Phone
Mail
Whatsapp

The Word for the day

வார்த்தையினால் விடுதலை

Listenகேட்க Watchபார்க்க

46. பிந்தின ஆதாம்

46. பிந்தின ஆதாம்

Sorry for the inconvience, Currently English version is not avalilable.

Switch to Tamil language

(அறிவிக்கப்பட்ட நாள்: 18.11.2012)

மாற். 11: 7, 9-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார்.

    முன்நடப்பாரும் பின்நடப்பாரும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;"

    கர்த்தரின் நாமத்தில் வந்திருக்கின்றவர் கழுதைக் குட்டியின்மீது ஏறி வந்துள்ளது இங்கே சாட்சியிடப்பட்டுள்ளது. கர்த்தரின் நாமத்தில் அங்கே நாசரேத்தூரானாகிய இயேசுகிறிஸ்து வந்தார். ஆனால் ஆசாரியர் அவரை கர்த்தரின் நாமத்தில் வந்தவராக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் கண்களுக்கு முன்பாக அவர் நாசரேத்தூரானாகிய இயேசுவாகவே காணப்பட்டார். கிறிஸ்து மகிமையடைந்த பின்னர், அவருடைய நாமம் பிதாவின் நாமமாய் உயர்த்தப்பட்டது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற நாமம் புறஜாதியாருக்குக் கிருபையினைக் கொடுக்கும்படியாக கட்டளையிடப்பட்ட நாமமாகும். அந்த நாமத்திற்குரிய கிரியைகள் யாவும் நிறைவேறிய பின்னர், அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்று சாட்சியிடப்பட்டுள்ளது.

மாற். 11: 10-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்."

    கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர் தாவீதினுடைய ராஜ்யத்தினை ஏற்படுத்த அனுப்பப்பட்டார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக வாக்குத்தத்தம் பண்ணிய தாவீதினுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டு இருக்கின்றது. தாவீதினுடைய ராஜ்யத்தின் ஆசீர்வாதம் இயேசுகிறிஸ்து மூலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. குமாரன் மூலமாக இந்த தாவீதின் ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டு இருக்கின்றது. குமாரன் மூலமாக தாவீதுக்கு முற்பிதாவாகிய ஆபிரகாமின் ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது. ஆபிரகாமிற்கு வாக்குத்தத்தங்களைக் கொடுத்த சர்வவல்லமையுள்ள தேவனுடைய ராஜ்யமாய் அது ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

    கர்த்தத்துவத்தின் கிரியைகள் இந்தப் பூமியில் நிறைவடைகின்ற வரையிலும் தாவீதின் ராஜ்யம் இங்கு இருக்கும். கர்த்தத்துவ கிரியைகள் முடிந்தபின்னர், தேவத்துவ ஆளுகை இந்தப் பூமியில் இருக்கும். ஏனென்றால், தேவனாக இருந்து அவர் சிருஷ்டிப்பின் கிரியைகளைச் செய்தார். அதே கிரியைகள் தொடர்ந்திருக்கும். ஆனால், கர்த்தத்துவ கிரியையானது அதற்கென்று கொடுக்கப்பட்டுள்ள காலம் நிறைவடையும்போது பூர்த்தியாகும்.

    ஒன்றுக்கும் உதவாத மாமிச ஜந்துக்களாக இருந்த நமக்குள் ஒரு மகிமையின் சரீரம் உருவாக கிருபையினைக் கொடுத்தார். அந்தக் கிருபையே கர்த்தத்துவம் என்று சாட்சியிடப்படுகின்றது. அந்தக் கர்த்தத்துவ கிரியைகளைக் குறித்து சாட்சியிடுகின்ற ஊழியமே இந்த ஊழியம். இந்தக் கிருபையின் நிறைவின் காலத்தில் நாம் ஜீவிக்கின்றோம்; அந்தக் கர்த்தத்துவத்தின் நிறைவின் காலத்தில் நாம் இருக்கின்றோம்.

    இந்தக் கர்த்தத்துவமானது முதன்முதலில் ஆதாம் மூலம் கட்டளையிடப்பட்டது.

    கர்த்தத்துவம் ஆதாமின் மூலமாக இந்தப் பூமிக்குள் வந்தது. கர்த்தத்துவத்திற்குள்ளாக உருவாக்கப்பட்ட முதல் மனிதன் ஆதாம் ஆகும். அதற்கு முன்னர் கர்த்தத்துவ கிரியைகள் இந்தப் பூமியில் இல்லை. கர்த்தத்துவ கிரியைகள் ஆதாமிலிருந்து ஆரம்பமாகி தொடர்ந்து வருகின்றது. அது இஸ்ரவேலர்களுக்கு ஜீவனைக் கொண்டு சென்றபின் நிறைவடையும். இஸ்ரவேலர்கள் தங்களின் மாமிச சரீரத்திலிருந்து தங்களது கிரியைகளை நிறைவேற்றியபின்னர், இந்தக் கிருபையானது முற்றிலுமாய் பூமியிலிருந்து எடுக்கப்பட்டுவிடும். அதன்பின்னர் கர்த்தத்துவ கிரியைகள் இந்தப் பூமியில் இராது.

    கர்த்தத்துவமானது பரதீசியில் நியாயத்தீர்ப்பு வரையிலும் இளைப்பாறுதலில் இருக்கும். அதன்பின்னர், ஆயிரம் வருடம் அரசாட்சி. மாமிசத்தின்படி ஆதாமின் சந்ததி அல்லாதவர்களும், ஆபிரகாமுடைய வாக்குத்தத்தத்திற்கு பாத்திரவான்களுமாய் முன்குறிக்கப்பட்டவர்கள் மாத்திரம் இந்தப் பூமியில் ஆயிரவருடம் அரசாட்சியில் பங்கடைவார்கள். ஆயிர வருட அரசாட்சிக்குப் பின்னர், வானமும் பூமியும் ஒழிந்து போகும். அதன்பின்னர் நியாயத்தீர்ப்பு. அது ஜீவபுத்தகத்தில் பேரெழுதப்பட்டவர்களுக்குரிய தீர்ப்பு. ஆக்கினைக்குரியவர்கள் அக்கினியும் கந்தகமும் எரியக்கூடிய கடலிலே தள்ளப்படுவார்கள். இது இரண்டாம் மரணம். இவையாவும் நிறைவேறியபின்னர், கர்த்தத்துவம் பிதாவின் வலதுபாரிசத்தில் சென்றடையும்.

    அவர் தேவனாக கிரியைகளைச் செய்தார். அந்தத் தேவன் இன்று தம்மை வார்த்தை என்று வெளிப்படுத்துகின்றார். இந்த ஊழியமானது கர்த்தத்துவத்திற்குச் சாட்சியாயும், தேவத்துவத்திற்குச் சாட்சியாயும், வார்த்தையானவருடைய வார்த்தைக்குச் சாட்சியாயும் கிரியை செய்ய கட்டளையிடப்பட்டுள்ளது. ஆதாம் கர்த்தத்துவத்தில் கர்த்தர் சிருஷ்டித்த முதல் மனிதன். அதற்கு முன்னமே தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்திருந்தார்.

ஆதி. 1: 27-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்."

    மனுக்குலமானது ஆணும் பெண்ணுமாக சிருஷ்டிக்கப்பட்டது. அது தேவனுடைய சிருஷ்டிப்பாகும். தேவன் தம்முடைய சாயலில் மனுஷனை சிருஷ்டித்தார். அவருடைய சாயலில் மனிதன் உருவாக்கப்பட்டான். மனிதனைச் சிருஷ்டித்த அந்தக் கிரியையானது தேவத்துவமாகும். தேவசாயல் என்பது அவருக்கு இருப்பதுபோலவே கண், காது, கை, தலை என்ற சரீர பாகங்களைக் கொண்டதாக மனிதன் சிருஷ்டிக்கப்பட்டான். அவர் சிருஷ்டித்த மற்ற ஜீவராசிகளுக்கு அத்தகைய ஒரு சாயல் கொடுக்கப்படவில்லை. அது மனிதனுக்கு மாத்திரம் கொடுக்கப்பட்டது.

    ஆதியில் தேவன் வார்த்தையாக இருந்தார். பின்னர் தேவனாக சாட்சியிடப்பட்டுள்ளார். தேவனோடிருந்த அந்த வார்த்தையானது ஒவ்வொன்றாக சிருஷ்டித்தது. முதலாம் நாளில் ஒரு சிருஷ்டிப்பும், இரண்டாம் நாளில் ஒரு சிருஷ்டிப்புமாக ஆறு நாட்களும் தம்முடைய சிருஷ்டிப்பின் கிரியைகளைச் செய்தார்.

ஆதி. 1: 11-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று."

    முளைப்பிக்கக்கடவது என்றார். அது அப்படியேயாயிற்று. அவைகள் யாவும் பூமியிலிருந்து உருவாயின. பூமியின் தன்மையில் அவைகள் யாவும் உருவாக்கப்பட்டது. விருட்சங்களானாலும் சரி, புல் பூண்டுகளானாலும் சரி, அவைகளின் தன்மை பூமியின் தன்மைக்கு ஒத்தவிதமாய் சிருஷ்டிக்கப்பட்டது. அவைகளுடைய தன்மை பூமிக்குரிய தன்மையிலே சிருஷ்டிக்கப்பட்டது. பின்னர், அடுத்த நாளை உருவாக்குகின்றார்.

ஆதி. 1: 24-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "பின்பு தேவன்: பூமியானது ஜாதி ஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று."

    முதலாவது, தாவரங்கள் உருவாக்கப்பட்டது. அதன்பின்னர், ஜீவஜந்துக்களை உருவாக்கினார். இந்த ஜீவஜந்துக்கள் அசையும் தன்மை கொண்டது. அதாவது, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயரக்கூடிய தன்மை கொண்டது. தாவரங்கள் இடம்பெயரக்கூடிய வண்ணமாய் சிருஷ்டிக்கப்படவில்லை.

ஆதி. 1: 25-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்."

    இப்படியாக எல்லா ஜீவஜந்துக்களும் பூமியிலிருந்து உருவாக்கப்பட்டது. முதலில் பார்த்தோம், தாவரங்கள், புல், பூண்டு, மரங்கள் ஆகிய இவை யாவும் பூமியிலிருந்துதான் உருவாக்கப்பட்டது என்று.

    அவர் உண்டாகக்கடவது என்றார், அவைகள் உண்டாயிற்று. அப்படி உண்டாவதற்கு உரிய கால அவகாசம் அவர் கட்டளையிட்டபடியாய் நிறைவேறிற்று. அவரால் உண்டாக்கப்பட்டவை யாவும் பூமியிலிருந்துதான் உருவாக்கப்பட்டது. அதனால்தான் அவைகள் பூமிக்குரிய தன்மையில் காணப்படுகின்றது.

    கீரையில் இரும்புச் சத்து இருக்கின்றது. இந்த இரும்பு தாதுவானது பூமிக்குள் இருக்கின்றது. பாலில் புரோட்டின், கால்சியம் சத்துக்கள் இருக்கின்றன. இவைகளும் பூமியில் இருக்கின்றது. நம்முடைய சரீரத்திலும் இத்தகைய தாதுக்கள் இருக்கின்றது. அவர் உருவாகக்கடவது என்றார், அவைகள் பூமிக்குரிய தன்மையில் உருவாயிற்று.

    அப்படியே எல்லா ஜீவஜந்துக்களையும் உருவாகக்கடவது என்றார்; அவைகள் உருவாயிற்று. விருட்சங்கள் உருவாகக்கடவது என்றார். அவைகள் உருவாயிற்று. ஆனால் அவைகளின் தன்மை பூமியின் தன்மையில் உருவானது. இவைகளை எல்லாம் நல்லது என்று தேவன் கண்டார். மனிதன் மாத்திரம் அவருடைய சாயலில் உருவாக்கப்பட்டான். மற்ற எல்லாவற்றினையும் அதினதின் காரியத்தில் திட்டம்பண்ணியதின்படி உருவாக்கினார். அவருடைய சாயலில் மனிதன் உருவாக்கப்பட்டான். அவர் மனிதனையும் பூமியின் மண்ணினாலே உருவாக்கினார் என்று வேதம் கூறுகின்றது.

ஆதி. 2: 7-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்."

    மனிதனை பூமியின் மண்ணினால் உருவாக்கினார். மனிதனும் பூமியின் தன்மை உள்ளவனாக உருவாக்கப்பட்டான். ஆனால், அவனுடைய சாயல் மாத்திரம் தேவனுடைய சாயலாகக் காணப்படுகின்றது.

    பூமியானது பிறப்பிக்கக்கடவது என்றார்; பூமி அவைகளைப் பிறப்பித்தது. காட்டு மிருகங்கள், நாட்டு மிருகங்கள், ஜீவஜந்துக்கள் எல்லாம் இப்படியாகவே உருவாக்கப்பட்டது. அவைகள் யாவும் இந்தப் பூமியிலிருந்தே உருவாக்கப்பட்டது. அவைகள் இந்தப் பூமிக்குரிய தன்மையிலேயே உருவாக்கப்பட்டது. எனவேதான், எல்லா ஜீவராசிகளும் மரணித்து, மண்ணோடு மண்ணாகப் போகின்றது.

    மண்ணில் காணப்படுவது போலவே, எல்லா ஜீவராசிகளிடமும் கால்சியம் இருக்கின்றது; இரும்புச் சத்து இருக்கின்றது; உப்புச் சத்து இருக்கின்றது. இதுபோலவே தாதுக்களின் தன்மையில் ஜீவராசிகள் மண்ணினைப்போலவே காணப்படுகின்றது. மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டவை மரித்தபின்னர் மண்ணோடு மண்ணாகிவிடுகின்றது. ஒரு மரம் வெட்டுண்ட பின்னர், மக்கிப்போய் மண்ணோடு மண்ணாகி விடுகின்றது.

    பூமியிலிருந்து எடுக்கப்பட்டவைகள் யாவும் இறுதியில் பூமியின் தன்மைக்கே வருகின்றது. இது ஒரு சுழற்சி.

பிர. 3: 19, 20-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப் பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.

    எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது."

    எல்லாமே மண்ணிலிருந்து உருவாக்கப்படுகின்றது. மீண்டும் மண்ணுக்கே திரும்புகின்றது. அவர் உண்டாகக்கடவது என்று கூறியவுடன், அவைகள் ஆணும் பெண்ணுமாக உருவானது. மூலம் இருபாலாருக்கும் ஒன்றுதான். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, மூலம் ஒன்றுதான். ஆனால் வளர்ச்சியின்போது, அவைகள் இருபாலாய் பிரிகின்றது. வளர்ச்சியின் தன்மை இரண்டு தன்மையினதாக மாறுகின்றது.

    வித்தின் தன்மை ஆணுக்குரிய தன்மையிலும், பெண்ணுக்குரிய தன்மையிலும் வளருகின்றது. மூலமாக இருப்பது ஒன்றுதான். மூலம் - வித்து; அந்த மூலம் ஒன்றுதான். அந்த மூலத்தில் ஆணும் இருக்கின்றது; பெண்ணும் இருக்கின்றது. அந்த மூலம் வளர்ச்சி அடையும்போது, அது ஆணுக்குரிய வளர்ச்சியில் காணப்படும்போது, அது ஆண் இனமாகவும், பெண்ணுக்குரிய வளர்ச்சியில் காணப்படும்போது, அது பெண் இனமாகவும் உருவாகின்றது. இப்படியாகவே எல்லா ஜீவராசிகளும் உருவாக்கப்பட்டன. அதுபோலவே மனுஷனையும் அவர் உருவாக்கினார்.

ஆதி. 1: 27-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்."

    ஆணும் பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார் என்று வேதம் கூறுகின்றது. அவர்கள் பூமியின் மண்ணிலிருந்து சிருஷ்டிக்கப்பட்டார்கள்.

மத். 19: 4-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,"

    ஆதியில் மனிதனை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாகவே சிருஷ்டித்தார். உருவாக்கப்பட்ட எல்லா உயிரினங்களும் ஆணின் தன்மையும் பெண்ணின் தன்மையும் கொண்டதாக உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்ட விலங்குகளும் பறவைகளும் ஜோடி ஜோடியாகவே உருவாக்கப்பட்டது. இவையாவும் தேவத்துவத்தில் உருவாக்கப்பட்டவைகள். தேவன் அது நல்லது என்று கண்டார் என்று வேதம் கூறுகின்றது.

    தேவன் தனது சாயலாக மனிதனை உருவாக்கினார். அவர்களை ஆசீர்வதித்தார். நீங்கள் பலுகிப் பெருகுங்கள் என்றும், தான் சிருஷ்டித்த யாவற்றையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று கூறி மனிதனை ஆசீர்வதித்தார். மற்ற எந்த சிருஷ்டிப்புகளுக்கும் இல்லாத ஒரு கிருபை மனுஷனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

    மனிதனுடன் பழகக்கூடிய விலங்கினங்கள் இருக்கின்றது. மனிதனுடன் பழகாத விலங்கினங்களும் இருக்கின்றது. மனிதனுடன் பழகக்கூடிய விலங்குகள் நாட்டு விலங்குகள் என்று பெயரிடப்பட்டது. மனிதனுடன் பழகாத மிருகங்கள் காட்டு மிருகங்கள் என்று கூறப்பட்டிருக்கின்றது.

    உண்டாகக்கடவது என்றபோது, தன் தன் விதையைத் தரக்கூடிய விருட்சங்கள் உருவானது. மனிதனுடைய ஞானம் வளர மனிதன் வித்தினைக் கலப்பு வித்தாக்கினான். இவைகள் வேதத்தில் கூறப்பட்டிருக்கின்ற வார்த்தைக்கு மாறான கிரியையாகும். கிருபையின் கடைசியில் விதை கலப்பு வித்தாக மாறவேண்டும்.

    விதை எப்படி கலப்பு வித்தானதோ, அதுபோலவே வார்த்தை என்ற வித்திலும் கலப்பு வித்து உருவாகும். அது ஜீவனுக்குரிய நிறைவின் காலத்தை சாட்சியிடுவதாகும்.

    மனிதனுக்கு மாத்திரம் மற்ற எல்லா சிருஷ்டிப்புக்களைவிட ஒரு விசேஷித்த கிருபை கொடுக்கப்பட்டுள்ளது. அது நீ எல்லாவற்றையும் அடக்கி ஆண்டுகொள் என்பதாகும். வேதவார்த்தையின்படியாக சிருஷ்டிக்கப்பட்டவைகள் யாவும் ஆறு நாட்களில் சிருஷ்டிக்கப்பட்டன. ஏழாம் நாள் ஓய்ந்திருந்தார் என்றே வேதம் கூறுகின்றது. சிருஷ்டிப்பின் கிரியைகள் ஆறு நாட்களுக்கும் முடிவடைந்தது. அதன்பின்னர் கர்த்தத்துவம் ஆரம்பமானது. கர்த்தத்துவத்தில் உருவாக்கப்பட்ட முதல் மனிதன் ஆதாம். கர்த்தத்துவத்திற்கென்று தெரிந்தெடுக்கப்பட்ட முதல் மாமிச சரீரம் ஆதாமின் சரீரமாகும். ஆதாமைக் கர்த்தர் பரலோகத்திலிருந்து எடுத்து வரவில்லை. அவனும் பூமியின் மண்ணினாலேயே உருவாக்கப்பட்டான். சிருஷ்டிக்கப்பட்ட ஆறாம் நாளின் மனிதனிடத்திலிருந்தே ஆதாம் தெரிந்தெடுக்கப்பட்டான்.

ஆதி. 2: 7-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்."

    ஆதாமும் மற்ற மனிதனைப் போலவே பூமியின் மண்ணினால் உருவாக்கப்பட்டவன். அந்த மனிதனின் பெயர் ஆதாம். அவன் நாட்களில் அநேக ஜனங்கள் பூமியில் இருந்தார்கள். சகல ஜீவ ஜந்துக்களும் மண்ணினால் உருவாக்கப்பட்டதுபோல, ஆதாமும் மண்ணின் தன்மையிலேயே உருவாக்கப்பட்ட மனிதன். ஏற்கனவே உருவாக்கப்பட்ட மனிதனுடைய தன்மையிலேயே ஆதாம் வேறுபிரிக்கப்பட்டான். அவனது சரீரமும் மண்ணிற்கு ஒப்பானதாயிருந்தது. தேவத்துவத்தில் உருவான சரீரமே ஆதாமின் சரீரமாகும். தேவத்துவத்தில் உருவானவை மீண்டும் மண்ணுக்கே திரும்ப வேண்டும். ஆதாமின் மாமிச சரீரமும் அத்தகைய தன்மை கொண்ட சரீரமே. ஆனால் மற்ற ஜனங்களுக்குக் கிடைக்காத ஒரு கிருபை ஆதாமிற்குக் கிடைத்தது. அது அவனுக்குள் ஊதப்பட்ட ஜீவ சுவாசமே.

    மாமிச சரீரத்தில் நாம் முதலாவது வானத்திற்குள்ளான பகுதி முழுவதும் சுற்றிவர அனுமதிக்கப்பட்டுள்ளோம். முதலாவது வானத்தைத் தாண்டி, மனிதனுடைய ஞானம் செயல்பட முடியாது. அதற்குக் கட்டளையிடப்படவில்லை. மனிதன் தனது ஞானத்தில் அவன் முதலாவது வானத்தைச் சுற்றி வருவதற்கே பல ஜீவிய காலம் (Life Time) தேவைப்படும். அதற்கு அப்பாற்பட்டிருக்கின்ற பகுதி மனித ஞானத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நாம் மறுரூபமாக்கப்படுவோம் என்று வேதம் கூறுகின்றது. அந்த ரூபத்திலே நாம் ஆயிர வருடம் அரசாட்சியில் பங்கடைவோம். இந்த மாமிச சரீரமானது மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டது. அது மண்ணுக்கே திரும்பிவிடும். மறுரூபமாக்கப்பட்டுள்ள ஆவியின் சரீரமோ நித்திய நித்திய காலமாய் அழியாமையைக் கொண்டுள்ள சரீரமாகும்.

    ஆதாம் பூமியின் மண்ணினால் உருவாக்கப்பட்டவன். அவனுடைய மாமிச சரீரத்திற்கென்று எந்த மேன்மையும் கிடையாது. எல்லோரைப் போலவும் அவனும் ஆறாம் நாளில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதனின் தன்மை கொண்டவன். மண்ணான சரீரங்கள் இருந்த பூமியிலிருந்து அவன் வேறுபிரிக்கப்பட்டான். அவனுக்குள் ஊதப்பட்ட ஜீவசுவாசம் அவனுக்குள் ஒரு உள்ளான சரீரத்தினை உருவாக்கிற்று. அந்த சரீரம் அழியாமை கொண்ட ஆவியின் சரீரம். அதனை ஆத்துமா என்று வேதம் சாட்சியிடுகின்றது.

ஆதி. 2: 7-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்."

    ஆதாம் என்ற அந்த மனிதன் ஜீவ ஆத்துமா கொண்டவனானான். மற்ற எந்த சிருஷ்டிப்புகளுக்கும் கிடைக்காத இந்த ஆத்துமா என்ற ஆவியின் சரீரத்தினை ஆதாம் பெற்றுக்கொண்டான். வேறு ஜீவராசிகளுக்கு அல்லாதபடி அது ஆதாமுக்குள்ளாக மாத்திரம் ஊதப்பட்ட ஜீவசுவாசமாகும். பூமியில் எப்படியாக இந்த ஜீவராசிகள் உருவாயிற்று? பாலைவனம் இருக்கின்றது. இந்தப் பாலைவனத்தில் தண்ணீர் கிடையாது. ஆனால், இந்தப் பாலைவனத்தின் ஒரு பகுதிக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டேயிருந்தோமேயானால், சில காலங்களுக்குள் அங்கே புல் பூண்டுகள் முளைவிட ஆரம்பித்துவிடும். அது எங்கேயிருந்து வந்தது? முன்னதாகவே வார்த்தை கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவைகள் முளைத்தது.

    ஆதாமுக்குள்ளாக மற்ற ஜனங்களுக்குக் கிடைக்காத ஒரு கிருபையை ஊதினார். அது அவருடைய ஜீவனாகும். அவருடைய ஜீவன் அழியாத ஜீவனாகும். அவருடைய ஜீவனுக்கு அழிவில்லை. அந்த ஜீவனையே அவர் ஆதாமுடைய நாசிக்குள் ஊதினார். அந்த சுவாசம் ஊதப்பட்டபோது, அவன் மனுஷனாக இருந்தான்; குழந்தைப் பருவத்தைத் தாண்டிய ஒரு மனிதனாக இருந்தான்.

ஆதி. 2: 7-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்."

    மனுஷன் ஜீவாத்துமாவானான் என்று கூறப்பட்டுள்ளது. உள்ளான மனிதனான ஆத்துமாவைப் பெற்றுக்கொள்ள ஒரு மாமிச சரீரமானது மனுஷனாக வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். இன்னொரு சரீரத்தை தன்னால் உருவாக்கக்கூடிய வளர்ச்சியே மனுஷன் என்ற வளர்ச்சியாகும். ஆதாம் மனுஷனாக இருந்தான். அப்படி மனுஷனாக வளர்ந்த அந்த ஆதாமின் சரீரத்திற்குள்ளாக அவருடைய சுவாசத்தை ஊதினார். அது ஜீவசுவாசமாகும். அப்போது அவனுக்குள் ஒரு கிரியை நடக்கின்றது. அது ஒரு உள்ளான சரீரத்தை உருவாக்கிற்று. அந்த ஜீவன் அழியாத ஜீவனாகும். ஆதாமுக்குள் ஊதப்பட்ட ஜீவனுக்கு அழிவே கிடையாது. அது அழியாது. இந்த வானமும் பூமியும் அழிந்துவிடும். ஆனால் அப்போதும் அந்த ஜீவன் அழியாது. அது மண்ணுக்கு மாறுபாடான ஒரு சிருஷ்டியாகும். எனவே அதனை ஆவியின் சரீரம் என்று வேதம் கூறுகின்றது.

    ஆதாமுடைய மாமிச சரீரமானது ஜென்ம சரீரமாகும். அது ஒரு வித்தினால் உருவானது. அது பூமியின் தன்மைகொண்டிருந்த ஒரு மாமிச சரீரத்திலிருந்து உருவானது. எனவே, ஆதாமின் மாமிச சரீரமும் மண்ணினால் உருவாக்கப்பட்ட ஒரு மாமிச சரீரமேயாகும். ஆதாம் குழந்தையாயிருந்து, மனிதனாக வளருகின்றான். அதன்பின்னர் அவனுக்குள் ஜீவசுவாசம் ஊதப்பட்டது. அவன் ஜீவன் என்ற ஆத்துமா கொண்டவனானான். ஆத்துமா இறங்கி கிரியை செய்ய ஒரு மாமிச சரீரம் வேண்டும். அந்த மாமிச சரீரம் ஒரு மனுஷன் என்ற தன்மையில் வளர வேண்டும்.

    ஆதாமிற்குள் ஜீவசுவாசம் ஊதப்படுமுன், அவன் ஒரு மாமிச சரீரம் கொண்ட மனுஷன். அந்த சரீரத்திற்குள் உயிர் இருந்தது. இந்த சரீரமும் உயிரும் தேவத்துவமாகும். தேவத்துவம் இல்லாமல் கர்த்தத்துவம் கிரியை செய்யாது. தேவத்துவத்தில் உருவான உயிர்கொண்ட ஒரு மனிதன் வேண்டும். அந்த மனிதன் தேவத்துவ கிரியைகளுக்குள்ளானவன். அந்த சரீரத்திற்குள்ளாக ஜீவசுவாசம் ஊதப்பட்டது. அந்த ஜீவசுவாசம் ஒரு உள்ளான மனிதனை ஆதாமிற்குள் உருவாக்கிற்று. அந்த உள்ளான மனிதனுக்குரிய கிரியையே கர்த்தத்துவமாகும்.

    எல்லா ஜீவ ஜந்துக்களுக்கும் உயிர் உண்டு; சரீரமும் உண்டு. சரீரமும் உயிரும் எல்லா ஜீவராசிகளுக்கும் உண்டு. ஆனால், ஆதாம் மாத்திரமே ஆத்துமா கொண்டவனானான். அவன் ஆவி, சரீரம், ஆத்துமா என்ற மூன்று தன்மைக்குள்ளானவனானான். மற்ற மனிதர்கள் சரீரமும், ஆவியும் கொண்டவர்களாக மாத்திரம் காணப்பட்டார்கள்.

    ஆதாமுக்குள் ஜீவ சுவாசம் ஊதப்படும் வரையிலும், அவனுக்குள் அழியாமை என்ற அந்த ஜீவன் இல்லை. உயிருக்கும் இந்த ஜீவனுக்கும் வித்தியாசம் இருக்கின்றது. இந்த உயிர் ஒரு சரீரத்தை இயக்கும். ஒரு உயிர்தான் ஒரு சரீரத்தை உருவாக்குகின்றது. உயிர் இல்லாமல் சரீரம் உருவாகாது; உயிர் இல்லாமல் சரீரம் செயல்படாது. ஆதாம் ஒரு உயிருள்ள மனிதன். கர்த்தத்துவத்தின் இடைபாடு அவனுக்குள் வருகின்ற வரையிலும், அவன் மற்ற மனிதர்களைப்போன்ற ஒரு மனிதன். அவன் தேவத்துவ கிரியைகளுக்குரிய மனிதன். கர்த்தத்துவத்தின் இடைபாடு அவனுக்குள் வந்தபோது, அவனுக்குள் ஜீவசுவாசம் ஊதப்பட்டது. ஆதாம் ஜீவாத்துமா ஆனான். அவன் ஆத்துமா கொண்டவன் ஆனான். அந்த ஆத்துமாவிற்கு அழிவில்லாத ஜீவன் இருக்கின்றது.

    ஜென்ம சுபாவம் கொண்ட மற்ற மனிதர்களுக்குள் அந்த ஜீவன் இல்லை; அந்த ஆத்துமா இல்லை. ஆத்துமா உருவாக கர்த்தத்துவத்தின் கிரியை நடக்க வேண்டும். அந்தக் கிரியை நடக்காவிட்டால், ஆத்துமா உருவாகாது.

    ஒரு ஆவியின் இடைபாடு நடக்கும்போது, அங்கே ஆத்துமா உதயமாகின்றது. உயிர் சரீரத்தை உருவாக்கிட வேண்டுமானால், அங்கே மாமிசத்திற்குரிய ஒரு கிரியை நடைபெறவேண்டும். மாமிசத்திற்குரிய கிரியை நடக்காவிட்டால், உயிர் சரீரமாகாது. அந்த உயிர் சரீரமாக ஒரு கிரியை. மாமிசத்திற்குரிய ஒரு கூடுகை அங்கே நடக்க வேண்டும். அப்போது ஒரு மாமிச சரீரமானது உருவாகின்றது. அதற்குரிய கால அளவில் அது முழுமையடைகின்றது. பின்னர் அது மனுஷனாக வளர்ச்சியடைகின்றது. அதேபோலொத்த ஒரு கிரியை ஒரு மனுஷனுடைய மாமிச சரீரத்தில் ஜீவனான ஆவியின் சரீரமும் உருவாகின்றது. கர்த்தர் தமது ஜீவசுவாசத்தினை ஊதினார். மனுஷன் ஜீவாத்துமாவானான். இப்போது அந்த ஜீவன் அவருடைய வார்த்தையில் இருக்கின்றது. அந்த வார்த்தை தேவனாக இருக்கின்றது என்று சாட்சியிடப்பட்டுள்ளது.

    எப்படியாக ஒரு உயிர் கிரியைகளுக்குள்ளாகி சரீரத்தைக் கொண்டு வந்ததோ, அதுபோலவே, ஜீவனும் கிரியைக்குள்ளாகி ஆத்துமா என்ற ஆவியின் சரீரத்தினை ஒரு மாமிச சரீரத்திற்குள் உருவாக்குகின்றது. அந்த ஜீவனுக்குள்ளான கிரியை ஆத்துமாவை உருவாக்கும்.

    நமது மாமிச சரீரம் தாயிடமிருந்து தனித்து வெளிவரும்போதுதான், நமது சரீரத்தை இயக்கும் ஆவி அருளப்படுகின்றது. இந்த ஆவி மனுஷ ஆவி ஆகும்.

    ஆதாமிற்கு ஒரு சரீரம் வந்தது; அதனுள் உயிர் இருந்தது, கர்த்தரது சுவாசம் ஊதப்பட்டபடியால், அவனுக்குள் ஆவியின் சரீரமான ஆத்துமா உருவானது. ஆவியின் சரீரம் வார்த்தைக்கு கீழ்ப்படியும்போது பரிசுத்த ஆவியும், வார்த்தையை மறுதலிக்கும்போது அசுத்த ஆவியும் ஒன்றிணைகின்றது. ஆதாமிற்கென்று ஒரு சரீரம் இருந்தது, அந்த சரீரத்திற்குள் உயிர் இருந்தது. ஆதாமின் சரீரத்திற்குள்ளாக ஒரு ஆவியின் இடைபாடு வந்தது. அவனுக்குள் ஜீவனுள்ள வேறொரு உயிர் உருவாகின்றது. அதுவே ஆத்துமாவாகும். ஆத்துமா என்ற உள்ளான மனிதனை பார்க்க இயலாது. உயிர் உள்ள சரீரம் இயங்கும். உயிர் இல்லாத சரீரம் மரித்த சரீரமாகும். ஆத்தும சரீரம் இடைபட மாமிச சரீரம் அவசியமாகும். மாமிச சரீரம் இல்லாதிருந்தால், ஆவியின் சரீரமான ஆத்துமா இடைபடாது.

    ஆவிக்குரிய இந்த இடைபாட்டின் மூலமாக கர்த்தர் கட்டளையிட்ட ஆவியின் சரீரத்தினை ஆதாம் தன்னகத்தே பெற்றவனானான் என்று வேதம் சாட்சியிடுகின்றது. அவனது ஆத்துமா ஜீவன் கொண்டதாக இருந்தது. அவனுக்குள் உருவான அந்த ஆத்துமாவிற்கு மரணம் இல்லை. காரணம் அது தன்னகத்தே ஜீவன் கொண்டது. அந்த ஜீவனை அழிப்பதற்காக இரண்டாம் மரணம் என்று கூறப்படும் அக்கினிக் கடலில் தள்ளப்படும்.

    தன் நிலையில் மரணமில்லாத ஒரு சரீரமே ஆத்துமாவாகும். ஆதாமின் ஆவியின் சரீரத்திற்கு ஜீவனைக் கொடுத்தவர் கர்த்தர்; எனவே அது அழிவிற்குள்ளாகாது. அதனை உருவாக்கியவரால் மாத்திரமே அதனை அழிக்க முடியும். எனவே அதற்கு தன் மரணம் இல்லை என்று சாட்சியிடப்பட்டுள்ளது.

    ஆதாமின் மாமிச சரீரம் மண்ணிற்குரியது, அது மரணித்து மண்ணாகிப்போனது. இதுவே ஜென்ம சுபாவம் ஆகும். இது எல்லா ஜீவராசிகளுக்கும் இருக்கின்றது. ஒவ்வொரு விலங்கினுக்கும் ஒரு சுபாவம் இருக்கின்றது. அதுவே ஜென்ம சுபாவமாகும்.

    ஆதாமின் மாமிச சரீரமானது மண்ணிலிருந்து எடுக்கப்பட்டது. அது இந்த மண்ணுக்குரிய காரியத்திற்கு ஒத்தது. எல்லா ஜீவராசிகளின் சரீரங்களும் இந்த மண்ணிற்கு ஒத்ததாகவே காணப்படுகின்றது. ஆதாம் - சரீரம், உயிர் மற்றும் ஆவியின் சரீரமான ஆத்துமா இம்மூன்றும் ஒன்றுசேர்ந்த ஒரு உருவமாகும்.

    ஆதாமிற்குள் ஜீவசுவாசம் ஊதப்படும் வரையிலும் அவனது மாமிச சரீரமானது உயிர் கொண்ட உருவமாகவே இருந்தது. அப்போது அவனுக்கு எந்தப் பிரமாணமும் கட்டளையிடப்படவில்லை; எந்தக் கற்பனையும் கொடுக்கப்படவில்லை. அவனது கிரியைகள் தேவத்துவ பிரமாணங்களுக்கு மாத்திரம் கட்டுப்படுவதாக இருந்தது. இந்த தேவத்துவ பிரமாணம் அவன் ஜீவித்த பகுதிக்குரியதாகும். அப்போது எந்தக் கனியும் புசிக்க அவனுக்குத் தடை செய்யப்படவில்லை. ஆனல், இப்போது ஆதாமுக்குள் ஜீவனுக்குரிய ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. அந்த இடைபாட்டைக் கொடுத்தவர் கர்த்தர். கர்த்தத்துவத்தினால் இப்போது அவனுக்குள் ஒரு ஜீவன் உருவாயிற்று;ஒரு உள்ளான மனிதன் உருவாகிவிட்டான். ஆத்துமா பெற்ற அவனுக்கு இப்போது பிரமாணம் கட்டளையிடப்பட்டது.

    ஜென்ம சுபாவத்தார்களுக்கு கர்த்தத்துவத்தில் பிரமாணம் கட்டளையிடப்படவில்லை. ஆதாமுக்குள் ஜீவசுவாசம் ஊதப்படும் முன்னர், அதாவது உள்ளான மனுஷன் உருவாகுவதற்கு முன்னர் வரையிலும் கர்த்தத்துவத்தில் எந்தக் கட்டளையும் கொடுக்கப்படவில்லை. கர்த்தத்துவத்தின் ஆளுமைக்குள் அவன் வந்த பின்னர்தான், கர்த்தத்துவத்தில் பிரமாணம் கட்டளையிடப்பட்டது. ஆதாமிற்குக் கொடுக்கப்பட்ட பிரமாணமானது, நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்காதே என்பதே.

    கொடுக்கப்படுகின்ற பிரமாணத்தைக் கைக்கொள்ளுபவர்கள் நீதிமான்களாகும். கட்டளையிடப்பட்ட பிரமாணத்தைக் கைக்கொள்ளாதவனே துன்மார்க்கன் ஆகும். உள்ளான மனுஷனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதே பிரமாணமாகும்.

    பிரமாணமானது நிறைவேறிய பிரமாணமாகவும், நிறைவேறிக் கொண்டிருக்கின்ற பிரமாணமாகவும், இனி நிறைவேறப் போகின்ற பிரமாணமாகவும் சாட்சியிடப்பட்டுள்ளது. இந்த மூன்று பிரமாணங்களைக் குறித்தும் சாட்சி கொடுப்பவர்கள் கர்த்தத்துவத்திற்குச் சாட்சிகள் என்று வேதம் கூறுகின்றது. கர்த்தத்துவ சாட்சிகள் மூன்று தன்மையிலான இந்தப் பிரமாணங்களை அறிவார்கள். ஜென்மசுபாவம் கொண்டவன் இதனை அறியான். மாமிசத்தில் அடையாளம் தேடுகிறவன் ஜென்மசுபாவத்தான்.

    இயேசுகிறிஸ்துவைக் குறித்து வேதம் பிந்தின ஆதாம் என்று சாட்சி கொடுக்கின்றது. கிறிஸ்தவர்களாகிய நாம் அவரது நாமத்தின்மீது விசுவாசம் வைக்கும்போது, புதிய அதிகாரம் பெற்றவர்களாக மாறுகின்றோம். இயேசுகிறிஸ்து தம்முடைய சுவாசமான ஸ்பரிசத்தை ஊதினார். விசுவாசத்தின் மூலமாக உரைக்கப்பட்ட வார்த்தை என்ற வித்தை ஏற்றுக்கொண்ட அத்தனைபேர்களும் ஆத்துமா பெற்றுக்கொள்ள அதிகாரம் பெற்றவர்களானார்கள். ஆத்துமா பெற்ற கிறிஸ்தவர்களுக்கு பிரமாணம் கட்டளையிடப்பட்டுள்ளது. அது சபைப் பிரமாணமாகும். ஆவியின் சரீரம் கொண்டவர்களுக்கு மாத்திரம் பிரமாணம் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆதியில் மனுஷனை உண்டாக்கினவர் அவர்களை உண்டாக்கின நாளில்தானே ஆசீர்வதித்தார்.

ஆதி. 1: 28-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்."

    ஆதியில் ஆசீர்வதிக்கப்பட்ட இந்த மனிதன் ஆத்துமா என்ற உள்ளான மனிதனை கொண்டிராத மனிதர்களாகவே இருந்தார்கள். அவர்களுக்கு எந்த ஒரு பிரமாணமும் கர்த்தத்துவத்தில் கட்டளையிடப்படவில்லை. அந்த மனிதர்கள் எங்கே வேண்டுமானாலும் போகலாம்; எதை வேண்டுமானாலும் புசிக்கலாம்; அவர்களுக்கு தடை ஏதும் கட்டளையிடப்படவில்லை.

    கர்த்தர் தாம் உருவாக்கிய யாவற்றையும் மனிதனிடம் கொடுத்தார். மனிதன் அவைகளைத் தங்களுக்குள்ளாக வேறுபிரித்துக் கொண்டான்.

    ஆனால் ஆத்துமா பெற்ற ஆதாமிற்கு ஒரு பிரமாணம் கட்டளையிடப்பட்டது. நீ அந்தக் கனியைப் புசிக்காதே என்ற ஒரு பிரமாணம் ஆதாமிற்குக் கட்டளையிடப்பட்டது. ஆதாம் அந்தக் கனியைப் புசித்தான்; எனவே, அவன் மரணத்திற்கென்று தீர்க்கப்பட்டான். அது ஆத்தும மரணம் ஆகும். ஆதாமுடைய ஆத்துமாவிற்கு இயல்பின்படியான மரணம் கிடையாது. அதாவது ஆதாமுடைய ஆத்துமாவானது மரிக்காது. காரணம் அது ஜீவன் கொண்டதாய் இருந்தது. அந்த ஜீவனானது அழிக்கப்பட தீர்மானிக்கப்பட்டது. அதற்கு இயற்கையான ஒரு மரணம் ஏற்படாது. ஆதாமுக்குள் ஜீவசுவாசம் ஊதப்பட்டபோது, 76 தலைமுறைகளுக்குரிய ஜனனம் ஆதாமின் சந்ததியாக முன்குறிக்கப்பட்டது. அதன்பின்னர் பிந்திய ஆதாம். ஆதாமுடைய சந்ததியில் 76 தலைமுறையினர் அந்த ஜீவனுக்குரியவர்களாய் முன்குறிக்கப்பட்டார்கள். அவர்களுக்குள் ஒவ்வொரு காலத்திலும் ஒரு பிரமாணம் கொடுக்கப்பட்டது.

    ஆதாம் அந்தக் கனியைப் புசித்த நாளில் மரணத்திற்கு உள்ளாகவில்லை. அவனுடைய மாமிச சரீரம் மரிக்கவில்லை. அவன் தன் ஆயுசு நாட்களில் பூரணப்பட்ட பின்னர் மரித்தான். அவன் குமாரர்களையும் குமாரத்திகளையும் அதன்பின்னரே பெற்றெடுத்தான் என்று வேதம் கூறுகின்றது. ஆதாமின் சந்ததியார் மாத்திரம் ஆத்துமா என்ற உள்ளான மனிதனைப் பெற்றுக்கொள்ள கிருபை கிடைத்தவர்களாய் காணப்பட்டார்கள். இந்த நிகழ்வானது ஆதாமிலிருந்து 76 தலைமுறை மட்டும் தொடர்ந்தது. இந்த 76-ம் தலைமுறையில் பிந்தின ஆதாமாய் சாட்சியிடப்பட்டுள்ள இயேசுகிறிஸ்துவின் மூலம் கிருபையானது கட்டளையிடப்பட்டுள்ளது. முந்தின ஆதாம் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டபடியால், அவன் மண்ணுக்குள் அனுப்பப்பட்டான். அவனது மாமிச சரீரமானது மண்ணோடு மண்ணானது.

ஆதி. 3: 19-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்."

    நீ மண்ணாயிருக்கின்றாய், மண்ணிற்குத் திரும்புவாய் என்று அவனது மாமிச சரீரமானது மண்ணுக்குள் அனுப்பப்பட்டது.

    கிருபை பிந்தின ஆதாமாகிய இயேசுகிறிஸ்துவின் மூலம் புறஜாதிகளாகிய நம்மிடம் திரும்பிற்று. 76 தலைமுறை மட்டும் அது ஆதாமின் சந்ததிக்கும் அதன்பின்னர், புறஜாதியாராயிருந்த கிறிஸ்தவர்கள் மத்தியிலும் அந்த ஜீவனானது கட்டளையிடப்பட்டு, கிரியை செய்து வருகின்றது.

    ஆதாமினுடைய சந்ததி இரு தன்மையில் வேறுபிரிக்கப்பட்டது. அதாவது ஆத்துமா என்ற ஜீவனைப் பெற்ற ஆதாமின் சந்ததி இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டது.

உபா. 32: 8-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "உன்னதமானவர் ஜாதிகளுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டு, ஆதாமின் புத்திரரை வெவ்வேறாய்ப் பிரித்தகாலத்தில், இஸ்ரவேல் புத்திரருடைய தொகைக்குத்தக்கதாய், சர்வஜனங்களின் எல்லைகளைத் திட்டம்பண்ணினார்."

    ஆதாமினுடைய சந்ததியில் ஆத்துமா கொண்டவர்கள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டார்கள். ஆதாமின் குமாராரில் காயீன், ஆபேல் என்ற இருவரும் வேறுபிரிக்கப்பட்டார்கள். காயீன் ஆக்கினைக்குரியவன் ஆனான். ஆபேல் நித்திய ஜீவனுக்குரியவன் ஆனான்.

    ஆதாமிற்குள் ஊதப்பட்ட ஜீவசுவாசத்திற்குள்ளாக இரு பிரிவாக அவனது சந்ததி பிரிக்கப்பட்டது. அது நித்திய ஜீவனுக்குரியதென்றும், நித்திய ஆக்கினைக்குரியதென்றும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டது. ஆதாமிற்குள் ஜீவ சுவாசத்தை ஊதியபோதே, இந்த இரண்டு தன்மையிலான ஆத்துமாக்கள் உட்புகுந்தார்கள்.

  1. நித்திய ஜீவனுக்குரியவர்கள்

  2. நித்திய ஆக்கினைக்குரியவர்கள்

    ஆத்துமா ஊதப்பட்டபோது, இந்த இரண்டு பிரிவான ஜீவன் கொண்டவர்கள் வேறுபிரிக்கப்பட்டார்கள். காயீன், ஆபேல் என இரு குமாரர்கள் இந்த இரண்டு தன்மையில் உருவானார்கள். பிரமாணத்தைப் பின்பற்றுபவர்கள் என்றும், பிரமாணத்தைப் பின்பற்றாதவர்கள் என்றும் இந்தப் பிரிவு பிரிக்கப்பட்டது. ஜென்மசுபாவம் கொண்ட மனிதர்களும் ஆதாமின் சந்ததியில் வந்த ஜனங்களும் பூமியில் பெருக ஆரம்பித்தார்கள்.

ஆதி. 6: 1- 6-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவக்கி, அவர்களுக்கு குமாரத்திகள் பிறந்தபோது:

    தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.

    அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.

    அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்ற போது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.

    மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,

    தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது."

    கர்த்தருடைய இருதயத்திற்கு விசனமான காரியம் இங்கே ஆதாமின் சந்ததியால் உண்டாயிற்று. கர்த்தர் கர்த்தத்துவத்திற்குள்ளாக உருவாக்கின இந்த மனுஷனை உண்டாக்கினதற்காக மனஸ்தாபப்பட்டார். அப்போது ஆதாமின் சந்ததியினை முற்றிலுமாக அழிக்க எண்ணியபோது, நோவா கர்த்தருடைய கண்களில் கிருபை பெற்றவனாகக் காணப்பட்டான்.

ஆதி. 6: 8-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது."

    அழிவிலிருந்து அவன் காக்கப்பட்டான். அதன்பின்னர், நோவா சந்ததியினர் மாத்திரம் ஆத்துமா கொண்ட ஜனமாக தெரிந்தெடுக்கப்பட்டார்கள். ஆத்துமா பெற்ற ஆதாமின் மற்ற சந்ததியார் யாவரும் அழிக்கப்பட்டார்கள். ஜலப்பிரளயத்தினால் அழிக்கப்படும் முன்னர் நோவா ஒரு நீதியைப் பிரசங்கித்தான். அதனை அவன் குடும்பத்தார் தவிர மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாததினால் ஆக்கினைக்குள்ளானார்கள். நோவாவும் நோவா குடும்பத்தாரும் காக்கப்பட்டார்கள். நோவாவின் சந்ததி அவன் காலத்திலிருந்த ஆதாமின் மற்ற சந்ததியாரைப் போலொத்த ஒரு கிரியையில் இருந்தபடியால், கிருபையானது பிந்தின ஆதாமின் சந்ததிக்குக் கட்டளையிடப்பட்டது.

1 கொரி. 15: 45, 47-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.

    முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்."

    ஆதாமிற்குள்ளாக ஊதப்பட்ட ஜீவசுவாசமானது அவனது சந்ததியில் 76 தலைமுறை மட்டும் ஜீவனைக் கொடுத்தது. 76ம் தலைமுறையில் இயேசுகிறிஸ்து குமாரனாக மாமிசத்தில் வெளிப்பட்டார். முந்தின ஆதாமைப் போல, பிந்தின ஆதாமும் ஒரு ஜீவன் பெற்ற சந்ததியை உருவாக்க கட்டளையிடப்பட்டவராய் வெளிப்பட்டார். ஆதாமுடைய மாமிசப் பிறப்பாய் இருந்த இஸ்ரவேலர்கள் மாமிசத்தில் ஒரு அடையாளத்தினைக் கொண்டிருந்தார்கள். அது விருத்தசேதன அடையாளமாகும். பிந்தின ஆதாம் மூலம் ஜீவன் என்ற கிருபை கட்டளையிடப்பட்ட பின்னர், இந்த விருத்தசேதன அடையாளம் கட்டளையிடப்படவில்லை. எனவே அப்போஸ்தலனாகிய பவுல், விருத்தசேதனம் தேவையில்லை என்று சாட்சியிட்டார். அப்போது ஞானஸ்நானம் என்ற புதிய அடையாளம் கட்டளையிடப்பட்டது. சபை பிரமாணம் என்ற புதிய பிரமாணம் கட்டளையிடப்பட்டது. நியாயப்பிரமாணம் என்ற பழைய பிரமாணம் நிறைவேறிய பிரமாணமாக சாட்சியிடப்பட்டது.

    ஆதாமின் மாமிச சரீரமானது ஜீவனைப் பெற்றுக்கொள்ள முதலாவது தெரிந்தெடுக்கப்பட்டது. எனவே 76 தலைமுறை மட்டும் அந்த மாமிச சரீர சந்ததிக்கே கிருபை என்ற ஆத்துமா கட்டளையிடப்பட்டது. அதன்பின்னர், பிந்தின ஆதாமாகிய உயிர்ப்பிக்கின்ற ஆவியானவரால் விசுவாசத்தின்படி நாம் ஜீவன் பெற்றோம்.

1 கொரி. 15: 49-ல் இவ்விதமாகக் கூறப்பட்டுள்ளது:

    "மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்."

    மண்ணான சாயலைக் கொண்ட நாம் வானவருடைய சாயலான ஆத்துமா என்ற உள்ளான மனிதனைக் கொண்டவர்கள் ஆனோம். இது பிந்திய ஆதாமாகிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலம் நமக்கு கிருபையாய் கட்டளையிடப்பட்டுள்ளது. மாமிச சரீரமும் உயிரும் மண்ணானவர்களின் சாயலாகும். நமக்குள்ளாக ஆவியின் சரீரமான ஆத்துமா கொண்டவர்களான போது, நாம் வானவருடைய சாயலானோம். ஆத்துமா, வானவருடைய இந்தப் பிரமாணங்களைப் பின்பற்றும்போது, பரலோகராஜ்யத்திற்குள் பிரவேசிக்க கிருபை பெற்றதாக மாறுகின்றது. முந்தின ஆதாமுடைய சந்ததிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டதுபோல, பிந்தின ஆதாமின் சந்ததிகளும் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படுகின்றார்கள்.

  1. நித்திய ஜீவனுக்குரியவர்கள்

  2. நித்திய ஆக்கினைக்குரியவர்கள்

நித்திய ஜீவனுக்குரியவர்கள் பரலோகராஜ்யத்திற்குள் செல்லக்கூடிய கிருபை பெற்றவர்கள். ஆக்கினைத்தீர்ப்பிற்குரியவர்கள் எரிநரகத்திற்குள்ளாகத் தள்ளப்படுவார்கள். அதன்பின், இரண்டாம் மரணமாகிய ஆத்தும மரணத்திற்குள்ளாக்கப்படுவார்கள். ஆத்துமா கொண்டவனே தீர்ப்பிற்கு உட்படுத்தப்படுவான்.

  1. ஆதாமிற்குக் கொடுக்கப்பட்ட பிரமாணமானது கனியைப் புசிக்காதே என்பதாகும்.
  2. காயீன் மற்றும் ஆபேலுக்குக் கொடுக்கப்பட்ட பிரமாணம் சபிக்கப்பட்ட நிலத்தின் பலனை எடுக்காதே என்பதாகும். அந்தப் பலனைக் காயீன் கர்த்தருக்கென்று பலியிட்டதால், அந்தப் பலி ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவன் ஆக்கினைக்குரியவன் ஆனான்.
  3. ஏனோக்கின் நாட்களில் தேவனோடு சஞ்சரிக்க வேண்டும் என்பதே பிரமாணம்.
  4. நோவாவின் மூலம் போதிக்கப்பட்ட பிரமாணமானது பேழைக்குள் பிரவேசிக்க வேண்டும் என்பதாகும்.
  5. ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட பிரமாணம், கல்தேயர் தேசத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்பதாகும்.
  6. இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட பிரமாணம் நியாயப் பிரமாணமாகும்.
  7. இயேசுவாக மாமிசத்தில் வெளிப்பட்டபோது, அவரைக் கிறிஸ்து என்றும், மேசியா என்றும் இஸ்ரவேலர்கள் விசுவாசிக்க வேண்டும். இதுவே அப்போது கட்டளையிடப்பட்ட பிரமாணமாகும்.
  8. அதன்பின்னர், புதிய ஏற்பாடு. பிந்தின ஆதாமுடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட்ட பிரமாணமே சபைப் பிரமாணமாகும். ஒவ்வொரு சபைக்காலத்திலும் ஒரு பிரமாணம் கட்டளையிடப்பட்டுள்ளது. அது நித்திய ஜீவனுக்குரியவர்களை ஜீவன் கொண்டவர்கள் மத்தியிலிருந்து வேறுபிரித்தது.
  9. இப்போது சபைக்காலங்கள் முடிவடைந்து, கடைசி ஏற்பாட்டின் காலம் ஆரம்பமாகி உள்ளது. இப்போது கர்த்தர் கட்டளையிடும் பிரமாணமானது, வெளி. 18: 4-ன்படியான பிரமாணமாகும்.
        "பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நோரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளை விட்டு வெளியே வாருங்கள்".
  10. இந்தப் பிரமாண காலம் நிறைவு பெற்றபின், பிந்தின ஆதாமின் கிரியை நிறைவடையும். மீண்டும் கிருபையானது முந்தின ஆதாமின் சந்ததிகளாகிய இஸ்ரவேலர்களிடம் சென்றடையும்.

    ஜென்மசுபாவத்தானுக்குரிய காரியம் சத்திய வேதாகமம் அல்ல. முழுக்க முழுக்க உள்ளான மனுஷனைக் கொண்டிருக்கின்ற ஜனம், பரலோகராஜ்யத்திற்குள் வரவேண்டுமானால், எதைச் செய்யவேண்டும்? எதைச் செய்ததனால், பரலோக ராஜ்யத்திற்குள் செல்ல முடியாமல் விழுந்துபோனார்கள். இதை எல்லாம் கூறுவதுதான் சத்திய வேதாகமம்.

    கிருபையின் கடைசி காலத்தில் ஜீவிக்கும் நாம், நாம் பெற்றுள்ள ஜீவன் என்ற ஆத்துமா நித்திய ஜீவனைச் சுதந்தரிக்க கர்த்தர் கட்டளையிட்டுள்ள பிரமாணத்தின்படி செயல்படுவோம்.

    பரலோகம் என்ற நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள கர்த்தர்தாமே நமக்கு அனுக்கிரகம் செய்வாராக.

ஆமென்!     ஆமென்!!     ஆமென்!!!

All Sermonsஅனைத்து பிரசங்கங்கள்