும். உலகத்தோற்ற முதல் மறைபொருளாய்க் கூறப்பட்டுள்ள இரகசியங்களைக் கர்த்தர் தமது ஆவியின் மூலம் வெளிப்படுத்தும் காலமாகும். கன்னிகை தனது வளர்ச்சியில் பூரணப்பட்டு மணவாட்டியாய் எடுத்துக்கொள்ளப்படுவதற்கென்று ஒரு காலம் முன்குறிக்கப்பட்டுள்ளது. அது அவள் மணவாளனைக் குறித்தும் தன்னிலை குறித்தும் அறியக்கூடிய அறிவில் பூரணப்படும் காலமாகும்.
கன்னிகை:
வருகையில் எடுத்துக்கொள்ளப்படும் புறஜாதி (மணவாட்டி)
மணவாட்டி வார்த்தைக்குள்ளாக வளரும்போதுதான் தகுதியான வஸ்திரம் அணிந்தவளாகின்றாள். அந்த வஸ்திரமே நிர்வாணம் காணப்படாதபடிக்குக் காக்கும் வஸ்திரமாகும். அதுவே தகுதியான வஸ்திரமாகும். அது அந்தக் காலத்திற்கென்று கர்த்தர் கட்டளையிடும் வார்த்தையாகும். அந்த நாளுக்குரிய சத்தியமே மணவாட்டிக்குரிய தகுதியான வஸ்திரமாகும். கர்த்தரது வார்த்தையே பரலோகம் என்ற சுதந்திரத்தினைப் பெற்றுக்கொள்ளச் செய்யும் சத்தியமாகும். அதுவே நித்திய ஜீவனுக்குள்ளாக ஒரு ஆத்துமாவை வழிநடத்தும்.
அந்த வார்த்தை நிறைவேறித்தீர்ந்த பிரமாணங்களை பற்றிக்கொண்டுள்ள சபைகளுக்குள் இருந்து வெளிப்படாது. அது வனாந்திரச் சத்தமாகவே காணப்படும். அது சபை சாரா சத்தமாகவே தொனிக்கும். “வார்த்தை” ஜீவாதிபதியின் நாமம் என்று வேதம் சாட்சியிடுகின்றது. சபைக்காலங்களுக்குப் பின்னர் நிகழக்கூடிய இந்த நிகழ்வுகள் யாவும் அப்போஸ்தலனாகிய யோவானுக்கு தூதனால் அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகள் நிகழும்போது, தீர்க்கதரிசனமாய் முன் அறிவிக்கப்பட்டவை யாவும் சுவிசேஷமாய் அறிவிக்கப்படும். அறிவிக்கப்படும் சுவிசேஷம் தகுதியான வஸ்திரத்தினை மணவாட்டிக்கு உடுத்துவிக்கும்.
வார்த்தை - வஸ்திரம்
அன்றைக்குரிய வார்த்தை - தகுதியான வஸ்திரம்
நிர்வாணமாகிய அவலட்சணம் காணப்படாதபடிக்கு அனுப்பப்படும் வார்த்தைக்கு செவிகொடுப்போம். தகுதியான வஸ்திரம் உடுத்திக் கொள்பவர்களாய் காணப்படுவோம். பிதா தாமே தம்மையும், குமாரனான இயேசுகிறிஸ்துவைக் குறித்தும் பரிசுத்த ஆவியின் மூலம் சாட்சியிட வேண்டும். பிதா தாமே தேவனுடைய நாமமாகிய வார்த்தையை அறிந்துகொள்ளக்கூடிய கிருபையைக் கட்டளையிடுவாராக.
ஆமென்! ஆமென்!! ஆமென்!!!